ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஹார்மோஸ் நீரிணை வழியாக வரும் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை காரணம் காட்டி பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு மே பத்தாம் தேதி அன்று (அதாவது போர் துவங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு) அறிவுரை கூறிவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் திருவாளர் மோடி.
கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இப்படிப்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு உலகின் பல நாடுகளுக்கு ஏற்படப் போகிறது என்று, தாக்குதல் நடத்தப்பட்ட அந்தப் தேதியில் இருந்தே, பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.
ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், போர் வெடித்த பிறகு, மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மே 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (70 நாட்களில்) இந்தியாவின் 12 மாநிலங்களில் உள்ள 53 நகரங்களுக்கு சென்று 81 பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் பெரும்பாலானவை (53 நிகழ்ச்சிகள்) தேர்தல் நடந்த தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரியில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் மோடி 25 சாலை வலங்களை (road shows) நடத்தியுள்ளார். மோடியின் சாலை வலத்தின் போது மோடியின் காருக்கு பின்னால் பல வாகனங்கள் வரிசை கட்டி சென்றுள்ளன.
குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைவலம் சென்றுள்ளார் திருவாளர் மோடி. மேலும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜாக்ராம் என்ற இன்னொரு நகரில் 11 வாகனங்கள் பின் தொடர சாலைவலம் சென்றுள்ளார்.
அதேபோல மோடியின் சொந்தமாநிலமான குஜராத்தில் (இந்த 70 நாட்களில்) 10 நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் நான்கு இடங்களில் சாலை வலமும் சென்றுள்ளார். சோமநாதபுரம் கோயில் நிகழ்ச்சிக்காக சென்ற மோடியின் முன்னிலையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் கோவில் வளாகத்தில் பூக்களை தூவி உள்ளனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் மோடி எப்படி ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மோடியின் இந்த அறிவுரை கூட போர் தொடங்கிய உடனே, அதாவது, இப்படிப்பட்ட நெருக்கடி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வர உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்க தொடங்கிய உடனே வரவில்லை.
ஆனால் பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் மார்ச் மாதத்திலேயே தங்களது நாட்டு மக்களுக்கு எதிர்வரவுள்ள எரிபொருள் பற்றாக்குறையை – நெருக்கடியை குறித்து எச்சரிக்கையை விடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாடு தேசிய எரிசக்தி அவசர நிலையை அறிவித்தது. அதேபோல தென்கொரியா எரிசக்தி சேமிப்பு பிரச்சாரத்தை தொடங்கியதுடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு தனது மக்களளை கேட்டுக்கொண்டது. அந்த நாட்டு அரசுகள் தங்கள் மக்களிடம் தங்களது நாட்டில் “எரிசக்தி தட்டுப்பாடு வருவதற்கான வாய்ப்பே இல்லை” என்று மோடி வகையறாக்களைப் போல பொய்யைக் கூறிக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் மோடி – அமித்சா வகையறாக்கள் ஐந்து மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு “இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு வராது” என்று பாஜக தொடர்ந்து பொய்யை பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தேர்தல் முடிந்த உடனே திருவாளர் மோடி நாட்டில் எரிசக்தி பற்றாக்குறை உள்ளதாகவும் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அனைவரும் (பெட்ரோல் டீசல் எரிவாயு போன்ற) எரிசக்தியை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார்.
படிக்க:
♦ பாசிச மோடியின் அமெரிக்க விசிட்! அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
♦ மோடியின் உலகம் சுற்றலும்; எடப்பாடி யின் தமிழகச் சுற்றலும்!
பாசிச பாஜக அத்துடன் நிற்கவில்லை. தேர்தல் முடிந்த உடனே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பாஜக அரசு ஏற்றிவிட்டது. (மோடியின் சம்மதம் இல்லாமல் பெட்ரோல் டீசல் விலைகள் ஏற்றப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இங்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் காரணமாக அனைத்து பொருட்களின் விலைவாசி ஏறுகிறது. இதன் காரணமாக மக்கள் துயரத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். வணிக சமையல் எரிவாயுவின் விலை திடீரென்று ஆயிரக்கணக்கில் உயர்ந்தது காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட துயரமான நேரத்தில் தான் நாட்டு மக்களுக்கு சிக்கனத்தை கூறிவிட்டு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் ஊர் ஊராக சென்று பல கார்கள் பின் தொடர மோடி சாலைவலம் நடத்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ராணுவ விமானங்களையும் கொண்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டும் ராணுவ ஹெலிகாப்டரைக் முலம் பூக்களைத் தூவிக் கொண்டும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்.
இதை என்னவென்று கூறுவது? “ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்க நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தைதைப்போல” எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் துயரத்தில் வருந்தி கொண்டிருக்க பிரதமர் மோடியோ மக்கள் வரிப்பணத்தில் குதூகலமாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். அல்லது, மக்களின் வாழ்க்கை கருகிக் கொண்டிருக்கும் பொழுதும் மோடி குதூகலமாக கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறலாம்.
பாசிஸ்டுகளால் தான் இப்படி இருக்க முடியும். பாசிச பாஜகவின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். எதிர்வரும் காலங்களிலும் இப்படிப்பட்ட துயரங்களை நாட்டு மக்கள் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமானால் பாஜகவின் பாசிச ஆட்சியை தூக்கி எறிவதற்கு மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். அதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி அமைக்க வேண்டும்.
– குமரன்






