காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல!ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாக மாறி உள்ளது இதில் மணல் கொள்ளையும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அது வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்வதற்கு பதிலாக கட்டந்தரையில் பாய்ந்து கடலுக்குள் சென்று புகுந்து விடுகிறது. 

மிழ்நாட்டின் நெல் உற்பத்தியும், மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 15 சதவீத மக்களின் வாழ்க்கையும் காவிரி பாசனத்துடன் தொடர்புடையதாக உள்ளது.

“வான் பொய்த்தாலும் தான் பொய்யா காவிரி” என்பதெல்லாம் பழங்கதையாக மாறி வருகின்றது. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர் சிக்கல் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள், சட்ட ரீதியிலான வாதங்கள்; போராட்டங்கள், தமிழகத்தை ஆண்ட கட்சிகளில் ஓரளவுக்கு விவசாயத்தின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அக்கறை கொண்ட திராவிட கட்சிகளின் முன்முயற்சி ஆகியவை ஒன்றிணைந்து இறுதி தீர்ப்பை பெற்றது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

காவிரி வெறும் ஆறு மட்டுமல்ல பழந்தமிழர் நாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந்தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் உயிராதாரத்துடன் இணைந்து போய் உள்ள காவிரியில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த இறுதித் தீர்ப்பின் சாரம் இதுதான்.

2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான்.

கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அந்தத் தீர்ப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை உறுதிப்படுத்துகின்ற முதன்மை அமைப்பு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority – CWMA) ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய அரசால் 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி இந்த அமைப்பு முறைப்படி அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துடன் இணைந்து, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (CWRC): இந்த அமைப்பு காவிரியின் நீர் இருப்பு, மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நிலவரத்தைக் கண்காணித்து, தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) பரிந்துரை செய்கிறது.

துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இறுதி தீர்ப்பின்படி இத்தகைய சட்டபூர்வமான வாய்ப்புகள் அனைத்தும் இருந்தும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவுகூடக் கிடைக்க வழியில்லாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா பாசனத்தில் வாழ்கின்ற லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம்.

படிக்க:

♦ காவிரி நீர்: அருவருக்கத்தக்க பேச்சும் அராஜக கைதும்!

 மேகேதாட்டுவில் ‘புதிய அணை’; காவிரி நீர் கானல் நீராவதை தடுத்திடு?

ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதியாக மாறி உள்ளது இதில் மணல் கொள்ளையும் சேர்ந்துள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அது வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு செல்வதற்கு பதிலாக கட்டந்தரையில் பாய்ந்து கடலுக்குள் சென்று புகுந்து விடுகிறது.

ஜூன் 12 அணை திறப்பதும், டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையும்!

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் நேரடியாகவும், அரியலூர் கடலூர் போன்ற மாவட்டங்கள் மறைமுகமாகவும் காவிரி நதியால் வாழ்வாதாரத்தை பெறுகிறது. விவசாயம் மற்றும் துணைத் தொழில் நடப்பதற்கு முக்கிய காரணியாக காவிரி நதி அமைந்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படும். இதற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. புதிதாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று உள்ள தமிழக வெற்றிக் கழகம் கர்நாடக அரசு மற்றும் ஒன்றிய அரசிடம் சட்டரீதியாகவும், மக்களை திரட்டி போராடியும் பெற வேண்டிய உரிமைகளை பெறுவதற்கு துளி அளவு கூட முயற்சிக்கவில்லை.

“கர்நாடகத்திற்கு செல்கிறேன், சிவக்குமாருடன் பேசுகிறேன்” என்று திரைப்பட பாணியில் வசனங்களும் பஞ்ச் டயலாக்குகளும் தான் வெளிவந்ததே தவிர காவிரியில் தண்ணீர் வந்த பாடு இல்லை.

இந்த நேரத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்ததன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் நிரம்பி வழியவே வேறு வழி இல்லாமலும், அணைகளின் பாதுகாப்பு கருதியும் உபரி நீர் திறக்கப்பட்டு விடப்பட்டு வருகிறது.

இதனால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீர் சட்டத்தின் படி வரவில்லை. இயற்கை கொடுத்த கொடையினால் தான் வந்து கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

தண்ணீர் திறப்பதிலும் அரசியல் செய்த பாசிச கோமாளி விஜய்!

இந்திய ஒன்றிய அரசாங்கம் ஆன ஆர்எஸ்எஸ் பாஜகவுடன் போராடி உரிமையை நிலைநாட்டுவதற்கு பதிலாக இயற்கையாக வந்த தண்ணீரை வைத்துக் கொண்டு அதுவும் மேட்டூர் அணை தனது கொள்ளளவை நெருங்குவதற்கு முன்பாகவே 90 அடி இருக்கும் போது தண்ணீரைத் திறந்து விடுவதற்கு  ஸ்டண்ட் அடித்தார் திருவாளர் விஜய்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 90 அடியாக உயர்ந்த நிலையில், செப்.1 ம் தேதி தமிழக முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு சென்று தண்ணீரை திறந்து விட்டார். அதுமட்டுமின்றி பாசிச கோமாளி எம்ஜிஆர் பாதையில் வயதான மூதாட்டிகள் கட்டிப்பிடித்து கவர்ச்சி காட்டினார்.

படிக்க:

 கொல்லூர் ‘ஸ்ரீமூகாம்பிகை’யும் – எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் கும்பல் கூத்துக்களும்!

காவிரி நீரைத் தருவதில் கர்நாடகா தொடர்ந்து அடாவடி! தன்னுரிமை கேள்!

மூன்று மாதத்திற்கு தேவையான கொள்ளளவு நீர் இல்லாத போது அதற்கு பொருத்தமாக தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் மீதான உரிமையை நிலைநாட்டுவதற்கு துப்பு கெட்ட தமிழக அரசு மற்றும் அரசாங்கத்தின் முதல்வர் விஜய் ஆகியோர் வெறும் 45 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிப்பு செய்து விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியை சொருகியது.

ஏற்கனவே முதல் போகமான குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் இரண்டாம் போக சாகுபடியான சம்பா சாகுபடியும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

காவிரியை குறிவைக்கும் கார்ப்பரேட்டுகள்

காவிரி டெல்டா பாசனத்தில் விவசாயம் நடத்தி நெல் உற்பத்தி செய்வதை காட்டிலும், காவிரி டெல்டாவின் கீழ் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை சூறையாடி கொடுப்பதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பிணந்தின்னிக் கழுகுகளை போல காத்துக் கிடக்கின்றன.

காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்து போனாலும் நிலங்கள் பாலம் பாலமாக வெடித்து அந்த அவலங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் விவசாயிகள் சொந்த மண்ணை விட்டு நாடோடிகளாக வெளியேறி போனாலும் இத்தகைய கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டம்தான்.

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளான ஆர்.எஸ்.எஸ் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசாங்கம் மற்றும் அதன் பினாமி கும்பல் ஆட்சி நடக்கின்ற தமிழ்நாட்டின் பாசிச கோமாளி விஜய் அரசாங்கம் ஆகிய இரண்டும் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையோ அல்லது தமிழகத்தின் நெல் உற்பத்தி தேவையோ ஒருபோதும் அக்கறையுடன் கண்டு கொள்ளப் போவதில்லை.

விவசாயிகளின் முன்முயற்சியினாலும் கடன் பெற்று எப்படியாவது விவசாயத்தை நடத்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் செய்த விவசாயத்தினால் கிடைத்த விளைச்சல் மற்றும் நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்வதையே சாதனையாக பேசிக்கொண்டு அதையும் வெட்கமில்லாமல் ரீல்ஸ் எடுத்து போட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது தமிழக வெற்றிக்கழகம்.

பாசிஸ்டுகள் எப்போதுமே மனிதர்களின் துன்பங்களையும் துயரங்களையும் பொருட்படுத்துவதில்லை தனது அரசியல் அதிகாரத்திற்காகவும் தனது எஜமானவர்களாக ஏகபோக நிதி ஆதிக்க கும்பல் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்காகவும் முழுமூச்சாக செயல்படுகின்ற தேச துரோக செயலில் ஈடுபடுவதை டெல்டா விவசாயிகளிடம் பிரச்சாரமாக கொண்டு செல்வோம்.

இந்தக் கொடுமைகள் போதாது என்று வருகின்ற தண்ணீரையும் மடக்கி பெங்களூர் குடிநீர் என்ற பெயரில் கொண்டு செல்வதற்கு எத்தணிக்கின்ற கர்நாடக அரசின் சதி திட்டங்களையும் மேகதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிவோம்.

அரசியல் கட்சி வேறுபாடுகள் பார்க்காமல் டெல்டா மாவட்டத்தின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையையும் தமிழ்நாட்டின் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கு ஓர் அணியில் திரண்டு போராடுவோம்.

  • தமிழ்ச்செல்வன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here