ராமானுஜம்

மன்னார்குடி நகரத்துக்கு 4 மைல் தூரத்திலுள்ள சோழபாண்டி என்ற சிறிய கிராமத்தில் செல்வாக்குள்ள மத்தியதர விவசாயி குடும்பத்தில் 1910-ல் பிறந்தார். அவருடைய தமையன் அந்தத் தாலுக்காவில் பிரபலமுள்ள காங்கிரஸ் தலைவர். அதுவுமின்றி ஜில்லாவில் அவரது சமூகத்தின் தலைவர்களில் ஒருவர். நமது தோழர் சிறுவயதில் தமிழ் மாத்திரம் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார். 14 வயதிலேயே கதர் பிரசாரத்தில் தொண்டராய்ச் சேர்ந்து கிராமங்கள் தோறும் கதர் மூட்டை தூக்கிக்கொண்டு சுற்றினார். கதர் விற்பதுடன் நிற்கக்கூடாது ஏதாவது தீவிரமாக அரசியல்வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தார். அவரது தமையன் அவரை அதற்குமேல் அனுமதிக்கத் தயாராயில்லை. சுயேச்சை எண்ணம் மேலிட்டு 1926-ம் வருடம் புறப்பட்டு மலேயா சென்றார்.

மலேயாவில்  ஒரு மோட்டார் டிரைவராக வேலையில் அமர்ந்தார். அவருடைய பழைய உணர்ச்சி சும்மா இருக்கவிடவில்லை.  அங்கு இந்திய இளைஞர் சங்கத்தில் சேர்ந்து முக்கியஸ்தராய் விளங்கினார். அதுவுமன்றி இந்திய மோட்டார் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்து தனது சேவையின் காரணமாக அச்சங்கத்தின் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு. தாய்நாடு திரும்பும் வரையில் 3 வருடம் அப்பதவி வகித்தார். முதலாளிகளுடன் பல கிளர்ச்சிகள் செய்து தொழிலாளர்களுக்குப் பல கோரிக்கைகள் வாங்கிக் கொடுத்தார்.

மலேயாவில் இருந்த காலத்தில், அங்குள்ள கம்யூனிஸ்டுகளின் பழக்கம் ஏற்பட்டதன் காரணமாக கம்யூனிஸ்டுக்கட்சியின் பேரில் நமது தோழருக்கு அசாத்தியக் கவர்ச்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்டுக் கட்சியினால்தான் மக்களுக்கு கதிமோட்சம் ஏற்படும் என்ற முடிவோடு யுத்தம் ஆரம்பமானவுடன் 1943-ல் இந்தியா திரும்பினார்.

இவர் மலேயாவில் இருக்கும்போதே இங்கே தமையன் இறந்துவிட்டார். பெரும்பாலான குடும்பச் சொத்துக்கள் போய்விட்டது. மீதம் சுமார் இரண்டு ஏக்கர் நிலம்தான். இந்த நிலைமையிலும் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவில்லை.

எப்படியாவது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து ஜனங்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று முயன்றார். கட்சி ரகசியமாய் வேலை செய்துவந்த காலமது. வெகு பிரயாசைப்பட்டு 1941இல் நமது கட்சி ஆர்கனைஸரைச் சந்தித்துத் தொடர் பேற்படுத்திக்கொண்டார். அன்றிலிருந்து இன்று (நூல் எழுதிய காலத்தில்) வரையில்  முழுநேர ஊழியராக வேலைசெய்து வருகிறார்.

தென்பரை விவசாயிகளிடம் முதலில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விவசாய இயக்கத்தை தஞ்சை ஜில்லாவில் ஆரம்பித்தவர்களில் இவர் ஒருவர். நாள் தவறாது கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளைத் திரட்டுவதும். கூட்டம் போடுவதும் சங்கம் அமைப்பதும்தான் இவர் வேலை.

பைங்காட்டூர் என்ற கிராமத்தில் கூட்டம் நடத்திவிட்டு. வேறொரு கிராமத்துக்குப் போகும்போது பாதையில் மிராசுதாரனின் குண்டர்களால் தாக்கப்பட்டுப் படுகாயப்படுத்தப் பட்டார். அவர் பேரில் பல வழக்குகள் போடப்பட்டன. ஆனால் எல்லா கேஸ்களிலும் விடுதலை செய்யப்பட்டார்.மன்னார்குடி தாலுக்காவில் கிஸான் இயக்கத்தில் மிராசுதார்களின் அட்டகாசம், கவர்ன்மெண்டின் அடக்குமுறை இவைகளுக்கஞ்சாது தொடர்ந்து வேலை செய்துவரும் தோழர்களில் நமது ராமானுஜம் குறிப்பிடத்தக்க ஒரு தோழர்.

தனது இறுதிக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக்குழு அலுவலகத்தில் தங்கியிருந்தார். சோழ பாண்டியிலிருந்த தனது வீட்டையும் சுமார் மூன்று ஏக்கர் நிலத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்கொடையாக எழுதி வைத்துவிட்டார். 1976இல் காலமானார். அவர் இறந்த சில ஆண்டுகளில் அவர் மனைவியும் காலமானார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here