1990 களில் இந்திய ஆளும் வர்க்கங்களினால் திணிக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள், இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை மேலும் மோசமாகிவிட்டது. காலனியாதிக்கத்தின் புதிய வடிவமாக இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏகாதிபத்தியங்கள் கடைப்பிடித்து வருகின்ற நவீன காலனி ஆதிக்கம் மற்றும் மறுகாலனியாதிக்கம் போன்றவை அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மூலதன சூறையாடலுக்கு பயன்படுகிறதே ஒழிய எந்த நாட்டையும் முன்னேற்றுவது இல்லை.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த மறுகாலனியாக்க போக்குகள், ஆளும் வர்க்கத்தை சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளை கைவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்டுமாறு நிர்பந்தப்படுத்துகின்றன.

2008-க்கு பின்னர் இந்திய ஆளும் வர்க்கங்களில் ஒரு பிரிவினர் தேசங்கடந்த தரகு முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். இந்த பிரிவினரே ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கும் பாசிச சர்வாதிகாரத்தை தனது அரசியல் கொள்கையாக ஏற்று மக்களை அடக்கி ஒடுக்குகின்றனர்.

அரசு கட்டமைப்பு தோற்றுப்போய், திவாலாகி, ஆளத்தகுதியிழந்து விட்ட நிலையில் மக்களுக்கு புதிய அரசு கட்டமைப்பை பாசிசத்தின் வடிவில் முன்வைக்கிறது ஆளும் வர்க்கம். இதற்கு பொருத்தமான சித்தாந்தக் கொள்கைகளை கொண்டுள்ள ஆர்எஸ்எஸ்-பாஜக தனது ’இந்துராஷ்டிரா’ கொள்கைகளை முன் வைத்து ஆளும் வர்க்கத்தின் விசுவாசமான அடியாளாக மாறியது. 2014 ஆம் ஆண்டு தான் நேரடியாக ஆட்சிக்கு வந்த பின்னர் பாசிச கொள்கைகளை அமுல்படுத்த துவங்கி விட்டது

நாடாளுமன்றத்தில் தனக்குள்ள மிருக பலத்தை பயன்படுத்திக்கொண்டு விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டுகின்ற புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வருகிறது. அதற்கு எதிராக ஓராண்டு போராடி பணிய வைத்த நிலையில் தனது அடிவருடிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து பெரும்பான்மையான விவசாய சங்கங்கள் மூன்று வேளாண் சட்டத்தை ஏற்பதாக கருத்தை பரப்புகிறது. தொழிலாளர்களை ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் சுரண்டலுக்கு உகந்த வகையில், குறைந்தபட்ச கூலிக்கு வேலை செய்கின்ற நவீன கொத்தடிமைகளாக மாற்றுகிறது. சொல்லிக் கொள்ளப்படுகின்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டி 4 தொகுப்பாக மாற்றியுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை தேசிய பணமாக்கல் கொள்கை என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒரு பிரிவான அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு வாரிக் கொடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக. இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் எல்ஐசி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. வேலை உத்திரவாதம் உள்ள பொதுத்துறைகளையே தனியாருக்கு தாரை வார்க்கும் போது தனியார் முதலாளிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இதன். விளைவு நிரந்தரத் தொழிலாளி வர்க்கம் என்ற முன்னேறிய வர்க்கம் ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது. வேலை தேடியலைவது, அடுத்த நாள் வேலைக்கு உத்தரவாதம் தேடுவது, குறைந்த கூலிக்கு உழைப்புச் சக்தியை விற்பது என்பதையே அன்றாட வேலை பாணியாக கொண்டுள்ள அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள் கோடிக்கணக்கில் பெருகிவிட்டனர்.. உதிரித் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமடைந்துள்ளது.

இருக்கின்ற வேலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு பிரிட்டன் காலனிய ஆட்சியில் தொழிலாளி வர்க்கம் இருந்ததை விட படுமோசமான நிலைமைக்கு மோடியின் கார்ப்பரேட் விசுவாச ஆட்சி இந்த எட்டு ஆண்டுகளில் நாட்டை தள்ளியுள்ளது. இவற்றை எதிர்த்து ஒப்பந்த, நிரந்தர, காண்ட்ராக்ட் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவோம். பிற வர்க்கங்களான விவசாயிகள், மாணவர்கள், சிறு தொழில் முனைவர்கள், தேசிய முதலாளிகள், வழக்கறிஞர்கள்-மருத்துவர்கள் போன்ற அறிவுத்துறையினர் ஆகியவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு ஒரு மாபெரும் சக்தியாக எழவேண்டியுள்ளது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கார்ப்பரேட்டுகள் நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடி கொழுப்பது மட்டுமில்லாமல் தொழிலாளி வர்க்கத்திற்கு குறைந்த கூலியை கொடுத்து சுரண்டுவதற்கும் தயாராகி வருகிறது. இந்த கார்ப்பரேட் பாசிசத்தை சுமந்துவரும் வாகனமாக காவிப் பாசிசம் வடிவெடுத்துள்ளது இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் பொருளாதாரம் மறுகாலனியாக்கத்தின் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இவற்றை முறியடிப்பதற்கு அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக தொழிலாளர் முன்னணியை உருவாக்குவோம். அதற்கு முன்னோட்டமாக வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய ஒன்றுபடுவோம்.

தோழமையுடன்
இரா.லோகநாதன்,
மாநில பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு-புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here