தென் அமெரிக்கா கண்டத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்த வெனிசுலாவின் அதிபரான மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைதுக்கு எதிராக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கண்டனக் குரல்களும், உழைக்கும் மக்களின் போராட்ட எதிர்ப்பலைகளும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறு அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்ற கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் ஒழித்துக் கட்டுவதில் உளவுத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

உலகின் பெரிய போலீசுக்காரனாக தன்னை அறிவித்துக் கொண்டு எல்லா நாடுகளிலும் ’ஜனநாயகத்தை’ காப்பாற்றுவதற்கும், அந்த நாட்டின் கனிமவளங்கள், இயற்கை வளங்கள் அனைத்தையும் தன்னுடைய சூறையாடலுக்கு அனுமதிக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதற்கும் தனக்கு உரிமையுள்ளதாக அமெரிக்க மேல்நிலை வல்லரசு கருதிக் கொண்டு வெறியாட்டம் போட்டு வருகிறது.

அமெரிக்காவின் கொலைகார உளவுப் படையான சிஐஏ பற்றி சுருக்கமான சில தகவல்களை பார்ப்போம்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 2 ஆண்டுகளில் 1947ல் சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்டது. அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்படும் கம்யூனிச இயக்கங்களையும், அதன் தலைவர்களை அழிப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை ஒழிப்பது என்பதுதான் சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம். இதற்கு பின்னர் சி.ஐ.ஏ. அரங்கேற்றிய சில ஆட்சி மாற்றங்கள்:

  • கொரிய யுத்தத்தில் சோசலிச சக்திகளுக்கு எதிராக கொரில்லா படை!
  • 1954-கவுதமாலாவில் முற்போக்காளர் ஜேக்கப்போ அர்பெனெசின் ஆட்சி கவிழ்ப்பு.
  • 1949- சிரியாவில் ஆட்சி மாற்றம்
  • 1949-53- அல்பேனியாவில் சோசலிச ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
  • 1961- சோவியத் யூனியனின் உதவியை கோரிய ஒரே காரணத்துக்காக காங்கோ குடியரசின் பாட்ரிஸ் லுமும்பா ஆட்சி கவிழ்ப்பு/ லுமும்பா படுகொலை.
  • 1964- பிரேசிலில் இடதுசாரி ஆதரவாளர் ஜோவோ கவுலர்ட் ஆட்சி கவிழ்ப்பு
  • 1966- கானாவில் வலதுசாரி அரசு உருவாக்குதல்
  •  நிகரகுவா – சாண்டினிஸ்டா இடதுசாரி சக்திகளுக்கு எதிராக சதி வேலைகள்
  • 1971-பொலிவியா- ஜுவான் ஜோஸ் ஆட்சி கவிழ்ப்பு
  • 1973-இராக் – அப்தல்-கரிம் காசிம் ஆட்சி கவிழ்ப்பு
  • 1980-89- போலந்து- சோசலிச ஆட்சி கவிழ்ப்பு.
  • ஈரான்-இராக் யுத்தம்- இரு தரப்புக்குமே ஆயுதங்கள் வழங்கி ஒருவருக்கொருவர் அழித்து கொள்ள திட்டம்.
  •  1980-89-ஆப்கானிஸ்தானத்தில் நஜிபுல்லா ஆட்சியை கவிழ்க்க தாலிபானாக பரிணமித்த முகாஜிதீன் அமைப்பை உருவாக்கியது- இதன் பல விளைவுகளில் ஒன்றுதான் பின் லேடன்.

இந்த பட்டியல் மிக நீளமானது. இன்று வரை சிரியா/ ஈரான்/ பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் மட்டுமல்ல; லத்தீன் அமெரிக்காவில் வெனிசுலா/ பொலிவியா/ பிரேசில் போன்ற தேசங்களில் இடதுசாரி என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சிகளுக்கு எதிராகவும் சி.ஐ.ஏ. மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க சிஐஏ போலவே இந்தியாவில் செயல்படுகின்ற உளவுப் படைகளான ரா மற்றும் ஐபி, பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள என்ஐஏ ஆகியவையும் இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுவது அம்பலமாகி வருகிறது.

பார்ப்பன இந்திய தேசியத்துக்கு எதிராக போராடுகின்ற வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் துவங்கி நக்சல்பாரி கம்யூனிச இயக்கங்கள் மீது வரை மேற்கண்ட உளவுத்துறையை கையாண்டு கொடூரமான வேட்டையை நடத்தி வருகிறது.

இதன் உதவியுடன் மார்ச் 2026-க்குள் நக்சல்பாரி அமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்கு உள்துறை அமைச்சரான அமித்ஷா-மோடி கும்பல் வெறி கொண்டு அலைகிறது. அவர்களே முன் வைக்கின்ற சட்டம் ஒழுங்கு, நீதி, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவை முன்வைக்கின்ற எந்தவிதமான விசாரணை முறைகளையும் அவர்கள் மதிப்பது கிடையாது. குற்றவாளிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் சுட்டுப் பொசுக்குவதற்கு முழு உரிமை உள்ளதாக கருதிக் கொள்கிறார்கள்.

படிக்க:

 தொடரும் நக்சல் வேட்டை; மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்தியப் புரட்சிக்கு பின்னடைவா?

 வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்

நக்சல்பாரி அமைப்பினர் வேலை செய்யக்கூடிய மக்கள் மத்தியில் சென்று அந்த அமைப்பை பற்றிய அவதூறு பரப்புவது; அதில் பலியாகின்ற ஒரு சிலரை தனது கைக்கூலிகளாகவும், உளவு மற்றும் துப்பு கொடுப்பவர்களாக மாற்றுவது; அவர்களுக்கு உரிய சன்மானங்களை கொடுத்து எதிர்புரட்சி வேலைகளில் ஈடுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் இத்தகைய ஈனத்தனமான செயல்களை செய்து வருகிறது ரா, ஐ பி மற்றும் என்ஐஏ.

இந்த வழிமுறைகளின் மூலமாக புரட்சிகர அமைப்பின் தலைமையிலேயே இருந்த சில துரோகிகளை சரணடைய வைப்பது; அவர்களைக் கொண்டு அமைப்பின் மீது அவதூறு பரப்புவது; அவநம்பிக்கையை உருவாக்குவது என்ற வழிமுறைகளை கையாளுகின்றனர். மற்றொருபுறம் உயிருக்கு பயந்த கோழைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிர் கொள்ள முடியாமல் பின்வாங்கியவர்களை வைத்து மீண்டும் அமைப்பிற்குள் ஊடுருகின்ற சதி செயலை செய்கின்றனர்.

இந்த வகையிலேயே இந்திய கொலைகார ராணுவம் ஆபரேஷன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை நர வேட்டையாடுவதற்கு இத்தகைய உளவாளிகளை உருவாக்குகின்ற கேடுகெட்ட செயலில் இறங்கினர். அதற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட ரா, ஐபி மற்றும் மாநில அளவிலான உளவுப் படையினர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள என்ஐஏ ஆகியவை கூட்டு சேர்ந்து இயக்கத்திற்கு உள்ளேயே உளவாளிகளை உருவாக்கினர்.

இவர்கள் துணையுடன் ஆப்ரேஷன் காகரில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தலைவர்களை கொள்வதற்கு அந்த இயக்கத்திற்கு உள்ளேயே துரோகிகளையும், உளவாளிகளையும் உருவாக்கி அவர்களின் தங்கும் இடங்கள், முக்கியமான பாதுகாப்பு இடங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து கொத்துக்கொத்தாக கொன்றொழித்து வருகின்றனர்.

இந்த வழிமுறைகளைக் கையாண்டு முன்னணியாளர்களை கண்டுபிடித்து படுகொலை செய்வது விசாரணைக்கு கொண்டு சென்று கொடூரமான முறையில் சித்திரவதைகளை செய்வது ஆகியவையும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்களில் நேர்மையானவர்களால் அம்பலப் படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்து ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராடி வருவதால் தான் ஓரளவிற்கு இது அம்பலமாகிறது. ஆனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை புரட்சிகர அமைப்புகளுக்குள் ஊடுருவி அதனை சீரழிப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழக உளவுத்துறை மற்றும் இந்திய ஒன்றியத்தின் உளவுத்துறை முயற்சி செய்து வருகிறது.

குறிப்பாக ஸ்டெர்லைட் என்ற கொலைகார கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடத் துவங்கிய காலம் முதல் தமிழகத்தின் உளவுப் படையான க்யூ பிரிவு இந்த வேலையை செய்யத் துவங்கி விட்டது.

புரட்சிகர அமைப்புகளில் இருந்து செயல்பட்டு பின்வாங்கிய சிலரை தொடர்பு கொண்டு மீண்டும் அந்த அமைப்பிற்குள் சென்று செயல்படுங்கள்; அவர்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு கொடுத்து வாருங்கள்; அதற்குரிய சம்பளத்தையும், சில சன்மானங்களையும் நாங்கள் தருகிறோம் என்று ஒரு மாவட்டத்தில் உளவுத்துறை சில முன்னாள் தோழர்களை அணுகியுள்ளது.

அதுபோலவே வேறொரு மாவட்டத்தில் உங்கள் அமைப்பிலிருந்து பிளவுபடுத்திக் கொண்டு சென்றவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் அமைப்பிற்குள் நாங்கள் ஊடுருவி விட்டோம் என்று உளவுத்துறையைச் சார்ந்த சிலர் நைச்சியமாக எமது தோழர்களிடம் கூறியுள்ளனர்.

ஏற்கனவே எமது மனித உரிமை அமைப்பிலிருந்த போது உளவுத்துறை மற்றும் போலீஸுடன் நெருக்கமாக இருந்த காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மீண்டும் தன்னை முற்போக்குவாதி என்று காட்டிக் கொண்டு உலாவரத் துவங்கியுள்ளார்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு உருவாக்கிய சிஐஏ முதல் தமிழகம் உருவாக்கிய கியூ பிரிவு வரை புரட்சிகர அமைப்புகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் ஒடுக்குவதற்கு ஒரே கண்ணோட்டத்தில் சிந்திக்கிறார்கள்.

இத்தகைய உளவுத்துறை சதிகள், காட்டிக் கொடுப்புகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கு பொருத்தமான அரசியல், சித்தாந்த கண்ணோட்டத்தையும், போராட்ட வழிமுறைகளையும் மேற்கொள்வது தான் கம்யூனிச அமைப்புகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் செயல்பட வேண்டியது அவசியமாகும்.!

புரட்சிகர இயக்கங்களுக்குள் உளவுத்துறை ஊடுருவுவது பல்வேறு நாடுகளிலும் நடந்து வருகின்ற நிகழ்ச்சிப் போக்கு தான் என்ற போதிலும் உளவாளிகள் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பான, எஃகு தன்மை கொண்ட போல்சவிக்மயமான அமைப்பைக் கட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

கணேசன்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here