டெல்லியில் நடந்து முடிந்த ஜி-20  உச்சி மாநாடு இறுதியாக கூட்டு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இதில் உக்ரேன் தொடர்பாக மிகவும் அடிப்படையான ஒற்றுமை மற்றும் நடுநிலை அணுகுமுறை காணப்படுகிறது” என்று சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது.

இந்தியா எதிரியாக (எசமானன் அமெரிக்காவுக்கு எதிரி என்றால் அடிமைக்கும் எதிரி தானே) பார்க்கப்படும் சீனாவே இந்தியா தலைமை வகித்த ஜி-20 உச்சி மாநாட்டை பாராட்டியுள்ளது என்பதால் சங்கிகள் உறக்கமில்லாமல் உற்சாகத்தில் இருப்பார்கள்.

ஆனால், உக்ரைன் – ரஷியா போர் தொடர்பான தீர்மானத்தில் ரஷியாவின் பெயரை பயன்படுத்தாமலேயே தீர்மானம் போட்டுள்ளதால் தான் இந்த தீர்மானத்தை ரசியாவும் ஆதரித்துள்ளது, அவர்களது கூட்டாளியான சீனாவும் ஆதரித்து எழுதியுள்ளது. அதாவது மோடி யார் மனம் கோணாமலும் ஜி-20 மாநாட்டை நடத்தி முடித்துள்ளார்.

ஆனால் இதை பற்றி இந்தியாவில் வாழும் மக்களுக்கு கவலையில்லை. ஏனென்றால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியாத மோசமான வாழ்க்கை தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி 20 மாநாடு எதற்கு என்று சனாதான அடிமைகளிடம் கேட்டால் நமக்கு பெருமை தானே என்று கூறுவார்கள். என்ன பெருமை என்று எதிர் கேள்விக் கேட்டால் நம்மை தேசத்துரோகி என்பார்கள் இவ்வளவு தான் அவர்களுக்கு தெரிந்தது.

பச்சை திரைக்குள் உழைக்கும் மக்கள்!

டெல்லியில் ஜி 20 மாநாடு நடத்துவதற்காக ஆளும் பாசிச கும்பல் அடித்த கூத்துக்கள் ஏராளம். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தன்னை மிகப்பெரும் தலைவனாக காட்டிக் கொள்ள செய்த செலவுகளும் ஏராளம்.

இந்த  மாநாடானது டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. மாநாட்டிற்காக டெல்லி நகரத்தின் சேரிகளையும், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளையும் பெரிய பச்சை திரைக்கு உள்ளே வைத்து மறைத்துள்ளது. டெல்லியில் வசந்த் விஹார் அருகே உள்ள கூலி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியும் பச்சை துணியால் மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பிரதிநிதிகள் கண்ணில் ஏழைகளும், அவர்கள் வசிக்கும் இடங்களும் கண்ணில் பட்டுவிடாமல் பாதுகாக்கிறார் திருவாளர் மோடி.

முகாமில் வசிக்கும் ஆஷாதேவி என்பவர் தி வயர் இணையதளத்திடம் கூறுகையில் “நாங்கள் கடந்த 13 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். பிரதமர் மோடியின் வெளிநாட்டு விருந்தினர்கள் இந்தியா வந்திருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு நாங்கள் பச்சை திரைக்குள் தான் இருப்போம். வெளிநாட்டு ஆட்களுக்கு எங்களது வறுமை தெரியாதபடி இருக்க நாங்கள் மறைக்கப்பட்டுள்ளோம்” என்றார்.

இதேபோல் ஆர்.கே.புரம் சாலையில் உள்ள குடிசைகளை இடித்துள்ளது மோடி அரசு. திடீரென இந்த பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றியதால் அங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களை தேட முடியாமல் திக்கற்று நின்ற சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

நாய், குரங்கை கூட விட்டு வைக்கவில்லை!

மாநாடு நடந்த பகுதியை சுற்றியுள்ள ஹோட்டல்கள், தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களையும், குரங்களையும் கம்பிகளை கொண்டு பிடித்து வேனில் அடைத்து அதற்கென தனிபகுதிகளில் அடைக்காமல் உணவு கொடுக்காமல் விட்டுள்ளார்கள். இதனை விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் வசிப்பதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் வசித்த பகுதிகளை இடித்து தள்ளிய மோடி அரசு நாய்களுக்கா கருணைக் காட்டப்போகிறது?. இந்தியாவில் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல நாய், குரங்குகளுக்கும் மோடி அரசால் நிம்மதியில்லை.

2 நாட்கள் நடந்த மாநாட்டிற்காக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்துள்ளார்கள். காலம்காலமாக டெல்லியில் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கு வசிக்க வீடு கட்டித்தர அரசுக்கு துப்பில்லை. டெல்லியை அழகுபடுத்தவும், மேட்டுக்குடி மக்கள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளவும் உழைப்பவர்கள் தேவை. ஆனால் உலக நாடுகள் எங்கு நாட்டின் வறுமையை பார்த்து விடுவார்களோ என்பதற்காக மாநகரை விட்டு துரத்தி அடிப்பதும், பச்சை திரையை போட்டு மறைப்பதும் பாசிஸ்ட்டுகளுக்கே உரிய புத்தி.

இதையும் படியுங்கள்: 

கோயபல்ஸை மிஞ்சும் மோடி!
 அதிர்ச்சியூட்டும் மோடியின் உலகமகா ஊழல்!

வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் கலந்துக் கொள்ள இந்தியா வந்தவர்கள் யோக்கியவான்கள் அல்ல. அந்த ஏகாதிபத்திய கும்பல் சூறையாடியதால் எத்தனையோ நாடுகள் இன்றும் வறுமையின் பிடியில் தத்தளித்துக் கொண்டுள்ளன. வறுமை உருவாக்கிய பிதாமகன்களே ஏகாதிபத்திய கும்பல்.

மோடியின் ஆட்சியில் ‘வறுமை தான் வளர்ச்சி’. மேலும் நாட்டை சூறையாடவும் கூட்டுக் கொள்ளையடிக்கவும் ஜி-20 போன்ற மாநாடுகள் நடத்தப்படுகிறது. இதற்காக உழைக்கும் மக்கள் காலம் தோறும் திரைப்போட்டு மறைக்கப்படுகிறார்கள். இதனை உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்த, நாட்டை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் – காவி கும்பலை நாட்டை விட்டு விரட்டியடிக்க மக்களை அரசியல்படுத்துவோம்!

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here