வயநாடு சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், ஏழு பேரைக் காணவில்லை.
பலமுறை எச்சரித்தும், கட்டுமானப் பகுதிக்கு அருகே பெருமளவு மண் குவிந்திருந்ததை அகற்றத் தவறிய ஒப்பந்தக்காரர்களின் அலட்சியத்தாலேயே இந்தப் பேரழிவு ஏற்பட்டது என்று முதல்வர் வி.டி. சதீசன் கூறினார்.
கேரள மாநிலம் வயநாடு, மெப்பாடி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அருகிலுள்ள கல்லடியில், செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2026 அன்று ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் அனக்கோம்போயில்-மெப்பாடி சுரங்கப்பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் மீனாட்சி பாலம் அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிலச்சரிவில் உயிரிழந்த மூவரும் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடக்கும் உயிர் பலி!
வயநாடு சுரங்கப்பாதைச் சாலை என்பது கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள அனக்கம்போயிலையும், வயநாட்டில் உள்ள மேப்பாடியையும் இணைக்கும், கட்டுமானத்தில் உள்ள இரட்டைக் குழாய், 4-வழிச் சுரங்கப்பாதையாகும். மலைப்பாதைப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில், இது சுமார் 7 கி.மீ. நீளம் கொண்டது. இதன் கட்டுமானப் பணிகளை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மேற்பார்வையிடுகிறது மற்றும் திலீப் பில்ட்கான் லிமிடெட்நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது .
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டாம் கட்ட வனத்துறை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இருப்பினும், மேப்பாடி அருகே உள்ள கல்லாடி சுரங்கப்பாதை தளத்தில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. கடும் பருவமழையால் தூண்டப்பட்ட இந்த மண்சரிவில் பலர் உயிரிழந்ததுடன், தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதன் விளைவாக, இத்திட்டம் மீண்டும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
திட்ட காலவரிசை மற்றும் ஒப்புதல்கள் பிப்ரவரி 24, 2026: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) இரண்டாம் கட்ட (இறுதி) வன அனுமதியை வழங்கியது.
‘உயிரோடு புதைக்கும்’ கார்ப்பரேட்டுகள்!
திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம், சுரங்கப்பாதை பணியானது அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் நெறிமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது. தொழிலாளர்களைக் கொன்றும் கூட தவறை திருத்திக் கொள்ளவில்லை இந்த சுரங்க நிறுவனம்.
படிக்க: 270பேரை பலிக் கொண்ட வயநாடு நிலச்சரிவு! இயற்கை சீற்றம் மட்டுமே காரணமா?
கனமழை மற்றும் மண் சரிவு அபாயத்தை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக மண்ணை அகற்றும் படி எச்சரிக்கை கடிதம் தந்தும் கூட அதை இந்த கார்ப்பரேட் நிறுவனம் அலட்சியப்படுத்தி உள்ளது. அதன் விளைவாகவே தற்போது மீண்டும் மண் சரி ஏற்பட்டு உயிர்பலி நடந்துள்ளது. இதற்கும் ஒரு விளக்கத்தை சுரங்க நிறுவனம் தந்துள்ளது.
திலீப் பில்ட்கான் லிமிடெட் இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அவசரகால முகமைகளுடன் ஒத்துழைப்பதும் தங்களின் உடனடி முன்னுரிமை என்று கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) மற்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) ஆகியவற்றின் தரவுகளை மேற்கோள் காட்டி, வயநாடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 265 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்றும், இது இந்த பருவமழைக் காலத்தில் மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவுகளில் ஒன்றாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மழைக்கும், அதனால் ஏற்பட்ட மண் சரிவுக்கும், உயிர் பலிக்கும் தான் பொறுப்பில்லை என்பதாக விளக்கம் அளித்துள்ளது.
கேரள அமைச்சர்கள் இந்த நிலச்சரிவை “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” என்று குறிப்பிட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், நிறுவனம் தோண்டியெடுக்கப்பட்ட மண்ணை அகற்றத் தவறிவிட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஒருவேளை மண் சரிவின்போது சுரங்க பணி நடந்து கொண்டிருந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில் இருந்திருந்தால், நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவுகளுக்குச் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . அப்போது, கனமழையின் காரணமாக மேப்பாடி பகுதியில் பல சரிவுகள் ஏற்பட்டு, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயினர், மேலும் சூரல்மலை மற்றும் முண்டக்கை போன்ற கிராமங்களில் பரவலான அழிவு ஏற்பட்டது.
கேரள வரலாற்றிலேயே மிகவும் கொடிய நிலச்சரிவுகளில் ஒன்றாக அந்தப் பேரழிவு அமைந்தது. அது எத்தகைய பேரிடருக்குள்ளாகும் மண்டலம் என்பதை தெரிந்து இருந்தும் கூட லாப வெறி பிடித்த கார்ப்பரேட்டுகள் அலட்சியத்துடனே செயல்பட்டுள்ளனர்.
நாதியற்றவர்களாக புலம்பெயர் தொழிலாளர்கள்!
புலம் பெயர் தொழிலாளர்களாக பணியிடங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்பவர்களுக்கு உயிரிழப்பவரின் குடும்பத்தினருக்கு எவ்வித நிவாரணமும் முறையாக கிடைக்காது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர்களை ‘நரபலியிட்டு ‘ லாபங்களை குவிக்கிறார்கள். இவர்களுக்கு நீதி கேட்பதற்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உறவினர்களோ அருகில் இல்லை என்பது இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு சாதகமானதாக அமைகிறது.
விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, அரசின் எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, லாபவெறி பிடித்து பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை நிற்பதாகத்தான் பாசிச பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனத்தைக் குவித்து வரும் தற்போதைய கேரளா காங்கிரஸ் அரசாங்கமானது குற்றவாளிகளை தண்டிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சுரங்க காப்பீடுகளை பாதுகாக்கும் பாசிச பாஜகவின் செயல்பாட்டில் இருந்து மாறுபட்டு குற்றவாளிகளை கொலை குற்றத்தின் கீழ் சிறையில் அடைத்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தவும் வேண்டும்.
- இளமாறன்






