ரஜினி படம் ரிலீஸாகும்போதெல்லாம் கூடவே சேர்ந்து ஒரு புரளியும் வரும்.
‘ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார்’
ஈயம் பூசுன மாதிரியும், பூசாத மாதிரியும், ரஜினியும் ஒரு ஸேட்மென்ட் விட்டு, டெம்போ கூட்டுவார்.

ஒன்றே முக்காலடி திருக்குறளுக்கு பரிதிமாற்கலைஞரும், மணக்குடவரும், காலிங்கராயரும் எழுதியதுபோல ஊடகங்கள் புதுப் புது வியாக்கியானங்கள் எழுதும். behind d lines பார்த்துவிட்டு, ‘ இப்படியெல்லாமா பேசினேன்? ‘ ரஜினியா அசந்துபோவார்.

‘ஒரு வார்டு கவுன்சிலராக மாட்டோமா? ‘ கனவில் இருக்கும் above 50 ரஜினி ரசிகன், ‘சும்மா கிழி’ கேட்டு, ‘பாரேன் தலைவர், எடப்பாடி ஸ்டாலினையெல்லாம் தெறிக்க வுடப்போறார்! ‘ செகண்ட் ஷோ முடிந்து வந்து படுத்தபோது கனவு கண்டான்.

‘மரணம் மாசு மரணம், டஃப்பு தரணும்’ கேட்டபோதும் இதே கதைதான்.’ தலைவர் டஃப் தர போறார்! ‘குப்புறப்படுத்து கனவு கண்டான்.

அண்ணாத்த இன்ட்ரோ சாங்குக்கு இப்படி எந்த பெப்புமில்லை !
எங்களூர் ரஜினி ரசிகர் தன் பழக்கடையை கட்டிக் கொண்டிருந்தார்.
‘அண்ணாத்தே பாட்டு கேட்டீங்களா?’ அவர் வயிற்றெரிச்சலை மூட்டினேன்.
‘அட, போங்க அண்ண , நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க!’ கசந்தார்.

‘கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு!’
தலைவர் கூப்பிடுறாரே! என்றேன்.

ஆயுத பூச வரப்போவுது. ‘ஆப்பிளுக்கு ஆர்டர் கொடுக்கணும்ணா!’ என்றார். இப்படி சோர்ந்துட்டா எப்படி?

‘உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்’
தலைவர் தளர்ல. நீங்க சோரலாமா?

‘ வெட்டிப் பசங்கண்ணா, முப்பதாயிரம் கொடுத்தீங்கன்னா, உங்களை புகழ்ந்து பாட்டு எழுதுவாங்கண்ணா! மாதுள விலை குறைஞ்சிருக்கு ஒரு கிலோ போடவா? ‘

ரசிகர் தன்னைப் பீடித்த காய்ச்சலிலிருந்து வெளியே வந்துட்டார்.

‘அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு!’

எஸ்பிபி தம் கட்டி பாடியும் பாட்டு
எந்த மேஜிக்கும் செய்யவில்லை.

இந்த பின்னணி எதுவுமே இல்லாத
2k kids ரெண்டு, ஷட்டுல் முடிஞ்சி வெளியே வருகிறார்கள்.

ஹெட்ஃபோனில் –
‘அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
ஸ்டைலு!’

‘வயசானாலும் தலைவரோட ஸ்டைலே தனிதாண்டா! ‘ வியக்கிறார்கள்.

‘மாரில் ஈட்டி வாங்கி போரில்
மோதும் மறத்தமிழ் இனமடா’
– ஹெட் ஃபோன் சிலிர்க்கிறது.

‘உள்ளாட்சி தேர்தல் வேற வரப்போவுது. ஏதோ தலைவர் சொல்றார்டா!’ – 2k kids .

‘இனி, வயசுக்கு வந்தா என்ன?
வராட்டிபோனா என்ன? ‘

பழைய பழக்கடைக்கார ரசிகர்
தலையில் அடித்துக் கோள்கிறார்!

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here