திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
பெரியபாளையம் அருகில் உள்ளது கன்னிகைப்பேர் கிராமம். இப்பகுதியை சுற்றி பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. அதே பகுதியில் St. Peter & Paul Sea Food Exports Pvt. Ltd என்ற இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று (21, ஜுன் 2026) காலை 11 மணியளவில் இந்த ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு இதுவரை (மாலை 6 மணி) 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனியாரால் இயக்கப்படும் இந்த உணவு பதப்படுத்தும் ஆலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைப்பார்த்ததாகவும் இரவு பணி முடித்து தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அம்மோனியா வாயு கசிந்ததன் காரணமாக மூக்கு மற்றும் வாயில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. சில தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர்.
இதன் பின்பே அவர்கள் அருகிலுள்ள மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலில் 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் மருத்துவமனைக்கு வரும்பொழுதே உயிரிழந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 80 பேரில் சிலர் அருகிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையிலும், உயர் சிகிச்சைக்காக சென்னை நகரத்திலுள்ள ஸ்டேன்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பலர் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் மா.சி.சுதேஷ்குமார் அப்பகுதி மக்களையும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விபத்து நடந்தது முதல் களத்தில் நின்று வரும் தோழர் சுதேஷ்குமார் அவர்களிடம் பேசுகையில், “இந்த ஆலை 20 வருடங்களாக இயங்கி வரும் நிலையில், ஆலையில் இருந்து வெளிவரும் மோசமான துர்நாற்றத்தை சகித்துக் கொள்ளாமல் ஆலையை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனப் போராடிவருகிறார்கள். ஆனால் அரசோ அதிகாரிகளோ மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் ஆலைமுதலாளிக்கு சாதகமாக இருந்ததன் விளைவு, இன்று 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்த படுகொலைக்கு யார் காரணம்
இதுபோன்ற ஆலைகளில் விஷவாயு கசிவது முதல் முறையல்ல. கடந்த 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா நைட்ரேட் வாயு கசிவால், 50 பெண்கள் உட்பட 56 தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்த பெண்களே.
உணவு பதப்படுத்தும் ஆலைகளில் பெண்களை அதிகமாக உற்பத்தியில் ஈடுபடுத்துகின்றனர். குறைவான கூலிக்கு உழைப்பு சுரண்டலை சுரண்டலை முதலாளிகள் தீவிரபடுத்துகின்றனர். இன்று நடந்த விபத்திலும் இதே நிலைதான்.
இதுபோன்ற அம்மோனியா பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் Major Accident Hazard (MAH) வகையில் வரலாம். இவற்றை அதிக கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அரசு அதிகாரிகள் முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்காணிக்க தவறுகிறார்கள்.
படிக்க:
♦ போபால் விஷவாயு துயரத்தின் 40வது ஆண்டு: இன்றும் நீடிக்கும் கார்ப்பரேட் பாசிசத்தின் கொடூரம்!
♦ போபால் விஷவாயு புதிய ஜனநாயகம் சிறப்பிதழ் மீள் பதிவு
ஆலை நிர்வாகம் தினசரி, குளிர்பதன அமைப்பின் அழுத்தம்(Pressure), வால்வுகள், கசிவு அறிகுறிகள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு வால்வுகள், குழாய்கள், சென்சார்கள் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அம்மோனியா கசிவு கண்டறியும் கருவிகள் (Gas Detectors) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை சோதிக்க வேண்டும். இதையெல்லாம் ஆலை முதலாளிகள் நிறுவனத்தின் உற்பத்தி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக லாபத்தை அதிகரிக்க இதனை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு – தொழிற்சாலை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்டுகின்றன. இறுதியாக இவர்களின் லாபவெறிக்கு அநியாயமாக அப்பாவித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களை நம்பியிருக்கும் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துள்ளது.
இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சொற்பத்தொகையாக ரூ.2 லட்சம் அறிவித்துள்ளது. இறந்தவர்களின் உடல் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. அதாவது உழைக்கும் தொழிலாளர்களின் உயிரின் விலை வெறும் 2 லட்சம் தானா? அவ்வளவுதான் தொழிலாளர்களின் மதிப்பா? வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்பதால் ஏமாற்ற திட்டமிடுகிறதா தமிழ்நாடு அரசு?
இந்த படுகொலைக்கு காரணமான ஆலை நிர்வாகியை கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுவரை 07 பேர் கொல்லப்பட்டதற்கு இந்த அரசு என்ன தண்டனை அறிவிக்கப் போகிறது. போபால் விஷவாயு கசியில் 20,000 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா நீதிமன்றம் டௌ கெமிக்கல்ஸ் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளியான வாரன் ஆண்டர்சனுக்கு 1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த ‘பெரிய’ தண்டனையை அனுபவிப்பதற்கு முன்பே அவன் வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டான். அந்த அளவிற்கு இந்தியாவின் சட்டமும், நீதித்துறையும் இயங்குகிறது. இப்படியன நிலையில் கன்னிகைப்பேரின் கொலைகார முதலாளிகளுக்கு என்ன தண்டனையை அரசு வழங்கப் போகிறது?
இந்த பிரச்சினையில் முதல் குற்றவாளியான ஆலை முதலாளியின் சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதனை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவும் வேண்டும். இரண்டாம் நிலை குற்றவாளியாக பேக்டரி இன்ஸ்பெக்டர்களாக இருந்துள்ள அரசு அதிகாரிகள் வருவதால் அவர்களின் சொத்துக்களும் பரிமுதல் செய்யப்பட வேண்டும்.
பஞ்சாயத்து எப்படி அனுமதித்தது? ஆலை நிர்வாகம் அரசியல்வாதிகளுக்கு எதை தந்து சரிகட்டியது? அடுத்து பல ஆண்டுகளாக அந்நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் ஆலை அமைப்பதற்கு அனுமதியளித்த கிராம நிர்வாகிகளையும் அவர்கள் நிறுவனத்திடம் பெற்ற சலுகைகளையும் விசாரணை செய்து கைப்பற்ற வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் வெறும் சொற்பத் தொகையை நிவாரணமாக கொடுத்து பிரச்சினை ஊத்தி மூட முயற்சித்தால், விஜயின் அரசும் கடந்த ஆட்சியாளர்களின் மக்கள்விரோத பாதையில் சென்றால், இதுபோன்ற விபத்துக்களுக்கு அரசே அடித்தளமிடுவதாகவே அமையும். தன்னை தூயசக்தியாக அறிவித்துக்கொள்ளும் தவெக அரசு முதலாளிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்ப்போம். போராடாமல் நீதி கிடைக்காது. எனவே அதுவரை நாம் காத்திருக்கவும் தேவையில்லை.
- நந்தன்






