வீராச்சாமி

தஞ்சை ஜில்லாவில் முதல் முதலாக வீரப் போராட்டத்தை ஆரம்பித்து விவசாய இயக்கத்தை ஆரம்பித்து தென்பரையில் தோழர் வீராசாமி சுமார் 50 வயதான குடியானவன். பரம ஏழை. 3 ஏக்கர் நிலம் பண்ணையில் சாகுபடி செய்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பவர். குடியிருக்கும் நிலமும் மிராசுதாரனுடையது. அந்த ஊர்க்குடியானவர்களில் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர் நமது வீராசாமி.

தென்பரை விவசாயிகள் சங்கத்துக்குக் குடியானவர்களால் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிராசுதாரனுக்கு இவர்மேல் கோபம் வந்துவிட்டது. குத்தகைக்கு கொடுத்திருந்த நிலத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டான். வீராசாமி கூலி வேலை செய்து ஜீவனம் நடத்திக்கொண்டு சங்க வேலையை விடாமல் செய்துவந்தார். விவசாயிகளைத் திரட்டிக்கொண்டு அதிகாரிகளைப் பார்ப்பார். பயமின்றி பதில் சொல்லுவார் அதிகாரிகளிடம்.

மிராசுதாரன் கோபம் இவர்மேல் வரவர அதிகரித்தது கடைசியாக ஒருநாள் குண்டர்கள் இவரைத் தாக்கி, படுகாயப்படுத்தி. இவரது வீட்டிலும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். ஒரு கை முடமாகப் போய்விட்டது. ஆஸ்பத்திரியில் கிடக்கும்போதும் சங்கத்தைப் பற்றிய கவலைதான் அவருக்கு. இது போதாதென்று தென்பரை வழக்கிலும் மூன்று மாதத் தண்டனை அடைந்தார்.

ஏழைக் குடியானவர்கள், ஆனால் உறுதியுடன் வர்க்கப் போரில் பின்வாங்காது நின்ற போர் வீரன். இன்றும் சங்கத்தில் மகத்தான நம்பிக்கையுடன் விவசாயிகளுக்குப் பாடுபட்டு வருகிறார்.

தென்பரையில் மிகவும் ஒடுக்கப்பட்ட முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். நிலப்பிரபுத்துவக் கொடுமையை எதிர்த்து உறுதியாகப் போரிட்டார். மக்களைத் திரட்டினார். தென்பரையில் கடைசிவரை கட்சி உறுப்பினராகவும் கிராம இயக்கங்களிலும் செயல்பட்டு வந்தார். காலமாகிவிட்டார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

களப்பால் குப்பு

களப்பால் குப்பு என்றால் மன்னார்குடி தாலுக்காவில் உள்ள விவசாயத் தொழிலாளிகள் அனைவருக்கும் தெரியும். 1910-ம் வருஷம் ஒரு ஏழை ஆதித்திராவிடக் குடும்பத்தில் பிறந்தவர். சொந்தத்தில் 1 ஏக்கர் நிலம் உண்டு. தகப்பனார் தஞ்சை ஜில்லாவில் பல ஆதித்திராவிடரைப் போல் பெரிய மிராசுதார்கள் நிலத்தைச் சாகுபடி செய்து ஜீவித்து வந்தார். பையனை ஆறாவது வகுப்பு வரையிலும் படிக்க வைத்தார். அதற்கப்பால் படிக்க வைக்க வசதியில்லை. குப்புவோ கொஞ்சம் வயது வந்தவுடன் தன்னுடைய சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமென்று நினைத்தார். சொந்த ஊரிலே ஒரு பஞ்சாயத்துக் கோர்ட்டு இருந்தது. அதில் ஹரிஜனங்களுக்குச் சரியானபடி நியாயம் கிடைப்பதில்லை. அதற்காக அந்தப் பஞ்சாயத்துக் கோர்ட்டில் ஒரு ஸ்தானம் தன்னுடைய சமூகத்தாருக்குத் தர வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார். மிராசுதார்களுக்கு இது பிடிக்கவில்லை. குப்புவின் தகப்பனாருக்குச் சாகுபடி நிலம் தரமாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். இந்தச் சமயத்தில் குப்பு வீட்டுக்குக்கூடப் போகாமல் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று.

23 வயதாயிற்று, குப்புவுக்கு. தகப்பனார் காலமானார். தகப்பனார் 32 கிராமங்களுக்கு – அங்குள்ள ஆதித்திராவிடக் குடும்பங்களுக்குத் தலைவர். இளம் வயதில் அந்தச் சமூகத்தின் பரம்பரைத் தலைமைப் பொறுப்பும் குப்புவுக்கு வந்து சேர்ந்தது. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 20 மாணவர்களை உயர்தரப் படிப்புக்கு அனுப்பிவைத்தார். இது பிடிக்காத மிராசுதார்கள் ஒரு ஆளைத் தயாரித்து குப்புவை அடித்தார்கள்.

தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு பழக்கம் உண்டு. பழையபடி என்று சொல்லி பெரிய படியால்தான் குத்தகைக்காரர்கள் நெல் அளக்க வேண்டும். கடைக்காரர்களும் நெல்லை வாங்கும்பொழுது அந்தப் படியால்தான் அளந்து வாங்குவார்கள். இந்தக் கொள்ளையைத் தடுப்பதற்காக 1941-ல் சமூகத்தாரைக் கூட்டி, முத்திரை மரக்காலால் நெல்லை வாங்குவதற்கு ஒரு கடை ஏற்பாடு செய்தார்.

கள்ளுக் கடையில் குடித்துக் கெட்டுப் போகக்கூடாது என்று பிரசாரம் செய்து 2000 பேர்களை கள் குடிக்கும் பழக்கத்தை ஒழிக்கும்படி செய்தார்.

தென்பரைத் தகராறு நடந்த சமயத்தில் அந்த ஊர் விவசாயிகள் போராட்டத்தைப் பார்க்க வந்தார். சமூக முன்னேற்றத்திற்காக இத்தனை நாட்களாக லட்சியத்தை அடைவதற்குப் பாடுபட்டதைவிட சிறப்பாகவும் முறையாகவும் வெற்றிகரமாகவும் பாடுபடுவதற்கான வழி விவசாயிகள் சங்கம் என்பதைக் கண்டார். தன்னுடைய ஊரிலும் சங்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற முடிவுடன் ஊருக்குப் போனார்.

1944-ல் களப்பாலில் விவசாயிகள் கூட்டம் கூட்டினார். சமூகத்தின் பரம்பரைத் தலைவனும், பாடுபட்டு முன்வரும் தலைவனும் ஒரே ஆளாயிருந்தால் கேட்கவேண்டுமா கூட்டத்துக்கு 5000 பேர் வந்தனர்.

முன்னேற்றப் பாதையிலே சரியான வழியைக் கண்டுவிட்டால் மோட்டார் வண்டி சிமிட்டி ரோடில் வேகமாய்ப்  போவதைப் போலத்தானே அரசியல் வளர்ச்சியும்.    1944-லிலே கம்யூனிஸ்டுக் கட்சி அங்கத்தினரானார். இன்னும் சிறப்பாக உழைக்க ஆரம்பித்தார். பைங்காட்டூரில் ஒரு விவசாயிகள் கூட்டத்துக்குப் போய் வருகையில் மடாதிபதியின் கையாட்கள் அவரைத் தாக்கினார்கள். மன்னார்குடியில் கிஸான் சபை கூட்டங்களுக்குத் தடை போடப்பட்டது. மிராசுதார்கள் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து சங்கத்தை ஒழித்துக்கட்ட வழி தேடினார்கள்.  இந்த வீரப் புதல்வன் அந்தச் சோதனை காலத்திலும் அசையாது உறுதியுடன் நின்றான். ரூ.450 வசூலித்துக் கேஸ்களை நடத்தினார். இன்னும் பலமானபடி சங்க உணர்ச்சியைப் பரப்பினார். அன்று சட்டசபைத் தேர்தலுக்கும் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

1946-ல் நடந்த தேர்தல் அடிமை இந்தியாவில் நடந்த கடைசித் தேர்தல்; இத்தேர்தலில் வாக்காளர்கள் பத்து ரூபாய் தீர்வை செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்; அல்லது பட்டதாரிகளாக இருக்க வேண்டும்; இத்தேர்தலில் தோழர் குப்புசாமி வெற்றிவாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் வெற்றி பெற்றது.

1946-ல் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. விவசாயிகளின் கிளர்ச்சியும் தொடர்ந்து நடந்தது; காங்கிரஸ் அரசு – தஞ்சை மாவட்ட நீதிபதியை நடுவராகக்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.

  1. பண்ணை ஆட்களின் கூலி முக்கால் மரக்காலிருந்து முக்காலே அரைக்காலாக கூலி உயர்வு.
  2. சாகுபடி செய்யும் குத்தகை சாகுபடியாளர்களை நிலத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது; மனைக்கட்டை விட்டும் வெளியேற்றக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது; தீர்ப்பில் நிலஉடமையாளர்கள் சார்பில் குன்னியூர் சாம்பசிவ அய்யரும் கையெழுத்திட்டார். ஆனால் நடுவர் தீர்ப்பை மிராசுதார்கள் மீறினார்கள். மீறியவர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை; மாறாக மிராசுதார்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டது. மிராசுதார்களும் அடியாட்களைக்கொண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

மிராசுதார்களின் அடியாட்களை எதிர்த்து செங்கொடி சங்கத்தில் திரண்ட விவசாயத் தொழிலாளர்களும் – சாகுபடி விவசாயிகளும் சேர்ந்து எதிர்த்துப் போராடினார்கள். இதில் இரண்டு பேர் குன்னியூர் அடியாட்கள் இறந்தார்கள். இக்கொலை வழக்கில் களப்பால் குப்புவும் சேர்க்கப்பட்டார்; களப்பாலில் இருந்த தோழர் குப்பு கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; மிராசுதார்கள் இரண்டு வேலி நிலம் தருவதாகவும் குப்புவிடம் பேரம் பேசினார்கள்; செங்கொடிப் போராட்டத் தளபதி மசியவில்லை: உறுதியாக இருந்தார்.

இராமன் என்ற சிறைக்கைதியே மருந்து கொடுக்கும் உதவியாளராக இருந்திருக்கிறார்; உடல்நலக் குறைவாக இருந்த தோழர் குப்பு அவர்களுக்கு. ஒரு மாத்திரை கொடுத்திருக்கிறார்; இருமி, வாந்தி எடுத்துச் சில நிமிடங்களில் வீரமரணமடைந்தார்; 18-4-1948 அன்று தோழர் குப்பு அமரரான செய்தி திருச்சி நகரத் தொழிலாளர்களுக்கு எட்டியது; தஞ்சைத் தரணி எங்கும் தங்களின் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்த செங்கொடி இயக்கத் தலைவனுக்கு வீரவணக்கத்தையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தினார்கள்.

அமரர் களப்பால் குப்பு அவர்களின் மூத்த மகன் தோழர் ஏ.கே. கணேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை திருவாரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக – இருக்கிறார். இளைய மகன் கு. பக்கிரிசாமி ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

தொடரும்…

முந்தைய பதிவு

கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – தோழர்.சின்னப்பன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here