மோசடியில் ஈடுபடு; கோடிகளை குவித்துக்கொள்; கூட்டாளிகளை காட்டிக் கொடுத்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிடு!” – இதுதான் லக்கி பாஸ்கர் படத்தின் திரைக்கதை.

துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது . “வாத்தி” உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி தான், இந்த படத்தின் இயக்குனர். பங்குச்சந்தை ஊழல் மன்னனான ஹர்சத் மேத்தாவின் கிரிமினல் குற்றங்களை மையப்படுத்தி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

கதையல்ல நிஜம்!

இந்தக் கதை 1989இல் நடக்கிறது. அந்தக் காலகட்டத்தில் ஹர்ஷத் மேத்தா நடத்திய பங்குச் சந்தை ‘திருவிளையாடல்களுக்கு’ துணை நின்றவர்கள் வங்கி அதிகாரிகளும் பங்குச்சந்தை புரோக்கர்களும்தான். இவர்களின் கள்ளக் கூட்டால் பங்குச் சந்தையில் பணத்தை தொலைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இத்தகைய துயர கதையைத்தான் கொண்டாட்டப் படமாக எடுத்து உள்ளார்கள்.

ஹர்ஷத் மேத்தாவின் வழிமுறையில் பங்குச்சந்தை ஊழலில் முழுகி, வங்கிப் பணத்தை மடைமாற்றி, அதில் தனக்கான பங்காக நூறு கோடியை சட்டவிரோதமாக குவித்த ‘ஹீரோ’தான் பாஸ்கர்.

திட்டமிட்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி விட்டு, ஒரு நாளில் இதுவரை வாங்கிய மொத்த பங்கையும் தன்னால் ஊதிப் பெருக்கப்பட்ட விலைக்கு விற்றுவிட்டு, பணத்தை அள்ளும் சக கூட்டாளிகளிடமிருந்து வேறுபடுகிறான் லக்கி பாஸ்கர் .

அவர்கள் மொத்தமாக விற்பதற்கு ஒரு நாள் முன்னராகவே தகவல் தரும்படி டீல் பேசி, தனது பங்கை முன்கூட்டியே விற்று விடுகிறான். எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல், சாட்சியத்தையும் விட்டு வைக்காமல் தப்பித்துக் கொள்கிறான் பாஸ்கர்.

கிரிமினலை ஹீரோவாக்கும் நரித்தனம்!

படத்தின் துவக்கத்திலேயே ஒரு வங்கி ஊழியராக, தனது மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தவே தடுமாறும் கணவனாக, மகனின் பிறந்தநாளை ஒரு ஆண்டு கூட கொண்டாட முடியாத தந்தையாக துல்கர் சல்மானை காட்டி, படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவன் மீது ஒரு ஒரு பரிதாபத்தை கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.

கடன்காரர்களைக் கண்டு அஞ்சி ஓடும் துல்கர் சல்மான், துணிந்து வங்கி பணத்தை சட்டவிரோதமாக எடுத்துச்சென்று, கள்ளக் கடத்தலுக்கு துணை நின்று காசு பார்க்கிறார். முன்னர் துல்கர் சல்மானின் ஏழ்மையை காட்டி பரிதாபத்தை கொண்டு வந்ததன் மூலம், தற்போது அவன் செய்யும் குற்றங்களை ரசிக்கும்படி முன்வைத்து ரசிகர்களை திசை திருப்புகிறார் இயக்குனர்.

சிறு திருடன் கைதேர்ந்த கொள்ளையனாக மாறுவது போல், லட்சங்களை களவாடியவன் பல நூறு கோடிகளை களவாடும் கிரிமினலாக பரிணமிக்கிறான். தான் பணிபுரியும் வங்கியின் உயர்மட்ட தலைமை வரை ஊழலில் புரையோடி போயிருப்பதை பயன்படுத்தி கோடிகளையும் குவிக்கிறான். இதை எவ்வித உறுத்தலும் இன்றி, ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

முறைகேடான வழிகளில் கோடிகள் சேர்ந்தவுடன் துல்கர் சல்மானின் குணமும் மாறுகிறது. தனது அன்பு கணவன் மாறுவதைக் கண்டு அவனின் மனைவி சண்டை பிடிக்கிறாள். ஆடிட்டராக இருந்து தற்போது வீட்டில் முடங்கி கிடக்கும் துல்கர் சல்மானின் தந்தையும் உரிய ஆலோசனைகளை தருகிறார். “சூதாட்டத்தை ஆடுவது முக்கியமல்ல; எந்தக் கட்டத்தில் அதை நாம் நிறுத்தி விட்டு வெளியேறுகிறோம் என்பது தான் முக்கியமானது” என்கிறார்.

வில்லன் நல்லவனாகவும் ஒரு காரணம் வேண்டும் அல்லவா? பாஸ்கர் ஏற்கனவே ஊசலாட்டத்தில் இருக்கும் சூழலில், தன்னை போன்று ஊழலில் கைகோர்த்திருந்த ஒரு வங்கி அதிகாரி பாதியில் பயந்து உயிரை விடுகிறான். இந்த சாவை கண்டு பாஸ்கர் அறச்சீற்றம் கொள்கிறான். பங்குச்சந்தை ஊழலால் இந்த ஒரு கொலை தான் விழுந்ததா?

தான் ஈடுபட்டிருக்கும் ஊழலால் சமூகத்தில் தற்கொலைகள் நடப்பதை கதையில் எங்குமே காட்டவுமில்லை; பாஸ்கர் (துல்கர் சல்மான்) அதை எப்படி கடந்து போனான் என்பதை பதிவு செய்யவும் இல்லையே – ஏன்? அதைக் காட்டி இருந்தால், அந்தத் தவறுக்கும் பிராயச்சித்தம் தேடுவதாக கதையை அமைக்க வேண்டி இருக்கும் அல்லவா? பங்குச்சந்தையில் உயிரை விட்டவர்களின் குடும்பத்தினர் கால்களில் விழுந்து கதற வேண்டி இருந்திருக்கும் அல்லவா!

பல லட்சம் குடும்பங்கள் செபி (SEBI) முறைப்படுத்தும் சூதாட்டத்தால் நடுத்தெருவிற்கு வந்து விட்ட மாபெரும் துயரத்தை எச்சரிக்கையாக தவிர்த்து உள்ளார்கள். ஒருவேளை அதை காட்டியிருந்தால் பாஸ்கர் (துல்கர் சல்மான்) முச்சந்தியில் நிறுத்தி செருப்பால் அடிக்கப்பட வேண்டிய கிரிமினலாக அடையாளப்பட்டு இருப்பான் .

படிக்க: சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !

படத்தின் முடிவிலும் கூட மனம் திருந்தி குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடையவில்லை; மாறாக ரிசர்வ் பேங்கில் போட்டுக்கொடுத்து விட்டு, தன்னை மிரட்டிய சிபிஐ அதிகாரி உள்ளிட்டவர்களை சிக்க வைத்துவிட்டு, தனது தந்தையின் உதவியுடன் அமெரிக்காவிற்கு தப்பி விடுகிறான்.

இந்த இடத்தில் நமக்கு விஜய் மல்லையாவோ, நீரவ் மோடியாவோ தான் நினைவிற்கு வர வேண்டும். ஆனால் அப்படி நாம் ஒப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

பிணத்தின் மீது சென்ட் அடிக்கும் சினிமா!

முன்னர் மணிரத்தினம் திருபாய் அம்பானியை வைத்து ஒரு படத்தை (குரு) எடுத்திருந்தார். அம்பானியின் கிரிமினல் தனங்களையே ரசிக்கத்தக்கதாக காட்டும் கலையில் கைதேந்தவர்களான கதாசிரியர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒரு காம்போ கூட்டணி உருவாக்கப்பட்டது. அபிஷேக் பச்சனை கதாநாயகனாக்கி, ஐஸ்வர்யா ராயின் அழகை துணைக்கு வைத்து, ஏ ஆர் ரகுமான் கூட்டணியுடன் படமாக எடுத்து திரையிட்டும் சாதித்தார்கள்.

அதே பித்தலாட்டம் தான் லக்கி பாஸ்கரிலும் வெளிப்பட்டுள்ளது. AR ரகுமானுக்கு பதிலாக இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசையமைத்துள்ளார். லக்கி பாஸ்கரின் மனைவி சுமதியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார்.

சில்லறை தவறுகளுக்கு மட்டுமே கேட்கப்பட்ட ‘பாவ மன்னிப்பு’!

தனது நோக்கத்திற்கு துணையாக தெருவோரத்தில் பிச்சை எடுப்பவர்களையும், பாரில் நடனமாடும் பெண்ணையும் தற்காலிக கூட்டாளிகளாக்கி, அவர்களுக்கும் வாரி வழங்கும் தாராள பிரபுவாக பாஸ்கர் வலம் வருகிறான்.

வங்கியில் தனது சக ஊழியர்களுக்கும், தெருவில் வட்டிக்கு விட்டு தொழில் செய்து வரும் சேட்டுக்கும் தாராளமாக உதவிகள் செய்து நமது மனதை மயக்குகிறான். கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு கைதாகும் தனது நண்பனை லஞ்சம் கொடுத்து மீட்கிறான். தொழிலில் நொடித்துப் போன மச்சானுக்கு பண முதலீடு செய்து, தனது நண்பனை மச்சானின் பார்ட்னராக்குகிறான். இப்படி சில்லறைகளை சிதற விட்டுவிட்டு, நம் அனுதாபத்தையும் பெற்றுக் கொண்டு, 100 கோடிகளை லம்ப்பாக அடித்துக் கொண்டு பறந்தும் விடுகிறான்.

அவன் அமெரிக்காவிற்கு கொண்டு சென்று நூறு கோடி ரூபாய் பணம் யாருடையது? அமெரிக்காவில் பாஸ்கர் வாங்கும் சொகுசு ஹோட்டலுக்கான பணத்தை யாரிடம் ஏமாற்றி பிடுங்கியுள்ளான்? என்ற கேள்வியை இயக்குனர் திட்டமிட்டு தவிர்த்து விட்டார் . உழைக்கும் மக்களான நாமும் இக் கேள்வியை கண்டும் காணாமல் கடந்து செல்ல முடியுமா ?

நம் எதிரி, துரோகிகளையே நாம் கொண்டாடலாமா ?

மனதை மயக்கும் வலிமை வாய்ந்த ஊடகமாக சினிமா கோலாச்சவே செய்கிறது. புராணப்புளுகு என்றாலும், நமது முப்பாட்டன் நரகாசுரனை கொன்ற நாளையே தீபாவளி என பெயரிட்டு, நம்மையே புதுத்துணி எடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடும்படி செய்ய புராணங்களால் – பார்ப்பன கூட்டத்தால் முடிந்துள்ளது. மன்னர்கள் ஆதரவுடன் போடப்பட்டு வந்த நாடகங்களும், கூத்துக்களும் இதை வழி வழியாகவே செய்து வந்துள்ளன. இன்றும் கூட , ஆளும் வர்க்கங்களின் கையாட்களாகவே பல பிழைப்புவாத கலைஞர்கள் ‘தொழில்’ செய்கிறார்கள். கார்ப்பரேட் காவி பாசிச சேவையில் மூழ்கி முத்து எடுக்கிறார்கள்.

அந்த வகையில் கார்ப்பரேட்டுகளின் அதிநவீன கிரிமினல் தனங்களை ஊழல்களை செய்பவர்களை கூட ஹீரோவாக நம்மை ஏற்கச் செய்வதில் சினிமா ஊடகம் வெற்றி பெற்றே வந்துள்ளது. கலைபடைப்புகளும் கூட ஏதாவது ஒரு வர்க்க நலனுக்காக தான் உருவாக்கப்படுகிறது. லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் நவீன கார்ப்பரேட் கிரிமினல்களைக் கூட ஹீரோவாக்குகிறது.

  • இளமாறன்.

3 COMMENTS

  1. சரியான பதிவு. நேர்மையான இருப்பவர்கள் ஏமாளிகள், பிழைக்க தெரியாதவன் என்று காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்வதுடன், மக்களை கொள்ளையடிப்பவர் பிழைக்க தெரிந்தவர், திறமைசாலி என்று மக்களை சினிமா திசை திரும்புகிறது. இது மிகப் பெரும் அபாயம்

  2. லக்கி பாஸ்கர் திரைப்படம் கதாநாயகன் மற்றும் இயக்குனர் இசையமைப்பாளர் என இவர்களுடைய படைப்பு கார்ப்பரேட்கள் நீராமோடி லலித் மோடி விஜய் மல்லையாவை கதாநாயகர்களாக ஏற்க சொல்வதாக சொல்லும் இந்த கட்டுரை மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது அதேபோல் தீபாவளி தினத்தில் நம்முடைய முப்பாட்டன் நற்காசுரனை கொன்ற தினத்தில் நம்மை புது துணி ஸ்வீட்டு பட்டாசு வாங்கி கொண்டாட சொல்கிறது என்ற திரைப்படக் கதையும் தீபாவளியும் இணைத்து சிறப்பானதொரு கட்டுரையை வடிவமைத்த இளமாறன் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோன்

  3. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்றார் மாவோ!
    இன்றைய இந்திய கலை இலக்கியவாதிகள் மக்களை கொள்ளை அடிப்பதே திறமையானதாக படம் பிடித்து காட்டுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here