
வாக்களிப்பது மட்டுமே நமது ஜனநாயக கடமை என்பதுபோல் ஊடகங்களும் தேர்தல் போட்டியிடக் கூடிய கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், முக்கியமான கடமை தேர்தலுக்கு வெளியே தான் உள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி 2026 சட்ட மன்றத் தேர்தல் அறிவிப்பு தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அவர்களது வேலை அத்தோடு முடிந்து விட்டது. இன்னும் 4 வருடங்களுக்கு தமிழ்நாட்டின் மக்கள் பிரச்சினைகள் குறித்து யாரும் பேசப் போவதில்லை.
ஆட்சிக்கு வரும் கட்சி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே அது சாதனையாக பேசப்படும். அதைத் தாண்டி மறுகாலனியாக்க கொள்கையின் விளைவால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வை யார் ஆட்சியமைத்தாலும் தரப்போவதில்லை. ஏனென்றால் இது குறித்து தேர்தல் அறிக்கையிலோ அல்லது பிரச்சாரத்திலோ கூட அவர்கள் பேசப் போவதில்லை.
நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் இதுவரை 85.13 சதவீதம் வாக்குபதிவு நடந்திருப்பதாக செய்திகளில் பார்க்க முடிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போல் இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. 2021 தேர்தலில் 4 கோடியே 62 லட்சம் பேர் வாக்களித்திருந்த நிலையில் 2026 தேர்தலில் தோராயமாக 4 கோடியே 84 லட்சம் பேர் வாக்களித்துள்ளார்கள். வாக்கு சதவீதமும் அதிகரித்திருப்பது தேர்தல் முறையில் மக்களுக்கு உள்ள அதீத நம்பிக்கையை காட்டுகிறது.
அதே நேரம் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் இந்த முதலாளித்துவ பொருளாதார முறையால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாகவே அறிவிப்புகள் அமைந்தன. மாறாக, ஏன் மக்கள் இந்த நிலையில் உள்ளார்கள் என்பதை தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த கட்சியும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜக, தவெக என அனைவரும் வைத்த குற்றச்சாட்டு பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு இது திமுகவுக்கு எதிராக நன்றாகவே வேலை செய்தது. கடந்த அதிமுக ஆட்சியிலும் பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு பிரச்சினை மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு எதிரான அலையை உருவாக்கியது. ஆனால் இப்பிரச்சினைகள் ஆட்சி மாறினால் சரியாகக் கூடியது அல்ல.
தமிழ்நாட்டைப் போலவே இந்தியா முழுவதும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகத் தான் உள்ளது. தமிழ்நாட்டை விட மோசமாக பாஜக ஆளக்கூடிய மாநிலங்கள் உள்ளது. ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதாக கூறுகிறார்கள். நடிகர் விஜய்யும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து தான் தேர்தலை சந்தித்தார், திமுகவையும் விமர்சித்தார். ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? ஆட்சியாளர்கள் தானே மாறுகிறார்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், காவல்துறை என யாரையும் நாம் தேர்ந்தெடுக்க முடியாதே?, எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் மாறப்போவதில்லையே? பிறகு எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்?
திமுக ஆட்சிக் காலத்தில் பிரதான பிரச்சினையாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், பரந்தூர் விவசாயிகள் போராட்டம் என ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலுக்கு எதிராகவும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு எந்த கட்சியாவது தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டதா என்றால், இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.
இப்பிரச்சினைகளை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்காது, தீர்க்க முடியாது. வேறு வழி உண்டென்றால் போராட்டம் மட்டுமே ஒரே வழி. இது தேர்தலுக்கு வெளியே உள்ள வழி. ஆட்சியாளர்கள் எப்போதுமே மக்களுக்கு சாதகமான முடிவை எடுக்க மாட்டார்கள். அதாவது முதலாளித்துவத்திற்கு எதிரான முடிவை அமல்படுத்த மாட்டார்கள். அதனால் தூய்மைப் பணியாளர்களின் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமும், சாம்சங் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் காவல்துறை என்ற அடக்குமுறை எந்திரத்தை கொண்டு ஒடுக்கப்பட்டது.
அதே நேரம் தொழிலாளி வர்க்கத்தின் உறுதியான போராட்டத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற முடிந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலை தான்.
படிக்க:
♦ தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறு சீரமைப்புச் சட்டம்.
♦ தொழிலாளர்களை ஊழல் படுத்தும் கார்ப்பரேட் கிருமிகள்!
ஆகையால் தேர்தல் என்பது யார் அதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதற்கான நடைமுறை மட்டுமேயொழிய மக்களுக்கான உண்மையான நலத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அல்ல. அதே நேரம் தேர்தலை ஒரேயடியாக புறக்கணித்து விடவும் முடியாது. அது தமிழ்நாட்டிற்குள் மதவாத சக்திகள் ஆழமாக காலூன்ற வழிவகுக்கும். அதன் காரணமாக மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தது.
தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆட்சி மாற்றம் தானேயொழிய மக்கள் விரும்பும் மாற்றம் அல்ல. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த கட்சி சரியில்லை அந்த கட்சிக்கும் அந்த கட்சி சரியில்லை என்று இந்த கட்சிக்கும் மக்கள் வாக்களித்து மாற்றத்திற்காக காத்திருந்து ஏமாந்துப் போகிறார்கள்.
பெண்கள் மீதான பாலியல் வன்முறையோ, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலோ, வேலையின்மையோ வெறும் ஆட்சி மாற்றத்தினால் மட்டும் நிகழ்ந்து விடாது. அதற்கு அமைப்பு மாற்றம் அதாவது புளுத்துநாறிப் போன இந்த சமூக கட்டமைப்பின் மாற்றம் அவசியமானது.
இளைஞர்களே, தொழிலாளர்களே நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்த நபராக இருந்தாலும் நிச்சயம் முதலாளித்துவம் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். ஆகையால் தேர்தலில் வாக்களிப்பதோடு நமது கடமை முடிந்துவிடுவதில்லை. ஜனநாயக உரிமை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைப்பதும் களத்தில் போராடுவதுமே உண்மையான மாற்றை உருவாக்கும்.
- நலன்






