தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!
வெறுப்புணர்ச்சியும், சினிமா நடிகர்களின் மீது உள்ள கவர்ச்சியும் ஒன்று சேர்ந்து விஜய் போன்ற சினிமா கழிசடைகளை தனது நாயகர்களாக கருதுகின்ற கேடு உருவாகியுள்ளது.

“ஓட்டு போட வைங்க”

“குட்டீஸ்களே.. உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல. அதே மாதிரி இந்த `விஜய் மாமா’ ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை விசிலுக்கு ஓட்டு போட வைங்க” என்று- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகள் நீண்ட காலமாக ஆண்டு வருகிறது என்பதால் இந்த முறை மாற்றத்தை விரும்புகின்ற அனைவரும் தமிழக வெற்றிக்கழகம் என்று உருவாகியுள்ள சினிமா நடிகர் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஊடகப் பார்ப்பன கும்பலும், திமுகவுக்கு எதிராக முற்போக்கு கருத்துகளை பேசி வந்த பெலிக்ஸ் ஜெரால்ட் உள்ளிட்ட தன்னார்வலர்களும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் கூலிக்கு மாரடிக்கும் கும்பல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும். அடுத்த முதல்வர் விஜய் தான் என்றெல்லாம் தொடர்ச்சியாக கருத்துருவாக்கம் செய்து வருகின்றனர்.

ஊடகங்களாலும் சமூக செயற்பாட்டாளர்களாலும் தற்குறிகள் என்ற விமர்சிக்கப்படுகின்ற ஒரு இளைய தலைமுறை மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ஏற்றுள்ள கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம் என்றும், விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் என்றும் தொடர்ச்சியாக ஊளையிட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் 90 களில் இருந்து அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை மறுகாலனியாக்குவதற்கு நாட்டின் அடிப்படை தொழிலான விவசாயத்தையும், ஓரளவு சுயேச்சை தன்மை கொண்ட சிறு குறு தொழில்களையும், அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தேசங்கடந்த தரகு முதலாளிகளான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம்; அதிகரித்துள்ள வறுமை; விவசாயத்தின் மீதான தாக்குதல்கள்; தொழிலாளர்களின் நல உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுவது; நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடப்படுவது; இதனால் ஏற்பட்டு வரும் கடுமையான விலைவாசி உயர்வு; இயற்கை சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை அனைத்தும் ஏகாதிபத்திய நிதி மூலதன ஏகபோகங்களால் உருவாக்கப்படுகிறது.

இத்தகைய நிதி மூலதன ஏகபோக கும்பல் உலகை சூறையாடுவதற்கு ஜனநாயக வழிமுறைகளை கைவிட்டு பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்த மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுகிறது. விவசாயிக்கு தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்கின்ற அதிகாரம் முதல் தொழிலாளர்களுக்கு உத்திரவாதமான வேலைவாய்ப்பு; பணிப்பாதுகாப்பு; சட்டப்படி கிடைக்கின்ற உரிமைகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது.

இத்தகைய கொடூரமான சூழலை தமிழகத்தை ஆண்ட அண்ணா திமுக அதன் பிறகு ஆண்ட திமுக போன்றவை கையாண்டதில் அதிமுக முழுக்க, முழுக்க கார்ப்பரேட் நலனிலிருந்து பாசிச பாஜகவின் கொத்தடிமை கும்பலாக செயல்பட்டது என்பது பட்டவர்தனமாக அம்பலமாகியது என்பதால் அதிமுக மீது இளைய தலைமுறையினரும், பாதிக்கப்பட்ட பிற வயதினரும் ஆத்திரமடைவது நியாயமானது தான்.

அதுபோலவே 2021 முதல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தை ஆண்டு வருகின்ற திமுக தனது ஆட்சிக் காலத்தில் கார்ப்பரேட் நலன்களை தூக்கி எறிந்து விட்டு சுயசார்பு பொருளாதாரத்தையோ, தேசிய பொருளாதாரத்தையும் கட்டமைப்பதில் முன்னுரிமை கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் அதானி, அம்பானி போன்றவர்கள் தொழில் தொடங்குவதற்கு தமிழகத்தை அனுமதிக்க முடியாது என்று கூட முன் வைக்கவில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளை அதிகமாக சார்ந்து நிற்பது; ஏகாதிபத்திய நிதி மூலதனத்தை தாராளமாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டுக் கொள்வது; தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு அத்தகைய ஏகபோகங்கள் முன்வைக்கின்ற திட்டங்களை அப்படியே அமல்படுத்துவது, அதாவது 12 மணி வேலை நேரம் முதல் தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை ஆகியவற்றை நசுக்குவது போன்றவற்றை திமுக அங்கீகரித்து தான் வந்துள்ளது.

படிக்க:

 விஜய் ரசிகர்கள் கூட்டம் படிப்பினை பெற வேண்டும்!
 கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!

ஆளும் வர்க்கங்கள் தனக்கு இசைவான, பொருத்தமான தேர்தல் அரசியல் கட்சிகளை தேர்வு செய்கின்றபோது, அதில் சில சிக்கல்கள் உருவாகின்ற காலகட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் போன்ற கவர்ச்சிவாத தலைவர்களை உருவாக்குவதும், அவர்களின் பின்னால் மக்களை ஓட வைப்பதும், அவர்கள் ஏதோ புதிய வழிகாட்டல்களை கொடுத்து விடுவார்கள்; மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களில் இருந்து விடுதலை கொடுத்து விடுவார்கள் என்ற மாயையை உருவாக்குவதும் தொடர்ச்சியாக தமிழக மற்றும் இந்திய வரலாற்றில் பார்த்துக் கொண்டிருக்கும் அம்சங்கள் தான்.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நாட்டின் பொது எதிரியாக மாறியுள்ள பாசிச பாஜக, அதன் கொத்தடிமை கும்பலான அதிமுக ஆகியவற்றை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிய லெனினிய அமைப்புகள் பிரச்சாரம் செய்கிறது. அதே சமயத்தில் திமுகவை எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஆதரிக்க முடியாது என்றும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் தற்போது அவர்களின் அரசியல், பொருளாதார நிலைப்பாடுகள் ஆகியவற்றை அவதானித்து மாற்று திட்டத்தை முன்வைத்து மக்களை ஒரு எழுச்சிக்கு தயார்படுத்துவதும், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நிர்பந்தத்தை உருவாக்குவதும் இந்த தேர்தலில் முக்கியமானது என்பதை முன்வைத்து களமாடுகின்றன.

இத்தகைய மாற்று அரசியல் பொருளாதார, பண்பாட்டு, அயல் உறவு கொள்கைகள் எதுவும் இல்லாமல் திராவிட இயக்கங்களுக்கு மாற்று தான் என்றும், தமிழகத்தின் நிலவுகின்ற ஒப்பீட்டு ரீதியில் பிற மாநிலங்களை விட குறைந்த அளவே என்றாலும் நிலவுகின்ற பாலியல் வன்கொடுமைகள், சாதி ஆதிக்க வெறியாட்டங்கள், பெண்களின் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை முன்வைத்து தமிழகம் ஏதோ வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாறிவிட்டது என்பதைப் போல ஒரு கருத்துருவாக்கத்தை திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பாளர்களும், பார்ப்பனக் கும்பலும் உருவாக்கியுள்ளனர்.

படிக்க:

 கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!
 சினிமா டூ மாநாடு: நடிப்பில் அசத்தும் விஜய்!

இத்தகைய வெறுப்புணர்ச்சியும், சினிமா நடிகர்களின் மீது உள்ள கவர்ச்சியும் ஒன்று சேர்ந்து விஜய் போன்ற சினிமா கழிசடைகளை தனது நாயகர்களாக கருதுகின்ற கேடு உருவாகியுள்ளது.

எமது அமைப்புகளை பிளவு படுத்திக் கொண்டு ஓடிய வினவு கும்பல் மிகவும் சிலாகித்து வந்த திருவாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தற்போது விஜய் கட்சியில் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறிவிட்டார். திராவிட இயக்கத்தின் மீதும், திராவிட கட்சிகளின் மீதும் உள்ள இயல்பான வெறுப்பின் காரணமாக வேறு சில போலி முற்போக்குகளும் இந்த முகாமில் இணைந்துள்ளனர்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

“நீண்ட காலம் இரண்டு கட்சிகளை பார்த்தாகிவிட்டது. புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம்” என்று அபத்தமாகவும், கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு எந்த திட்டமும் இல்லாமல் செயல்படுகின்ற விஜய் போன்ற அரசியல் தற்குறிகள் எந்த வகையிலும் மாற்று கிடையாது, ஆந்திராவில் பவன் கல்யாண் போன்றவர்கள் கவர்ச்சிவாத அரசியலில் குதித்து துணை முதல்வர் ஆகிவிட்டது போல ஸ்கெட்ச் ஒன்றை போட்டுக்கொண்டு தமிழகத்தில் பாஜக அடிமை அதிமுக கும்பல் வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து பேரம் பேசி துணை முதல்வர் ஆவதற்கு துடித்துக் கொண்டுள்ள விஜய் ஒரு மாற்று அல்ல.

இத்தகைய கருத்து பிரச்சாரத்தை புதிய ஜனநாயகம் தனது மாதாந்திர அச்சு பத்திரிக்கை மூலமாகவும், புதிய ஜனநாயகம் தினசரி மூலமாகவும் தொடர்ந்து எழுதி வருகிறது என்ற போதிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒன்று, இரண்டு நாட்களே உள்ள இந்த சூழலில் மீண்டும் இவற்றை நினைவு படுத்த வேண்டியது அவசியமாகின்றது. பாசிச பாஜக அடிமை அதிமுகவிற்கு மாற்று கவர்ச்சிவாத, பினாமி கும்பலான தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

ஓட்டுரிமை இல்லாத குட்டீஸ்களை மாமாவுக்கு ஓட்டு போட சொல்லுங்கள் என்று நிர்பந்தப்படுத்துகின்ற அளவிற்கு தான் அரசியல் அறிவு விஜய்க்கு உள்ளது என்பதும், அவர் பின்னால் இருந்து இயக்குகின்ற லாட்டரி மார்ட்டின் குழுமத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் போன்ற கிரிமினல் குற்றக் கும்பல்கள் மிகக் கொடூரமான ஆபத்து மிக்கவர்கள் என்பதும் கொண்டு சேர்க்க வேண்டிய உண்மையாகும், தனது வேட்பு மனுவிலேயே தனது சொத்துக்களை மறைத்து தகவலை கொடுத்துள்ள விஜய் போன்ற கழிசடைகளை ஒருபோதும் ஏற்கவே முடியாது. அதே சமயத்தில் வேட்பு மனுவில் கொடுத்த அடிப்படையிலேயே 640 கோடி ரூபாய்க்கு சொந்தமான மிகப்பெரும் பணக்காரரான விஜய் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக மாறவே முடியாது.

தேர்தல் அரசியலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கு தொடர்ச்சியாக பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போதே அதன் பீ டீம்களாகவும், சீ டீம்களாகவும் செயல்படுகின்ற சீமான் மற்றும் விஜய் போன்றவர்களையும் அரசியல் அனாதைகள் ஆகிவிட்ட ஊழல் பெருச்சாளி சசிகலா, சாதிய மோதல்களை ஊக்குவித்த சாதி வெறியர் ராமதாசு போன்றவர்களை முற்றாக புறக்கணிப்பதும், தற்போதைய சூழலில் பாசிச பாஜகவிற்கு எதிராக சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தை பாதுகாப்பதை முன்வைத்து, பாசிச எதிர்ப்பு அரசியலில் செயல்படுகின்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை நிர்பந்திப்பது, ஆதரிப்பது என்பதுதான் தற்போதுள்ள தேர்தல் கள நிலைமையில் எதார்த்தமாகும்.

  • தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதிய ஜனநாயகன் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here