ஆடத் தெரியாதவன் தெருக் கோணல் என்று புளுகிய கதை!


ஆக்ஸ்ஃபாம் கணக்கீட்டு முறை:
சமீபத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வும், வறுமையின் அளவும் அதிகரித்துள்ளதாகக் கூறிய ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் வழிமுறைகளும் ஆக்ஸ்ஃபாம் பயன்படுத்தும் கணக்கீட்டு முறையும் தவறு என்றும் அது அரசாங்கத்தின் பல்வேறு மக்கள்நல முன்முயற்சிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். ஆக்ஸ்ஃபாம் அறிக்கை மட்டுமல்ல, சமத்துவமின்மை தரவுதளத்தின் ஆய்வறிக்கை அதிக பொருளாதார சமத்துவமற்ற நாடாக இந்தியாவைக் குறிப்பிட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபாம் அமைப்பு கென்யா, பிரேசில், வியட்நாம் எனக் கிட்டத்தட்ட 100 நாடுகளில் இயங்கிவருகிறது. மக்களுடன் நேர்காணல்களை நடத்தி, புள்ளிவிவரங்களை சேகரிக்கிறது. 99 சதவீதத்தினருக்கான பொருளாதார மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து உலகளவில் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.

படிக்க:

♦ பொருளாதார ஆய்வறிக்கை 2021-22 (Economic Survey):
திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலை     வீழ்த்துவதே தீர்வு!

ஆக்ஸ்ஃபாம் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டாவோஸில் (சுவிட்சர்லாந்து) நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டின் போது உலகத்தின் பொருளாதார சமமின்மை அறிக்கையை வெளியிடுகிறது. ஆக்ஸ்ஃபாம் பொருளாதார சமமின்மையை எவ்வாறு மதிப்பிடுகிறது?. ஆக்ஸ்ஃபாம் கிரெடிட் சூயிஸ், ஃபோர்ப்ஸ் நிறுவனங்களின் தரவுகளைப் பயன்படுத்தி பொருளாதார சமமின்மையை மதிப்பிடுகிறது. சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சொத்துக்கள் பற்றிய விரிவான தரவுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. ஆக்ஸ்பாம் இந்தத் தரவுகளை பயன்படுத்துகிறது. கிரெடிட் சூயிஸ் 20 வயதிலிருந்து உள்ள அனைத்து தனிநபர்களின் நிகர சொத்துமதிப்பைக் கணக்கிடுகிறது. செல்வத்தைக் கணக்கிடுகிறது. ஒரு தனிநபரின் நிகர சொத்துமதிப்பு என்பது அவரது கடன்களை கழித்தபின் உள்ள சொத்துகளின் மதிப்பாகக் கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் சூயிஸ் புதுப்பித்த தேசிய இருப்புநிலை தரவுகள், குடும்பக் கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்படும் மொத்த சொத்து, செல்வ விநியோகம் ஆகியவற்றைத் தொகுத்து உலக அளவிலும், நாடுகள் அளவிலும் பகுதி வாரியாகவும் தரவுகளின் அட்டவணைகளையும், அதை பகுப்பாய்வு செய்யும் அறிக்கையையும் வெளியிடுகிறது.

30 ஆண்டுகளாக, ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் பெரும் பணக்காரர்களின் பட்டியலையும், அவர்களின் நிகரச் செல்வத்தின் மதிப்பீடுகளையும் தொகுத்துள்ளது. பெரும் பணக்காரர்கள் ஒவ்வொருவரின் நிகர செல்வத்தையும் கணக்கிட அவர்கள் பல்வேறு விசாரணை முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆண்டு முழுவதும் ஃபோர்ப்ஸின் நிருபர்கள் பட்டியலில் உள்ள பெரும்பணக்காரர்கள், அவர்களின் ஊழியர்கள், போட்டியாளர்கள், வழக்கறிஞர்களை நேர்காணல் செய்கிறார்கள். அவர்களின் நகர்வுகளை கண்காணிக்கிறார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் ஒப்பந்தங்கள், அவர்கள் விற்கும் நிலம், அவர்கள் வாங்கும் ஓவியங்கள், என்ன காரணங்களுக்காக அதை செய்கிறார்கள் என்பதையும் கண்காணிக்கிறார்கள். பெரும் பணக்காரர்களின் நிகர மதிப்பை மதிப்பிடுவதற்கு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு உள்ள பங்குகள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள், அவர்கள் உடைமையாகக் கொண்ட படகுகள், கலைப்பொருட்கள், பணம், அவர்களின் கடன் கணக்கு உட்பட அனைத்தும் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் மதிப்பிடப்படுகிறது. கிரெடிட் சூயிஸின் 2013 ஆம் ஆண்டின் உலக சொத்துத் தரவுகளிலிருந்து, உலக மக்கள்தொகையில் பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ள 50% பேர் உலக நிகரச் செல்வத்தில் வெறும் 0.7% அல்லது $1.7 லட்சம் கோடி டாலர் மட்டுமே பெற்றுள்ளனர் என்று கண்டறிந்தனர். 2013 ஃபோர்ப்ஸ் பெரும்பணக்காரர்களின் பட்டியலில் எத்தனை பணக்காரர்களின் சொத்து மதிப்பை சேர்த்தால் இதே மதிப்பை பெறலாம் எனக் கணக்கிட்ட பொழுது வெறும் 85 பணக்காரர்களின் சொத்துக்களை சேர்த்த பொழுது அது 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பைக் கொண்டிருந்தது அறியப்பட்டது. அதாவது உலகின் 50% மக்கள் கொண்டுள்ள சொத்துமதிப்பை வெறும் 85 பணக்காரர்கள் பெற்றிருந்தனர்.

கிரெடிட் சூயிஸின் 2016 தரவுகளின் அடிப்படையில், உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் செல்வம் முன்பு மதிப்பிட்டதை விட குறைந்து உலகச் செல்வத்தில் 0.2% அல்லது $40900 கோடியாக இருந்தது. ஃபோர்ப்ஸ் பட்டியலில் 8 பெரும்பணக்காரர்களின் செல்வத்தைக் கூட்டியதில் $42600 கோடி டாலராக இருந்தது. அதாவது உலகளவில் 50% மக்களின் மொத்தச் செல்வத்தை வெறும் 8 நபர்கள் கொண்டுள்ளனர் என்பது அறியப்பட்டது.
இந்த அடிப்படையிலேயே ஆக்ஸ்ஃபாம் 2022 அறிக்கையில் உலகின் 310 கோடி மக்களைக் காட்டிலும் 10 பெரும்பணக்காரர்கள் அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதையும் உலகளவில் 99 சதவீதத்தினரின் வருமானம் கோவிட்-19 பெருந்தொற்றின் சரிவடைந்த போது 10 பெரும் பணக்காரர்களின் வருமானம் 70000 கோடி டாலரிலிருந்து 150000 கோடி டாலராக இரட்டிப்பாகியுள்ளதுஎன்பதையும் கணக்கிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சமமின்மை தொடர்ந்து அதிகரித்தால் 2030ல் 331.8 கோடி பேர் வறுமைநிலையில் வாழ்வர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சமமின்மையால் தினசரி குறைந்தது 21,318 பேர் இறக்கின்றனர், 4 விநாடிக்கு ஒரு நபர் இறக்கின்றார் என ஆக்ஸ்ஃபாம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதார சமமின்மையால் அடிப்படை சுகாதாரம், மருத்துவ வசதி பெறமுடியாமல் தினசரி 15,342 பேர் இறக்கின்றனர்; பட்டினியால் தினசரி 5,773லிருந்து 14,916 பேர் வரை இறக்கின்றனர். பாலின அடிப்படையிலான வன்முறையால் 203லிருந்து 4,685 பேர் வரை இறக்கின்றனர் என 2022ஆம் ஆண்டிற்கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Samantha Ks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here