தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்; எஸ் ஐ ஆர் பணிகளை நிறுத்த வேண்டும்; வாக்குச் சீட்டில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தால் டெல்லி அதிர்ந்து கொண்டிருக்கிறது.
கையில் லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் 60,000 காவலர்களளையும் ஆயிரக்கணக்கான ஆர் எஸ் எஸ் காவி குண்டர்களையும் போராட்டக்காரர்களை தாக்குவதற்கு தயார் நிலையில் பாசிச பாஜக அரசு வைத்திருக்கிறது. போராட்டக்காரர்களை கண்டு பாசிஸ்டுகளுக்கு அவ்வளவு அச்சம்.
காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக போராட வரும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று மக்கள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக டெல்லியின் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்து. சாலைகளில் தடுப்பரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் எந்த ரயில்களும் அனுமதிக்கப்படவில்லை.
காக்ரோச் ஜனதா பார்ட்டியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லிக்கு விமானத்தில் வந்த நிலையில் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பே விமானத்திற்கு உள்ளேயே சென்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்தி பேசும் மக்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக உள்ள, மோடி அமித்ஷா கும்பலின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் யூடியூப் துருவ் ரதே அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை நோக்கி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ரயில்களில் வரும் போராட்டக்காரர்கள் ரயில்களிலேயே கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல்லி நகருக்குள் புகுந்து போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது பாசிசக் கும்பல். போராட்டத்தின் போது இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவரான நேகா போரா கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இடதுசாரி தலைவரான ராஜா, ஏ.எம் பேபி, பிராமி விஜயன், மம்தா பேனர்ஜி உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஞானேஷ்குமாரின் சர்வாதிகாரமும், பாசிச மயமாகும் அரசுக் கட்டமைப்பும்!
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கைது செய்துள்ள போதிலும் காவல்துறையினர் மற்றும் காவி குண்டர்களை வைத்து போராட்டக்காரர்களை தாக்கிய போதிலும் போராட்டத்தை அடக்க முடியவில்லை. மாறாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
டெல்லியில் உணவகங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. குடிநீர் கூட கிடைக்காமல் போராட்டக்காரர்கள் டெல்லியை விட்டு சிதறி ஓட வேண்டும் என்று ஒன்றிய அரசு திட்டமிட்டு செயல்படும் நிலையில் டெல்லி மக்கள் போராட்டக்காரர்களுக்கு குடிநீரும் உணவும் கொடுத்து தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டக்காரர்களைத் தங்களது ஆட்டோக்களிலும் கார்களிலும் இலவசமாக ஏற்றிச் சென்று விடுகின்றனர். போராட்டக்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக கழிவறைகள் (mobile toilet) ஆங்காங்கு மக்களால் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது டெல்லியில் குடியிருக்கும் ராகுல் காந்தி சென்னையில் மாணவர்களிடம் பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து விட்டார். பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் தன்னை தலைவராக காட்டிக்கொள்ள விரும்பும் ராகுல் காந்திக்கு டெல்லியில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் பங்கேற்பதில் விருப்பம் இல்லை.
“யாரோ”அறிவித்து முன்னெடுக்கும் போராட்டத்தில் தானும் கலந்து கொண்டால் மற்றவரின் தலைமையை தானும் ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்; மோடிக்கு எதிரான பிரதம வேட்பாளர் என்ற தனது கனவு தகர்த்து விடும் என்று கருதுகிறார்.
தமிழக முதல்வர் விஜய், தான் நடித்த “சர்க்கார்” படத்தில் விஜயின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டு விட்டது. இந்த நிலையில் தனது ஒரு ஒட்டும் முக்கியம் தான் என்று சண்டமாருதம் செய்து மக்களை திரட்டி கட்சியை கட்டி ஆட்சியை பிடித்தார். இது எல்லாம் சினிமாவில் தான். உண்மையிலேயே இப்பொழுது 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டு விட்டன. மக்கள் சண்டை மாருதம் செய்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல்வர் விஜய் இந்த வாக்குப்பறிப்பிற்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறார்.
“இப்படிப்பட்ட” விஜய், “அப்படிப்பட்ட” ராகுல் காந்திக்கு விருந்தளிக்கிறார். அதுவும் டெல்லியிலும் பரவலாக நாடு முழுவதும் வீதியில் இருந்து இறங்கி போராடிக் கொண்டிருக்கும் போது விருந்தளிக்கிறார். மறுநாள் போராட்டத்தை ஒடுக்கும் மோடியுடன் மேடையைப் பகிர்ந்துகொள்கிறார்.
போராட்டத்தின் வீரியம் அதிகரித்து கொண்டு இருப்பதைக் கண்டு செய்வது அறியாத திகைத்து கொண்டு இருக்கிறது மோடி, அமித்சா கும்பல். மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து தனது சகாக்களுடன் பேசி விட்டு செல்கிறார். அமித்ஷா ஒன்றிய அமைச்சர்களுடன் திடீரென்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்தப் போராட்டம் வெற்றி அடைந்தால் நிரந்தர ஆட்சி என்ற தங்களின் கனவு தகர்ந்து விடும் என்பதை நன்கு அறிந்திருக்கிறது இந்த கும்பல். இந்தப் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி முடிவுக்கு கொண்டு வரமுடியுமா? அல்லது ஞானேஷ் குமாரை மட்டும் பலி கொடுத்து (பதவி விலக வைத்து) முடிவுக்கு கொண்டு வரமுடியுமா? அல்லது வேறு எந்த வழிகளில் இந்த போராட்டத்தை முறியடிக்க முடியும்? என்று தவித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.
ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைவரும், பாசிசத்தை வீழ்த்தி நாட்டை நல்வழிப்படுத்த விரும்பும் ஒவ்வொருவரும் வீதியில் இறங்கி போராட வேண்டிய தருணம் இது. அப்படி போராட வாய்ப்பு இல்லாதவர்கள் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் போராடுபவர்களுக்குச் செய்ய வேண்டிய தருணம் இது.
குமரன்







