தந்தை பெரியாரைப் பற்றி பலரும் அவர் ஒரு கடவுள் மறுப்பாளர்; நாத்திகர் என்ற அளவில் மட்டுமே சுருக்கிப் பார்க்கின்றனர். அப்படிப் பட்ட கொள்கைகளையும் உள் வாங்கியவர் எனினும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் சனாதன பார்ப்பனியக் கொடுமைகள் காரணமாக சாதி ரீதியாக பிளவு பட்டு கிடப்பதை, உயர்ந்தவன் – தாழ்ந்தவன் – தீண்டத்தகாதவன் என்று நெட்டுக் குத்தாக வெட்டிப் பிளந்து கிடப்பதை கண்டு கொதித்தெழ ஆரம்பித்தார்.
இதற்கான புராண – இதிகாசக் கட்டுக் கதைகளை – மனுதர்மம், பகவத் கீதை உட்பட மக்களை மடமையில் ஆழ்த்திட காரணமான மூல வேர்களை ஆராய்ந்தார். நான்கு வர்ணம் 4000 சாதி என உருவாக்கிக் கூடவே இந்து மத வெறி, சாதி வெறிகளை ஊட்டி வளர்த்து மக்களை சிந்திக்கவொட்டாமல் நிரந்தரமாக மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்த பார்ப்பனக் கொடுமைகளை தோலுரிக்க ஆரம்பித்தார்.
இதற்கு முன் ஜோதிராவ் பூலே, சாவித்திரி பாய் பூலே, நாராயண குரு, அய்யா வைகுண்டர், வள்ளலார், அயோத்திதாசர், அய்யன்காளி, சத்ரபதி சாகு மகராஜ், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ராசாராம் மோகன் ராய்,
பெரியார் காலத்திய அண்ணல் அம்பேத்கர் போன்றோரெல்லாம் குறிப்பிட்ட அளவு சமூக அக்கறையுடன் சீர்திருத்த கடமைகளை வெகுவாகச் செய்துள்ளனர் தாம்!
ஆனால் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பங்களிப்பை அவ்வளவு எளிதானதாக கடந்து செல்லக் கூடியதாக பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சனாதன பார்ப்பனியத்தை வேரறுக்க களமாடியவர் அவர்; சிறை ஏகியவர் அவர்; பல்வேறு விதமான முற்போக்கு கருத்துக்களை விதைத்தவர் அவர்; திண்ணைப் பள்ளிக்கூட அளவில் மட்டுமே படித்த தந்தை பெரியார், ‘பெண் ஏன் அடிமையானாள்?’, ‘இனி வரும் உலகம்’ உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை தமது ‘விடுதலை’ மற்றும் ‘குடியரசு’ பத்திரிகைகளில் 1935 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தினார் பெரியார். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’-யை முதன் முதலில் தமிழில் வெளிக் கொணர்ந்தவர் பெரியார்.
1932-களில் ரஷ்யா சென்று வந்த பிறகு அங்கு நிகழ்ந்த சோசலிசப் புரட்சியின் தாக்கத்தால் – அபரிதமான சமூக மாற்றத்தை உணர்ந்ததால் தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷ்யா என்றும் மாஸ்கோ என்றும் லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்து மகிழ்ந்தார். காம்ரேட்(Comrade) என்ற சொல்லுக்கு ‘தோழர்’ என்ற தமிழ் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் தந்தை பெரியாரே.
மாவீரன் பகத்சிங்கின் ‘நான் நாத்திகன் ஆனது ஏன்?’என்ற நூலை முதலில் தமிழில் மொழிபெயர்த்திட பெரியார் முனைந்து நின்றதும், வெளியீட்டு பதிப்பாளரான பெரியாரின் தங்கை கண்ணம்மா மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜீவா முதலானோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட கொடுமையான வரலாறும் பதிவாகியுள்ளது.
பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீட்டு உரிமை, சனாதனப் பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுதல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சாதி தீண்டாமை ஒழித்தல், சுயமரியாதைத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம், குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத மொழி திணிப்பு எதிர்ப்பு …என எண்ணற்ற உரிமைகளுக்காகக் களம் கண்டவர் அவர். அவர் காலத்திலேயே பலவற்றில் வெற்றியும் கண்டவர் அவர்.
இந்துத்துவ கும்பல் இந்தி சமஸ்கிருதத் திணிப்பை இன்று மேற்கொள்ளும் பொழுது பலர் செத்த பிணம் போல் கிடக்கிறார்கள் ஆனால் அக்காலத்தில் பெரியார் செய்தது என்ன?
‘இன்றைய அரசாங்கத்திற்கு நம் இயக்கம் அழிக்கப்படல் வேண்டும் என்கின்ற அவசியத்தில் இருக்கிறது. இதற்கு நம்மில் ஒரு ஆளாவது தன்னுடைய அழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆக வேண்டியது அவசியமான காரியம் ஆகும். ஏனெனில் அந்த பலி தான் இயக்கத்தை என்றும் அழிக்காமல் காப்பதாகும். அழிந்து பட்டதாக கண்ணுக்குத் தெரிந்தாலும் அதன் சமாதியில் இருந்து அழிக்க அழிக்க முளைப்பதுமாகும்.
அந்தப் பலிக்கு முதலாவது தகுதி நான் தான் என்று உண்மையாக நம்புகிறேன். இது அகம்பாவமான கருத்தாகச் சிலருக்கு தோன்றலாம். தோன்றினால் குற்றமில்லை.
உண்மை அதுதான். உண்மையை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுப்பது போல் இந்த அகம்பாவ குற்றத்துக்கு நான் ஆளாக்கப்படும் விலையை கொடுத்து சகித்துக் கொள்கிறேன். நான் பலியாவது என்பதை இன்று நேற்றல்ல; சில ஆண்டு களாகவே முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் இந்தி எதிர்ப்பு துவக்கப்படும் பொழுதே உறுதியாக முடிவு செய்து கொண்டு தான் துவக்கினேன். இதை இந்த ஒரு ஆண்டில் 3, 4 தடவை குறிப்பிட்டும் இருக்கிறேன்…’
படிக்க: தந்தை பெரியார்: சமூக அறுவை சிகிச்சை நிபுணர்!
மேற்கண்டவாறு இந்தி திணிப்புக்கு எதிராக களமாட வேண்டியதன் அவசியத்தையும், அத்தகைய மொழி போராட்டத்தில், தான் முதல் நபராக நின்று பலியாவதற்குத் தயாராக இருப்பதாகவும் 1949-களிலேயே அறிவித்தவர் பெரியார். அதற்கு முன்பும் பின்பும் இதற்காக களமாடியவர் பெரியார்.
ஆனால் இன்றைய நிலை என்ன? பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை பின்னாலே தொங்க விட்டுக் கொண்டு ‘முதல்வர்’ என்ற பெயரில் வலம் வரும் அரசியலற்ற ‘தற்குறி’ நடிகர் சட்டமன்றத்திலும் ஆளுநர் மாளிகை யிலும், பிற அரசுத்துறை சார்ந்த நிகழ்வு களிலும் ‘வந்தே மாதரம்’ என்ற சமஸ்கிருத மொழி பாடல் முதல் இடத்திற்கு வந்துவிட்டது. அதன்பின்பு தேசிய கீதமாம். அதற்கும் பின்பு வாய்ப்பு இருந்தால் தமிழ் தாய் வாழ்த்தாம்!?
எவ்வளவு பெரிய கொடுமை இது? இவர்கள் எங்கே இந்தி சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து களமாட போகிறார்கள்? அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
பெரியாரின் எழுத்துக்களிலிருந்து கற்போம்! மேலும் முன்னேற அவரது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!
‘வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்; 1)Physician’s Cure 2)Surgeon’s Cure. அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒரு முறை; கத்தி போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை.
என்னைப் பொறுத்தவரையில் நான், நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்கு, கஷ்டம் இல்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப் படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல;
நோயாளிக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது லட்சியம் எல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டும் என்பதுதான்.
நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல; 2000, 3000 வருஷங்களாக தடித்துப் போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால், சிறிது கடினமாகத்தான் சொல்லி ஆக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள், உலகத்தையும் பாருங்கள், சிந்தியுங்கள், பரிகாரம் தேடுங்கள்!’ ‘கையை வெட்டினால் ஒழிய பிழைக்க மாட்டாய்’ என்று டாக்டர் சொன்னால் வெட்டி விடச் சம்மதிக்கிறோம்; ‘காலை வெட்டினால் ஒழிய பிழைக்க மாட்டாய்’ என்றால், காலை வெட்டிவிட சம்மதிக்கிறோம்; ‘மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போட வேண்டும்’ என்றால் போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம்; ‘எடுத்து விட வேண்டும் என்றால் கர்ப்பப் பையை எடுத்து விட வேண்டும்’ என்றால் சம்மதிக்கிறோம்; இன்னும் முக்கிய உறுப்புகளை – முக்கியப் பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம்.
படிக்க: பெரியார் பிறந்தநாளில் சனாதன ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!
அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி இழிவுபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால் இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத் தன்மை) எப்பொழுதுதான், எந்த வகையில் தான் மறைவது என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்கு பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்று தானே அறிவாளிகள் சொல்லுவார்கள்?”
‘குடியரசு’ இதழ்களில் மேற்கண்டவாறு அக்காலத்திலேயே தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் விழிப்புணர்ச்சி ஏற்படும் வகைகளிலான போர்க்குண மிக்க கருத்துக்களை விதைத்துச் சென்றுள்ளார்.
இவ்வளவு முன்னேறிய காலத்திலுங் கூட சனாதனப் பார்ப்பனியக் கொடுமைகள், சாதி தீண்டாமை, ஆணவப் படுகொலைகள்,
மொழி திணிப்பு பாசிச இந்து மத வெறி கொடுங்கோன்மைகள் என அனைத்தும் தலைவிரித்தாடும் இக்காலச் சூழலில் பெரியாரின் இந்த 148 வது பிறந்த நாளிலாவது உறுதியேற்று களமாட முன்வர வேண்டாமா தமிழ் மக்கள்? உறுதியாக பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி களமாடுவோம், வாரீர்! தந்தை பெரியார் புகழ் ஓங்கட்டும்!
– எழில்மாறன்







