இந்த 180 ஆண்டுகளில் எத்தனை ஏழை- எளிய மாணவர்களைப் படிக்க வைத்திருப்பார்கள். இவர்கள் இந்தியா வந்த போது நிலைமை என்ன ! அப்போதைய பதிவேடுகளை இன்றும் காணலாம், 90 % அதிகமான இடங்களை வெறும் 3 % அளவிலுள்ள பார்ப்பனர்கள் மட்டுமே பிடித்திருந்தார்கள். சூத்திரர்களுக்கு, பெண்களுக்கு ( பார்ப்பனப் பெண்கள் உள்ளடங்கலாக) கல்வி மறுக்கப்பட்டிருந்தது. இடைநிலைச் சாதிகளிலிருந்த ஒரு சில செல்வந்த ஆண்கள் மட்டுமே புறநடையாக சில இடங்களில் கல்வி கற்க முடிந்தது.

இந்த நிலைமையினை மாற்றியது இத்தகைய கிறித்தவக் கல்லூரிகள் தான். இன்றும் கூட இதே கல்லூரியில் பல நூற்றுக் கணக்கான ஏழை இந்து மாணவ மாணவியர் கல்வி கற்று வருகிறார்கள். வேறு சில கல்லூரிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மத மாற்ற முயற்சி நடந்திருக்கும், நான் இல்லை எனச் சொல்லவில்லை. மதமாற்றம் தவறா ? தவறு என்று நினைத்தால் அக் குற்றத்திலிருந்து எந்த மதமுமே தப்ப முடியாது, ஏனெனில் மனித படிமலர்ச்சியின் படி வரலாற்றினைப் படித்துப் பார்த்தாலோ/ கீழடியினைக் கிண்டிப் பார்த்தாலோ ஆதியில் மனிதனுக்கு மதமில்லை. எனவே எல்லோருமே மத மாற்றத்துக்கு உட்பட்டே இன்று ஏதாவது ஒரு மதத்தினைத் தழுவியுள்ளார்கள்.

பெரிய புராணத்தினை ஒழுங்காகப் படித்தாலே (இன்றைய) இந்து மதம் எவ்வாறு சமணர்களைக் கட்டாய மதமாற்றம் செய்தது எனத் தெரிய வரும். அவ்வாறான கட்டாய மதமாற்றங்கள் தவறே. அது எந்த மதம் செய்தாலும் தவறே. என்னைப் பொருத்தவரையில் மதம் என்பது இன்றைய உலகில் தேவையில்லாத ஒரு ஆணி. தேவை என நினைப்பவர்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக மதவெறியினை மையப்படுத்தி மனித வேட்டை ஆடுவதற்கோ/ ஒன்றாகத் தமிழர்களாக இணைந்துள்ளவர்களை மதரீதியாகப் பிரித்துப் பின் வேட்டையாடுவதற்கோ இடம் கொடுக்கக் கூடாது.

இன்று கிறித்தவக் கல்லூரிகள் மதம் மாற்றுகின்றன என வேடம் போடும் மதவாதிகளின் தலைவர்களை எடுத்துப் பாருங்கள், அவர்களில் பெரும்பான்மையினோர் படித்தது கிறித்தவப் பள்ளிகளிலேயே. அவர்களுடைய பிள்ளைகள் பலர் படிப்பதும் அங்கேயே. ஏன் அப்போது ஏழை எளிய மாணவர்களை மட்டும் மதச் சண்டைக்குக் இழுத்து விடுகிறார்கள்? அவர்கள் சூத்திரர்களாயிற்றே! தாழ்த்தப்பட்டோராயிற்றே! பெண்களாயிற்றே! இவர்கள் எல்லாம் எவ்வாறு கல்வி கற்கலாம் என்பதுதான் இவர்களது ஒரே சிக்கல். நாளைக்கே இந்துக் கோயில்களில் கோடி கோடியாகக் காணப்படும் தங்கம் , நிலம் போன்ற சொத்துக்களை விற்றுப் பள்ளிகள் கட்டி இலவயமாக ஏழை இந்து மாணவர்களைப் படிக்க வைப்போமா! அப்போது மதமாற்றம் என்ற பேச்சே வராதே! செய்வோமா ! இந்துக்களாக ஒன்று சேர்ந்து ஏழை எளிய இந்துக்களைப் படிக்க வைப்போமா!

ஆசீவகம் , பவுத்தம், கிறித்தவம் போன்ற மதங்கள் எல்லாம் படிப்பதற்கு அருகதையற்றவர்கள் என வைதீகம் கைவிட்டவர்களைப் படிக்க வைத்து ஆளாக்கின. அதனாலேயே ஆசீவகம் – தமிழ்ப் பவுத்தம் போன்றன அழித்தொழிக்கப்பட்டன. அந்த நோக்கிலேயே இப்போது கிறித்தவம் குறி வைக்கப்படுகின்றது. தமிழர் விழித்துக் கொள்ள வேண்டிய வேளை இது.

நன்றி

வி. இ. குகநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here