ரு மனிதனின் இறப்பிற்கும், அவர் இறந்த பிறகு அவரது நினைவு தினத்திற்கும் உரிய மரியாதை செலுத்துவது கம்யூனிஸ்டுகளின் நேர்மையான பண்பாடாகும். அந்தப் புரட்சிகர, நேர்மையான பண்பாட்டை வரித்துக் கொண்டுள்ள புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் தோழர் மாவோ வின் ஐம்பதாவது நினைவு தினத்தை நினைவு கூர்ந்து எமது அரசியல் திசை வழியை மீண்டும் உறுதி செய்கிறோம்.

“ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி பெறாத நாடுகளில் அதாவது காலனி, அரைக்காலனி, நவீன காலனி நாடுகளில் புரட்சியை நடத்துவதற்கு சரியான பாதை புதிய ஜனநாயகப் புரட்சி பாதை தான் என்பதை முன்வைத்த பாட்டாளி வர்க்கத்தின் ஆசான்களில் முக்கியமான  தோழர்தான் மாவோ.

இந்தியாவில் 1970 ஆம் ஆண்டு உருவான மார்க்சிய, லெனினிய இயக்கம், (நக்சல்பாரி கட்சி) அதற்கு முன்னர் இந்திய பொதுவுடமை இயக்கத்தில் நிலவி வந்த பாராளுமன்ற பங்கேற்பு என்ற அரசியலை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும் என்பதை தனது கட்சியின் திட்டமாக வைத்து செயல்படத் துவங்கியது.

நாடாளுமன்ற பங்கேற்பு என்பது வலது சந்தர்ப்பவாதமாக மாறிய நிலையில் அதை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று ஆயுதப் போராட்டப் பாதையில் இறங்கிய மார்க்சிய லெனினிய இயக்கம் விரைவிலேயே இடது சந்தர்ப்பவாத திசைவழியில் வீழ்ந்து பின்னடைவுக்கு உள்ளானது.

இந்த அனுபவங்களிலிருந்து இந்தியப் புரட்சி ரஷ்ய வகைப்பட்டதோ அல்லது சீன வகைப்பட்டதோ அல்ல. மாறாக ரஷ்ய புரட்சியில் கிடைத்த சரியான அம்சங்களையும், சீனப் புரட்சியின் சரியான அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டு இந்திய நிலைமைகளுக்கு பொருத்தமாக  புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று செயல்பட துவங்கியது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.. இந்த அடிப்படையில் பிறந்தது தான் மக்கள் திரள் வழி என்ற அரசியல் கோட்பாடாகும்.

கட்சி, படை, ஐக்கிய முன்னணி ஆகிய மூன்றும் தான் புரட்சியின் மந்திர ஆயுதங்கள் என்பதை எந்திரகதியாக புரிந்துக் கொண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை உணர்ந்து செயல்பட துவங்கியது புதிய ஜனநாயகம். அறிவியல் பூர்வமாக மக்களை புரட்சிக்கு அணிதிரட்டுவதற்கு, மக்களின் சொந்த அனுபவங்களில் இருந்து புரட்சியை நேசிக்க வேண்டும், புரட்சிக்கு செயல்பட வேண்டும் என்பதை உருவாக்குவதற்கு பொருத்தமான வழிமுறைகளை உருவாக்கியது.

புதிய ஜனநாயகப் புரட்சியை அடைவதற்கான போர் தந்திரத்தை நிறைவேற்றுவதற்கு அவ்வப்போது எழுகின்ற நாட்டின் மையமான அரசியல் பிரச்சனைகளை முன்வைத்து செயல் தந்திரத்தை உருவாக்கி படிப்படியாக மக்களின் அரசியல் உணர்வை மேலோங்க செய்ய வேண்டும் என்பதை அமல்படுத்த துவங்கியது.

படிக்க: 

 மக்களுக்கு தொண்டு செய்க! தோழர் மாவோ.
 நூல் அறிமுகம்: மாவோவின் மூன்று சொற்பொழிவுகள்

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி பாதை என்ற வழிமுறை காலனி, அரைக் காலனி மற்றும் நவீன காலனி நாடுகளுக்கு பொருந்தாது என்பதை புரிந்து கொண்ட தோழர் மாவோ சீனாவின் அரைக் காலனிய, அரை நில பிரபுத்துவ சமூக கட்டமைப்புக்கு பொருத்தமாக  புதிய ஜனநாயக புரட்சியின் முன்னெடுத்து சென்றதைப் போலவே, இந்திய நிலைமைகளுக்கு பொருத்தமாக புரட்சிப் பாதையில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

90கள் முதல் போர்தந்திரங்களுக்கு இசைவான செயல் தந்திரங்களை உருவாக்கி செயல் தந்திர அரசியல் வழியில் மக்களை திரட்டுகின்ற புரட்சிப் பாதையை மேற்கொண்டு வருகின்ற புதிய ஜனநாயகம் தோழர் மாவோ நினைவு தினத்தன்று தனது நடைமுறைகளை சுய பரிசோதனை செய்து பார்க்கையில் தனது அரசியல் வழிமுறையில் முன்னேறிக் கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் முன்வைக்கின்றது.

எந்த ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு அவசியமான கட்சித் திட்டம் ஊழியர் கொள்கை ஆகியவற்றில் சரியான கொள்கை; சரியான ஊழியர் நடைமுறை; மக்களுடன் இறுக்கமான உறவு; அரசியல் ரீதியிலாக ஐக்கியப்படும் செயல்பாடு ஆகியவை தான் மக்களுடன் நெருங்குவதற்கு உதவும் என்பதையும் புரிந்துகொண்டு தோழர் மாவோ முன் வைத்த வழிமுறைகளை முன்னெடுத்து செல்கிறது.

புரட்சிகர அமைப்புகளுடன் சிலர் தொடர்பு கொள்ள வந்தவுடன் அவர்களை வைத்துக் கொண்டு அமைப்பு கட்டியது போல பெருமை பீத்திக்  கொள்வதையோ அல்லது சாகச நடவடிக்கைகளில் இறங்கி அமைப்பை பிரபலப்படுத்துகின்ற குறுக்கு வழி முறைகளையோ ஒருபோதும் மேற்கொள்வதில்லை.

படிக்க:

 செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!♦ தோழர்.மாவோ பற்றி கொழுப்பெடுத்த பழ. கருப்பையாவின் அவதூறுகளுக்கு பதிலடி!

“உலகில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றும் எளிமையானதாக இருப்பதில்லை. அவற்றில் சிலவற்றை நாம் புரிந்து கொள்ளத் தவறுவதும் அல்லது சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொள்வதும் தவிர்க்க முடியாததுதான். தவறுகள் இழைக்காமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பதும் உண்மைதான். எனவே, மருத்துவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி – குறிப்பாக தலைவர்கள், தாம் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்லது தெளிவாகத் தெரியாத விடயங்கள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பார்களேயானால், அவர்கள் தமது மதிப்பை இழந்துவிட மாட்டார்கள். அப்படி இல்லாமல் போனால்தான், அவர்கள் தமது மதிப்பை நிச்சயமாக இழந்துவிடுவர். விவகாரங்களைக் கையாளுகையில், தலைவர் மாவோ எப்போதுமே மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். ஒருவர் தவறிழைத்து, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வாரானால், அவர் தமது மதிப்பை இழப்பதில்லை . இதற்கு மாறாக, தவறினைப் பரிசீலித்து, அதிலிருந்து பாடங்களைக் கற்பதற்கு மறுப்பாரானால், அவர் தமது மதிப்பை இழந்தே தீருவார். இன்னும் சொல்லப்போனால், அடிக்கடி பாரதூரமான அளவிலான இழப்புக்கு ஆளாவார்.

சுருக்கமாகச் சொன்னால், நேர்மையானவர்கள் தமது மதிப்பை இழப்பதில்லை. தாம் மதிப்பை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, நேர்மையின்றி ஒருவர் நடப்பாரேயானால், அவர் இழப்பது உறுதி. பிறரிடமிருந்து அறிவுரை கேட்பதால், ஒருவருடைய கௌரவம் குறைந்து விடுவதில்லை. அவருடைய வேலையை நன்றாகச் செய்வதன் மூலமே அவர் புகழை அடைகிறார். ஏதோ எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொண்டு மேதாவியாக நடிப்பதால், அவர் புகழை அடைய முடியாது. இதனால் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்காது. தவறுகளைச் செய்யாமலிருக்க முயற்சிப்பது மட்டுமே ஒருவர் புகழடைவற்கான ஒரே வழி. ஒருபோதும் மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கி ஒருவர் புகழடைய முடியாது.” என்று தவறான ஊழியர் கொள்கையை விமர்சிக்கின்றார் தோழர் சென் யுன்.

எமது அமைப்பில், 40 ஆண்டுகளுக்கு மேலாக பிளவுப்படாமல் அமைப்பை வழிநடத்திச் சென்றவர்கள் தன்னிடம் அதிகாரத்துவ போக்கு தோன்றிய போது நேர்மையாக, சுய விமர்சனக் கண்ணோட்டத்தில், திறந்த மனதுடன் அணிகளின் மத்தியில் முன்வைத்து சரி செய்து கொள்வதற்கு பதிலாக அரசியல் தற்குறிகள் மற்றும் அரசியலற்ற லும்பன் கும்பல் சிலரின் பேச்சைக் கேட்டு பலியாகி போனார்கள். அவ்வாறு பலியானவர்களின் இறப்புக்கு கூட அஞ்சலி செலுத்தக் கூடாது என்று கூச்சலிட்டனர் சிலர்.

அவ்வாறு பலி கொடுத்த கும்பலோ சிறிதும் அறிவு நாணயம் இன்றி செயல்பட்டு வருகின்றனர். சொந்த வாழ்க்கையில் மூழ்கி திளைத்தவர்கள், இறுதி காலத்தில் அமைப்பில் துரும்பையும் எடுத்துப் போடாதவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு ‘ நக்சல்பாரி புரட்சியாளர்கள்’  என்று நாமகரணம் சூட்டி நக்சல்பாரி அரசியலை இழிவு படுத்தி வருகின்றனர்.

குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றிய அந்த லும்பன் கும்பலோ தோழர் சென் யுன். விமர்சித்தபடி மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கி, தனது புகழை வளர்த்துக் கொள்ளப்படாத பாடுபடுகின்றனர்.

“கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல்” ஆயிரக்கணக்கான தோழர்களின் கூட்டு உழைப்பில் உருவாகிய அமைப்பு கட்டமைப்பை கைப்பற்றி வைத்துக் கொண்டு, அரசியல் தற்குறித்தனத்திலும், செயல் தந்திர அரசியல் வழியை கைவிட்டு, பகுதி பிரச்சனைகளை எடுப்பது; சாகச நடவடிக்கைகளை மேற்கொள்வது; காதல் திருமணங்களை பிரபலப்படுத்துவது என்று பொருளாதார வாத கண்ணோட்டத்தில் நடந்து கொள்கின்றனர்.

இத்தகைய போக்குகளுக்கு முடிவுகட்டி தோழர் மாவோ நினைவு தினத்தில் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துச் செல்வோம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here