சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பொதுவுடமைக் கட்சி என்று அழைக்கப்படுகின்ற சிபிஐ கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் திருவாளர் மகேந்திரன் இணைந்தவுடன் சமூக வலைதளங்களிலும், பொதுப் பிரச்சாரத்திலும் சிவப்பு துண்டு போட்ட கம்யூனிஸ்ட் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது சரியா என்ற விமர்சனங்களும், அது அவரது தனிநபர் சுதந்திரம் அதை விமர்சிக்க முடியாது என்று அவரது கேடுகெட்ட நடவடிக்கைக்கு ஆதரவும் என இரு விதமான கருத்துக்களை உருவாக்கி வருகிறது.
“ஒரு மனிதன் கம்யூனிஸ்டாக மாறுவது ஒன்றும் அற்புதமான விஷயம் அல்ல. வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைவது தான் அற்புதமானது” என்றார் தோழா மாவோ. வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்வது என்பது பல தலைவலிகளை உருவாக்குகிறது என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கம்யூனிச இயக்கங்களில் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி செல்கின்றனர் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்.
பொதுவாகவே கம்யூனிச இயக்கங்கள் மேலிருந்து கட்டப்படுகிறது என்ற அடிப்படையில் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள குட்டி முதலாளித்துவ பிரிவினர் என்று அழைக்கப்படுகின்ற அறிவுத்துறையினர்தான் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முன்னிலை பங்களிப்பை செலுத்துகின்றனர்.
அதன்பிறகு இவர்கள் ஒரு குழுவாக தன்னை மாற்றிக்கொண்டு மக்களிடம் சென்று தனது கருத்துக்களை பிரச்சாரம் செய்து கம்யூனிச இயக்கம் தான் அனைத்திற்கும் தீர்வு என்ற வகையில் செயல்படுகின்றனர். இவ்வாறு பிரச்சாரக் கட்டத்தில் அவர்கள் இருக்கும் போது ஒரு சில பகுதிகளில் எதிரிகள் பிரச்சாரத்தை தடுக்கின்ற போது சில சிக்கல்களும், சில பகுதிகளில் அடக்குமுறைகளும் அவர்களுக்கு சில நெருக்கடிகளை உருவாக்குகிறது.
பிரச்சாரக் கட்டத்தில் இருந்து கிளர்ச்சி கட்டத்திற்கு மாறுகின்ற காலகட்டங்களில் தான் இதுவரை பேசி வந்த; எழுதி வந்த; பிரச்சாரம் செய்து வந்த கொள்கைகளையும் தமது திட்டங்களையும் அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகின்ற போது அது சம்பந்தப்பட்ட தோழருக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி விடுகிறது. போலீசின் பொய் வழக்கு, கைது, சிறை என்பது துவங்கி உயிர் கொலை வரை அது பல்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைகிறது.
கம்யூனிச இயக்கங்களின் கொள்கையினாலும், தனது வாழ்க்கைக்கு விடிவெள்ளியை கம்யூனிஸ்டுகள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையிலும் இதில் இணைக்கின்ற உழைப்பாளி மக்கள் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மரணம் அடைகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே தாங்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு மேலான ஒரு வாழ்க்கை கம்யூனிச இயக்கத்தில் இருந்து வெளியேறி சென்றாலும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. அது மட்டுமல்ல. உழைப்பாளிகளின் நேர்மை என்ற வகையில் எடுத்துக்கொண்ட கொள்கையை, தான் கடைபிடிக்க விரும்புகின்ற கொள்கையை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கின்ற நேர்மை அவர்களிடம் இருக்கின்றது.
படிக்க:
♦ ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினனுக்கு இருக்க வேண்டிய எட்டு முக்கிய அம்சங்கள் | லியூ ஷாவோகி
♦ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் நவம்பர் புரட்சியின் அனுபவமும்.
இன்றும் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பல நூற்றுக்கணக்கான உழைப்பாளி குடும்பங்கள் சிபிஐ கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பதும், அந்தக் கட்சியைச் சார்ந்த தோழர்கள் அந்த மாவட்டங்களில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தேர்தலில் வெற்றி பெறுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
ஆனால், கம்யூனிச கொள்கைகள்தான் சரியானது என்று கம்யூனிச இயக்கங்களை தோற்றுவிக்கவும், அதற்காக அமைப்புகளை உருவாக்கவும்; அதனை நிலைநிறுத்தவும் போராடுகின்ற குட்டி முதலாளித்துவ வர்க்க பிரிவுகளிலிருந்து வருபவர்களுக்கு, தான் எதிர்கொள்கின்ற சிக்கல்களை எதிர் கொள்ள முடியாமல், அது கட்சிக்கு உள்ளேயே ஏற்பட்டாலும் சரி, கட்சிக்கு வெளியிலிருந்து ஏற்பட்டாலும் சரி உடனடியாக அதிலிருந்து வெளியேறி தனக்கு உவப்பான வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள். விதிவிலக்காக சில உழைப்பாளி மக்களும் இதில் இருக்கிறார்கள். ஆனால் நெருக்கடிகளையும், தோல்விகளையும் கண்டு ஊசலாடுகின்ற பிரிவாக மேற்கண்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர்தான் முன்னிலை வகிக்கின்றனர்.
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதையாக எங்கே இருந்தாலும் நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்வது தடைபட்டு விடப் போவதில்லை என்பதில் துவங்கி பாசிச எதிர்ப்பு என்பதெல்லாம் கம்யூனிச இயக்கத்தில் இருந்து கொண்டு தான் செய்ய வேண்டுமா? எங்கே இருந்தாலும் பாசிசத்தை எதிர்த்து போராட முடியும் என்பதில் சென்று முடிகின்றனர்.
பொதுவாக பலரும் பள்ளி, கல்லூரி பருவத்தில் பொதுவுடைமை சித்தாந்தங்களால் ஈர்க்கப்படுவது மட்டுமின்றி, அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணத்துடன் இயக்கங்களுக்கு வருகின்ற பலர், சில ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கை உத்தரவாதமான நிலைக்கு சென்ற பின்னர் அதற்கு பொருத்தமான இயக்கங்களுக்கோ அல்லது கட்சிகளுக்கு சென்று சரணடைந்து விடுகின்றனர்.
படிக்க:
♦ நூல் அறிமுகம்: சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்
♦ கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்ட்கள் | SUBBARAO PANIGRAHI
இதனால்தான் சமூக வலைதளங்களில் பலரும் இன்று பல இயக்கங்களிலும், கட்சிகளிலும் முன்னணியாக இருப்பவர்கள் ஆரம்பத்தில் கம்யூனிச இயக்கங்களில் இருந்தவர்கள் தான் தெரியுமா என்று கேலி செய்து நேர்மையாக வாழும் கம்யூனிஸ்டுகளை மடக்கப் பார்க்கிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்டாக வாழ்க்கையை தொடர முடியாமல் போனவர்களில் ஆந்திராவில் மக்கள் யுத்தக் குழுவைக்கு சேர்ந்த கத்தர் என்று பெயரிலேயே புரட்சி என்கிற பெயரை வைத்துக் கொண்ட தோழர் இராணுவ, அரசு பயங்கரவாத அடக்குமுறைகளுக்கும், போலீசு தேடுதல் வேட்டையாடுகளுக்கும் அஞ்சாமல் நின்ற போதிலும் ஒரு கட்டத்திற்கு பிறகு மக்கள் யுத்த குழுவில் இருந்து விலகி தலித்திய அமைப்புகளுக்கும், பின்னர் இறுதியில் காங்கிரஸ் இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். இது போன்ற பலரையும் நாம் குறிப்பிட முடியும்.
எனவே, திருவாளர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் என்பதற்கு தனிப்பட்ட முறையில் அவருக்கு சில சிக்கல்கள், விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்பதையும் தாண்டி இது ஒரு வர்க்கத்தின் சிக்கல் என்றே நாம் அணுக வேண்டியுள்ளது.
தனக்கு இழப்பதற்கு ஏதும் இல்லாத உழைப்பாளி வர்க்கத்திலிருந்து இவ்வாறு அணி மாறுவது; கட்சி மாறுவது என்பது மிகக் குறைந்த அளவில் உள்ள போதிலும் குட்டி முதலாளித்துவ பிரிவிலிருந்து வருபவர்களிடம் இத்தகைய போக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கத்தின் மீது திராவிட இயக்கங்கள் அதிகாரத்தை வைத்துக்கொண்டு நட்த்திய கொடூரமான தேடுதல் வேட்டைகள்; அடக்குமுறைகள்; ஆதிக்கம் செலுத்தியதன் காரணத்தினால் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் இந்தக் குட்டிமுதலாளித்துவ பிரிவினர்கள். இன்று அத்தகையவர்கள் தான் முகநூல் பக்கங்களிலும், சமூக வலைதளங்களிலும், கம்யூனிசத்திற்கு ‘ஆதரவாக’ கம்பு சுத்துகிறார்கள்.
கட்சியில் செயல்படாமலேயே தான் ஒரு கம்யூனிஸ்டாக நீடிக்க முடியும் என்ற அப்பட்டமான திரிவுவாதக் கருத்தை; இரண்டாம் அகிலத்தில் நிராகரிக்கப்பட்ட கருத்தை முன்வைத்து இவர்கள் தனது தோலையும், தனது அடையாளத்தையும், தனது வர்க்க வாழ்க்கையையும் காத்துக் கொள்கிறார்கள்.
“கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கின்றோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்கு புறம்பானது அல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பையும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான் மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள்; வேலையில்லா திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியும், நிறைவும், ஆரோக்கியமும், சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக எங்கள் சுக போகங்களை தியாகம் செய்ய நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை” என்கிறார் ஜூலியஸ் பூசிக்.
இதற்கு நேர் மாறாக எங்களது சொந்த வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிப்பதற்காக கம்யூனிச இயக்கங்கள் முன்வைக்கின்ற கட்டுப்பாடுகள்; துன்பகரமான விமர்சனங்கள் ஆகியவற்றை நாங்கள் வெறுக்கிறோம் என்கிறார்கள் மேற்கண்ட குட்டி முதலாளித்துவ தாராள வாதிகள்.
“எதிர்காலத்தில் மனிதகுலம் மாண்புடன் இன்புற்று வாழும் பொருட்டு கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரையும் தியாகம் செய்கிறார்கள். நாளை மலரும் பொது உலகை காணும் வாய்ப்பு இல்லாதிருந்தும் உவப்புடன் தங்கள் இன்னுயிரை அர்ப்பணிக்கிறார்கள்” என்கிறார் பூசிக்.
ஆனால் மகேந்திரன்களோ எதிர்கால இன்பம் என்பது நாங்கள் இறந்த பிறகு கிடைக்கின்ற கற்பனை வாழ்க்கை. ஆனால் இப்போதே அனைத்தையும் நாங்கள் அனுபவிப்பதற்கு கொள்கையை துறந்து விட்டு இந்த உலகின் அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா என்று கேட்கிறார்கள். அதனையும் சிவப்புத் துண்டை போட்டுக்கொண்டு செய்வதற்கு அனுமதி கேட்கிறார்கள்.
‘தேவையிலிருந்து தான் அனைத்தையும் தீர்மானிக்கிறோம்’ என்கிறார்கள் இத்தகைய குட்டி முதலாளித்துவ அற்பவாதிகள். தேவை மகேந்திரனுக்கு ஒரு வகையில் இருக்கின்றது கம்யூனிச அமைப்பில் இருந்து கொண்டே ரகசியமாக தனது ஆசைகளை தேவை என்று முன் வைப்பதற்கும் நாக்கு நீள்கிறது.
கம்யூனிசத்தை வைத்துக் கொண்டு பிழைப்புவாதம் நடத்துவது இந்த காலகட்டத்தில் ஒரு புதிய போக்காக மாறியுள்ளது. கம்யூனிசம் என்று பொதுவாக ஏற்றுக்கொண்டு அதனை தங்களது வாழ்க்கையில் எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் இன்னும் சுருக்கமாக சொல்லப் போனால் “தத்துவவாதிகள் உலகை வெறும் விளக்கமளிப்பவர்களாக மட்டுமில்லாமல், அதை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்” எனறு காரல் மார்க்ஸ் முன் வைத்ததற்கு எதிராக சிந்திக்கிறார்கள்.
ஒரு வர்க்கம் என்ற முறையில் குட்டி முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவிற்கு கம்யூனிசத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக பேசுகின்றதோ, அதே அளவிற்கு கம்யூனிச விரோதக் பண்புகளையும், கம்யூனிச கட்டுப்பாட்டுக்கு எதிரான முதலாளித்துவ கேடுகெட்ட தாராளவாத ஜனநாயக வழிமுறைகளையும் தான் கடைபிடிப்பது மட்டுமின்றி பிறர்க்கும் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றது.
படிக்க:
♦ கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – தோழர் ரத்தினசபாபதி
♦ கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் – களப்பால் குப்பு!
இத்தகைய பிழைப்புவாதிகள் தான் சமூக வலைதளங்களில் செங்கோடியை பின்னணியில் வைத்துக் கொண்டும், மார்க்சிய ஆசான்களை ப்ரொபைல் பிக்சர்களாக வைத்துக் கொண்டும் கம்யூனிசத்திற்கு எதிராக முதலாளித்துவ தாராளவாதத்தையும், அராஜகவாதத்தையும் பரப்புகிறார்கள். கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் நின்று களமாடுகின்ற கம்யூனிஸ்டுகள் புகழ்பெறுவதை விட கட்சிக் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி தனிநபர் சுதந்திரம்; தான் நினைத்ததை அமல்படுத்துகின்ற உரிமைகளை ஜனநாயகம் என்ற பெயரில் அபத்தமாக கடைபிடிக்கும் சுதந்திரத்தை கோருகிறார்கள். அவர்களே புகழைப் பெறுவதில் முன்னிலையிலும் நிற்கிறார்கள்.
கம்யூனிச இயக்கங்களின் செயல்பாடுகள் மீது தாங்கள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும், தாங்கள் இவற்றிற்கெல்லாம் மேலே மார்க்சிய ஆசான்களின் வழித்தோன்றல்கள் என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் முன்வைக்கின்ற அபத்தக் கருத்துகளும், மார்க்சிய நூல்களில் இருந்து மேற்கோள்களை எடுத்து போட்டு உருட்டுகின்ற உருட்டுகளும் எழுதி மாளாது.
முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியிலிருந்து உருவாக்கப்பட்ட பண்டங்களை விற்பனை செய்து கொழுப்பதை போல, கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து உயிர் தியாகம் புரிகின்ற வரை நேர்மையாக செயல்படுகின்ற பலரது உழைப்பு உருவாக்கும் மக்கள் மத்தியிலான மதிப்பானது இத்தகைய குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளின் பிழைப்புக்கு வாய்ப்பளிக்கிறது.
தற்போது வெளியேறியுள்ள மகேந்திரன்கள் மட்டுமல்ல. இன்னும் பலரும் கம்யூனிசப் போர்வையில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரச பயங்கரவாத அடக்குமுறைகள் அதிகரிக்கும் போதும், பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற போதும், கம்யூனிச முகமூடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ அற்பவாத, கம்யூனிச பிழைப்புவாதிகள் அம்பலமாவார்கள்.
வேறு வழி இல்லை அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்.
- ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






