“மாற்றம்” என்ற வெற்றுக் கூச்சலோடு விவசாயிகளுக்கு நிவாரணம், பெண்களுக்கு உதவித்தொகை, இலவசப் பேருந்துப் பயணம், இலவச கேஸ் சிலிண்டர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் என்று தேர்தல் காலத்தில் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக் கட்டிலைக் கைப்பற்றியது இன்றைய நடிகர் தலைமையிலான தவெக.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று சட்டமன்றத்தில் முன்னுரிமை பெறும் அம்சங்களைப் பார்த்தால், “மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? அல்லது முதலீட்டாளர்களுக்கு வசதியான சட்டங்களை உருவாக்குகிறதா?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அண்மையில் முடிவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான மசோதாக்களைப் பார்த்தால், இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

விவசாய நிலம்… ஈரநிலம்… யாருடைய முடிவு?

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்த மசோதா, 2026-ல் முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத பகுதிகளில் ஈரநிலங்களை வளர்ச்சிப் பயன்பாட்டுக்கு மாற்றும்போது இதுவரை இருந்த மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்கி, அந்த அதிகாரத்தை நகரமைப்புத் துறை இயக்குநரிடம் ஒப்படைக்கிறது.

அரசின் விளக்கம் — “ஆட்சியரின் கூடுதல் ஒப்புதல் காரணமாக அனுமதிகளில் தாமதம் ஏற்படுகிறது; எனவே நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும்” என்பதாகும்.

ஆனால் கேள்வி: வளர்ச்சித் தேவைக்கு அனுமதி விரைவாகக் கிடைப்பதற்காக நிலத்தையும் நீரையும் பாதுகாக்கும் கண்காணிப்பு பலவீனப்படுத்தப்படுகிறதா?

விவசாய நிலம், ஈரநிலம், நீர்வழித்தடம் போன்றவை வெறும் “நிலம்” அல்ல; அவை மக்களின் வாழ்வாதாரம். எனவே “அனுமதி எளிதாகக் கிடைக்க வேண்டும்” என்ற முதலீட்டு நோக்கத்திற்கும், “நிலமும் நீரும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற மக்கள் நல நோக்கத்திற்கும் இடையில் அரசு எந்தப் பக்கம் நிற்கிறது என்பதே கேள்வி. இந்த மசோதாவை அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் எதிர்த்தும் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

100 ஏக்கரிலிருந்து 12 ஏக்கர்… கல்வி யாருக்காக?

அடுத்ததாக தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா. இதுவரை தனியார் பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. புதிய திருத்தத்தின்படி:

  • பெருநகர சென்னை பகுதியில் — 12 ஏக்கர்
  • பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் — 18 ஏக்கர்
  • பிற பகுதிகளில் — 25 ஏக்கர்

என்று நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது. அதோடு, நிரந்தர அறக்கட்டளை நிதியும் ரூ.50 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் வாதம் — “நிலப்பற்றாக்குறை உள்ள நகரங்களில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான தடைகளை அகற்றுவது.”

ஆனால் இதை வேறு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவது எப்போது? தனியார் பல்கலைக்கழகங்களுக்கான தடைகளைத் தளர்த்துவதில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம்? கல்வி ஒரு உரிமையா? அல்லது முதலீட்டுக்கான சந்தையா?

இந்த மசோதா மூலம் தரமான பல்கலைக்கழகங்கள் உருவாகாது. மாறாக கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் பெட்டிக் கடைகள்தான் பெருகும். அதே நேரத்தில் அரசின் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.

இந்த மசோதாவை CPI, CPI(M), பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துள்ளன. ஆனால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்கே ஒரு முக்கியமான அரசியல் முரண்பாடும் வெளிப்படுகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு தரும் CPI, CPI(M) ஆகிய கட்சிகள் எதிர்த்த மசோதாவே ஆட்சியில் பங்கு பெறும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியோரால் நிறைவேறுகிறது. அப்படியானால் அடுத்த கேள்வி தவிர்க்க முடியாதது: மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டே எதிர்ப்பு மட்டும் எதற்காக? CPI, CPI(M) கட்சிகளுக்கு வாக்களித்த மக்களை முட்டாளாக்கவா? “முட்டாள்களோடு சேர்ந்து விட்டால் அறிவாளிகளும் முட்டாளாகி விடுவார்கள்” என்பது இதுதானோ?

வணிகத்திற்கு 21 நாள்… மக்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு நாள்?

தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டத் திருத்தம், 2026 மூலம் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் உருவாக்கப்படுகிறது. ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் திட்டங்கள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் உள்ளிட்ட “பெரிய, முக்கியமான முதலீடுகளுக்கு” விரைவான அனுமதி வழங்கும் அமைப்பாக இது செயல்பட உள்ளது. சில அனுமதிகளுக்கு 21 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் ‘தாமதமில்லா ஒப்புதல்’ (Deemed Approval) என்ற நடைமுறை மூலம் தாமாகவே அனுமதி கிடைத்துவிடும்..

படிக்க: 

 ஜனநாயகன் விஜய் -ன் ஆட்சியில் சிதைக்கப்படும் ஜனநாயகம்

 அடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் விஜய்’ தான்! தற்குறிகளின் அலம்பல்!

இதுதான் “Ease of Doing Business”. மோடி அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களின் அதே வழியில் இந்த நடிகர் ஆட்சியும் நடைபோடுகிறது.

“உங்கள் நிலம், குடிநீர், சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கிறதா?” என்று மக்களிடம் கேட்பதற்குப் பதிலாக, “உங்களுக்கு இன்னும் என்ன வசதி வேண்டும்?” என முதலாளிகளிடம் சிரம் தாழ்த்தி தெண்டனிடுகிறது நடிகரின் ஆட்சி.

முதலாளிகளுக்கு வேகமாக அனுமதி வழங்குவது வளர்ச்சி அல்ல; மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதுதான் உண்மையான மக்கள் நலன்.

தீயணைப்புத் துறையிலும் ‘தளர்வு’

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கட்டிட விதிமுறைகளுடன் தொடர்புடைய National Building Code of India, 2016 குறித்த குறிப்புகளை நீக்குவது உள்ளிட்ட மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசு இதை வணிக சீர்திருத்தச் செயல்பாட்டுத் திட்டத்தின் (Business Reforms Action Plan) அடிப்படையில் கட்டிட மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை நவீனப்படுத்தும் நடவடிக்கை என விளக்கியுள்ளது.

“முதலீட்டுக்கு வேகமான அனுமதி வழங்கும் அதே வேளையில், பாதுகாப்பும் கண்காணிப்பும் அதே அளவு வலிமையாக இருக்கிறதா?” என்பதை உறுதி செய்ய வேண்டாமா?

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு பற்றி பேசுவதைவிட, தொழில் தொடங்குவதற்கு முன்பே பாதுகாப்பை உறுதி செய்வதுதானே அரசின் கடமையாக இருக்க வேண்டும்?

ஆனால், இங்கே பணக்காரர்களின் நலன் காப்பதே நடிகரின் கடமையாக உள்ளது.

வியாபாரிகளுக்கு ஐந்து ஆண்டுகள்… விவசாயிக்கு என்ன?

தமிழ்நாடு விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குமுறை இரண்டாவது திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வியாபாரிகளுக்கான மண்டி உரிமத்தின் காலம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. மேலும் உரிம விண்ணப்ப நடைமுறை ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்படுகிறது.

இது நிர்வாக எளிமைப்படுத்தல் என்று அரசு கூறலாம். ஆனால் விவசாயிகளின் பார்வையில் ஒரு கேள்வி எழுகிறது:

விவசாயி உற்பத்தி செய்கிறான்; வியாபாரி சந்தையைப் பெறுகிறான். ஆனால் விவசாயிக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் சட்டங்கள் இல்லை. உற்பத்தி செய்யும் விவசாயிக்கு விளைபொருளுக்கான விலையைத் தீர்மானிக்கும் அதிகாரமும் இல்லை. ஆனால் வியாபாரிகளின் நிலையை வலுப்படுத்தும் மாற்றங்கள் மட்டும் வேகமாக நடக்கிறது. இந்த மசோதா விவசாயிகள் நலன் சார்ந்ததா அல்லது வியாபாரிகளின் நலன் சார்ந்ததா? நடிகரின் ஆட்சி யாருக்கானது?

உள்ளாட்சி வேலைகளும் இனி TNPSC வழியாக

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல்வேறு பணியிடங்களுக்கான நியமனங்களை டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் மேற்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின் விளக்கம் — “ஒரே மாதிரியான, வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான நியமன முறையை உருவாக்குவது.”

ஆனால், உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள பணியிடங்களை மையப்படுத்தப்பட்ட ஒரே தேர்வு முறைக்குள் கொண்டு வருவது உள்ளூர் நிர்வாகத்தின் தேவைகளுடன் எப்படி பொருந்திப் போகும்? இதற்கான நடைமுறை விளைவுகள் வெளிப்படையாக மதிப்பிடப்படவில்லை.

மக்களுக்கு வாக்குறுதிகள்… எம்.எல்.ஏக்களுக்கு வாகனமும் படியும்!

இங்கேதான் மக்களுக்கு இன்னொரு நெருடலான கேள்வி எழுகிறது.

நடிகர் விஜய், ஆகஸ்ட் 19 அன்று அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அரசு வாகனம், ஓட்டுநர் உள்ளிட்ட வசதிகளுடன் மாதம் ரூ.75,000 வாகனப் படியும், ரூ.25,000 உதவியாளர் படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் இதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக எம்.எல்.ஏக்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் மொத்தம் சுமார் ரூ.1.05 லட்சத்திலிருந்து ரூ.2.05 லட்சமாக உயர்ந்துள்ளன.

அதாவது 100 சதவீதம் அவர்களுக்கு வசதிகள் பெருகியுள்ளன. ஆனால் வாக்களித்த மக்களோ விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர்.

படிக்க:

 பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!

 பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும் பாகம்-2

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, ஆட்சியாளர்களுக்கான வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. வாக்களித்த மக்கள் கண்களில் சுண்ணாம்பும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கண்களில் வெண்ணெயும் தடவுவது என்பது இதுதானோ?

இவை தனித்தனி மசோதாக்களா? அல்லது ஒரே அரசியல் திசையா?

ஒரு மசோதாவை மட்டும் பார்த்தால் இதன் பாதிப்பு தெரியாமல் போகலாம். ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் பாருங்கள்:

  • நிலம் — முதலீட்டுக்கு எளிதாக்கப்படுகிறது.
  • தனியார் பல்கலைக்கழகம் — நிலத் தேவை குறைக்கப்படுகிறது.
  • தொழில் — அனுமதி வேகப்படுத்தப்படுகிறது.
  • வணிகம் — முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் வரை விரிவுபடுத்தப்படுகிறது.
  • மண்டி உரிமம் — 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டாக நீட்டிக்கப்படுகிறது.
  • உள்ளாட்சி நியமனம் — மையப்படுத்தப்படுகிறது.
  • எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம், வாகனம், படிகள் — உயர்த்தப்படுகின்றன.

இவற்றின் பின்னால் ஒரு பொதுவான நிர்வாகத் ‘திறமை’ தெரிகிறதா? “முதலீடு எளிதாக வர வேண்டும்; வணிகம் வேகமாக நடக்க வேண்டும்; நிர்வாகத் தடைகள் குறைய வேண்டும்.”

இது பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு பார்வையா? “இந்த வளர்ச்சியில் சாதாரண மக்களின் பங்கு என்ன?” இதுதான் முக்கியமான கேள்வி.

இங்கேதான் ஆட்சியில் பங்கேற்கும் கட்சிகளின் பொறுப்பு தொடங்குகிறது!

நடிகர் அரசு தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு அல்ல. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், விசிகவுக்கு சமூகநீதி நலத்துறையும், IUML-க்கு சிறுபான்மையினர் நலத்துறையும் வழங்கப்பட்டுள்ளன.

அதனால் இவர்கள் வெறும் “வெளிப்புற ஆதரவாளர்கள்” அல்ல; ஆட்சியின் நேரடி பங்காளிகள். அப்படியானால் கேள்வி:

இந்த மசோதாக்களில் மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்கள் இருக்கின்றன என்று கருதினால், அமைச்சரவையில் இருந்து என்ன செய்தார்கள்? எதிர்ப்பு தெரிவித்தார்களா? திருத்தம் கோரினார்களா? வாக்கெடுப்பில் எதிர்த்தார்களா? அல்லது பதவியைத் தக்க வைத்துக்கொண்டு ஆட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டார்களா?

படிக்க:

 13 லட்சம் கோடி கடன்: இப்போது ஏன் ஒப்பாரி வைக்குது தவெக அரசு!

 தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்

குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்னிறுத்தும் விசிக, சமூகநீதி அமைச்சகத்தைப் பெற்றிருப்பது மட்டுமே போதாது. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, தொழிலாளர் உரிமை ஆகியவற்றில் அந்தப் பதவி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். அமைச்சர் பதவி ஒரு அலங்காரப் பதவி அல்ல; அது அரசியல் பொறுப்பு.

தமிழில் எழுத்துக்கூட்டி படிப்பதற்கே திண்டாடும் நடிகர் கட்சியில் உள்ள அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மேற்கண்ட மசோதாக்களில் ஒரு வரியைக் கூட படித்திருக்க மாட்டார்கள். அப்படியே ஒரு சிலர் படித்திருந்தாலும் அது என்னவென்று அவர்களுக்குப் புரிந்திருக்காது.

அதிகாரிகள் சட்ட மசோதாவை வரைகிறார்கள். நடிகனின் கண் அசைவில் ஆட்டு மந்தைகளைப் போல இவர்கள் மேசையை மட்டும் தட்டி நிறைவேற்றுகிறார்கள்.

காங்கிரஸ் — கார்ப்பரேட் ஆதரவு என்ற விமர்சனத்திலிருந்து தப்ப முடியுமா?

காங்கிரஸ் இந்த அரசின் நேரடி ஆட்சிப் பங்காளியாக இருக்கிறது. முதலீடு, தொழில் வளர்ச்சி, தனியார் முதலீடு போன்றவற்றுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கை காங்கிரஸுக்கு புதிதல்ல.

ஆனால் இன்று தமிழகத்தில் கேள்வி இன்னும் குறிப்பானது: விஜய் அரசின் கொள்கைகளில் காங்கிரஸ் பங்காளியாக இருக்கிறதா? அப்படியானால், அந்தக் கொள்கைகளுக்கான அரசியல் பொறுப்பையும் அது ஏற்க வேண்டும். “அமைச்சர் நாங்கள்; முடிவு நாடாளும் நடிகருடையது” என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஆட்சியில் பங்கு என்றால் பொறுப்பிலும் பங்கு. அமைச்சர் பதவி நாக்குவழிப்பதற்காக அல்ல.

விசிக, முஸ்லிம் லீக் — பதவி மட்டும் போதுமா?

விசிக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும், முஸ்லிம் லீக் சிறுபான்மை மக்களின் உரிமையையும் பேசுகின்றன. அப்படியானால் மக்களிடம் ஒரு கேள்வி: இந்த ஆட்சியில் உங்கள் பங்கேற்பு அந்த மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது?

ஒரு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்பதே சமூகநீதி அல்ல; ஒரு துறை கிடைத்துவிட்டது என்பதே அதிகாரப் பங்கேற்பு அல்ல. அந்த அதிகாரம் யாருடைய வாழ்க்கையை மாற்றுகிறது என்பதுதான் உண்மையான அளவுகோல்.

வெளியில் இருந்து ஆதரிக்கும் CPI, CPI(M)-க்கு இன்னும் கடினமான கேள்வி!

இங்கே இடதுசாரிகளின் நிலை இன்னும் சுவாரசியமானது. CPI, CPI(M) ஆகிய இரு கட்சிகளும் விஜய் அரசில் அமைச்சரவையில் சேரவில்லை; ஆனால் வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றன.

பாஜக மறைமுகமாக ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதே இந்த முடிவுக்கான முக்கிய அரசியல் காரணம் என்று அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் நடப்பது பாஜக ஆட்சிதான் என்பதை அவர்கள்தான் புரிந்து கொள்வதில்லை.

இதனால் ஒரு அடிப்படைக் கேள்வி மறைந்து விடுமா?

விஜய் அரசு மக்கள் விரோதமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்? வெளியில் நின்று எதிர்ப்பீர்கள்; அதே நேரத்தில் ஆட்சிக்கு ஆதரவு தொடரும். அப்படியானால் அந்த ஆதரவின் அரசியல் எல்லை என்ன?

படிக்க:

  ‘மதச் சார்பற்ற(?) சமூக (அ)நீதி வெற்றுக் கூட்டணி’ எனப் பெயர் சூட்டி இருக்கலாம்!

 இந்திய நாட்டைக் கெடுக்கும் பாஜகவும் – தமிழ்நாட்டைக் கெடுக்கும் தவெகவும்!

இதை CPI, CPI(M) கட்சிகள் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதரவு என்பது நிபந்தனையற்றதா? அல்லது உழைக்கும் மக்களின் நலனைப் பாதுகாக்கும் நிபந்தனைகளுடனா? ஏனெனில், “நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சட்டமன்றத்திற்கு வெளியே சொல்வதும், அதே அரசாங்கம் பெரும்பான்மையைத் தக்க வைத்துக்கொள்ள உதவுவதும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.

மதிமுகவைப் பொறுத்தவரை…

மதிமுகவும் விஜய் தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கிறது. வைகோ, நடிகர் அரசை பாராட்டியிருப்பதோடு, கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார். எனவே மதிமுகவின் நிலைப்பாட்டை மறைமுகமாக ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நடிகர் ஆட்சியை நேரடியாக ஆதரிக்கிறார்கள்.

ஆனால் ஒரு கேள்வி மட்டும் இருக்கிறது: ஆதரவு என்பது ஆட்சியின் ஒவ்வொரு கொள்கைக்கும் ஆதரவா? அல்லது குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்கான ஆதரவா? அதை மதிமுக தெளிவுபடுத்த வேண்டும்.

நடிகர் ஆட்சியின் உண்மையான சோதனை இதுதான்!

ஒரு புதிய அரசு என்பதால் தவறுகள் இருக்கலாம். புதிய அரசியல் கட்சி என்பதால் நிர்வாக அனுபவம் குறைவாக இருக்கலாம். அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசு எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறது என்பதை அறிய அரசின் சட்டங்களைப் பார்க்க வேண்டும்.

விவசாய நிலம், தனியார் கல்வி, தொழில் முதலீடு, வணிக அனுமதி, சந்தை, உள்ளாட்சி வேலைவாய்ப்பு, மக்கள் பிரதிநிதிகளின் சலுகைகள்… இவற்றில் அரசு எடுக்கும் முடிவுகளை ஒன்றாக வைத்துப் பார்த்தால், “மக்கள் நலன்” என்ற அரசியல் முழக்கத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய நடிகரின் ஆட்சியில் “முதலீட்டாளர் நலன்” என்ற நடைமுறைதான் தற்போது புலப்படுகிறது.

முடிவாக…

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களுடையவை. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படும் சட்டங்கள் அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றன.

மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு சட்டத் தளர்வு வழங்குவது எளிது. ஆனால்,

  • விவசாயியின் நிலத்தைக் காப்பது கடினம்.
  • மாணவனுக்கு மலிவான உயர்கல்வியை வழங்குவது கடினம்.
  • தொழிலாளிக்கு வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வது கடினம்.
  • சிறு விவசாயிக்கு நியாயமான சந்தை விலையை உறுதி செய்வது கடினம்.
  • ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது கடினம்.

அந்தக் கடினமான பாதையை நடிகர் அரசு தேர்ந்தெடுக்கிறதா? அல்லது முதலீட்டாளர்களுக்கு எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்கிறதா? இதற்கான பதில் வருங்காலத்தில் அல்ல; இப்போதே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் தெரிகிறது.

அதேபோல், ஆட்சியில் நேரடியாகப் பங்கேற்கும் கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரிக்கும் கட்சிகளும் இனி தங்களுடைய நிலைப்பாட்டை வெறும் அறிக்கைகளால் அல்ல, செயலால் நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

  • அமைச்சரவையில் இருப்பவர்கள் (காங்கிரஸ், IUML, VCK) ஆட்சியின் முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
  • வெளியிலிருந்து ஆதரிப்பவர்கள் (மதிமுக) அந்த ஆதரவின் அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
  • மசோதாக்களை எதிர்ப்பவர்கள் (CPI, CPI-M) தேவைப்படும் நேரத்தில் ஆதரவையும் திரும்பப் பெறத் தயாராக இருக்க வேண்டும்.

இல்லையெனில் மக்கள் கேட்பார்கள்: “நீங்கள் யாருடைய பக்கம்? ஆட்சியின் பக்கமா? முதலாளிகளின் பக்கமா? அல்லது மக்களின் பக்கமா?”

நடிகர் அரசின் உண்மையான முகம் அதன் தேர்தல் அறிக்கையில் இல்லை; அது நிறைவேற்றும் சட்டங்களில் இருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் உண்மையான கொள்கை மேடைகளில் இல்லை; மக்களுக்கு எதிரான ஒரு சட்டம் வரும்போது அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டில்தான் இருக்கிறது.

வாக்குறுதிகள் மக்களுக்காக…

சட்டத் தளர்வுகள் முதலீட்டாளர்களுக்காக…

பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்காக…

ஆதரவு ஆட்சிக்காக…

அப்படியானால் மக்கள் எங்கே?

தமிழ்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here