தமிழ்நாட்டில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளன. பழசுதான் எனினும் சிலவற்றை அசைபோடுவோம்!
கடந்த 2026 ஏப்ரலில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றியடைந்த மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா ஆகிய இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக மே மாதம் பதவியேற்ற 21 நாட்களிலேயே தவெக-வின் குதிரை பேரத்திற்கு இரையாகி MLA பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்து கொண்டனர்.
இவர்கள் மட்டுமா குதிரை பேரத்திற்கு இரையாகினர்? பெருந்துறை அதிமுக எம்எல்ஏ எஸ் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் அதிமுக எம்எல்ஏ ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை அதிமுக எம்எல்ஏ C. விஜயபாஸ்கர் ஆகியோரும் அடங்குவர்.
(நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை) மன்னார்குடி தொகுதியில் TTV தினகரனின் அமமுக எம்எல்ஏ காமராஜர் என்பவர் தமது தலைவனுக்கு நாமத்தைச் சாற்றி விட்டு விஜய்க்கு கூஜா தூக்கச் சென்றுவிட்டார்.
இவ்வாறு ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதும், பிழைப்புவாத நோக்கில் ஆளும் கட்சியில் குதிரை பேரம் மூலம் சேர்ந்து மீண்டும் அதே தொகுதிகளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிடுவதும் ஜனநாயக மாண்பாக இருக்க முடியுமா? அர்த்தமற்ற முறையில் மக்களின் வரிப்பணம் இவர்களால் வீணடிக்கப்படலாகுமா?
இச்செய்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளால் மட்டுமின்றி, அதிகார வர்க்க அமைப்புகளான ECI, CBI, நீதிமன்றங்களாலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியதும், கடும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியதும் இல்லையா? அத்தகையோரை மீண்டும் தேர்தலில் போட்டியிட எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாதல்லவா?
இன்னும் சில அதிமுக எம்எல்ஏக்கள் இல்லங்களுக்குச் சென்ற சோபாக்களின் மூலம் பதவி ஆசை நம்பிக்கை பெற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து விட்டு பின்னர் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து பழைய எடப்பாடி கூண்டிலேயே அடைபட்டுக் கொண்டவர்கள் கதையோ இன்னும் ஆபாசமானது.
இவ்வாறு குதிரைப் பேரத்திற்கு அடி பணிந்து கட்சி மாறிய நபர்கள் அனைவரும் பிழைப்புவாத நோக்கில் கட்சி மாறியவர்கள் என்பது பேருண்மை. இவர்களுக்கு மாநில அல்லது தேசிய அரசியல் குறித்த ஞானம் அற்றவர்கள் என்பது ஒரு புறம். அது தனியே கிடந்து விட்டுப் போகட்டும்.
‘அனைத்தும் அறிந்த’ – ‘முற்போக்காளர்களின்’ நிலை 2026 தேர்தலுக்குப் பின் என்னவாயிற்று?
நடிகர் விஜய்க்கு 107 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயூஎம்எல், விசிக-கட்சிகளை வளைத்துப் போட்டு ‘ஆட்சி பீடத்தில்’ ஏறினார் விஜய்.
அத்தருணத்தில் இக்கட்சிகள் யாவும் என்ன கூறினார்கள்? தாங்கள் திமுக கூட்டணி யிலேயே நீடிப்பதாகவும், பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே தவெகவை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் மாறி மாறி ஏதேதோ பேசினார்கள். இறுதியில் பார்த்தால் காங்கிரஸ் 2, (+ மாநிலங்களவை உறுப்பினர் 1) விசிக 1, ஐயூஎம்எல் 1 என அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு வைகோ- வையும் இணைத்துக் கொண்டு விஜய்யின் ‘மிக முற்போக்கான’ ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’யில் முழுமையாக மூழ்கி ஐக்கியமாகிக் கொண்டனர்.
இவர்களில் ஒரு சிலர் விஜய்யின் குதிரை பேர சோபா பாணி அரசியலை பெயருக்கு விமர்சித்ததோடு சரி. அதற்கு மேல் பாரதூரமாக இப்பிரச்சனையை எடுத்துக் கொள்ளவே இல்லை.
மேலும் படிக்க: ‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்! பாகம் -2
விஜய்யின் நான்கு மாத காலத்திற்கு மேலான ஆட்சி அவலங்கள் மற்றும் விஜய்யின் இழிந்த அரசியலற்ற தற்குறித்தனமான செயற்பாடுகள் குறித்து கூட்டணியில் ஐக்கியப்பட்டுக் கொண்ட கட்சிகள் எவையும் வாய் திறக்க முன்வரவில்லை. அந்தர் பல்டிதான்.
இடதுசாரிகள்கூட பெயரளவிற்கு விஜய் ஆட்சியின் குறைபாடுகளை அவ்வப்போது விமர்சித்தாலும், ஆட்சியைப் பாதுகாப்பதில் மட்டும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். சரி, தற்போதைய இடைத் தேர்தல் விடயத்திற்கு வருவோம்.
சிபிஐஎம் தமிழ் மாநிலக் குழு கூட்டம் செப்டம்பர் 13 அன்று திருச்சியில் நடந்து முடிந்த பின் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஊடகவியலாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறிய விவரங்களாவது: ‘இடதுசாரிகள் தவெக, திமுக, அதிமுக இவை எவற்றுடனும் அணி சேராமல் தனித்துப் போட்டியிடப் போகிறோம்; சிபிஐ மற்றும் சிபிஐஎம் தலா ஒரு தொகுதியை பங்கிட்டுக் கொள்கின்றன…’ எனப் பற்பல விசித்திரமான விளக்கங்களை அளித்தார்.
‘தவெக-வுடன் அணி சேரா விட்டால் அந்த ஆட்சிக்கு கொடுக்கும் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா?’ என்று நிருபர்கள் வினா எழுப்பியமைக்கு, ‘இல்லை; இல்லை. ஆட்சிக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்; ஆனாலும் தனித்துப் போட்டியிடுவோம்; ஆட்சிக்கு ஆதரவளிக்காவிட்டால் சின்ன ஓட்டைகளில் கூட பாஜக காவிக் கும்பல் நுழைந்து விடும்; எனவேதான் தவெக-அரசை ஆதரிக்கிறோம்…’ என்ற பாணியில் அரைத்த மாவையே அரைத்துத் தள்ளினார். இதன் மூலம் இடதுசாரிகளின் விசித்திரமான முடிவுகளை பலரும் வியந்து பார்க்கிறார்கள்.
விஜய்யும், தவெக-வும் உண்மையிலேயே பாசிச பாஜக-வை எதிர்ப்போர்தான் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரத்தைக் காண்பிக்க முடியுமா?
தேர்தல் நேரத்தில் திமுகவை தமது ‘அரசியல் எதிரி’ என்றும், பாஜகவை தமது ‘கொள்கை எதிரி’ என்றும் எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்புவித்தார் நடிகர் விஜய். இடதுசாரிகளோ, இப்போது திமுகவிலிருந்து விலகி விஜய்யுடன் புதிதாகக் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ள கட்சிகளோ – விஜய், ‘அரசியல் எதிரி’ திமுகவைச் சாடி துவைத்தெடுப்பதில் 100-ல் 0.01 அளவாவது ‘கொள்கை எதிரி’ பாஜகவை எதிர்த்துப் பேசியதற்கான ஒரே ஒரு வார்த்தையை உதாரணத்திற்காகவாவது எடுத்துக் கூறிட முடியுமா? (இந்தப் பாசிச பாஜக இந்துத்துவ கும்பல் தானே இன்று நாட்டின் பிரதான ஆபத்தான சக்தி என அறிவிக்கின்றீர்கள்.) பின்னர் எப்படி விஜய்யை பாஜக எதிர்ப்பு சக்தி என்று கருதுகிறீர்கள்?
மாநில அளவிலும் இந்திய அளவிலும் நாட்டின் பேராபத்தான இயக்கமாக இருப்பது பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ கும்பல் என்பது தானே உங்கள் யாவரது நிலைப்பாடும்! அப்படியானால் பாஜக-வை நோக்கித் தானே விஜய் உட்பட பிற அனைத்து கட்சிகளின் தாக்குதல்களும் தொடுக்கப்படல் வேண்டும். ஆனால் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள விஜய் அந்தப் பணியை ஆற்றுகிறாரா?
பாசிச பாஜக கும்பல், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எத்தகைய குடைச்சல்களைக் கொடுக்கும் என்பதற்கு கடந்த கால திமுக ஆட்சியே பல்வேறு வழிகளிலும் சாட்சியமாக இருந்ததா? இல்லையா?
விஜய் எப்படி பாஜக- விற்கு இணக்கமாக அமைதி காக்கின்றாரோ, அதேபோல பாஜக மோடி – அமித்ஷா கும்பல், விஜய்யுடன் இணக்கமாக அமைதி காக்கின்றனர் என்பதே உண்மை.அவர்கள் இருவர்களுக்கும் இடையிலான உறவு பகைமை உறவு அன்று; இணக்கமான உறவே நீடிக்கிறது என்பது மட்டுமல்ல; விஜய் பற்றிய பிடி முழுவதும் மோடி- அமித்ஷா கரங்களில் இறுகப்பற்றப்பட்டுள்ளது மட்டுமல்ல; தமிழ் நாட்டில் கழகங்கள் இல்லாத ஆட்சியை உருவாக்குவதற்கு பாஜக பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையே தவெக என்பதை இடதுசாரிகள் எனப்படுவோர்கூட உணரத் தலைப்படாமல் தத்தளிப்பது ஏன் என்பதுதான் நமது வினா.
பாஜக நேரடியாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தாததால் தமிழ்நாட்டில் காவி நடவடிக்கைகள் குறைந்துவிட்டன என்றோ நடப்பது தவெக எதிர்ப்பு ஆட்சி என்றோ கற்பனை செய்ய முடியுமா தோழர்களே?
ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், கீர்த்தனா உள்ளிட்ட அமைச்சர் ‘பெருமக்கள்’ யாவரும் பக்கா ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிஸ்டுகள் வழி வந்தவர்கள் தானே? பாஜக ஆதரவு முன்னாள் அதிமுககாரர் செங்கோட்டையன் கூட அமித்ஷா வழிகாட்டுதலில் தவெகவில் ஒட்டிக் கொண்டவர் தானே? மாநிலம் முழுவதும் எண்ணற்ற மாவட்ட, ஒன்றியப் பொறுப்பில் இருப்பவர்களும் தவெக போர்வையில் நடமாடும் சங்கிகள்தான் என்பது இந்த தலைவர்களுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று?
திமுக ஆட்சி காலத்தில் தமிழிசை, வானதி, குஷ்பூ, காயத்ரி, அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் உட்பட எண்ணற்ற காவிக் கும்பல் ‘பேயாட்டம்’ போட்டார்கள் அல்லவா? இன்று இவ்வளவு கேவலமான அலங்கோல ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற பொழுது எங்கே போனார்கள் இவர்கள்? மாநிலத் தலைவர் என்ற இருக்கையில் இருப்பதால் பெயருக்காக அவ்வப்பொழுது வாயைத் திறக்கிறார் நயினார். அவ்வளவே!
வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளன்று அவர் பிறந்த மண்ணான ஈரோட்டில் திராவிட இயக்கங்கள் சார்பாக வழக்கம்போல் பேரணி சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு விஜய் ஆட்சியில் காவல் துறையால் அனுமதி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஈரோட்டில் இந்துத்துவக் கும்பலுக்கு விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதான் பெரியாரை விஜய் கொண்டாடும் லட்சணமோ என்பதை இந்த ‘முற்போக்காளர்கள்’ தான் விளக்க வேண்டும். இதுபோல எண்ணற்ற விஜய்யின் காவி ஆதரவு உதாரணங்களைக் கூற முடியும். நடப்பது தவெக முகமூடி அணிந்து பாஜக ஆட்சி எனும்போது, பிறகு என்ன புதிதாக பாஜக ஆபத்திலிருந்து இவர்கள் தமிழ்நாட்டை காத்து விடப் போகிறார்கள் என்பதுதான் புரியவில்லை?
ஆட்சிக்கு ஆதரவாம்! இடைத்தேர்தலில் தாங்கள் ஒரு தேசிய கட்சி என்ற அடிப்படையில் தனித்துப் போட்டியாம்!
இது என்ன வகை நிலைப்பாடு? இடதுசாரிகள் மக்களுக்கு விசித்திரத்தையும், விந்தையையும் அல்லவா அளிக்கின்றீர்கள்? பேசாமல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தலின் இழிந்த நிலைமைக்காக தேர்தலைப் புறக்கணித்து விட்டுக் கூடச் சென்றிருக்கலாம் இடதுசாரிகள்!
ஏற்கனவே பாராளுமன்ற ஜனநாயகம் புழுத்து நாறிக் கொண்டிருக்கிறது! மேலும் நீங்கள் சேர்ந்து குழப்ப வேண்டாம் என்பதே எங்களின் கனிவான வேண்டுகோள் தோழர்களே! சரியான நிலைப்பாட்டிற்கு வாருங்கள்!
எழில்மாறன்







