பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற கொலைபாதகக் கும்பலுடன் கைகோர்த்து வரும் நீதிபதிகள்!

ஒடிசாவில் பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் சங்கிகளால் எரியூட்டப்பட்டதும் – சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் ஜி. ஆர்‌ சுவாமிநாதன் போன்றோர் தமிழ்நாட்டை எரியூட்டத் துடிப்பதும்!

1999 ஜனவரி 22 ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்வு…! இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுமையையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பரிபாடாவில் உள்ள மயூர் பஞ்ச் வாஞ்சலிகல் மிஷினரி அமைப்பின் மூலம் பழங்குடியின தொழு நோயாளிகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர் ஆஸ்திரேலியா நாட்டின் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் – கிளாஸ்டிஸ் ஸ்டெயின்ஸ் தம்பதியினர். அதாவது 1965 முதல் பழங்குடியின தொழு நோயாளிகளுக்குத் தொண்டூழியம் புரிவது ஒன்றே தங்கள் கடமை எனக் கருதி அவர்களுடனேயே உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தனர். அவர்களது பச்சிளம் பாலகர்கள் தான் பிலிப் (9) மற்றும் திமோதி (7) ஆவர். குழந்தைகளும் பெற்றோருடனேயே வாழ்ந்து வந்தனர். அதாவது மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் தங்கி இருந்து, ‘அன்னை’ தெரசா வேறொரு கோணத்தில், பணியாற்றியது போல எனக் கொள்ளலாம்.

இந்நிலையில் தான் 1999 ஜனவரி 22 மதிய உணவை ஸ்டடெய்ன்ஸும் அவரது இரு மகன்களும் பழங்குடி இன தொழு நோயாளிகளுடன் இணைந்து உணவருந்தி விட்டு, அன்று இரவு தேவாலயத்தின் வெளியே நின்ற இவர்களது வேன்(Van)னிலேயே படுத்து உறங்கி விட்டனர்.

வாகனத்தை எரியூட்டி மூவரையும் கொலை செய்தது காவி(லி)க் கும்பல்..!

பழங்குடியின மக்களின் அவல நிலையைப் புரிந்து அங்கே உள்ள தொழு நோயாளிகளுக்கு தொண்டூழியம் புரிந்ததே அவர்கள் செய்த ‘மாபெரும் குற்றம்?!’

அப்போதைய ஒடிசா பஜ்ரங்தள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதாப் சந்திர தாராசிங் (ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்பட்டவன்) தலைமையில் 15 பேர் கொண்ட கொலைகார சங்கிக் காலிகள் ஸ்டெய்ன்ஸ் தம்பதியினர் பழங்குடியின மக்களை ‘மதமாற்றம் செய்கின்றனர்’ என்ற பொய்க் குற்றம் சுமத்தி எரிபொருள்களை வாகனத்தில் உள்ளே போட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மூவரையும் எரியூட்டிப் பொசுக்கினர். அருகில் நின்ற 20-க்கும் மேற்பட்ட பஜ்ரங்தள் ஆர் எஸ் எஸ் காலிக் கும்பல் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமிட்ட வண்ணமிருந்தனர். அத்துடன் அனைவரும் தலை மறைவாகிவிட்டனர். இச்செய்தி உலகம் முழுமையும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பின்னர் ஒவ்வொருவராக 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முதல் குற்றவாளியான தாராசிங் தலைமறைவாகியிருந்து 2000-ல் கைதான போது இப்படிச் சொன்னான்: ‘மதமாற்றத்தில் ஈடுபடும் கடும் குற்றவாளிகளுக்கு இப்படிப்பட்ட தண்டனை வழங்கியதை நான் குற்றமாகக் கருதவில்லை; மாறாக பெருமையாகவே கருதுகிறேன்; இதற்கெல்லாம் நான் மன்னிப்புக் கேட்கவே மாட்டேன்..’ என்று ‘வீர வசனம்’ பேசினான். வழக்கு சிபிஐக்கு சென்றது.

சிபிஐ நீதிமன்றம் தாராசிங் உட்பட சிலருக்கு 2003-ல் தூக்குத் தண்டனை அறிவித்தது. மேல்முறையீட்டில் 2005-ல் உயர் நீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2011-ல் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்ற சங்கி ஆதரவு நீதிபதிகள் சதாசிவம் சௌகான் அமர்வு சிபிஐ தீர்ப்பு, உயர்நீதிமன்ற தீர்ப்பு இவையெல்லாம் போதாது என்று நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ‘வாதுவா கமிஷன்’ என்ற ஒரு கமிஷன் அமைத்து விசாரணைக்கு உத்திரவிட்டது. வாதுவா கமிஷனும் ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது. வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் அமர்வு ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

தாராசிங்க்கு அடுத்த முக்கிய குற்றவாளி மெஹேந்திரீ ஹெம்ப்ராமும் (வேனுக்குத் தீ வைத்ததில் இவனது பங்கு அளப்பரியது) ஆயுள் தண்டனையாக அறிவிக்கப்பட்ட பிறகு பலர் சிறையில் தள்ளப்பட்டனர்.

கைதான பொழுது நமது எச்ச ராஜா போல வீர வசனம் பேசிய தாராசிங் உட்பட கொலைகார கும்பல் மேலும் மேலும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திலும் அப்படிப்பட்ட கொலைகாரச் செயலை செய்வதற்காக வருந்துவதாகவும் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் தொடர்ச்சியாக சரண்டர் ஆனார்கள். எப்படியோ தாராசிங் உட்பட சிலர் ஏப்ரல் 2025-ல் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

ஆனால் இதே குற்றத்தை சிறுபான்மையினர் யாரேனும் செய்திருந்தால் மூன்றே மாதத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருப்பார்கள். இதுதான் பார்ப்பன சனாதன நீதி பரிபாலன முறையின் அவலட்சணம். இதுதான் பார்ப்பனீய சனாதனம் கோரத்தாண்டவமாடும் சமூகத்தின் இழிநிலை.

ஆனால் கடந்த ஜனவரி 23 -ல் இந்தியா வந்திருந்த ஸ்டைன்ஸ் துணைவியார் கிளாடிஸ், குற்றவாளிகள் அனைவரையும் மன்னித்து விட்டதாக மிகப் பெருந்தன்மையாக அறிவித்துக் கடந்து சென்றுள்ளார்.

ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை கடந்த காலமல்ல, இன்றும் தொடர்கிறது. சமீபத்தில் ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் பிபின் பிகாரி நாயக் எனும் கிறிஸ்தவ பாதியாரைத் தாக்கி, அவர் வாயில் மாட்டுச் சாணத்தை திணித்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் போடச் சொல்லி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

ஒடிசாவை தற்போது ஆள்வது பாஜக என்பதையும் அறிவோம். கிறிஸ்மஸ் அன்று சர்ச்சுகள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் விழா நேரத்திலும் கொடும் தாக்குதல் நடத்திய பஜ்ரங்தள் உள்ளிட்ட காவி(லி)க் கும்பலின் அட்டூழியங்கள் ஒடிசா மட்டுமல்ல; இந்தியாவின் வட மாநிலங்களில் அனைத்திலும் சகிக்க முடியாததாக அரங்கேற்றம் செய்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டின் பாரம்பரியநிலை வேறு என்பதை சங்கிகள் உணர மறுக்கிறார்கள். பற்றாக்குறைக்கு தமிழ்நாட்டில் புத்துருவாக்கம் பெற்றுள்ள பிழைப்புவாத சங்கிக் கும்பல் ஒன்றிய அரசின் பின்புலம் இருக்கிறது என்று ஆடத் தொடங்கி விட்டார்கள்.

இதுதான் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் மாண்புகள் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர் காவிக் கூட்டத்தினர்.

பார்ப்பன சனாதன சங்கி நீதிபதிகளின் அலப்பறை! 

ஒரிசாவில் இப்படி சிறுபான்மையினருக்கு எதிராகபொய்க் குற்றம் சுமத்தி எரியூட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்திரவிட்டது; உழைக்காமல் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலைகளில் சூத்திர – பஞ்சமர்கள் வெற்று உடம்புடன் உருண்டு புரண்டு சொர்க்கத்திற்குப் போகலாம்; கார் ஏற்றி கொன்றாலும் பார்ப்பான் தண்டனைக்கு உரியவனாக/ சிறைத்தண்டனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது; நான் எஞ்சிய நான்கரை ஆண்டு பணிக்காலத்தையும் கடந்த காலங்களைப் போல சனாதன வழிமுறைகளிலேயே பணியாற்றி ஓய்வு பெறுவேன்; என்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான தீர்ப்புகளை தொடர்ச்சியாகப் பார்ப்பன சனாதன கண்ணோட்டத்தில் வழங்கி தமிழ்நாட்டையே எரியூட்டி பொசுக்கிக் கொண்டிருக்கிறார் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்.

படிக்க:

 திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணியின் மதவெறியும், மேலூரில் கார்ப்பரேட் சார்பும்!

♦ குஜராத் இனப்படுகொலை: இஷான் ஜாஃப்ரிக்கு என்ன‌ நடந்தது? | பாகம் 1

இன்னொரு நீதிபதி ஸ்ரீமதியோ தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்ப்பன சனாதனத்திற்கு எதிராக ஓங்கி குரல் எழுப்பி பேசியதற்காக வழக்கு ஒன்றில் திராவிட இயக்கங்களின் நூற்றாண்டு கால வரலாற்றை கொச்சைப்படுத்தி சம்பந்தா- சம்பந்தமில்லாமல் தீர்ப்புரையில் உதயநிதி ஸ்டாலினையும், திராவிட இயக்கங்களையும் கொச்சைப் படுத்தி அரசியல் சட்டத்திற்கு புறம்பாக தீர்ப்பில் பதிவு செய்கிறார். இவருமே சுவாமிநாதனுடன் சேர்ந்து தமிழ்நாட்டை எரியூட்டிக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை சங்கிகள் படை எடுக்கிறார்களோ பார்ப்போம்!

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் காலம் தொட்டு இம்மண்ணுக்கென ஒரு சுயமரியாதை பாரம்பரியம் உண்டு. ஆனால் அண்ணா பெயரை வைத்துக் கொண்டு கட்சி நடத்தும் எடப்பாடி கூட்டம் மற்றும் சில உதிரிகள் அமித்ஷா-மோடி கும்பலின் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ பாசிச கூட்டத்துடன் இணைந்து நின்று ‘அமித்ஷா திமுக’-வாக மாற்றிக் கொண்டு சந்தி சிரிக்க பிழைப்பு வாதத்தில் மூழ்கிப் போனார்கள்.

அங்கிங் கெனாதபடி காவிக் கும்பல் அரங்கேற்றம்

தமிழ்நாட்டில் நிரம்பி இருப்பது சங்கி நீதிபதிகள் மட்டுமல்ல; RSS – மோடி – அமித்ஷா ‘புண்ணியத்தில்’ ஐஏஎஸ் ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத் துறை அதிகாரிகளும் காவியில் கரைந்து தமிழ்நாட்டை எரியூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் உண்மையே.

இவை மட்டுமா? எச்ச.ராஜா, அர்ஜுன் சம்பத், கரு நாகராஜன், நயினார் நாகேந்திரன், ஆட்டுக்குட்டி அண்ணாமலை, நாராயணன் திருப்பதி, துக்ளக் ஷோ வாரிசு குருமூர்த்தி, கே.டி.ராகவன், தமிழிசை, வானதி, காயத்ரி, குஷ்பூ உள்ளிட்ட பல காவிக் கும்பல், ஒன்றிய அரசின் பக்கபலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து இழிந்த சொற்களால் வசவு பாடுவது மட்டுமின்றி, தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்க எரியூட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தொடர்ந்து நடக்கிறது.

இன்னொரு புறம் பக்கா சங்கியாகிப் போன ச்சீமான், மணியரசன், விஜய் போன்ற கோமாளிகளும் எரியூட்டப்பட்ட நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் நாம் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் காவிகள் என்னும் மிகப்பெரும் “நச்சுப் பாம்பு” படம் எடுத்து தடம் பதிக்க பல திசைகளிலும், பல மோசடிகளிலும், பல்வேறு குறுக்கு வழிகளிலும், தில்லுமுல்லுகளிலும் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதி இந்தியாவில் தமிழகத்தில் காவிக் கும்பல்களுக்கு உண்டாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து உழைக்கும் மக்களின் கடமையாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

ஆனாலும் தமிழ் மண்ணில் என்றுமே காவிக் கூட்டம் தடம் பதிக்க முடியாது என்பதனை பாரிய போராட்டங்களின் ஊடாக நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாட்டில் முற்போக்கு இயக்கங்கள் ஜனநாயக இயக்கங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் பெரும் கடமையாக முன்நிற்கிறது.

  • எழில்மாறன்

3 COMMENTS

  1. 18 வது பாரா (எழுத்துப் பிழை)
    பெரியார் காலம் தொட்டு என்ற பாராவில்
    (அமித்ஷா திமுக )என உள்ளது
    (அமித்ஷா. அதிமுக) என மாற்றவும்

    • அப்படி அல்ல; அண்ணா திமுக (அதாவது அதிமுக என்பது) ‘அமித்ஷா திமுக’- வாக
      மாறி விட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் குறிப்பிடுவது போல் அமைக்கப்பட்டால் அது என்னவாக மாறும் எனில் அமித்ஷா அண்ணா திமுக என்று மாறிவிடும். நாம் அம்பலப் படுத்துவது என்னவென்றால் அண்ணாவை எடுத்துவிட்டு அமித்ஷாவை சேர்த்துக் கொண்டு விட்டார்கள் என்பதே ஆகும். அந்த வகையில் நான் எழுதியது சரி என்றே கருதுகின்றேன் தோழர். அதில் பிழை இல்லை தோழர்.

  2. பாதிரியார் கிரஹோம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற கொலை பாதக கும்பலுடன் கைகோர்ந்து வரும் நீதிபதிகள்!

    27 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் ஒரு பாதிரியார் தனது குடும்பத்துடன் பழங்குடியின தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை பராமரித்து வந்தார் பாதிரியாரை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கூறி பாதிரியார் அவரது இரண்டு குழந்தைகளையும் அவர்கள் பயணம் செய்யும் வண்டியில் எரிபொருளை ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றார்கள் பஜ்ரதங்கள் அமைப்பை சேர்ந்த காவி கும்பல் ஜெய் ஸ்ரீராம் கோசமிட்டு தப்பி ஓடிவிட்டார்கள் அவர்களைத் தேடி கைது செய்து சிறையில் அடைத்து தூக்கு தண்டனை வழங்கப்பட்டது அதன் பிறகு ஆயுள் தன்மையாக மாற்றப்பட்டது பிறகு குற்றவாளிகள் மன்னிப்பு கோரி விடுதலை செய்ய கூறினார்கள் நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு கருணை காட்டி தண்டனையை குறைத்தார்கள்.

    மேற்கண்ட சம்பவம் நடைபெற்றது போல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் ஜி. ஆர். சாமிநாதன் உட்பட பல நீதிபதிகள் உயர் அதிகாரிகள் பார்ப்பன சனாதனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார்கள் அந்த வகையில் தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கை பேசக்கூடிய அதிமுக கூட்டணி கட்சிகள் உள்பட இன்று அமித்ஷா அதிமுக வாக மாறி வருகிறார்கள் தமிழ்நாட்டில் காவி கும்பல் தடம் பதிக்க முடியாது பெரியார் என்பதை ஆணித்தரமாக இந்த கட்டுரை உணர்த்துகிறது

    கட்டுரையாசிரியர் :
    தோழர் எழில்மாறன்
    அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here