கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. அக்குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. பாலியல் குற்றவாளிகளால் கொல்லப்பட்டுள்ளது. இன்று(15.06.2026) ஒரு நாள் மட்டும் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை, திருவள்ளுவரில் ஏழு வயது சிறுமி, தாம்பரத்தில் பத்து வயது சிறுமி, சென்னையில் 12 வயது சிறுமி, பூந்தமல்லையில் 7வது வயது சிறுமி என்ன ஒரே நாளில் ஐந்து சிறுமிகள் மீது ஆணாதிக்க ஆணாதிக்க காமக் கொடூரர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
சமூகத்தின் பார்வை எப்படி உள்ளது
டெல்லியில் நிர்பயா கொல்லப்பட்ட பொழுது இரவில் 10 மணிக்கு அவளுக்கு வெளியில் என்ன வேலை, என்ற கேவலமான கேள்வியை பரவலாக்கியது ஆணாதிக்கவாதிகளால் வழி நடத்தப்படும் பொதுச் சமூகம். அந்த கேள்வி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்திலும் தொடர்கிறது
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பின்மையை மையப்படுத்தி பிரச்சாரங்களை சமூக வலைதளங்களில் முடக்கிவிட்டதன் மூலமே அதிகமான பெண்களின் ஓட்டுக்களை கவர்ந்தது விஜயின் தமிழக வெற்றிக்கழகம். ஆனால், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முன்பை விட அதிகமான, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.தவெக கட்சியை சார்ந்த அயோக்கியர்களை குற்றத்தை செய்வதும் அம்பலமாகியது.
சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய முதல்வர் விஜய் “தனிமனித ஒழுக்கம் அவசியம்” என பேசினார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தை உருவாக்கியது. திமுக ஆட்சியில் ஆட்சியாளர்களை குறை சொன்ன விஜய், இப்போது தனி மனித ஒழுக்கம் அவசியம் எனப் பேசி தப்பிக்க பார்க்கிறார் என்றார்கள் அது உண்மைதான். சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு தனி நபர்களை குற்றவாளியாக்கி தப்பிக்க பார்க்கிறது அரசு.
“பெண்கள் ஒழுக்கமான ஆடை அணியாததுதான் இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு காரணம்.”
– தவெகவினர் குற்றச்சாட்டு pic.twitter.com/jdqzIxmOf7
— பூதம் (@angry_birdu) June 15, 2026
இன்று சமூக வலைதளத்தில் தவெகவை சார்ந்த பெண் பேசிய காணொளி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேசியவர், பெண்கள் உடைகளை நாகரீகமாக அணிய வேண்டும், (அதாவது துப்பட்டா போட வேண்டுமாம்) உடலை முழுவதுமாக மூடிய ஆடை அணிய வேண்டுமாம். அதனால் தான் ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள் என பெண்களை குற்றவாளியாக்குகிறார். அதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும் முதல்வர் விஜய் அண்ணாவும் சிங்கப்பெண் படையும் பார்க்க முடியுமா? என விஜய் பேசிய அதே தனிமனித ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார் அல்லது பேச வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று வயதில் இருந்து பத்து வயது வரையிலான குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு ஆடையை காரணம் கூற முடியுமா? அப்படி கூறுபவர்கள் வக்கிர மனநிலையில் உள்ளவர்கள் அல்லவா! மூன்று வயது குழந்தை மீதான பாலியல் வன்முறை செய்தியை பார்க்கும் போது மனம் உடைகிறது, கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது. ஆனால் இவர்களோ அக்குழந்தையை குற்றவாளி ஆக்க பார்க்கிறார்கள். விவரம் அறியா குழந்தையின் உடையிலோ, நடத்தையிலோ என்ன தவறு இருக்க முடியும்
சட்டம் கடுமையானால் குற்றம் குறையுமா?
இது எப்போதும் இருக்கும் பொது கருத்து. பெண்களை குற்றவாளியாக்கும் கருத்தை உடைக்கும் போது இக்கருத்து பிறக்கிறது. இவ்விருகருத்தும் அரசாலும் ஆளும்வர்க்கத்தாலும் உருவாக்கப்படுகிறது. சட்டங்கள் அவசியம். கடுமையான தண்டனைகளும் தேவை. ஆனால், சட்டம் மட்டும் இருந்தால் இந்த குற்றங்கள் முற்றிலும் மறைந்து விடாது. காரணம் இது சட்டத்தை மீறும் பிரச்சனை மட்டுமல்ல. சமூக மனநிலையின் பிரச்சனையாகும். இதற்கு நிலவுகின்ற உற்பத்தி முறையையும், இந்தியாவில் பெண்களை பாலியல் பண்டமாக, போக பொருளாக பார்க்கும் கேடான பார்ப்பனிய பண்பாடும் முக்கிய காரணமாக உள்ளது. மறுபுறம் பெண்களை கவர்ச்சி பண்டமாக்கி அதாவது ஜட்டி விளம்பரம் முதல் லுங்கி விளம்பரம் வரை அவர்களை பயன்படுத்தி தனது பொருளை விற்க பயன்படுத்தும் கேவலமான வியாபார யுத்தி, ஒருபுறம் நிலபிரபுத்துப பண்பாடும். மறுபுறம் முதலாளித்துவ கலாச்சாரமும் இணைந்து இந்திய சமூகத்தை சீரழிக்கிறது.
இப்பிரச்சனை திமுக, அதிமுக ஆட்சியில் தொடங்கி, தற்போதைய தவெக ரீல்ஸ் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை சினிமா மூலம் வளர்த்து விட்டதில் நடிகர் விஜய்க்கு பெரிய பங்கு உள்ளது. தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் நடிகைகளின் ஆபாச குத்துப்பாட்டு, அதிக கவர்ச்சியான காட்சிகள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் மூலம் தனது ரசிகர்களை கிளுகிளுப்படைய செய்த நபர் தான் நடிகரும் இன்றைய முதல்வருமான ஜோசப் விஜய். இவரா தமிழக பெண்களின் பாதுகாவலராக இருக்கப் போகிறார்? ஒருவகையில் இவரும் குற்றவாளி தான்.
படிக்க:
♦ விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒழிக்கப்படுவது எப்போது? எங்கிருந்து தொடங்குவது?
பெண்களை பாலியல் வல்லுறவு செய்பவர்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் அனைவரும் ஒரு வகையில் குற்றவாளிகள் தான். மகாபாரதத்தில் திரௌபதி துயிலுரிய படும்போது கிருஷ்ணன் புடவையை கொடுத்து தன்னை பெண்களின் பாதுகாவலராக ஹீரோவாக காட்டிக்கொண்டார். ஆனால் புடவையை உருவிய துச்சாதனனை தனது சக்தியை பயன்படுத்தி ஏன் தண்டிக்கவில்லை என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. அதுபோல தான் தற்போதைய தமிழக முதல்வரும் உள்ளார். தன்னை பெண்களின் பாதுகாவலராக ப்ரமோட் செய்து ரீல்ஸ் போடுவதோடு நிறுத்திக் கொள்கிறார். ஆனால் நமக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது அல்லவா. வேடிக்கை பார்க்காமல், பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் ஆக்காமல், ஆண்-பெண் என்ற வேறுபாடற்ற சமூகமாக மாற்ற அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசை உருவாக்கப் போராடுவோம்.
- சுவாதி






