எல்லா சொற்களுக்கும் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்வது முக்கியமானது. ஒரே சொல் கூட, ஒரே வாக்கியம் கூட பல்வேறு பொருள்களையும் நோக்கங்களையும் கொண்டிருக்கும்.

வைதீக இந்துப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக மாற்று சமய, தனிச்சமய நெறிகளைப் பேசுவது ஒரு முக்கியமான உத்திதான். அத்தகைய நெறிகளை பலரும் இங்கே முயற்சி செய்திருக்கிறார்கள். அதை வரவேற்கவே செய்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக வள்ளலார் வழி. வைகுந்தர் வழி, முருக வழிபாடு, ஆசிவகம் உள்ளி்ட்ட பல்வேறு போக்குகளினூடாக இது பலரால் வெளிப்பட்டிருக்கிறது. ஆரிய மறுப்பு சைவக் கோட்பாடு போன்றவற்றையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற வழிமுறைகளை முன்வைத்த பலர் மிக எளிதில் பிறகு “இந்து மகாசமுத்திரத்தில்” கலந்துவிடுவதையும் நாம் காணமுடிகிறது, கர்நாடக லிங்காயத்துகளுக்கும்கூட இன்று அதுதான் நடந்திருக்கிறது. மதம் என்கிற யானையின் மீது ஏறிவிட்டால் அப்புறம் இறங்குவது கடினம்.

இப்போது பேசப்படும் புதுரக தமிழ் இந்துத்துவம், இன்றைய வைதீக இந்து ராஷ்ட்டிரக் கனவுக்குள் தமிழ்நாட்டை அடகு வைப்பதற்கே உதவும்.

திராவிடம், கம்யூனிசம், தலித்தியம் ஆகியவற்றை வீழ்த்துவதே குறிக்கோள் எனக் கிளம்பிய சில சாதிவெறியர்களின் வெற்றிதான் இன்றைய ‘தமிழ் இந்து தமிழ்த்தேசியம்’.

சைவ சமயமே தமிழர் சமயம் என்று கூறத்தொடங்கிவிட்டால், கிறிஸ்தவர்களாகவும் முஸ்லீம்களாகவும் உள்ளவர்களை மதம் மாறச்சொல்லுவதில்தான் அது முடியும்.

மதத்தில் எப்படி தாயகத்தைப் பேசமுடியும்?

கிறிஸ்தவமும் இஸ்லாமும் எந்த நாட்டில் பிறந்திருந்தால் என்ன? தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆகமுடியும் என்றால், அல்லாவும் பரமபிதாவும் தமிழ்நாட்டில் ஏன் கடவுளாக ஆகமுடியாது? – முதலில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா இப்போது?

தமிழர்கள் பல்வேறு மதங்களில் இருக்கலாம் என்கிற அடிப்படை உண்மையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?

தமிழர்கள் எந்தச் சமயத்தவராக இருந்தாலும், அவர்கள் இந்துவோ கிறிஸ்தவரோ முஸ்லீமோ பெளத்தரோ சமணரோ, அவர்களை தேசிய இன அடிப்படையில் தமிழர்களாக ஒன்றிணைக்கவேண்டும் என்பதுதான் ஓர் தமிழ்த்தேசியக் கோட்பாடாக இருக்கமுடியும்.

சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு எதிராக தலைவர் பிரபாகரன் தமிழ்ச் சைவ இனவாதத்தை முன்வைக்கவில்லை. சொல்லப்போனால் தமிழீழப் பகுதிக்குள் வசிக்கும் சிங்களர்களையும் உள்ளடக்கிய தேசிய அரசியலையே அவர் முன்மொழிந்திருந்தார்.

உண்மையில், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்கிற வாக்கியம் ஒரு கள யதார்த்தம் தொடர்பான வாதமல்ல. நிஜத்தில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் அந்த அடையாளத்தையே தங்கள் மத அடையாளமாக தமிழ்பேசும் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அது நிதர்சனம்தான்.

எனவே அது வரலாறு தொடர்பான வாக்கியம். இந்து அடையாளம் நமக்கு இழிவை உருவாக்குகிறது என்பதால், அந்த அடையாளத்தை ஏற்றுக்கொண்டதால் வரலாற்று ரீதியில் நமது இனம் சரிவைக் கண்டிருக்கிறது என்பதால், அதை நமது முன்னோடிகள் எதிர்த்தார்கள்.

இன்று காலம் மாறியிருக்கிறது, அந்த உத்தி பலன் தரவில்லை. எனவே மாற்று மத அடையாளங்களை முன்வைப்பதில் தவறில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்காக, எந்த சைவமும் வைணவமும் இன்றைய இந்து அடையாளத்தை சேர்ந்து உருவாக்கினவோ அந்த சைவத்துக்கும் வைணவத்துக்கும் அப்படியே திரும்பிப் போய்விடமுடியுமா?

அப்படி போகவேண்டும் என்று முடிவுசெய்பவர்களின் உரிமையை நாம் மறுக்கமுடியாது என்றாலும், ஏற்கனவே இந்த வைதீகச் சாக்கடையிலிருந்து வெளியேறிவிட்டவர்களை மீண்டும் தாய்மதத்துக்குத் திரும்பு என்று கூறமுடியுமா?

அப்படிக் கூறினால் அது என்ன அரசியல்?

இந்துவத்துவ சக்திகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கிறிஸ்தவ பழமைவாதிகளும் பெளத்த அடிப்படைவாதிகளும் உலகில் மதங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும்போது, நாம் மதத்தைத் தாண்டிய மனிதத்தை முன்னிறுத்தியே அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்கமுடியும்.

ஒருவேளை தந்திரோபாயமாக மத அடையாளத்தை கையிலெடுக்க விரும்பினால், அதுவும் மதவெறுப்புக்கும் பிளவுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும். அதைவிட அது பொது எதிரியை கதிகலங்க வைக்கவேண்டும்.

ஆனால், இன்று நடப்பது என்ன?

நாம் தமிழர் கட்சியும் தெய்வத் தமிழ்ப் பேரவையும் முன்னெடுக்கும் அரசியல் யாருக்குச் சேவை செய்யப்போகிறது என்பதை காலம் சீக்கிரமாக உணர்த்திக்காட்டும்.

தமிழின் தனித்தன்மையை முன்னிறுத்தி அதையே அரசியலாக ஆக்கிய திராவிட இயக்கம்தான் முதல் எதிரி என்றும், அதை வீழ்த்த தமிழின் தனித்தன்மையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஆரியத்துடனும் கைகோர்க்கலாம் என்கிற முடிவுக்கு இவர்கள் வந்துசேர்ந்து நீண்ட நாட்களாகிவி்ட்டது.

அதையும் விரைவில் அறிவிப்பார்கள். அல்லது அறிவிக்கவைக்கப்படுவார்கள்.

ஏமாளிகள் அதுவரை ஏமாந்து நிற்கட்டும். சுட்டிக்காட்டும் எங்களைப் போன்றவர் மீது வழக்கம் போல வசைபாடுபவர்கள் பாடட்டும்.

  • ஆழி செந்தில்நாதன்

தன்னாட்சி தமிழகம்.
முகநூல் பக்கம்.

1 COMMENT

  1. அருமையான தெளிவான கறுத்து நன்றி ஆழி செந்தில்நாதன் அவர்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here