கண்டன அறிக்கை!
நாள்: 22.11.2026
அன்பார்ந்த பெரியோர்களே, நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.தஞ்சாவூர் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் தேவா மற்றும் தோழர் இளையராஜா மீது கொலை வெறி தாக்குதல்!
தமிழக அரசே! மாவட்ட காவல்துறையே!
தாக்குதல் நடத்திய மானோஜிபட்டியை சேர்ந்த ரவுடி எட்வீன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலை கொலை முயற்சி மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடை!
சமூக அக்கறை கொண்டவர்களே! அச்சத்தில் உள்ள மக்களிடம் துணிவை உருவாக்குவோம்! ரவுடி கும்பலுக்கு எதிராக ஒற்றுமையை கட்டியமைக்க செயல்படுவோம் வாரீர்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது. அடிப்படைப் பிரச்சினைகள் முதல் அரசியல் பிரச்சனைகள் வரை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து போராடி வருகிறோம் என்பதை அறிவீர்கள்.
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் மக்களின் தேவைக்கான பல்வேறு பிரச்சினைகளை எடுத்து தீர்த்து கொடுத்து வருகிறோம் என்பதையும் அறிவீர்கள்.
இந்த ஆண்டு துவக்கத்தில் அப்பகுதியில் மிகப்பெரிய ஆழ்குழாய் வழியாக நிலத்தடி நீரை எடுத்து மக்களின் குடிநீர் தேவையை தடுத்து நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கி அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த தண்ணீர் கம்பெனிக்கு எதிராக மக்களை திரட்டி பல கட்ட போராட்டங்கள் செய்து இழுத்து மூடி உள்ளோம்.
லாப வெறி பிடித்த கம்பெனியை விரட்டியுள்ளோம். மக்களின் அத்தியாவசியமான குடிநீர் தேவையை பாதுகாத்துள்ளோம். மேலும் அப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சையான சாலை வசதி, கழிப்பிடம் கட்டுதல், தெரு மின்விளக்கு கம்பங்கள் பழுதான நீக்கி புதிதாக அமைத்தல் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பு போராடி வருகிறது.
இப்பகுதியில் முன்னணியாளர்களாக மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் தேவா மற்றும் இளையராஜா உள்ளிட்ட எமது அமைப்பு தோழர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் எட்வின் என்ற ரவுடி கும்பல் ரியல் எஸ்டேட் என்ற போர்வையின் கீழ் அப்பாவி பொதுமக்களின் நிலத்தை குறைந்த விலையில் அடித்து புடுங்கி வருகிறது. இதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனங்களை செய்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக இந்த கும்பலை கண்டித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையங்களுக்கு பொதுமக்கள் கொடுத்துள்ளனர். நிலத்தை அபகரிப்பதை தட்டி கேட்ட 12 குடும்பத்தினரை தனக்கு அடையாளமாக உள்ள கிராமம் முக்கியஸ்தர்களை வைத்துக்கொண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி தீண்டாமை குற்றத்தை இழைத்து வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு ஆதரவாக பேசக்கூடிய நபர்களை மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர். மேற்கண்ட பிரச்சனை எமது அமைப்பாளர் மாவட்டச் செயலாளருக்கு புகாராக வருகின்றது.
தஞ்சை பகுதி தோழர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக எடுத்து வந்த நிலையில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி தோழர் தேவா மற்றும் இளையராஜாவிற்கு எட்வின் அடியாட்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
இந்த பிரச்சனையில் காவல்துறை உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 20 தேதி தஞ்சை மெடிக்கல் காலேஜ் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது .
இந்த புகார்கள் எதையும் கண்டுகொள்ளாத காவல்துறை கட்டப்பஞ்சாயத்து ரவுடி கும்பலான எட்வினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் உண்மையாக மக்களுக்காக போராடிவரும் மக்கள் அதிகாரம் தோழர்களை பாதுகாக்காமல் பிரச்சனை மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்காமல் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை மறுத்துள்ளது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கட்டப்பஞ்சாயத்து எட்வின் ரவுடி கும்பல் அன்றைய தினம் தனக்கு ஆதரவான 20 பேர் கொண்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட நபர்களை வைத்துக்கொண்டு மானோஜிப்பட்டியில் ஆட்டோ சவாரிக்காக மக்களை ஏற்ற சென்றபோது மேற்கண்ட ரவுடி கும்பல் எமது தோழரை கொலை வெறியோடு இரும்பு ராடல், உருட்டு கட்டையால் தாக்கியுள்ளது. மேலும் இந்த தகவலை தெரிந்த மக்கள் அதிகாரம் தோழர் இளையராஜா உடனே வந்து தட்டிக் கேட்டுள்ளார்.
மேலும் அப்பகுதி மக்கள் பலரும் தட்டி கேட்டு உள்ளனர். எதையும் பொருட்படுத்தாமல் இந்த ரவுடி கும்பல் தோழர்களை தாக்கியது மட்டுமில்லாமல் அவர்கள் எடுத்து வந்த ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை மிகவும் சேதப்படுத்தி அராஜகத்தை பட்டப் பகலிலே கட்டவிழ்த்து விட்டது. நடந்த கொலை வெறியாட்டத்திற்கு காரணமான எட்வின் கும்பல் தலைமறைவாகியுள்ளது.
இந்த கொலை வெறியாட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட தோழர்களை அப்பகுதி மக்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
பிறகு காவல்துறையிடம் புகார் செய்த வகையில் 20 பேர் கொண்ட ரவுடி கும்பலில் ஐந்து பேரை மட்டும் நேற்று 21 ஆம் தேதி வரை கைது செய்தது. எமது அமைப்பு சார்பாக நகரம் முழுவதும் ஒட்டிய கண்டன சுவரொட்டிகளை ரவுடி கும்பல் ஒன்று விடாமல் அடியாட்களை வைத்து கிழித்துக்கொண்டு அச்சத்தில் உள்ளனர்.
இந்த பிரச்சனையில் காவல்துறை எட்வின் ரவுடி கும்பலுக்கு அடியாள் படையாக செயல்படுகிறதை வன்மையாக கண்டிக்கிறோம். அப்பகுதி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பிற காவல்துறையினர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட மானோஜிப் பட்டியை சேர்ந்த ரவுடி எட்வின் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலை கொலை முயற்சி மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மானோஜிப் பட்டி மக்களுக்கு அமைதியான சூழலையும், மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இது போன்ற ரவுடி கும்பல்களை வளர விடாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்க்க வலியுறுத்தி ஜனநாயக கட்சிகள் அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் எமது அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். மாறாக சமூக அக்கறையுடன் போராடி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கும் வகையிலும், ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் கண்டிக்கின்றோம்.
இந்த ரவுடி கும்பலுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்கள் அதிகாரம் இணைந்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களே, சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களை போலீசு துணையுடன் அழிக்க நினைக்கின்ற முயற்சிகளை எதிர்த்து துணிவுடன் போராடுவோம்.
இது போன்ற கட்டப்பஞ்சாயத்து ரவுடி கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறிகின்ற வகையில் சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபடுவோம். பிற பகுதி உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மானோஜிப்பட்டி மக்களை பாதுகாப்போம்.
தோழமையுடன் :
தோழர்.திருச்சி செழியன்,
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை.
தொடர்புக்கு : +91 95971 38959







