திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ளது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம். இதில் பணியாற்றும் 8000 ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில், பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் அவர்கள் வேலை செய்யும் பணியிடமும் அருகருகே இருக்க வேண்டும் என்பதே பொதுத்துறை நிறுவனங்களின் விதியாகும். இந்த அடிப்படையில் பெல் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கைலாசபுரம் என்ற நகரியத்தின் மருத்துவ பாதுகாப்பே மருத்துவமனையை சார்ந்துள்ளது.

இந்தப் பெல் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், அதாவது மருத்துவர்கள் துவங்கி செவிலியர்கள் வரையிலான பல்வேறு பணி செய்கின்ற ஊழியர்கள் இரண்டு வகையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். ஒன்று நேரடியாக பெல் நிர்வாகம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு அதன் மூலம் தேர்வு செய்வது, மற்றொன்று ஒப்பந்ததாரர்கள் மூலம் சில பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பது என்ற வகையில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

பெல் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் ஆகியவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் கடமையாகும். அந்த வகையில் தான் 2022 ஜூன் மாதம் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்திருந்தது.

“இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பெரும் மதிப்பைப் பெற்ற நிறுவனம் BHEL (Bharat Heavy Electricals Limited ). பல்வேறு கனரக பிரிவு வாகனம், இயந்திரங்களுக்கான தயாரிப்பு இங்கு நடைபெறுகிறது. இதன் கீழ் திருவெறும்பூர் பகுதியில் 200 படுக்கை வசதிகளுடன் இயங்கும் மருத்துவ கிளினிக்கிற்கு மருத்துவர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, குழந்தை நல மருத்துவம், டெண்டிஸ்ட், கண், காது மற்றும் மூக்கு மருத்துவம் ( Anaesthesiology, Dentistry,Dermatology,ENT, Paedixatrics, Physican,Pulmonogy,Radiology,Medical Oncology, Urology)உள்ளிட்ட பல துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது”. என்று பெல் நிறுவனத்தின் HR அதிகாரி முகவரியை சேரும் இடம் என்று குறிப்பிடப்பட்டு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

செவிலியர் பணிகளுக்கு தேவையான ஆட்களை நேரடியாக தேர்வு செய்வது பற்றி இந்த விளம்பரத்தில் இல்லை என்ற போதிலும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து அவர்கள் மூலம் ஆட்களை பணியில் அமர்த்துகின்றனர். அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம், பணி பாதுகாப்பு சட்டபூர்வ உரிமைகள் போன்றவை வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெல் நிர்வாகத்திற்கு உள்ளது.

பெல் மருத்துவமனையின் செவிலியர், அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

ஒப்பந்ததாரர்கள் மூலமாக பெல் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்களுக்குதான் மாதாமாதம் சரியாகச் சம்பளம் வழங்கப்படுவதில்லை; இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக நிலவி வருகிறது என்றாலும் principal employer ஆன பெல் நிர்வாகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. அவர்களது வருங்கால வைப்பு நிதியும் பிஎஃப் கணக்கில் கட்டப் படுவதில்லை. ; கருணைத்தொகையும் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை; பெல் நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து தொழிலாளர்களின் பணத்தை திருடிக் கொண்டுள்ளனர்.

ஒப்பந்ததாரர்கள் அவர்களின் ஒப்பந்த முறை நீடிக்கிறதா இல்லையா என்பதை பற்றி கூட வெளிப்படையாக பேசுவதில்லை. அதற்கும் ஒரு படி மேலே சென்று ஒப்பந்ததாரர்கள் அதற்குரிய லைசன்ஸ் பெற்றிருக்கிறார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தான் செய்த வேலைக்கு உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை கேள்வி கேட்டால் கேள்வி கேட்கும் ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்ற தொழிலாளர்களை மட்டுமே பணி நீட்டிப்பு செய்கின்றனர். இதனை எதிர்த்து கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர் பெல் நிறுவனத்தின் மருத்துவ ஒப்பந்த தொழிலாளர்கள்.

பெல் என்றால் என்ன?

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான “பெல் நிறுவனம்” பவர் பிளான்ட் என்று சொல்லக்கூடிய மின் உற்பத்தி நிலையங்களுக்கான பாய்லர் உள்ளிட்ட இதர பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். 1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் லாபம் ஈட்டும் பெரிய பொதுத் துறை நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு 30,000 கோடி ரூபாய் வரை ஆர்டர்களை பெற்று இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் பெறப்படும் ஆர்டர்கள் பாதியாக குறைந்துள்ளன. இதனால் பெல் நிறுவனத்தை சார்ந்து இயங்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், சில நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய ஓராண்டுக்கு முன்பே பேட்டியளித்த பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் செயலாளருமான அன்வர், “ஒரு காலத்தில் ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிகர வருவாய் (Net profit) ஈட்டிய நிலையில், நவரத்தினா, மகாரத்னா என்ற நிலைகள் பெல் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 ஆயிரம் கோடி, 25 ஆயிரம் கோடி மட்டுமே நிகர வருவாய் (Net Profit) உள்ளது. முப்பதாயிரம் கோடி ரூபாயை கூட கடக்கவில்லை. லாபமும் வெகுவாக குறைந்துள்ளது

இதற்கு மின்சாரத் துறையில் தனியாரை அனுமதித்ததே அடிப்படை காரணம் ஆகும். இவ்வாறு தனியாரை அனுமதிப்பது காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கி, தொடர்ந்த நிலையில் தற்போதுள்ள அரசாங்கம் கூடுதலாக அதிகரித்துள்ளது. இதன் முக்கிய காரணிகள் மின் நிறுவனங்களை மின்சார வாரியம் அல்லது மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைத்து வந்த நிலையில், இப்பொழுது தனியாருக்கு அனுமதித்துள்ளதன் காரணமாக ரிலையன்ஸ், அதானி, டாட்டா, பிஎம்ஆர், பிஜிஆர் உள்ளிட பல தனியார் நிறுவனங்களும் பங்கு கொள்கின்றது. இதனால் பெல் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்கள் குறைகிறது. இது மட்டுமல்லாது வெளிநாட்டு நிறுவனங்களான சீனா, கொரியா நிறுவனங்களுக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகிறது. சீன நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்வதுடன், மெட்டீரியல்ஸ் வாங்குவதற்கு நிதியும் கொடுப்பதும், பெல் நிறுவன ஆர்டர்கள் கிடைக்காமல் போவதற்கு ஒரு காரணம்.” என்று ன்று கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த நிலைமை தற்போது மேலும் மோசமாகியுள்ளது.

பெல் நிறுவனத்தை நம்பி வேலை செய்கின்ற தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலையற்ற இந்திய ஒன்றிய அரசான பாஜக அதில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் என்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. பெல். துவங்கிய போது 16 ஆயிரம் தொழிலாளர்களுடன் இருந்த இந்த நிறுவனம், தற்போது பாதியாக குறைந்து வெறும் 8000 தொழிலாளர்களாக குறைக்கப்பட்டுள்ளனர் அதையும் ட்ரிம்மிங் என்ற முறையில் 6000 பேராக மாற்றி தனியார்களிடம் ஒப்படைப்பதற்கு கார்ப்பரேட் கைக்கூலி பாஜக எத்தனித்து கொண்டுள்ளது.

பெல் தொழிற்சாலையுடன் எமது புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு உள்ள உறவு நெடியது. அது பற்றி தனியே எழுத முடியும்.

பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்.

பு.ஜ.தொ.மு.வின் இணைப்பு சங்கமான திருச்சி B.H.E.L மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தொடர் காத்திருப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்யும் வகையிலும், B.H.E.ட நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் திருச்சி B.H.E.ட நிர்வாகத்தின் 24 பில்டிங்கை தமிழகம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு திருச்சி பகுதியில் சுவரொட்டிகள் மற்றும் ஆட்டோக்களில் பிளக்ஸ் ஒட்டி பிரச்சாரம், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளிலும், திருவெறும்பூர் பகுதியிலும் வீடு வீடாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் வரிப்பணத்தில் இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் அதில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை பற்றி சிறிதும் அக்கறை காட்டாத போது, தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவை செய்கின்ற ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்பட போகிறதா வெட்கக்கேடு என்று மக்கள் காரி உமிழ்ந்தனர்.

போராடும் பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம். பெல் நிறுவனத்தில் பணி புரிகின்ற அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்கின்ற வரையில் தொடர்ந்து போராடுவோம்.

  • ராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here