தொண்டைமான், ஆற்காடு நவாபு, சரபோஜி:

விடுதலையைக் கருவறுத்த வீடணர்கள்

”ஆங்கில கம்பெனியின் நற்பேறாலும் உங்களின் நற்பேறாலும் ஆங்கில கம்பெனி அதிகாரிகளின் வீரத்தாலும் சிறந்த கொள்கைகளாலும் அந்த காட்டுநாய் சின்ன மருது அவனது சகோதரன் மற்றும் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு அவர்கள் இழைத்த சதிக்காகச் சாவின் மூலம் பலன் அடைந்தார்கள். மகா பிரபுவே! நான் வெகு காலமாகப் பார்த்து வந்ததில் பிரெஞ்சுக்காரர்கள், சந்தா சாகிபு, திப்பு சுல்தான் முதலியோர் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஆங்கில கம்பெனியை நம்பி வாழ்ந்தவர்கள் பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள். அந்த அயோக்கியன் மருது எதை எதிர்பார்த்து கலகம் செய்தான் என்பது விளங்கவில்லை.”

– 25.10.1801-ஆம் நாளன்று
புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான்
கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்.

 திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பல்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில்தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. சுரண்டி வந்த ஆங்கிலேயரை அண்டிப் பிழைத்தும், போராளிகளைக் காட்டிக் கொடுத்தும் சுகபோகிகளாய் வாழ்ந்த தொண்டைமான்கள் மற்றும் எட்டப்பன்களை இன்றும் தமிழக மக்கள் தம் அன்றாட வழக்கில் அருவெறுப்புடன் துரோகத்தின் இலக்கணமாய் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் மட்டும் விஜய ரகுநாத தொண்டைமானுக்கு இந்த அவப்பெயர் வந்து விடவில்லை. 18,19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தொண்டைமான் பரம்பரையே துரோகத்தின் இழையொற்றித்தான் வாழ்ந்து வந்திருக்கிறது. 1751-இல் ஆற்காட்டு நவாப் பதவிக்காக சந்தாசாகிபும், முகம்மது அலியும் மோதிக் கொண்ட போது, ஆங்கிலேயர்கள் முகம்மது அலிக்கு ஆதரவாகவும் பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிப்பை ஆதரித்தும் களம் இறங்குகிறார்கள். இந்தப் போரிலேயே ஆங்கிலேயப் படைக்கு ஆதரவாக 400 குதிரைப்படையினர், 3000 காலாட் படையினரையும் தொண்டைமான் அனுப்புகின்றான். “இனி இந்தியாவின் எதிர்காலம் ஆங்கிலேயர் வசம்தான்” என்று தொண்டைமான் யூகித்திருக்கக் கூடும்.

வெள்ளையர்களும் தனது அடிவருடியைக் கண்டு கொண்டார்கள். 28.9.1755 அன்று சென்னையிலிருந்த கவர்னர் ஜார்ஜ் பகாட், தனது தலைமையகத்துக்கு எழுதிய கடிதமொன்றில் “புதுக்கோட்டை தொண்டைமான், கம்பெனியின் நேசமான நண்பர். தற்போதும், இனிவரும் காலங்களிலும் தொண்டைமானின் பாதுகாப்புக்கு ஆங்கிலேயர்கள் உதவி செய்வார்கள். அதுபோல தொண்டைமானும் ஆங்கிலேயருக்கு உதவி செய்ய வேண்டும். தொண்டைமானின் அந்தஸ்திற்கு ஏற்ப அவருக்குரிய மரியாதையையும் கௌரவத்தையும் ஆங்கில அரசு அளித்து வரும்” என்று குறிப்பிடுகிறான்.

1759-இல் சென்னைக் கோட்டையைக் கைப்பற்ற பிரெஞ்சுக்காரர்கள் முயன்ற போது ஆங்கிலேயரைக் காப்பாற்ற 200 குதிரைப்படையினர், 1500 காலாட் படையினர் மற்றும் 250 பணியாட்களையும் தொண்டை மான் அனுப்பினான். பூலித்தேவன் முதலான பாளையக்காரர்களை அடக்குவதற்குச் சென்ற கம்பெனியின் படையில் தொண்டைமானது வீரர்களும் இருந்தனர். 1772-இல் இராமநாதபுரம், சிவகங்கை மீது படையெடுத்து முத்துவடுகநாதரைக் கொலை செய்த கம்பெனிப் படையில் தொண்டைமானது 5000 வீரர்களும் இருந்தனர்.

இக்காலத்தில் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டைமானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக்கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ விஜயரகுநாத தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.

1799ஆம் ஆண்டு நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் தோற்ற கட்டபொம்மன் போரைத் தொடர்வதற்காக மருதிருவரைச் சந்திக்கச் செல்கிறார். கட்டபொம்மனைப் கண்காணிக்குமாறு திருநெல்வேலி பிடிப்பதற்கு விழிப்புடன் கலெக்டர் லூஷிங்டன் தொண்டைமானுக்கு கடிதம் எழுதுகிறான். அதன்படி திருமயம் அருகே திருக்களம்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்து ஆணையை நிறைவேற்றுகிறான் தொண்டைமான். கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய பிறகு, தொண்டைமானுக்கு விலையுயர்ந்த குதிரை மற்றும் அலங்கார வேலைப்பாடு மிகுந்த பட்டாடையை வெள்ளையர்கள் பரிசாக வழங்கினர். எட்டப்பனுக்கு கட்டபொம்மனது பாளையத்தின் ஊர்களும், திப்புவின் அரண்மனையில் 14 கொள்ளையடித்த தொட்டிப் பல்லக்கு, தங்கக்கலசம் வைத்த கூடாரம், குதிரைகள், போர் முரசு முதலான எலும்புத் துண்டுகளும் பரிசுகளாய் தரப்பட்டன. எட்டப்பனை விட தொண்டைமானுக்கு பரிசு குறைவு தான். எனினும் அதனால் தொண்டைமானின் பிரிட்டிஷ் விசுவாசம் கடுகளவும் குறைந்து விடவில்லை.

மருது சகோதரர்களை ஒழிக்க காளையார் கோவில் மீது வெள்ளையர்கள் 1801-ஆம் ஆண்டு படையெடுத்த போது, 6667 வீரர்களையும், காட்டையழித்துச் சாலை போடுவதற்கு பணியாட்களையும் அனுப்பியதுடன் தனது திருமயம் கோட்டையையும் வெள்ளையர்களுக்குக் கொடுத்தான். வெல்ல முடியாமல் தளர்வுற்றிருந்த வெள்ளையர்களுக்கு “தொண்டி துறைமுகம் வழியாக மருதுவுக்கு வரும் பொருள், ஆயுத உதவிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், மழைக் காலத்திற்கு முன் காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்தும் தாக்கினால்தான் வெல்ல முடியும்” என ஆலோசனை கூறி வழி நடத்தினான். காடுகளில் தலைமறைவாயிருந்த மருதுவின் வீரர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்துக் கொடுத்து அவர்களைத் தூக்கிலேற்ற வைத்தான் தொண்டைமான்.

விகாரமான இந்த துரோகத்துக்குப் பரிசாக, ஆங்கிலேயர்கள் இரண்டு ஐந்தடி தங்கச் செங்கோல்களை தொண்டைமானுக்குப் பரிசளித்தார்கள். ஆனால் தொண்டைமானோ, ‘மதிப்பு மிக்க’ இந்த துரோகத்துக்கு ‘மகாராஜா பட்டம்’ வேண்டுமென்று

வெள்ளையர்கள் மறுத்து விட்டனர். தனக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு பாளையக்காரன், மகாராஜா பட்டத்துக்கு ஏங்குவதை எண்ணி ஆங்கிலேயர்கள் நகைத்திருக்கக் கூடும். பட்டம் தராவிட்டாலும் பரவாயில்லை. தென்னிந்தியா முழுதும் படையனுப்பித் தொண்டு செய்த, தன் அடிமைக்கு செலவுக்காசைக் கூட வெள்ளையன் தரவில்லை. புதுக்கோட்டை எனும் வானம் பார்த்த பூமியின் வறிய விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து பறிக்கப்பட்ட தொகையை வெள்ளையனுக்குப் படையனுப்பி செலவழித்து விட்டு, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு 60,400 பகோடா கடனும் வைத்துவிட்டு 1807-இல் செத்தான் இந்தத் தொண்டைமான்.

அடுத்து பட்டத்துக்கு வந்த தொண்டைமான் (10 வயது) காலத்தில் ஆட்சி நேரடியாக கம்பெனியின் ‘ரெசிடெண்ட்’ கைக்குப் போய் விட்டது. மருதுவின் படையால் தஞ்சையில் தோற்கடிக்கப்பட்ட வில்லியம் பிளாக்பர்ன் என்ற அந்த அதிகாரியை ‘அப்பா’ என்றுதான் அழைப்பானாம் சிறுவன் தொண்டைமான். இவர்களை ‘ஐரோப்பியனுக்குக் கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள்’ என்று தனது திருச்சி பிரகடனத்தில் சரியாகத்தான் குறிப்பிடுகிறார் மருது!1833-இல் தொண்டைமானுக்கு ‘ஹிஸ் எக்ஸலன்சி’ விருது வழங்கப்பட்டது. 1857-இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக்கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்து விட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும் கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870-இல் மறுபடியும் விருதைப் பெற்று ‘கவுரவத்தை’ நிலைநாட்டிக் கொண்டான். 1875-ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்தி விட்டான். 1877-ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்பட்டு கொண்டாடப்படுகிறது. 1911-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பட்டம் சூட்டிக் கொள்ளும் போது ( வ.உ.சி சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்தபோது) தொண்டைமான் லண்டன் சென்று அதில் கலந்து கொள்ளும் பாக்கியத்தையும் பெறுகிறான். அதே ஆண்டில் தில்லி வந்த ஐந்தாம் ஜார்ஜ், தொண்டைமானுக்கு ‘பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் தளபதி’ எனும் விருதை வழங்குகிறான்.

தொடரும்…

முந்தைய பகுதியை படிக்க:

விடுதலைப் போரின் வீரமரபு – 13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here