இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 6-ன்

தொடர்ச்சி…

இப்ப வாஸ்து சாஸ்திரம்னு புதுசா சேர்த்திருக்கிறான் இதுக்கப்புறமும் கூட ஐந்து சாஸ்திரம்தான் வந்திருக்கிறது ஒண்ணு மிஸ்சிங். 108 புராணங்கள் இரண்டு இதிகாசங்கள் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் விளக்கவே வேண்டியதில்லை. 108 புராணமும் ஆபாசம். அறிவுக்குப் பொருந்தாதது. பகுத்தறிவுக்குப் பொருந்தாதது. மூ­ட நம்பிக்கை உடையது. இராமாயணம் இதிகாசம்னு உங்களுக்குத் தெரியும். எங்க ஊர்ல சாதாரண கேசு; டெய்லி நடக்குது. இங்க வந்திருக்கிற எல்லா முன்னால உட்கார்ந்திருக்கிற எல்லா மக்களுக்கும் தெரியும். உழைக்கும் மக்களுக்கு நம்ம ஊர்ல அன்னாடம் நடக்கற கேசு. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துகுனு போயிட்டான்.

இதுக்கு என்னா பண்ண முடியும்? போலீசுல போயி கம்ப்ளைண்டு கொடுக்கலாம். இல்ல ஆள் அம்பாரி இருந்தால் சொந்தகாரங்கள திரட்டிகிட்டுப்போயி, முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துகினுபோனா கந்தசாமிகிட்ட சின்னசாமி சண்டைபோட்டு இழுத்துகினு திருப்பி கொண்டாந்து வைச்சிருக்கலாம். இதான் நடக்குது. அன்னாடம் போலீசு ஸ்டேசனிலே கேசு புக்காவுது. இதுக்காக முனுசாமிக்கு கோயில்கட்ட முடியுமான்றதுதான் என்னுடைய கேள்வி. முனுசாமி பொண்டாட்டிய கந்தசாமி இஸ்துக்குனு பூட்டாம்பா. அத சின்னசாமி பாத்துகினு வந்து சொல்லிட்டான். முனுசாமி போய் சண்டை போட்டோ, பஞ்சாயத்து பண்ணியோ மீட்டுகிட்டு வந்துட்டான். இதுக்காக முனுசாமிக்கு கோயில் கட்ட முடியுமா?

இப்ப கவனிங்க. இராமன் பொண்டாட்டிய இராவணன் இஸ்துகினு போயிட்டான். அத அனுமாரு பார்த்துட்டு வந்து சொல்லிட்டான். இதுக்காக ஆள தெரட்டிகிட்டு போயி இராமர் மீட்டுகிட்டு வந்தாராம். இதுக்கு போய் கோயில் கட்டுன்றான். நான் இன்னா சொல்றன்னா நான் இராமனுக்கு கோயில் கட்டாதேன்னு சொல்லல. முனுசாமிக்கு எப்ப கோயில் கட்ட போற? ஊருக்கூரு கோயில் கட்டனுன்றன் நானு. இந்த கேசு நிறைய இருக்குது. ஏகப்பட்ட இராமாயணம் ஏகப்பட்ட மகாபாரதக்கதை நடந்துக்கினு இருக்குது. அது இந்திய தத்துவ மரபு இல்லை.

தத்துவம் என்பது தகவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது வாழ்க்கை நெறி என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் முடிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது சிந்தனையின் தெளிவு என்று புரிந்து கொண்டால், தத்துவம் என்பது செயல் ஊக்கம் என்று புரிந்து கொண்டால், இந்து தத்துவ மரபு இந்திய மக்களுக்கு ஏற்ற தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லவே இல்லை. உழைக்கும் மக்களான நம்முடைய தத்துவ மரபு அல்ல, இந்து தத்துவ மரபு.

மீண்டும் இந்திய தத்துவ மரபை விளக்குவதற்கு முன்னால் இதுவரை சொன்னதை சுருக்கிப் பார்த்துக் கொள்ளலாம். நான்கு வேதங்களும் நம் மரபு இல்லை. ஒப்புக் கொள்கிறவர்கள் கையொலி எழுப்புங்கள். நம்முடைய மரபு இல்லை. நான்கு வேதங்களும் நம்முடைய மரபு இல்லை. (கரவொலி அதிர்கிறது). ஆரண்யகங்கள் நம்முடைய மரபு இல்லை. இல்லையா? உபநிடதங்கள். பிரம்மமும் ஆன்மாவும் வேறா? ஒன்றா? பெரிய புடுங்கற வேலை இது. எங்களுக்கு, போட்டது முளைக்க மாட்டங்குது. காவிரியில தண்ணி வரமாட்டங்குது. உழைச்சதுக்கு கூலி கிடைக்க மாட்டங்குது. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை, இருக்க இடமில்லை, படிக்க படிப்பில்லை, படிச்சவனுக்கு வேலை கிடைக்கல.

வேலை கெடச்சவனுக்கு கூலி போதல, கூலி வாங்கறவனுக்கு வாங்கற மாதிரி வெலவாசி இல்ல. நொந்து நூடுல்சா ஆகிப் போயிருக்கிறோம். இதில் பிரம்மம், ஆன்மா, வேறுவேறா, ஒண்ணு, ஒண்ணா, இந்த உபநிடதம் நமக்கு தேவையா? இந்த தத்துவ மரபு நம்முடையதா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. அப்போ உபநிடதமும் இல்லை. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம், நம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. சமுதாய சாஸ்திரம் என்று, ஜாதிபிரித்து உழைப்பவனை பார்ப்பனுக்கு மேல் பெரிய ஜாதி இல்லை, சக்கிலியனுக்கு கீழே சின்ன ஜாதி இல்லையென்று நம்மை பிரித்து வைத்து அடிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறானே மக்களை பிரித்தாண்டு கொண்டு இருக்கிறானே, இந்த மரபு நம்முடைய மரபா அந்த சமுதாய மனு ஸ்ம்ருதியும், நம்முடைய மரபல்ல, அப்புறம் இந்த சாஸ்திரம், வாத்சாயணரின் காம சாஸ்திரம், செருப்பாலடிப்பாங்க வீட்டுல போய் சொன்னா? வாத்சாயணரின் காமசூத்திரப்படிதான் நீயும் நானும் படுத்துக்க போறோம்னா, தொடப்பக்கட்ட பிஞ்சிடும். இததான் பாட்டெழுதி, சினிமாவுல கூடக் காட்னாங்க. “”வாடி … நாட்டுக்கட்ட” உண்மையிலே கிராமத்துல போய் பாடிக் காட்டு. பிஞ்சிடும் துடப்பக்கட்ட. இதெல்லாம் வாத்சாயணர் கம்பெனி பிரைவேட் லிமிடெட். தோழர்களே! தோழியர்களே! இதெல்லாம் நம் மரபு இல்லையென்றால், எது நம்முடைய மரபு?

இவர்களுடைய ஆயுர்வேதமும் நம்முடைய மரபு இல்லையென்றால் பாட்டாளி வர்க்கம், தமிழர்களாய் இருந்தாலும், தெலுங்கர்களாய் இருந்தாலும், மலையாளிகளாய் இருந்தாலும் சரி, குஜராத்திகளாய் இருந்தாலும் சரி, இமாச்சல பிரதேசத்தில் வாழ்பவர்களாய் இருந்தாலும் சரி, உழைக்கும் இந்திய மக்களுடைய சிந்தனையை வளப்படுத்திய, செயலை ஊக்கப்படுத்திய, பயன் அனுபவிப்பைத் திரட்டிய, அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிற மரபு இந்திய தத்துவ மரபு. இதுவரை நான் விளக்கிய இந்து தத்துவ மரபு இல்லை. அப்ப அது சாங்கியம், யோகம், மீமாம்சம், அடுத்தது ஞாயம், வைசேசிகம், வேதாந்தம், அதற்குப் பிறகு, வேதாந்தத்திலே சில விவகாரம் இருக்கிறது. அது அந்த இடத்திலே வரும்போது சொல்கிறேன். வேதாந்தம்ன்றது எல்லாரும் நெனச்சுக்கிட்டிருக்காங்க. காலடியிலே பிறந்த சங்கரர் சொன்னதுதான் வேதாந்தம்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க.

அவரு சும்மா டுபாகூரு வேதாந்தி, அதை விளக்கி சொல்ல எனக்கு நேரம் இல்லை. நேரம் இருக்கற வரையில் அதை சுருக்கமாகச் சொல்கிறேன். உண்மையாக வேதாந்திகள் வேறு யாரோ இருந்திருக்கிறார்கள். அவரு நம்ம சினிமா டைரக்டர் ஐயா வந்திருக்கிறாரு. தங்கர்பச்சான், அவரு சினிமாவுல ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது டைரக்ட் பண்றன்னு புது டைரக்டர் புரடியூசர்கிட்ட போய் கதை சொன்னா இவர அனுப்பிடுவாங்க கதை நல்லா இல்லன்னு. இரண்டு வருசம் பொறுத்து வேறு எவன் பேர்லியோ அந்த கதை வந்திடும். சினிமாவே எடுத்துடுவானுங்க திருட்டு பசங்க. இந்த வேலைய செய்தவருக்குப் பேருதான் சங்கரரு. இந்த டுபா­க்கூர் வேலை செய்தவர்ல பர்ஸ்ட் மேன் சங்கரரு. அவர் எங்கியோ இருந்த தத்துவத்தை கிட்நாப் பண்ணிட்டு போயிட்டாரு அதை நான் விளக்கி அந்த இடத்தில் சொல்லுகிறேன்.

அடுத்தது பார்த்தீங்கன்னா இன்னொன்று கேள்விப்பட்டிருக்கலாம். உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், சித்தாந்தம், வேதாந்தம் என்று ஒரு செட்டிருக்குது. அதை சடாந்தம் என்று சொல் வார்கள். இந்த சடாந்தத்தை ஒன்றிணைத்து அந்த வேறுபாட்டை நீக்கி, சுத்த சன்மார்க்க சங்கம் வைத்த வள்ளலார் சடாந்த சமரச சங்கம் தான் வைத்தார். இந்த சடாந்தம் என்று சொல்லப்படுகிற நாதாந்தம், காலாந்தம், போதாந்தம், வேதாந்தம் என்கிற தத்துவ நெறிகள் நம்முடைய இந்திய மரபை சார்ந்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் அங்கு போவோம்.

திருமூலர் சுத்தமான தமிழர். அவருக்கும் பார்ப்பானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனா ஒரு மயக்கத்தை உண்டாக்குகிறதுக்காக அவரு மூவாயிரம் ஆண்டு வாழ்ந்தாருன்னு ஒரு புருடா உட்டானுங்க. எந்த மனிதனாவது மூ­வாயிரம் ஆண்டு காலம் வாழ முடியுமா? இனிமேல் வாழலாம். ஒருவேளை மனிதன் வாழுகிற விஞ்ஞானம் அவனுக்கு கை கொடுக்கலாம். மூவாயிரம் ஆண்டு வாழலாம். ஆனால் நேற்று வரை வாழ்ந்தவர்களுக்கு, இன்று வரை வாழ்பவர்களுக்கு மூ­வாயிரம் ஆண்டு வாழ்வதென்பது முயன்றால் கூட முடியாத காரியம். இந்த வேலை இல்லாத வேலைய ஒருவருசத்துக்கு ஒரு பாட்டுன்னு ­மூவாயிரம் வருசத்தில மூ­வாயிரம் பாட்டு எழுதினாராம் திருமூ­லர். இது அவரை அவமானப்படுத்துற மாதிரி இல்லையா? அவ்ளோ பெரிய கவிஞர். ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதுவார்னா மீதி நாளெல்லாம் என்னா பண்ணுவார். இது திருமூ­லரையே கேவலப்படுத்துற மாதிரி இல்ல? நாலுவரி பாட்டு எழுதறதுக்கு நம்மாளுங்க சினிமா பாட்டுல கொளுத்தறாங்க அவனவன் உக்கார்ந்து, டேப்பு வந்து சேர்ந்து உடனே பாட்டு எழுதி அனுப்பிட்டு அடுத்த டேப்பை அனுப்பச் சொல்றாங்க. ஸ்பீடு பிரேக்கரே இல்லாம போயிட்டிருக்கிறான் நம்மாளு, பாட்டெழுதுறவன். கம்பரு அவ்ளோபன்னெண்டாயிரம் பாட்டெழுதினார்னா இன்னா அர்த்தம். வேற வேல இல்லன்னு அர்த்தம். அவர் பாட்டுக்கு எழுதிகிட்டே இருந்திருக்கிறாரு. எல்லாம் ஸ்பீடா இருக்கிறாங்க. மாமனாருக்கு கடிதாசி எழுத சொன்னாலே கவிதை கவிதையா எழுதுறாங்க. இந்த நாட்ல போயி ஒரு வருசத்துக்கு ஒரு பாட்டுதான் எழுதினாரு திருமூ­லர். இது பொய்யில்லையா? ஆக உண்மையை மறைப்பதற்கு, திரு­மூலரை நாம யாரும் படிச்சிடக் கூடாதுன்னு பண்ணியிருக்கிறான்.

திருமூ­லர் ஒரு பாட்ல சொல்லியிருக்கிறாரு “”உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பே ஆலயமாம், வள்ளல் பிராணார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே” என்றிருக்கிறாரு. இது கொஞ்சம் கடுமையான நடையில் இருந்தாலும் எளிதாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தால் புரிந்து கொள்ள முடியும். உள்ளம் பெருங்கோயில் என்றால் மனத்தைப்பற்றி சொல்வதற்கு ஒரு செக்சன் என்று அர்த்தம். மனத்தை பற்றிய தத்துவத்தைச் சொல்லுவது சாங்கியம். ஊனுடம்பே ஆலயமாம், உடலை வளப்படுத்திக் கொள்கிற தத்துவம். அதற்குப் பெயர் யோகம். சாங்கியம், யோகம் என்று இரண்டாயிற்று. மூ­ன்றாவது செயல்பாடுகளை சொல்வது “”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயமாம், தர்க்கம், நியாயம், வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், வாய் என்பது தர்க்கத்துக்கு குறியீடு, தர்க்க ரீதியாக பேசுவது, நியாயம் என்கிற அந்த தத்துவ மரபைச் சேர்ந்தது அது. வள்ளல் பிராணர்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், அதுதான் வேதாந்தம் என்பது தெள்ளத் தெளிவது, கடைசியாய் சொல்வது, கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே, கள்ளப்புலனைந்தையும், புலன்களை அடக்கி நம் வசப்படுத்திக் கொள்வது.

அந்த புலன்களை நம்வசப்படுத்தி நடத்தினால் ஒளிமிக்க வாழ்வு பெற முடியும் என்று சொல்வது இதைத்தான் அவர் சொல்லியிருக்கிறாரு. இந்த சாங்கியம், யோகம், மீமாம்சம் என்பது அவர் காலத்தில் இல்லை என்று நினைக்கிறேன். மீமாம்சம் என்பது செயல்களைப் பற்றிய தத்துவம். இப்போது கவனியுங்கள். இந்திய தத்துவ மரபு இந்த ஆளைச் சேர்ந்தது. இது இந்து தத்துவ மரபு இல்லை. அவர்கள் இதை ஏற்பதும் இல்லை. சாங்கியத்தை எழுதியவர் கபிலர். கபிலர் என்பவர் “”பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” அழிந்து போன நம்முடைய பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த பெரிய ஞானிக்குப் பெயர் கபிலர். தொல்காப்பியருக்கு முன்னாலேயே வாழ்ந்த பல அறிஞர்கள் இருந்ததால்தான், தொல்காப்பியம் அவராலே எழுத முடிந்தது. அந்த இலக்கணத்தை அவராலே தர முடிந்தது. அப்போ தொல்காப்பியத்துக்கு முன்னால் இங்கே நூற்றுக்கணக்கிலே, ஆயிரக்கணக்கிலே இங்கே எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும். அறிஞர் பெருமக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here