பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், அதாவது பாராளுமன்ற ஜனநாயகம் எந்த விதமான சிக்கலும் இல்லாமல், பிற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் ’ஜனநாயகத்தின்’ தாயகமான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் நிலவுவதைப் போல செயல்படுவதாக தேர்தல் அரசியலை ஆதரிப்பவர்கள் முன் வைக்கிறார்கள். இந்தியாவில் முதலாளித்துவ பாராளுமன்ற முறை நீடிப்பதாக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் கருதிக் கொண்டு இனிமேல்தான் ’இந்திய ஜனநாயகத்திற்கு’ ஆபத்து என்பதைப் போல கூச்சலிடுகிறார்கள்.
இந்தியப் பாராளுமன்றம் அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும், இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனை நிறைவேற்றிக் கொள்வதற்கு பொருத்தமான நம்பகமான சக்திகளை கொண்டும் நடத்தப்படுகின்ற ஒரு அரட்டை மடமாகவே நீடித்து வந்தது.
1947 முதல் 2008 வரை இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை போலி ஜனநாயக கட்டமைப்பின் கீழ் பல்வேறு ஏமாற்றுகள், பித்தலாட்டங்கள் புரிந்து வந்தது. 2008 க்கு பிறகு உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகள் தூக்கியெறியப்பட்டு பாசிச அடக்குமுறை கொண்ட புதிய வகையிலான கும்பலாட்சி நடைபெறத் துவங்கியது. அப்போது முதல் இந்தியாவில் நிலவுகின்ற பாராளுமன்றத்தின் உள்ளடக்கமானது போலி ஜனநாயக கட்டமைப்பு என்பதிலிருந்து மாறி பாசிசம்×எதிர்பாசிசம் என்ற வகையிலான புதிய உள்ளடக்கம் கொண்டதாக மாறிவிட்டது.
இதனால்தான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார கும்பலை பயங்கரவாதிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகள் என்றும் அம்பலப்படுத்தி பேச முடிகிறது.
இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் உண்மையான தன்மையை உணராமல் இன்றளவும் இந்தியாவில் ஜனநாயகம் பூத்துக்குலுங்கி கொண்டிருப்பதாக கருதிக் கொண்டிருப்பவர்வர்கள்தான் தேர்தல் வாக்கு சீர்திருத்தம் போன்றவற்றில் மிகவும் அச்சமடைந்து இந்தியாவின் ஜனநாயகமே இனிமேல் ஒழிந்து விடும் என்றெல்லாம் பேசத் துவங்கி விட்டனர்.
படிக்க:
♦ சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியா? குடியுரிமை திருத்தப்பணியா?
♦ பீகார் இறுதி வாக்காளர் பட்டியலிலும் தொடரும் முறைகேடுகள்!
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவரான பரகலா பிரபாகர் முதல் நாடாளுமன்ற இடதுசாரிகளான சிபிஐ, சிபிஎம் கட்சியினர் மற்றும் சிபிஐ (எம்.எல்) ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் வாக்குத் திருட்டு நடந்து வருவதாகவும், எனவே வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும், அதுவே ’இந்திய ஜனநாயகத்தை’ பாதுகாக்கும் ஒரே வழி என்றும் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமானது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை தூக்கியெறிந்து விட்டு பாசிச உள்ளடக்கம் கொண்ட அரசு கட்டமைப்பை உருவாக்கி ஆட்சியதிகாரம் செய்து வருகிறது என்பதை மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது.
மேற்கண்ட சூழலில் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலானது ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய அமைப்பு முறைகள் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தவே செய்யும் என்பது பாசிசம் பற்றிய அரிச்சுவடி புரிந்தவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும். ஆனால் பாஜகவை பாசிசக் கட்சி என்று கூட வரையறுக்காத சிபிஐ, சிபிஎம் போன்றவை இந்த பாசிசத்தை நவ பாசிசம், எதேச்சதிகாரம் என்றெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்கின்றன. ஆர்எஸ்எஸ் என்ற பார்ப்பன பாசிச கும்பல் இயக்கும் பாஜகவின் ஜனநாயக விரோத பாசிசத் தன்மையை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.
இந்த சூழலில், இந்தியாவில் நிலவுகின்ற பாராளுமன்றத்தை இவ்வாறு பயன்படுத்திக் கொண்டே பாசிச பயங்கரவாதத்தை முழுமையாக நிலை நாட்டுவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கு தேர்தல் சமயத்தில் அவர்களை வெற்றி பெற விடாமல் தடுப்பதற்கு பாராளுமன்ற ஜனநாயகத்தை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாமே ஒழிய அதுவே நிரந்தரமான தீர்வாகாது. அது மட்டுமல்ல. பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒரு மக்கள் எழுச்சியின் மூலம் தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்பதே இன்று நாடு முழுவதும் மக்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தியாகும்.
எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பதற்கு என்ன அரசியல் அடிப்படை? ஏன் இவ்வாறு கண்ணேதிரே மக்களின் ஜனநாயக உரிமைகள் என்று அவர்களே சொல்லிக் கொள்ளக்கூடிய வாக்குரிமையை பறித்தெடுக்கிறார்கள். இதற்கும் பாசிசத்திற்கும், என்ன உறவு என்பதை எல்லாம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு இந்த அரிய தருணத்தை பயன்படுத்துவோம்.
வாக்குரிமையை பாதுகாப்பது என்ற குறுகிய வரம்பைத் தாண்டி வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறித்தெடுக்கின்ற பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்பாளர்கள் அனைவரையும் ஒரே அணியின் கீழ் திரட்டுவதற்கு தொடர்ந்து போராடுவோம்.
பாஜகவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு திமுகவை ஆதரிப்பதோ, திமுகவை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பாஜகவை ஆதரிப்பதோ மேற்கண்ட ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை உரக்கச் சொல்வோம். வாக்குரிமை பறிப்பு என்பது பாசிச அடக்குமுறையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்துக் கொண்டு பாசிசத்தை வீழ்த்துவதற்கு போராடாத ஊசலாட்ட சக்திகளை, அதன் தலைமையை அம்பலப்படுத்துவோம்.
வாக்குரிமை பறிப்புக்கு எதிராக, பல்வேறு ஜனநாயக உரிமைகளை பறித்து பாசிச பயங்கரவாத ஆட்சி நடத்தும் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக கீழிருந்து மக்கள் எழுச்சியை உருவாக்குவதற்கு அனைத்து வகையான போராட்டங்களை கட்டியெழுப்புவோம்.
◾புதிய ஜனநாயகம் (நவம்பர் 25) தலையங்கம்







