அன்பின் மாண்பும்
மதவெறியின் கீழ்மையும்

மனிதர்கள் அழிந்துவிடுகிறார்கள்.
மதம் எனும் பெயரில் அவர்களிடம் வளர்த்துவிட்ட வெறுப்பு மட்டும் அழிவதில்லை. அது அடுத்துவரும் தலைமுறைகளிடமும் வளர்ந்தவாறு இருக்கிறது.

அன்பை பரப்புவதாகக் கூறும் மதம்
ஏன் வெறுப்பை வளர்க்கிறது? மதம் என்பது தனி மனித நம்பிக்கையாக , இறையச்சமாக இருக்கிறவரை பிரச்சனையில்லை. மத நம்பிக்கை அடிப்படைவாதமாக மாறுகிறபோதுதான் பிரச்சனை உருவாகிறது.

பிற கடவுளர்களை இழிவுபடுத்துதல்,
பிற மத நம்பிக்கைகளை, பண்பாடுகளை அவமதிப்பது, கேவலப்படுத்துவதென மதநம்பிக்கை, மதவெறியாக பரிணமிக்கறபோதுதான் அடிப்படைவாதம் உருவாகிறது.

பிறரது வழிபாட்டுத் தலங்களை சிதைப்பது, பிற மதத்தவரை அழிப்பது, இவையனைத்தும் இறைவனுக்கு செய்யும் புனிதக் கடமையாக மாறுகிறபோது, அடிப்படைவாதம் பயங்கரவாதமாகப் பரிணாமம் கொள்கிறது.

இத்தகைய அற விழுமியங்களற்ற மதப்பரவலால், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வெறுப்பு கைமாற்றித்தரப்படும் முயற்சிகள் வளர்ந்தபடி இருக்கின்றன.

மதங்களின் வரலாறு பெரும்பாலும் போர்களின் வரலாறாகவே இருக்கிறது.
மனித வரலாறெங்கும் போர்களே நிறைந்துள்ளன.

உரிமையையும் உடைமையையும் இழந்து நின்ற பூர்வீக அமெரிக்கர்களிடம்
‘எங்கள் வழிகளையும், பண்பாட்டையும் , கலையையும் ஏசு கிறித்துவின் மதத்தையும் ஏற்பதே நீங்கள் வாழ வழி’ என்றார் ஜார்ஜ் வாஷிங்டன் .

இப்படிதான் மதம் அடிப்படைவாதமாக, பயங்கரவாதமாக வளர்ந்து தேசத்தை விரிவுபடுத்தும் அரசியலாகவும் மாறியது.

இந்த நிலையில்தான் அரசை மதத்திலிருந்து பிரிக்கிற மதச்சார்பற்ற அரசியல் சிந்தனை தோன்றியது. சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார் காந்தி.

‘நாம் அனைவருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை.
இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.’ எனக் கூறினார்.

‘மதம் ஒருவரது தனிப்பட்ட விசயம் ,
அதை அவரவரின் தனிவாழ்க்கையோடு வைத்துக்கொண்டால் அரசியல்
சிறப்பாக இருக்கும்’ என்றவர் சிந்தித்தார்.

ஆனால் இன்று மதம் நம் அன்றாட வாழ்வில் , அரசியலில் தலையிட்டு வன்முறையைப் பரப்பியபடி இருக்கிறது. தாலிபான் சிந்தனை ஆப்கானில் மட்டுமில்லை. இந்தியாவிலும் இருக்கிறது. பாஜகவின் ஏழாண்டு ஆட்சியில் இந்துமத அடிப்படைவாதம் நமது மதச்சார்பற்ற அரசியலின், வாழ்வின் விழுமியங்களை அழித்திருக்கிறது.

இந்த பின்னணியில் சமீபத்தில் வெளியாகியுள்ள குருதி திரைப்படம் ,
மதம் குறித்த முக்கியமான
உரையாடலை நிகழ்த்தியுள்ளது.

கேரளாவில் ஒரு மலை கிராமம். அங்கு நிகழும் நிலச்சரிவில் மனைவியையும், குழந்தையையும் இழக்கிறான் இப்ராஹிம் (ரோஷன் மேத்யூ) . அதே நிலச்சரிவில் மனைவியை இழந்தவன் பிரேமன் (மணிகண்டராஜன்).

தம்பி ரசூல் மற்றும் தந்தை மூஸாவோடு (மம்முகோயா) இப்ராஹிமும், தங்கை சுமதியோடு (ஸ்ரீண்டா) பிரேமனும் வசிக்கிறார்கள் .

இவர்களது இழப்பு சொல்கிற சேதி ஒன்றுதான். முஸ்லீமோ இந்துவோ இயற்கைக்கு ஒன்றுதான். மழை என்கிற நன்மையையும், பெருவெள்ளம் என்கிற பேரழிவையும் மதம் பார்த்து அளிப்பதில்லை இயற்கை.

ஓரிடத்தில் இணைந்து வாழ்கிற மக்கள், பண்பாட்டு விழுமியங்களாக மட்டுமே மதத்தை அணுகுகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரரோடு உறவு கொள்வதற்கு அவர்களுக்கு மதம் ஒரு தடையாக இருப்பதில்லை. தீபாவளிக்கு முறுக்கு சுட்டால் பக்கத்து வீட்டு இசுலாம் குடும்பத்துக்கு தருகிறார்கள். மிலாதுநபிக்கு பிரியாணி செய்தால் அவர்களும் பதிலுக்கு தருகிறார்கள்.

வாழ்வின் தேவைகள், நெருக்கடிகள் கடவுளைத் தாண்டி, அவர்களை இணைத்து வைத்திருக்கின்றன. இத்தகைய பரஸ்பர ஒத்துழைப்பு, உதவி படிப்படியாக சென்ட்டிமென்ட்ஸை உருவாக்கி, உணர்வு ரீதியான பிணைப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

இத்தகைய நடைமுறை வாழ்வு இப்ராஹிம், பிரேமன் இரு குடும்பத்தினரிடைய அன்பையும் பிணைப்பையும் உருவாக்கிறது. இப்ராஹிமை பிரேமன் தங்கை சுமதி விரும்புகிறாள் . தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் இப்ராஹிமிடம் வேண்டுகிறாள்.

மனைவி , மகள் ஞாபகம். மதம் அனுமதிக்குமா? என்கிற சந்தேகத்தால் தயக்கம் கொள்கிறான் இப்ராஹிம். ஆனால், இவை எல்லாவற்றைக் கடந்தும் இரு குடும்பத்துக்கிடையே அன்பு, புரிந்துணர்வு செயல்படுகிறது.

இதுதான் இந்தியா முழுமையும், சாதாரண மக்களுடைய வாழ்வாகவும் இருக்கிறது. இப்படி இயல்பாக மனித நேயத்தோடு வாழும் இவர்களை, மத அடிப்படைவாதம் எப்படி கலைத்துப் போடுகிறது? என்பதுதான் குருதியின் அடுத்தடுத்த நகர்வுகள்.

ஓர் இரவு. இப்ராஹிம் வீட்டுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர், கைகளில் விலங்கு பூட்டி இளைஞன் ஒருவனை
அழைத்து வருகிறார். அவன் ஓர் இந்து. அந்த இளைஞனை இந்து என சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வருகிறது?
ஏனெனில், அவன் ஒரு
முஸ்லிம் வியாபாரியைக் கொலை செய்திருக்கிறான்.

வருகிற வழியில் போலீஸ் அதிகாரியிடமிருந்து
இளைஞனை விடுவித்து, அவனை கொலை செய்கிற முயற்சி நடக்கிறது. அவர்களிடமிருந்து தப்பித்து அந்த இரவை இப்ராஹிம் வீட்டில் பாதுகாப்பாகக் கழிக்கவே வந்திருக்கிறார் போலீஸ்காரர்.

அந்த நேரம் பார்த்து வழக்கம்போல பக்கத்து வீட்டில் இருக்கும் சுமதியும் அங்கு வருகிறாள். தொடரும் நிகழ்வுகள், இருவரது குடும்பத்தையும், அதனதன் இயல்பு கதியிலிருந்து எவ்வாறு குலைத்துப் போடுகிறது என்பதை விவரிக்கிறது படம்.

இதற்குப் பிறகு என்னவெல்லாம் நிகழ்கிறது? என்பதை பரபரப்பாக காட்சிப்படுத்துவதுதான் குருதி.
மதம் பொருட்டு கத்தியெடுப்பவர்கள், எப்படி அன்பை, சமாதானத்தை நிம்மதியை குடும்பத்திலிருந்து உருவிவிடுகிறார்கள்? நெஞ்சு பதைபதைக்க காட்டுகிறார்கள்.

படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துதான் பிரித்விராஜ் தோன்றுகிறார். தந்தையை மதத் தீவிரவாதத்தில் இழந்தவர். அந்த இழப்பு தரும் வன்மத்தால் அடிப்படைவாத இயக்கமொன்றில் சேர்ந்திருப்பவர்.

பிரித்விராஜ் வந்த பிறகு படத்தில்
மதத் தீப்பொறி பறக்க ஆரம்பிக்கிறது. இந்து இளைஞனை இப்ராஹிம் வீட்டிலிருந்து மீட்டு அவனுக்கு தண்டனை தர முனைகிறார் பிரித்வி.
இந்த முயற்சியில் போலீஸ்காரரை கொல்கிறார் .

அதேவேளை, இப்ராஹிம் இசுலாமியியராக இருந்தபோதும், மதசட்டப்படி நடக்காமல் , அரசியல் சட்டப்படி நடக்க விரும்புகிறார்.

பெரிதளவு மத நம்பிக்கை இல்லாவிட்டாலும் சுமதிக்கு இந்து இளைஞன் மீது அனுதாபம்.

ஊரில் இசுலாமியருக்கு நிகழும் யதார்த்தத்தை வைத்து இப்ராஹிம்
தம்பி , பிரித்விராஜ் பக்கம் திரும்புகிறான்.

தந்தை மூஸா மதத்தைவிடவும் இணக்கத்தையும் நேயத்தையும் விரும்புகிறார்.

நமது திரைப்படங்கள் பெரும்பாலானவை இசுலாமிய தீவிரவாதத்தை மட்டும் பேசுவதாக இருக்கின்றன. இந்தியாவில் இசுலாம் தீவிரவாதம் உருவாவதற்கான அழுத்தம் மற்றும் அரசியலை அவை மௌனப்படுத்துகின்றன.

ஆனால் குருதி எந்த மதத்துக்கும் ஆதரவாக நிற்காமல், அடிப்படைவாதத்துக்கு எதிராகப்
பேசுவது ஆரோக்கியமானது.

குருதியை பிரித்விராஜ் தயாரித்திருந்தபோதும் கூட
நாயகனென்னவோ ரோஷன் மேத்யூதான். மூத்தோன், கப்பேலா படங்களை குருதி மூலம்நடிப்பில்
கடந்து செல்கிறார்.

மூஸாவாக மம்முகோயாவும் பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இந்தப் படம் முடியவில்லை.
இந்து இளைஞனும் இப்ராஹிம்
தம்பியும் கத்தியோடு எதிரெதிரே நெருங்குகிறார்கள். இன்றளவும் தொடரும் மத வெறுப்பு இது.

இவர்கள் இருவரிடையே நேரடியாக
எந்த பகையும் கிடையாது. தாங்கள் வாழ்வில் ஒரு கணத்திலும் சந்தித்திராத, சந்திக்கவே முடியாத, தங்கள் கடவுளின் பேரில் கத்தியேந்தி நிற்கிறார்கள்.

உண்மையில் இவர்களுக்கு
ஒரு கடவுள் இருந்திருந்தால் இதையெல்லாம் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருப்பாரா?

அனேகமாக இதுதான், குருதி
இயக்குனர் மனு வாரியார் கேட்க விரும்பும் கேள்வியாக இருக்கிறது.

மதம் மக்களின் அபின் ( relegion is the opium of the people) என்கிறார் தத்துவப் பேராசான் மார்கஸ். மதம் என்பது தன்னை அறியாத, தன்னை மீண்டும் இழந்துவிட்ட மனிதனின் சுய உணர்வு என்றும் குறிப்பிடுகிறார்.

உயிர்ப்பற்ற மனிதனின் உயிர்ப்பாக, இதயமற்ற மனிதனின் இதயமாக மதம் விளங்குகிறது என இதே தொடரில்
அவர் கூறிச் செல்கிறார்.

மனிதன் என்பவனே அரசு. மனிதன் என்பவனே சமூகம். இந்த சமூகமும், அரசும்தான் மதத்தை தோற்றுவிக்கிறது. ஆனால் அவன் இழந்த உலகை, அவனிடமிருந்து பறிக்கப்பட்ட உலகை, அவனுக்கு தலைகீழாக புரியவைக்க முனைகிறது மதம்.

அவனது பிரச்சனைக்கு மதம் தற்காலிக தீர்வை தருகிறது. மதம் தருகிற ஆறுதல் நிரந்தரமானது அன்று. மத அபிமானத்திலிருந்து, மதம் தருவதாக நம்பும் விடுதலையிலிருந்து நிரந்தரமாக விடுவிப்பதே மெய்யான விடுதலையாக அமையும்.

இவ்வாறு மார்க்ஸ் சிந்தித்ததைதான் சினிமா எனும் கலை வடிவில் சிந்தித்திருக்கிறார் மனு வாரியார்.

மனிதர்கள் தம் குருதியை,
மத வன்முறையில் சிந்தக்கூடாது!
எனச் சொல்கிற கலைப்படைப்பு குருதி.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here