
கடந்த ஆண்டு 2025 செப்டம்பர் 27 அன்று நடிகர் விஜய் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு பரப்புரை மேற்கொள்ள கரூர் நகருக்கு பல மணி நேரங்கள் தாமதமாக வந்ததும், கூட்ட நெரிசலில் 41 பேர் மாண்டதும், ஆறுதல் கூற ஒரு தவெக விசில் அணில் குஞ்சு கூட இல்லாமல் கூண்டோடு தப்பித்து ஓடியதும், தமிழ்நாடு சார்பாக 3 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் அனைத்தையும் ‘அதிரடியாக’க் கலைத்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதும்… நிகழ்ந்து ஒரு வருடம் கடந்து விட்டது.
இதற்கிடையில் அன்றைய திமுக அரசு செய்த மாபெரும் குற்றம், நடிகர் விஜய் உட்பட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளாமல் தப்புவிக்க விட்டதாகும். குற்றவாளி விஜய்யோ தான் கொள்ளை யடித்து குவித்து வைத்திருந்த பெரும் பணத்தில் தலா ரூபாய் 20 லட்சம் 41 குடும்பங்களுக்கு வழங்கி ‘பிராயச்சித்தம்’ தேடிக் கொண்டார். தொடர்ந்து தமது தரப்பில் எவ்விதக் குற்றமுமே இல்லை என்ற தோரணையில் அவருக்கே கலை வந்த சினிமா பாணியில் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
கரூர் வழக்கு என்ன ஆனது சிபிஐ விசாரணை?
சம்பவம் நடந்த பின் ஸ்டாலினின் திமுக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவும், மற்றும் காவல்துறை சார்ந்த ஒரு குழுவும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த காவல்துறை சார்ந்த குழுவும் நியமிக்கப்பட்டதை அறிவோம். அவர்கள் விசாரணைகளையும் தொடங்கி இருந்தனர். இதற்கு முன்னதாக பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையிலான குழுவை ஒன்றிய பாஜக ,விசாரணைக்கு அனுப்பி வைத்து அவர்களும் ஒரு நாடகத்தினை அரங்கேற்றிச் சென்று அறிக்கை ஒன்றினை தலைமைக்கு ஒப்படைத்தனர் என்பதையும் அறிவோம்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் சில பொய் வழக்குகளும், விஜய் தரப்பில் சில குறுக்குச் சால்களும் ஓட்டப்பட்டு இந்திய நாட்டின் ‘உச்ச ஸ்தானம் பெற்ற’ ‘மாண்பமை’ நீதிபதிகள் குழு சம்பவம் தொடர்பாக ‘துடிதுடித்துப் போனதாக’ காண்பித்துக் கொண்டு தமிழ்நாடு அரசாங்கமும், சென்னை உயர்நீதி மன்றமும் நியமித்த விசாரணைக் குழுக்களை அதிரடியாகக் கலைத்து விட்டு கரூர் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இதற்கு முன் இல்லாத வகையில், சிபிஐ விசாரணையை கண்காணிக்க மேற்பார்வை குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியை நியமித்தது. மேலும் டிஐஜி (DIG) அப்துல் குமார் தாகூர் & எஸ்.பி.(SP) பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ விசாரணைக்குழு தொடர் விசாரணை நடத்துமென அறிவிக்கப் பட்டது.
படிக்க:
♦ கரூர் மரண ஓலங்களும் உச்சநீதிமன்ற ஒரு தலைபட்ச தீர்ப்பும்
♦ கரூர்: 42 மனித உயிர்கள் படுகொலை! பாசிசக் கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை!
விசாரணை அலுவலகமாக கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித்துறை விருந்தினர் இல்லம்/சர்க்யூட் ஹவுஸ் ஒதுக்கீடு செய்யப் பட்டது. 2025 அக்டோபர் 31 அன்று சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்திற்கு சென்று ஒரு முறையும், 2025 டிசம்பர் 1 அன்று ஒரு முறையும் மேற்கண்ட விசாரணை அதிகாரிகள் வருகை தந்து விசாரணை நடத்தியதாக பாவலாக் காண்பித்தார்கள். 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொடும் நிகழ்வு நடைபெற்று, வருடம் ஒன்றை கடந்த பின்பும் இதுவரை “குற்றப் பத்திரிகை” (Charge Sheet) கூடத் தாக்கல் செய்யப்படவில்லை. குழுவில் இடம் பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் மனோகரன் மட்டும் ‘ஆடிக்கொரு தடவை; அமாவாசைக்கு ஒரு தடவை’ அலுவலகத்தில் ஆஜராகி தலையை காண்பித்துச் சென்று கொண்டு இருக்கிறார்.
அரசும், அரசாங்கமும் மக்களை ஏய்க்கும் கருவிகளே! புரட்சி ஒன்றே மாற்று வழி!
இந்திய நாட்டின் அறுதிப் பெரும்பான்மை மக்கள் – குறிப்பாக தலித் மக்கள், பாமர நிலையில், சிந்தனைப் போக்கிலும் – வாழ்வியலிலும் நீடித்திருப்பது ஆளும் வர்க்கத்திற்கு எளிதாகப் போய் விடுகிறது. அதனால் தான் தமது குடும்பத்தில் குழந்தை, கணவர், அப்பா, அம்மா எனப் பலர், தற்குறி கூட்டத்தின் செயற்பாடுகளால் மட்டுமே ‘கொலை’ செய்யப்பட்டிருந்தாலும், அது குறித்து எல்லாம் அந்த நிமிடத்தோடு மறந்துவிட்டு, நடிகனுக்கு பின்னால் விசில் அடிப்பதும், மகாபலிபுரத்திற்கு வரவைத்து தூக்கி வீசும் எலும்புத் துண்டுகளை (பணத்தை)க் கவ்விக் கொண்டு போவதும்
நிகழ்ந்தேறி உள்ளன. ‘பிள்ளை போனாலும் பரவாயில்லை; விஜய்யை கிட்ட நின்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது போதும்’ என்று கூறும் நிலையில் ஏழைப் பெண்கள் இருக்கிறார்கள் எனில் தற்குறி பொறுக்கி நடிகர் விஜய் காட்டில் பெரும் மழை கொட்டத்தானே செய்யும்!
உண்மையில் உச்சநீதிமன்றத்திற்கோ, பாசிச பாஜக-விற்கோ 41 பேர் மரணத்திற்கு மூல காரணம் நடிகர் விஜய்யும், தவெக அடிவருடிக் கும்பலும் தான் என்பதை நன்றாகவே அறிந்தவர்கள் தான். ஆக, இவர்கள் குற்றவாளிகள் என்பதைத் தெரிந்தே தேர்தல் அரசியலில் விஜய் வெற்றி பெற வித்திட்டதும் கரூர் வழக்கை சாம்பலாக்க ஒத்துழைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதனை கண் முன் பார்க்க முடிகிறது. இதற்கு மூல காரணம் தமிழ்நாட்டில் பாசிச சனாதன பார்ப்பனிய இந்துத்துவ எதிரிகளாகப் பாவிக்கும் திமுக தோற்கடிக்கப் படல் வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவாக் கும்பலின் முதற் குறிக்கோள்.
இப்படிப்பட்ட கள்ளக் கூட்டு பாஜக-விற்கும் – தவெக-விற்கும் நீடிப்பதால் தான் ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விட்டுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் தாக்குதல் தொடுக்காமல் இருப்பதும், பாஜக-வினால் தவெக ஆட்சிக்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பதும் நீடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த உண்மைகளை எல்லாம் ஒட்டடை களைப் போல ஒதுக்கி விட்டுத் தான், என்னமோ விஜய்யும், தவெக விசில் கும்பலும் பாஜக எதிர்ப்பு சக்தி, ‘கொள்கை எதிரி’ என்று போலிப் பிம்பத்தை உருவாக்கி உயர்த்திப் பிடித்து, தற்குறி நடிகரின் கோமாளித் தனமான ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து உதவுகிறார்கள் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஐஎம் கட்சியினர். இந்தக் கொடுமைகளை என்னவென்று சொல்வது? எங்கே சொல்லி அழுவது?
படிக்க:
♦ கரூர் 41 பேர் படுகொலை: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ள உண்மை அறியும் குழு! மாபெரும் சதி!
♦ கரூர் படுகொலை: கட்டுப்பாடற்ற ‘தொண்டர்களும்’ நேர்மையாக பொறுப்பேற்காத ’தலைவனும்’
எனவே, இந்தியாவில் சாதி மத தீண்டாமை நிலவுகின்ற – உற்பத்தியில் வர்க்க முரண்பாடுகள் கூர்மை பெற்றுள்ள இச்சமூகக் கட்டமைப்பில் நிலை நிறுத்தப் பட்டுள்ள அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள், பாராளுமன்ற சட்டமன்ற தொழுவங்கள் அனைத்தின் மூலமாக ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு கடுகளவும் நீதியைப் பெற முடியாது என்பதே நிதர்சனம். அதற்கு ஏற்ற உதாரணம் தான் 41 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டு ஒன்று கடந்த பின்பும் குற்றப்பத்திரிக்கை (Charge Sheet) கூட சிபிஐ-யால் தாக்கல் செய்யப்படாமல் இழுத்தடிப்பு செய்து இறுதியில் சமாதி கட்டும் நிலை நோக்கி வழக்கு ஊர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே கரூர் 41 பேர் மரணம் சம்பவம் உட்பட, சமத்துவமான சமூக அமைப்பு, சமமான நீதிபரிபாலனம் படைத்திட நடப்பில் இருத்தப்பட்டுள்ள கட்டமைப்பை அடித்து நொறுக்கிட புரட்சிகரமான சித்தாந்த வழிமுறைகள் மூலமாக மக்களைத் திரட்டிப் போர்க்களம் பூணுவது ஒன்றே மாற்று என்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.
- எழில்மாறன்







ஆண்டு ஒன்றைக் கடந்து விட்டது கரூர் படுகொலையும் சிபிஐ விசாரணை
ஆசிரியர் தோழர் எழில் மாறன் மிகச் சிறப்பாக கட்டுரை எழுதியுள்ளார் தோழருக்கு நன்றி