21 ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசத்தின் வழிகாட்டி மகத்தான லெனினிசமே!
தோழர் லெனின் ஒரு சகாப்தம்; தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடி; தோழர் லெனின் உறுதி குலையாத போல்சவிக்மயமான கட்சியை கட்டுவதில் முன்னின்ற போராளி; அவரின் கனவுகளை நடைமுறையில் கொண்டு செல்கின்ற மகத்தான புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றை இந்தியாவில் சாதிப்பதன் மூலம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கி முன்னேறுவோம்.

“ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்கப் புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமிதம் அடைவோம். ஆனால் இந்த பெருமிதத்தை ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுப்படுத்துவதில் நமது பங்களிப்பு என்ன என்பதை நேர்மையுடன் பரிசீலிப்பதில் தான் உள்ளது.

மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ள தோழர் லெனின் உடலைக் காண்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து மொழி, இனம், நாடு ஆகியவற்றைத் தாண்டி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்த மரியாதை உடலுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை என்ற அளவுடன் நிறுத்திக் கொண்டால், அது சோசலிசத்தின் இலட்சியங்களை அடைவதற்கு, சைபீரியாவின் காடுகளிலும் காகசஸ் மலைகளிலும், தூரதேசங்களிலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு புரட்சியை முன்னெடுத்துச் சென்ற ஒரு மாமனிதனின் இலட்சியத்தை நாம் எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளோம் என்பதை கேள்விக்கு உள்ளாக்குகின்றது.

புரட்சி பற்றி தோழர் லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம் ஆகிய துறைகளில் அடிப்படை மாற்றங்களைச் செய்துக்கொண்டு, புதுமுறையாக வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொண்டு, அதன்படி வாழ்வதும் அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுவதுமேதான் புரட்சி. ஒரு நாட்டின் அரசியல் அதிகாரங்களை மட்டும் ஒருசாரார் கைப்பற்றிக்கொண்டு ஆள்வது புரட்சி ஆகாது” என்றார்.

தோழர் லெனின் மட்டுமல்ல, மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ஸ்டாலின், மாவோ வரையிலான புரட்சியை நடத்திக் காட்டியவர்களின் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு, அதனை நம்முடைய நாட்டு அனுபவத்துடன் இணைத்து புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு பதிலாக, அவர்களை பூஜையறை படமாக்கிவிட்டு வெறும் மேற்கோள்களை வைத்துக் கொண்டு களமாடுகின்ற, ‘சித்தாந்தக் குருடர்கள்’ அதிகரித்து வரும் சூழலில்,தோழர் லெனினைப் பின்பற்றி அவர் முன் வைத்த வர்க்கப் போராட்டமென்ற பாட்டாளி வர்க்கத்தின் உயர்ந்த மரபுகளை நாம் புரிந்து கொள்வது மார்க்சியத்தின் வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கான முதற்படியாகும்.

“எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலும், அதன் சில உறுப்பினர்களின் வேட்கைகள் இதர உறுப்பினர்களின் வேட்கைகளுடன் மோதிக் கொள்கின்றன என்பதும், சமுதாய வாழ்வில் முரண்பாடுகள் மலிந்து கிடக்கின்றன என்பதும், தேசங்களுக்கிடையிலும் சமுதாயங்களுக் கிடையிலும், அதேபோல் அவற்றுக்கு உள்ளேயும் போராட்டம் நடப்பதை வரலாறு வெளிப் படுத்துகிறது என்பதும், அது தவிர புரட்சி காலப்பகுதி, பிற்போக்கு காலப்பகுதி ஆகியவை; போர்க்கால பகுதி, சமாதான காலப்பகுதி ஆகியவை; தேக்க காலப்பகுதி, வேகமான முன்னேற்ற காலப்பகுதி அல்லது நலிவு காலப்பகுதி ஆகியவை என்று காலப்பகுதிகள் மாறி மாறி வருவதையும் வரலாறு வெளிப்படுத்துகிறது என்பதும், எல்லோரும் அறிந்த விவரங்கள் ஆகும். தடமறியா குகைப் பாதைப் போல், குழப்படிகள் போல் தோன்றும் இதை ஆளும் விதிகள் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழிகாட்டியை, அதாவது வர்க்கப் போராட்டம் என்ற தத்துவத்தை மார்க்சியம் தருகிறது” என்கிறார் தோழர் லெனின்.

படிக்க:

 சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்

 இந்தியப் பொதுவுடமை இயக்கமும், சூறாவளிகளும்! தோழர் லெனின் வழியில் எதிர்கொள்வோம்! 

உலக முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி ஏகபோகமாகவும், ஏகாதிபத்திய தன்மையுடன் விளங்குகிறது என்பதை தனது ஆய்வின் மூலம் முன்வைத்த தோழர் லெனினது ஆய்வானது, “ஏகாதிபத்திய முதலாளித்துவமானது இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதையும் சூறையாடுவதற்கு, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மிருகத்தனமான, அசுர பலத்துடனும் குவிக்கப்பட்டுள்ள நிதி மூலதன ஆதிக்கத்துடனும் செயல்பட்டு வருவதை புரிந்துக் கொள்ளவும், அதற்கு எதிராகப் போராடவும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.”

ஏகாதிபத்திய நிதி மூலதனம் உருவாக்குகின்ற இரு துருவ ஏற்றத்தாழ்வுகளால் பூமிப் பந்தின் எடை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. இந்த முரண்பாடுகளையும், அசமத்துவங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அதன் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி குறித்த போதனைகள் தான் மாபெரும் வழிகாட்டியாக உள்ளது என்பதை மறுக்கவே முடியாது.

அது மட்டுமல்ல! ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்க்கும், சோசலிச சமூக அமைப்பையும் அதன் தொடர்ச்சியாக கம்யூனிசத்தையும் அடைவதற்கு பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக எஃக்குறுதி குலையாத பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றை எவ்வாறு கட்டியமைப்பது என்பதுதான் தோழர் லெனின் பங்களிப்புகளில் மற்றொரு முக்கியமான அம்சமாகும். “கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது; கட்சிக்கு தனது வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாக செலுத்துவது என்பதைத் தாண்டி ஒவ்வொரு நபரும் கட்சியின் ஏதாவது ஒரு குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதுதான் மார்க்சியத்தை உண்மையாக ஏற்றுக் கொண்ட மனிதனுக்கு இலக்கணம். அவரையே ஒரு கம்யூனிஸ்ட்டாக அங்கீகரிக்க முடியும்” என்றுத் தோழர் லெனின் முன்வைத்தார்.

ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதை லட்டியமாகக் கொண்ட இத்தகையக் கட்சிக் கோட்பாடுகள் இன்று ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாராளவாத போதனைகளின் கீழ் கடும் விமர்சனத்திற்கும், கேள்விக்கும் உள்ளாக்கப்படுகிறது. “கட்சிக் கட்டுப்பாடுகள் பழ்மைவாத தன்மையுடையவை. வேகமான இன்றைய உலகுக்குப் பொருந்தாதவை” என முதலாளித்துவமானது தனது செல்லப் பிள்ளைகளான குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் மூலம் பாட்டாளி வர்க்கக் கட்சியின் மீது தாக்குதலை ஏவுகிறது. இத்தகையப் போக்குகளை எதிர் கொண்டு சமரசமின்றி போராடுவதையே லெனின் நமக்கு கற்பிக்கிறார்.

படிக்க:

 சமூக விஞ்ஞானமான மார்க்சிய-லெனினியம் என்றுமே துவண்டு போகாது!!

 தோழர் லெனின் அதிகம் தேவைப்படுகிறார்!

‘மார்க்சியத்தை எளிமைப்படுத்துகின்றேன்’ என்றப் போர்வையில் அதன் உள்ளார்ந்த ஆழமான கோட்பாடுகளுக்கு பொருத்தமான வார்த்தைகளை கைவிட்டு மேலோட்டமான புரிதலை உருவாக்குகின்ற வகையில் அதனை திரித்து புரட்டுகின்ற பல்வேறு திருத்தல்வாத போக்குகளுக்கு எதிராக போராடி மார்க்சியத்தை நிலைநாட்டியவர் தான் தோழர் லெனின்.

இன்று உலகு தழுவிய அளவில் பாட்டாளி வர்க்கம் தனது இருப்பை இழந்து வருகிறது என்பதால் பாட்டாளி வர்க்கம் என்று ஒன்றில்லை;, தொழில்துறை பாட்டாளி வர்க்கம் என்று யாரையும் சொல்ல முடியாது என்ற வாதம் மேலாங்கி வருகிறது. இத்தகைய குட்டி முதலாளித்துவ தர்க்கங்கள், ‘கடைசியில் தொழிலாளர்களே கிடையாது, அனைவரும் முதலாளிகள் தான்’ என்ற கிக் பொருளாதாரம் முன்வைக்கின்ற அபத்தங்களை நோக்கி தொழிலாளி வர்க்கத்தை கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறது. இத்தகைய அபத்தங்களை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேள்விக்குள்ளாக்கினார் தோழர் லெனின்.

“ஆனால், இன்று முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் மெய்யாகவே புரட்சிகரமான வர்க்கமாகும். ஏனைய வர்க்கங்கள் நவீன தொழிலினது வளர்ச்சியின் முன்னாள் நலிவுற்று சிதைந்து முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும் தான் நவீன தொழிலுக்கே உரித்தான அதன் நேரடி விளைவாய் அமைகிறது. மத்திய தர வர்க்கத்தின் கீழ் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர், கடைக்காரர், கைவினைஞர், விவசாயி இவர்கள் எல்லோரும் தொடர்ந்து தாம் மத்தியதர வர்க்கக் கூறுகளாய் நீடித்திருப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே இவர்கள் பழமைபற்றார்களே அன்றி புரட்சிகர தன்மை வாய்ந்தவர்கள் அல்ல. அதுமட்டுமல்ல இவர்கள் பிற்போக்கானவர்களும் கூட. ஏனெனில் வரலாற்றின் சக்கரத்தை இவர்கள் பின்னோக்கி உருளச் செய்ய முயலுகிறார்கள்.

சந்தர்ப்பவசமாய் இவர்கள் புரட்சிகரமாக இருப்பார்களாயின் இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு போய்விடும் தருவாயில் இருக்கிறார்கள் என்பதே அதற்கு காரணம். இவ்வாறு இவர்கள் பாதுகாப்பது தமது எதிர்கால நலன்களையே அன்றி நிகழ்கால நலன்களை அல்ல. பட்டாளி வர்க்கத்தின் நோக்கு நிலையை ஏற்கும் பொருட்டு தனது சொந்த நோக்கு நிலையை கைவிடுகிறார்கள்” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் முன்வைத்த அம்சத்தை தனது நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார் தோழர் லெனின்.

ஏகாதிபத்திய முதலாளித்துவம் முன்வைக்கின்ற கட்டுப்பாடற்ற சுதந்திரம், கட்டுப்பாடற்ற ஜனநாயகம் போன்ற கோட்பாடுகள் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள், ‘புல்லுருவித்தனமாக’ ஊடுருவி ஜனநாயகம் என்பதையே திரித்து புரட்டுகின்ற, தனிநபர்வாதங்களும், தான் விரும்பியதை உடனே வெளிப்படுத்துகின்ற கட்டுப்பாடற்ற ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளது. இத்தகையப் போக்குகளை ஆதரித்து நிற்கின்ற குட்டி முதலாளித்துவ கும்பல் பெருத்துள்ள சூழலில் லெனின் முன் வைத்துள்ள போல்சவிக்மயமான கட்சி, அதன் பிறகு தோழர் ஸ்டாலின் வளர்த்தெடுத்த ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட போல்சவிக்மயமான கட்சி ஒன்றின் தேவையை இன்றைய காலகட்டம் நமக்கு போதிக்கின்றது.

அதுமட்டுமல்ல, இன்று ஜனநாயகம் என்றால் முழுமையான பொருளில் புரிந்துக் கொள்ளாத பல்வேறு தாராளவாதக் கருத்துகளை முன்னிறுத்துகின்ற போக்குகள் அதிகரித்துள்ள சூழலில் ஜனநாயகம் என்பது அதாவது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான் என்பதை நிலைநாட்டுவதும், உண்மையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் உண்மையான ஜனநாயகம் என்பதையும் எந்தவிதமான சமரசமும் இன்றி எடுத்து வைத்து போராட வேண்டும் என்பதை தான் தோழர் லெனின் நமக்கு உணர்த்துகிறார்.

சித்தாந்தத் துறையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்ற ஆசான்களின் வரிசையில் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தனது கூர்த்த மதியை செலுத்தி அரசியல்வாதியாக மட்டுமாக இல்லாமல் சித்தாந்தவாதியாக, தத்துவவாதியாக தன்னை வளர்த்தெடுத்துக் கொள்வதில் தேவையை பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற ஆய்வின் மூலம் அவர் முன்வைத்தன் மூலம் காலம் தோறும் சித்தாந்தவாதிகளும், தத்துவ வாதிகளும் தேவை என்பதையும், அவர்கள் முன்வைக்கின்ற தத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான வழிமுறைகளுடன் அவர்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், அதில் 21 ஆம் நூற்றாண்டில் நிலவி வருகின்ற போதாமையை நமக்கு உணர்த்துகிறது லெனின் வாழ்க்கை.

லெனினிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் பேராயுதம். கம்யூனிசமே வெல்லும் என்று முழங்குகின்ற ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் லெனினிசம். இவற்றை கறாராக கடைபிடிக்க வேண்டியதை வலியுறுத்துவதாலேயே வறட்டு சூத்திரவாதிகளும், குட்டி முதலாளித்துவ தாராளவாதிகளும் பல்வேறு அவதூறுகளை தமது சித்தாந்த கண்ணோட்டத்தில் இருந்து வாரி இறைப்பார்கள் என்ற போதிலும், இவற்றை எதிர்த்து முறியடிப்பதும், வலது, இடது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு அடிபணியாத மக்கள் திரள் வழியிலான புரட்சி ஒன்றை சாதிப்பதற்கு தோழர் லெனினை பின்பற்றுவோம்.

தோழர் லெனின் ஒரு சகாப்தம்; தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடி; தோழர் லெனின் உறுதி குலையாத போல்சவிக்மயமான கட்சியை கட்டுவதில் முன்னின்ற போராளி; அவரின் கனவுகளை நடைமுறையில் கொண்டு செல்கின்ற மகத்தான புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றை இந்தியாவில் சாதிப்பதன் மூலம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் நோக்கி முன்னேறுவோம்.

இந்த மகத்தான இலட்சிய பயணத்திற்கு இடையில் குறுக்கீடுகளாக தோன்றியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சி போரில் முன்னேறி செல்வோம்.

நன்னிலம் சுப்பராயன்.

ஏப்ரல் 2024 இதழ்

புதிய ஜனநாயகம் 
மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here