தொகுதி மறுவரையறை மசோதா: ஆதரித்த எடப்பாடி கும்பலின் துரோகம்! வீழ்த்திய எதிர்கட்சிகளின் ஒற்றுமை!

பாசிச பாஜக காவிக் கும்பலுக்கேயுரிய குறுக்குப் புத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய சூழலிலும் 16-07-2026 நாடாளுமன்ற சிறப்பு அமர்வு அவசர அவசரமாக கூட்டப்பட்டு மூன்று மசோதாக் களை தாக்கல் செய்தது ஒன்றிய பாஜக அரசு.
ஆனால் ‘பேரு என்னவோ பெத்த பேருதான்’…

மகளிர் இட ஒதுக்கீட்டினை உடனடியாக (அதாவது 2029 முதல்) 33 சதவீதமாக உயர்த்துவதற்கு ஏதுவான மசோதா என்ற பெயரில் நரித் தந்திரத்துடன் தாக்கல் செய்ய முனைந்தது பாசிச பாஜக அரசு. ஆனால் 2023 லேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்து அடித்ததே காவிக் கும்பல் தான்.

செந்திலிடம் கவுண்டமணி ஏமாந்த கதை போல் ஏமாற்ற துடித்தார்கள்!

அதாவது திரைப்படம் ஒன்றில் நாயினுடைய தலைக்கு ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு ஆட்டுக்குட்டி எனப் பொய் கூறி சந்தைக்கு நகைச்சுவை நடிகர் செந்தில் இழுத்துச் செல்லும் வழியில் கவுண்டமணி குறைந்த விலையில் அதை ஆசைப்பட்டு விலைக்கு வாங்குவார். மனைவியிடம் சொல்லி முப்பது கிலோ ஆடு கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் மனைவியை கறி மசால் அரைக்கச் சொல்லிவிட்டு, பலமாக அரிவாளைத் தீட்டுவார். ஆட்டை வெட்டுவதற்கு தலையில் கிடந்த தோலை நீக்கிய பொழுது அது ஆடல்ல; நாய் என்பதை அறிந்த கவுண்டமணி, தான் ஏமாற்றப் பட்டதை அறிந்து நொந்து போவார்.

அதேபோல இந்திய நாட்டின் எதிர்க்கட்சிகளை ஏமாற்றி விடலாம் என்ற நப்பாசையில் பாஜக அரசு ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’ என்ற போர்வையை போர்த்திக் கொண்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543 லிருந்து 850 ஆக உயர்த்தும் தொகுதி மறு வரையறை செய்யும் வகையிலான அரசமைப்புச் சட்டம் 131 வது திருத்த மசோதா- 2026, சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்த சட்ட திருத்தங்களை நிறைவேற்றும் வகையில் யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்தம் மசோதா- 2026 ஆகிய மூன்று மசோதாக்களை கெட்டிக்காரத்தனமாக தாக்கல் செய்தது காவிக் கும்பல்.

அதுவும் எப்படிப்பட்ட தருணத்தில் தாக்கல் செய்ய முனைந்தது இந்தக் கேடுகெட்ட கும்பல்? ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைமுறையில் இருந்த தருணத்தில்! அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23 நடைபெறும் தருணத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேறுவதற்கு – விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களித்தால் மட்டுமே மசோதா நிறைவேறும். (543 பேரும் ஆஜராகி இருந்தால் 360 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்) ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 233 பேரில் கட்சி மாறி வாக்களிக்காவிட்டால் மசோதா தோல்வியுறும்.

மக்களவையிலேயே தோற்கடிக்கப்பட்டு விட்டால், மாநிலங்களவைக்கு கொண்டு செல்ல முடியாது. பாஜக கும்பல் நினைத்தது என்னவோதேர்தல் நேரத்தில் தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கி கிடப்பார்கள்; அந்த ‘ஓட்டை உடைசல்’ வழியாக குறுக்குச்சால் ஓட்டி எளிதாக மசோதாவை வெற்றி பெறச் செய்துவிடலாம் என்று மனப்பால் குடித்தார்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது விடயத்தில் முன்னுதாரணமாக நின்று, மசோதா தாக்கல் செய்த நாளன்றே தமது கட்சியினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் அறைகூவல் விடுத்து கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி தமிழகமெங்கும் ஏற்ற வழிவகை செய்தார். தன் கட்சியினரை தமிழ் நாடெங்கும் மசோதா நகல்களை தீயிட்டுப் பொசுக்க ஆணையிட்டார்.

நாமக்கல்லில் தாமே கருப்புக் கொடி ஏற்றி மசோதா நகல்களை தீயிட்டுப் பொசிக்கினார். ‘தமிழ் மண்ணிலிருந்து பெரும் போராட்டங்களை டெல்லி சந்திக்க வேண்டி வரும்; 50, 60-களின் தமிழ்நாட்டைப் பார்க்கப் போகின்றீர்கள்…’ என்று கடுமையாக எச்சரிக்கவும் செய்தார். தமிழ்நாடு, பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தைக் கூட நிறுத்தி வைத்துவிட்டு, பாராளுமன்ற நிகழ்வுகளில் – விவாதங்களில் ஆணித்தரமாக பங்கேற்கவும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் வலியுறுத்தினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

அமித்ஷா திமுக எடப்பாடி என்ன சொன்னார்?

‘அமித்ஷாவே கூறிவிட்டார்; தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் எண்ணிக்கைக் குறையாது, மாறாக கூடப் போகிறது என்று; ஸ்டாலின் தேர்தல் தோல்விக்குப் பயந்து மடைமாற்றம் செய்து மக்களை பொய் கூறி ஏமாற்றுகிறார்; மக்களே, இந்த வலையில் சிக்கி விடாதீர்கள்; அந்த பொம்மை ஸ்டாலின் ஆட்சியை வீழ்த்தி வீட்டிற்கு அனுப்ப எங்கள் கூட்டணிக்கு வாக்குகளை அளியுங்கள்…’ என்றார்.

படிக்க: தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி! பார்ப்பனக் கும்பலும், கருப்பு பார்ப்பனக் கும்பலும் போடும் வெறிக் கூச்சல்!

கடந்த காலங்களில் இந்த ‘மாமேதை’ எடப்பாடி ‘நீட்’ நுழைவுத் தேர்வால் பிரச்சனை ஏதுமில்லை என்றார்; CAA, NRC குடியுரிமைச் சட்டம் நிறைவேற்ற முனைந்த போது பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, சட்டமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு இஸ்லாமியரை காண்பியுங்கள் என்று எக்காளமிட்டார்‌; வஹ்ப் சட்டத்தை ஆதரித்தார்; காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 நீக்கத்தை ஆதரித்தார்; இந்தி சமஸ்கிருத திணிப்பிற்கு எதுவும் பேச வக்கற்றவராய் வாயில் பிளாஸ்திரியைப் போட்டு ஒட்டிக்கொண்டார்.  ஒன்றிய அரசுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தினார். தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாக்களை ஆதரித்தார்.

கட்சியின் பெயரில் அண்ணா பெயரையும், திராவிடத்தின் பெயரையும் வைத்துக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு மாறாக சங்கிகள் பிரேரபிக்கும் தர்காவிற்குச் சொந்தமான இடத்தில் தீபம் ஏற்ற ஆளாய் பறக்கிறது ’அமித்ஷா’திமுக. நைனார் நாகேந்திரன் மட்டுமல்ல; திருப்பரங்குன்றம் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவே, ‘வெற்றி அடைந்ததும், ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்த தீபத்தூணில் தீபம் ஏற்றப் போவதாக கொக்கரிக்கிறார்’. அதற்கு வெண்சாமரம் வீசுகிறார்கள் அமித்ஷாவின் அடிமைகள் ஆகிப்போன எடப்பாடி கும்பல்.

என்றைக்கு அமலாக்கத்துறை எடப்பாடியின் பினாமி சம்மந்தி ராமலிங்கம் வீட்டில் ரெய்டு நடத்தி ஓரிரு நாட்களிலேயே எடப்பாடியை அமித்ஷா டெல்லிக்கு வரவழைத்தபோது ஒளிந்து ஒளிந்து போய் சந்தித்தபோது ED கோப்புகள் அனைத்தையும் மேசையின் மீது தூக்கிப் போட்டவுடன், பேச்சுவார்த்தைக்குத் தயாராகி கூட்டணிபேரத்திற்கு அடிபணிந்தாரோ அன்றே அம்பலப்பட்டுப் போய்விட்டார் எடப்பாடி.

தேர்தல் கால சூழலிலும் கூட தமிழ்நாடு எங்கும் அவர் மேற்கொள்ளும் பரப்புரையில் மயிரளவும் அரசியல் இல்லை. காட்டுக் கூச்சல் இடுவதைத் தவிர…!

தொகுதி மறு சீரமைப்புக்கு பாஜக துடிப்பது ஏன்?

இது குறித்தும் நாம் சற்று ஆழமாக பரிசீலிக்க வேண்டிய துள்ளது. 2014 பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கு வந்த காலம் முதல் அனைத்து துறைகளையும் (தனது தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் காட்டும் வழியில்) காவிமயம் ஆக்குவதில் முனைந்து நிற்கிறது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் கடந்த காலங்களில் நாம் பல்வேறு கட்டுரைகளை படைத்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக தேர்தல் ஆணையத்தை உருவாக்குவதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பங்கினை காலி செய்தது; தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரம் அளித்தது,ECI, ED, IT, CBI, Judiciary, Goligiyam,IAS, IPS, Military… என அனைத்துத் துறைகளையும் ஏறத்தாழ காவிமயமாக்கிக் கொண்டது; அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக ‘மனு’ச் சட்டத்தை முன்னிறுத்துவது; அனைவருக்குமான அறிவியல் கல்வியை சனாதன பார்ப்பன சங்கிகளுக்கு மட்டுமே உரியதாக்கி, சூத்திர- பஞ்சம மக்களுக்கு அதனை இல்லாத தாக்கி குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக (அதாவது அப்பன் தொழிலையே பிள்ளைகள் செய்வது என்பதை)
கொண்டு வருவது; இந்தி- சமஸ்கிருத திணிப்பில் விரைவு காட்டுவது;
சகலவித நிதிப் பங்கீட்டில் -பேரிடர் நிதியில் – மெட்ரோ திட்டம் அமலாக்கத்தில் – எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் – அகழ்வாராய்ச்சியில் கீழடி நாகரீகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதில், GST பகிர்வில் …பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றாகவும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றாகவும் ஓர வஞ்சனையாக பங்கீடு செய்வது; அல்லது புறக்கணிப்பு செய்வது
என்பதை தொடர் நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறது ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ மதவெறி கும்பல்.

படிக்க: பாராளுமன்ற தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களை அரசியல் ரீதியில் அடிமையாக்க வரும் பாசிச ஆயுதம்

தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்வதில் மோடி அமிஷாவிற்கு எள்ளளவிலும் குறையாமல் பங்கு செலுத்துகிறார் குறுக்கு வழி பதவி பிடிக்கும் நிர்மலா சீதாராமன். இது போதாதென்று மக்களிடம் மண்டிக் கிடக்கும் ஆன்மீக மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி திருப்பரங்குன்றம் பிரச்சனையைப் போல பல்வேறு இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியல் பிரச்சாரங்கள், கலவரங்களை ஏற்படுத்தி மத நல்லிணக்க ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலைகளைச் செய்வதன் மூலமாக வடநாட்டை போலவே தமிழ்நாட்டிலும் கால் பதிக்க எண்ணுகிறது பாசிச பாஜக கலவரக் கும்பல்‌.

‘இவ்வாறான வளர்ச்சிப் போக்கில்’ ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், சகலத்திற்கும் ஒரே அடையாள அட்டை… இதன் வழியாக இந்து ராஷ்ட்ராவைப் படைப்பது; அதனூடாக ஒற்றை சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவது என்பதே அவர்களின் கொள்கையாக – இலக்காக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு நூற்றாண்டு என்பதால் அக்காலத்திலேயே இத்திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பது அவர்களது இலக்காக இருந்தது.

இப்படிப்பட்ட ‘புரட்சிகர’ மாற்றத்தை உருவாக்குவதில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் -குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் முட்டுக்கட்டைகளாக உள்ளன. எனவே தொகுதி மறுவரையறை செய்யும் குறுக்கு வழியை கையாண்டு விட்டால் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய பெரும்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டே காவிக் கொள்கையைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திக் கொண்டு செல்வதில் முட்டுக்கட்டை ஏற்படாது; தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த ஆதரவு இன்றியே தமது கொள்கைகளை ஹிட்லர் பாணியில் நிறைவேற்றிக் கொண்டு செல்ல முடியும் என்ற களவாணித்தனம் தான் இதற்கு மூல காரணமாக அமைந்திருக்கிறது.

ஏன் தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைந்தது?

இந்திய நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் தலை தூக்கிய காலகட்டத்தில் 1970, 1980, 1990 -களில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியால் கண்டுபிடிக்கப்பட்ட திட்டம் தான் மக்கள் தொகை பெருக்கம் என்பதாகும். இதைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் (Family Planning Scheme) என்ற ஒன்றை அரசு அறிவித்தது.

இத்திட்டத்தை விரைவாக அமல்படுபத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடும் கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. தமிழ்நாடு மாநில அரசாங்கமோ ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் பொறுப்பில் இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஒப்படைத்து முடுக்கி விட்டது.

வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமக் காவலர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், இன்ன பிற துறை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட உண்மைப் பணிகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு குடும்பக்
கட்டுப்பாடு திட்டத்திற்கு ‘ஆள் பிடிப்பது’ ஒன்றே பிரதானப் பணி என்று வாரந்தோறும் – மாதம் தோறும் ‘இலக்கு’ நிர்ணயிக்கப்பட்டன.

இலக்கினை எட்டாத அலுவலர்கள்/ஆசிரியர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மாவட்ட ஆட்சியர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள். பலரின் பதவி உயர்வுகளை தடுத்து நிறுத்தினார்கள். இத்தருணத்தில் அலுவலர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
அதருணத்தில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான ஆட்களை திரட்டித் தரும் புரோக்கர்கள் தமிழ்நாடு எங்கும் நிறைந்து வழிந்தனர்.

ஒரு கேசுக்கு (அதாவது குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு அழைத்துவரப்படும் நபருக்கு) ஒரு தொகையை புரோக்கர் அறிவிப்பார். தண்டனைகளிலிருந்து தப்பிக்க வழி இன்றி அலுவலர்கள்/ ஆசிரியர்கள் ‌ தமது சொந்த பணத்தை புரோக்கர்களுக்கு வழங்கி அந்தக் ‘கேசு’களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். மிகுந்த இழிந்த தொழிலை செய்தார்கள் அலுவலர்கள். தான் அழைத்து வந்த நபர் என்பதற்கான சான்றினை மருத்துவரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அச்சான்றுகளை மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து தாம் எவ்வளவு இலக்கினை எட்டி இருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும். ‌எவ்வளவு பெரிய கொடுமை?
பாருங்கள்! இதன் காரணமாகவே அக்காலக் கட்டத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ‘எங்களை ஈடுபடுத்தக் கூடாது; மக்களாக மனமுவந்து செய்ய வேண்டிய பணியை எங்கள் மீது திணிக்கக் கூடாது…’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து பெரும் போராட்டங்கள் நடத்தி அப்பணியில் இருந்து விடுதலை பெற்றுக் கொண்டார்கள்.

நாம் இருவர்; நமக்கு மூவர்! ஒன்றிற்குப் பிறகு இடைவெளி கொடுங்கள்; இரண்டிற்குப் பிறகு இப்பொழுது வேண்டாம்; மூன்றிற்குப் பிறகு எப்பொழுதுமே வேண்டாம்!- இதுதான் திட்டம் துவங்கிய காலத்தில் முதல் கட்ட முழக்கம்! அதன் பிறகு ‘நாம் இருவர்; நமக்கு இருவர்!’ – என்ற முழக்கம் சில காலம் நீடித்தது. அதன் பிறகு ‘நாம் இருவர்; நமக்கு ஒருவர்’! என்ற முழக்கத்தைத் தமிழ்நாடு வந்தடைந்தது.

நாளடைவில் இத்திட்டத்தை அரசாங்கத் தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ நிர்பந்தப்படுத்தாமலேயே, மக்கள் தத்தம் அறிவார்ந்த மனப்போக்கினை வளர்த்துக் கொண்டு சுய கட்டுப்பாடுக்கு வரலாகி, குழந்தைப் பேற்றினை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் அவர்களாகவே தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்
களில் சுருக்கிக் கொண்டார்கள். இதுதான் தமிழ்நாட்டின் நிதர்சனம்.

தமிழ்நாட்டு நிலைமை இப்படி இருக்கின்ற பொழுது, உ.பி., ம.பி., பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக குறையவில்லை.  இம்மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் குழந்தை பிறப்பு விகிதத்தைவிட தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் வடநாட்டில் வேலை இன்றி தமிழ்நாட்டைத் தேடி ஏழைப்பட்ட இளம்தொழிலாளர்கள் நாள்தோறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரண்டு இறங்கிய வண்ணம் உள்ளனர்.

ஆக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுமானால் தமிழ்நாடு உட்பட தென் மாநில பிரதிநிதிகளின்  எண்ணிக்கையில் சுருங்கிவிடும். இது ஒன்றிய அரசின் திட்டங்களை நிறைவேற்றியமைக்கான கடும் தண்டனையாகவே பாவிக்கப்படல் வேண்டும்.

காவிக் கும்பலின் நரித்தனத்தை முற்றாகப் புரிந்து கொண்டு அவர்கள் கொண்டு வந்த மசோதாவை தோல்வியுறச் செய்து அளித்த – முகத்தில் கரி பூசிய – வழங்கிய செருப்படி தக்க தருணத்திலானதே! இப்பெரும் பணியை ஆற்றிய அனைத்து தரப்பினரையும் வாழ்த்துவோம்!

ஏப்ரல் 23 நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், மோடி அமித்ஷா தேர்தல் ஆணையம் நீதித்துறை அனைத்தும் ஒரு கூட்டணியாக அமைந்து கொண்டு தில்லுமுல்லு மோசடிகளில் கடந்த காலங்களில் பல மாநிலங்களில் வெற்றிகளை அபகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டிலும் அது நிகழாது என்று யாரும் மிதப்பாக ஒதுக்கி விட முடியாது! எனவே அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வேண்டும்.

எனினும் மக்களின் தற்காலிக விடியலுக்காகவாவது பாசிச எதிர்ப்பு சக்திகளின் ஒருங்கிணைவோடு ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவது மட்டுமே இந்திய நாட்டு உழைக்கும் மக்களுக்கு தற்காலிக தீர்வாக அமைய முடியும்! அதுவல்லாமல் சிறு வித இன்பங்களில் மூழ்கி முத்தெடுக்க எண்ணுவது சிற்றின்பத்தை தணிப்பதாகவே அமையும்! எனவே, ஜனநாயகக் கூட்டரசு நிறுவுவதை நோக்கி மக்களை அணி திரட்டி பயணிப்போம் வாரீர்!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here