ரசியாவின் சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சி “அறிவு ஜீவிகளின்” கட்சி, தொழிலாளர்கள் அதிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ரசியாவின் தொழிலாளர்கள் சமூக ஜனநாயகம் இல்லாத சமூக -ஜனநாயகவாதிகள் என்றும், குறிப்பாகப் புரட்சிக்கு முன்னரும் கணிசமான அளவு புரட்சிக் காலத்திலும் அவ்வாறு இருந்தது என்றும் கதைகளை இட்டுக்கட்டிப் பரப்புபவர்கள் இருக்கிறார்கள். 1905-இல் ரசியாவில் சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சி தலைமை தாங்கி நடத்திய மக்கள்திரள் புரட்சிப் போராட்டத்தின் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக மிதவாதிகள் இந்தப் பொய்யைப் பரப்புகிறார்கள். சோசலிஸ்டுகளில் ஒரு சிலர் அறிவீனம் அல்லது பொறுப்பின்மை காரணமாக இந்தப் பொய்யைத் திருப்பிச் சொல்லுகிறார்கள்.

இவான் வசீலியெவிச் பாபுஷ்கினது வாழ்க்கைக் கதை, இந்த இஸ்க்ராவாதித் தொழிலாளர்களுடைய பத்தாண்டு சமூக ஜனநாயக வேலை, மிதவாதிகளின் பொய்க்கு கண்கூடான மறுப்பாக விளங்குகிறது. புரட்சிக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர் சமூக – ஜனநாயகக் கட்சியை அமைக்கத் தொடங்கிய முன்னணித் தொழிலாளர்களில் இ.வ. பாபுஷ்கின் ஒருவர். பாட்டாளி வர்க்க மக்கள்திரளிடையே இத்தகைய முன்னணியினர் ஓய்வு ஒழிவின்றி, வீரம் நிறைந்த பிடிவாதத்துடன் வேலை செய்திராவிட்டால் ரசியாவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி பத்து ஆண்டுகள் மட்டும் அல்ல, பத்து மாதங்கள் கூட நிலைத்திருக்க முடிந்திராது. இத்தகைய முன்ணியினரின் செயல்கள் காரணமாகவே, அவர்களுடைய ஆதரவின் பயனாகவே ரசியாவின் சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சி மாபெரும் அக்டோபர், டிசம்பர் நாட்களில் பாட்டாளி வர்க்கத்துடன் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்த கட்சியாக, இரண்டாவது ரசிய மக்களவை மட்டுமின்றி மூன்றாவது, கறுப்பு நூற்றுவர் அவையிலும் தொழிலாளிப் பிரதிநிதிகளின் வடிவில் இந்தத் தொடர்பை நிலையாக வைத்திருந்த கட்சியாக 1905-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி பெற்றது.

அண்மையில் காலஞ்சென்ற முதல் மக்களவைத் தலைவர் செ.அ. முரொம்த்செவை மக்கள் வீரராக மாற்ற மிதவாதிகள் (காடேட்டுகள்) விரும்புகிறார்கள். மூரொம்த்செவ் போன்ற நிதானப் போக்குள்ள, தீங்கற்ற அலுவலர்களைக் கூடத் தொல்லைப்படுத்திய ஜார் அரசாங்கத்தின்பால் இகழ்ச்சியையும் வெறுப்பையும் வெளியிடுவதற்குரிய சந்தர்ப்பத்தை சமூக ஜனநாயகாவதிகளான நாம் நழுவவிடக் கூடாது. மூரொம்த்செவ் வெறும் மிதவாதி அலுவலர் மட்டுமே. அவர் ஜனநாயகவதியாகக் கூட இல்லை. மக்கள்திரளினரின் புரட்சிப் போராட்டத்தைக் கண்டு அவர் அஞ்சினார், இத்தகைய போராட்டத்தின் வாயிலாக அல்ல, ஜாரின் எதேச்சாதிகாரத்தினது நல்லெண்ணத்தின் மூலம், இந்த மிகக் கொடிய, இரக்கமற்ற பகைவனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ரசியா விடுதலை பெறும் என்று அவர் எதிர்பார்த்தார். இத்தகைய மனிதர்களை ரசியப் புரட்சியின் மக்கள் வீரர்களாகக் கருதுவது நகைப்புக்கு இடமானது.

உண்மையான மக்கள் வீரர்கள் இருக்கிறார்கள். பாபுஷ்கின் போன்றவர்கள் இவர்கள். புரட்சிக்கு ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் அல்ல, முழுமையாகப் பத்து ஆண்டுகள் முன்னரே தொழிலாளி வர்க்கத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தில் தங்களை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இவர்கள். தனி மனிதர்களின் பயனற்ற பயங்கர நடவடிக்கைகளில் தங்களை வீணடித்துக் கொள்ளாமல், பாட்டாளி மக்கள் திரளினரிடையே விடாப்பிடியாக, இடைவிடாமல் செயலாற்றி. அவர்களது உணர்வையும் அவர்களது ஒழுங்கமைப்பையும் சுதந்திரமாகப் புரட்சிச் செயல் புரியும் அவர்களது திறனையும் வளர்க்க உதவியவர்கள் இவர்கள். நெருக்கடி தொடங்கி, புரட்சி வெடித்துக் கிளம்பி, கோடானுகோடி மக்கள்  இயக்கத்தில் ஈடுபட்ட போது ஜாரின் எதேச்சாதிகாரத்துக்கு  எதிராக மக்கள்திரள் ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை ஏற்றவர்கள் இவர்கள். ஜாரின் எதேச்சாதிகாரத்திடமிருந்து பெறப்பட்டவை எல்லாம், பாபுஷ்கின் போன்ற மனிதர்களால் தலைமை ஏற்று நடத்தப்பட்ட மக்கள் திரளினரின் போராட்டம் ஒன்றால் மட்டுமே பெறப்பட்டன.

இத்தகைய மனிதர்கள் இல்லாவிட்டால் ரசிய மக்கள் என்றென்றைக்கும் அடிமை மக்களாக, அடிவருடி மக்களாக இருந்திருப்பார்கள். இத்தகைய மனிதர்கள் இருக்கும்போது ரசிய மக்கள் எல்லா வகையான சுரண்டலிலும் இருந்து முழு விடுதலையைப் போராடிப் பெறுவார்கள்.

1905-ஆம் ஆண்டு டிசம்பர் மாத எழுச்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவு இப்போது வந்து விட்டது. இந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடுகையில் பகைவருடன் போராடி உயிர் துறந்த முன்னணித் தொழிலாளர்களை நினைவு கூர்வோம். அந்தக் காலத்துப் போராட்டத்தின் நினைவுக் குறிப்புக்களையும், பாபுஷ்கினைப் பற்றிய அதிகப்படித் தகவல்களையும் 1905-ஆம் ஆண்டு எழுச்சியில் உயிர்த் தியாகம் செய்த பிற சமூக – ஜனநாயகத் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து எங்களுக்கு அனுப்பும்படித் தொழிலாளித் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய தொழிலாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய சிற்றேடு வெளியிட நாங்கள் விரும்புகிறோம். இத்தகைய சிற்றேடு எல்லா விதமான சமரசவாதிகளுக்கும் ரசியாவின் சமூக – ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மதிப்பைத் தாழ்த்துபவர்களுக்கும் தக்க பதிலாக இருக்கும். இத்தகைய சிற்றேடு இளம் தொழிலாளர்கள் படிப்பதற்கு ஏற்ற சிறந்த நூலாக விளங்கும். அரசியல் உணர்வு உள்ள ஒவ்வொரு தொழிலாளனும் எப்படி வாழவும் செயல் புரியவும் வேண்டும் என்பதை அவர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வார்கள்.

காதலிக்குக் கடிதம்

உல்லுபீ புய்னாக்ஸ்கி

உல்லுபீ புய்னாக்ஸ்கி (1890 – 1919) பதினைந்தாம் வயதில் போல்ஷ்விக் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார். மாபெரும் அக்டோபர் புரட்சியும் உள்நாட்டுப் போரும் நடந்த ஆண்டுகளில் இந்தக் கம்யூனிஸ்டு இளைஞர் காக்கேசியக் குடியரசுகளில் ஒன்றான தாகிஸ்தானில் கட்சி நிறுவனத்தின் தலைவராக எல்லோராலும் மதிக்கப் பெற்றார்.

சோவியத் நாடு போர் முனைகளின் வளையத்தால் நெரிக்கப்பட்டுத் திணறிக் கொண்டிருந்தது. தாகிஸ்தானில் உள்நாட்டுத் தேசியவாதிகளும் வெளிநாட்டுத் தலையீட்டாளர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ரசியக் கம்யூனிஸ்டு (போல்ஷ்விக்) கட்சியின் மறைமுக மாவட்டக் கமிட்டியையும் தாகிஸ்தான் இராணுவ ஆலோசனை சபையையும் 1919-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் புய்னாக்ஸ்கி அமைத்தார். எண்ணாயிரம் படையினர் கொண்ட கிளர்ச்சிச் செஞ்சேனை சட்ட விரோதமான நிலைமைகளில் உருவாயிற்று. புரட்சி எதிர்ப்பு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், உளவாளி தகவல் கொடுத்து விட்டதால் தாகிஸ்தான் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும், புய்னாக்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்கள். வெண்படைக் கொலையாளியின் துப்பாக்கிக் குண்டால் உல்லுபீ புய்னாக்ஸ்கி கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு முப்பது வயது கூட நிறையவில்லை.

காதலிக்குக் கடிதங்கள்

அன்பார்ந்த தாத்தூ!

கடைசியில் உன்னை ஒருமையில் விளிக்க அனுமதி கொடு. இதுவரை நாம் ஒருவரை ஒருவர் நீங்கள்” என்று பன்மையில் அழைத்து வந்தோமே, அதனால் சொல்கிறேன்.

என்னுடைய குறுகிய வாழ்க்கைப் பாதையில் முடிந்தவரை பயனுள்ள விதத்தில் முன்னேற முயன்று வந்திருக்கிறேன். நான் நேர்மை அற்றவனாகவும் வேறு கெட்ட குணங்கள் உள்ளவனாகவும் இருந்தேன் என்று ஒருவனும் சொல்ல மாட்டான், சொல்லத் துணிய மாட்டான். என்னைப் பற்றி அவதூறுகூற எவனும் துணிய மாட்டான். இதுவே எனக்குப் போதும். என் வாழ்க்கை எத்தகையதாய் இருந்தது? நான் சொல்வதை நம்பு; சின்னஞ்சிறு வயது முதலே நான் களிப்பைக் கண்டறியவில்லை. இப்போது, அஸ்தமன வேளையில் எனக்குக் கதிரொளி கிடைத்து விட்டது போல், தெளிந்த, தூய வானம் என்னை நோக்கிப் புன்னகை புரிவது போல் இருக்கிறது. இது உன்னுடைய புன்னகை…. என்கடிதத்துக்கு நீ மிக நன்றாகப் பதில் எழுதியிருந்தாய்: “நான்தான் உங்களைக் காதலிக்கிறேனே” என்று. எனக்கு இதுவே போதும். அந்தக் கணம் முதல் நான் இன்பத்தில் திளைக்கிறேன். ஆனால் பிரிவு, நிரந்தரப் பிரிவு நம் இருவரையும் இவ்வளவு விரைவில் வேறுபடுத்தி விட்டது! எதற்காக? இதுதான் விதி போலும்!

நீ எப்போதும் போலத் துணிவும் உறுதியும் கொண்டிரு. உன் இளமையையும் முகையவிழும் வாழ்க்கையையும் உச்சத்திலிருக் கும் உலகப் போராட்டத்தையும் எண்ணிப் பார். நினைவு வைத்துக் கொள், நான் இல்லாவிட்டால் உலகம் வெறுமை ஆகி விடாது! உறுதியாய் இரு. பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து ஒளி வீசும் வருங்காலத்தை நோக்கி நட…. நீ என்னை உளமாரக் காதலித்தால் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதே. கொடிய பகைவர்கள் நகையாட இடம் தராதே. உன் எண்ணங்கள் யாவற்றாலும் நீ என்னைக் காதலித்தால், விழிகளைத் தாழ்த்தாதே. பகைவர்களில் எவனும் உன் பலவீனத்தைக் கண்டு கொள்ள விடாதே. மாறாக, உன்விழிகளின் மின்வெட்டைக் கண்டு ஒவ்வொருவனும் குற்றவாளிபோல இருப்பு கொள்ளாமல் தவிக்கட்டும்.

நான் மன்னிப்பு கோரலாம் என்று வழக்குரைஞர் சொன்னார். என் அருமைத் தாத்தூ! நானா மன்னிப்பு கோருவேன்? ஒருபோதும் மாட்டேன். அப்படிச் செய்தால் நான் உல்லுபீ என்று நீ ஒப்புக் கொள்ளவே மாட்டாய்……

ஆகவே, என் அன்பே, முன்னே பார்வை செலுத்து. நீ உளமார நேசிக்கும் நம் மக்களின் நன்மைக்காக வாழ்ந்திரு. அசட்டுத்தனம் எதுவும் செய்யாதே. நல்லது, விடை கொடு. தொலைவிலிருந்து நெஞ்சார முத்தமிடுகிறேன்…

விரும்பிய பாதையில் நடை போட்டே, உள்ளம் விழைந்திடும் வகையினில் வாழ்ந்திடல் இங்கே அரும் பெரும் சாதனை, ஆயினும் அதனில் ஆதாயம் கிட்டுதல் அரிதினும் அரிதே…

அருமைத் தாத்தூ, நான் தெரிந்தெடுத்த பாதையை நீயும் சற்று விரும்பேன்.

உன் உல்லுபீ.

தொடரும்…

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 1

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 2

புரட்சியில் இளைஞர்கள் – தொடர் 3

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 4

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 5

புரட்சியில் இளைஞர்கள்-தொடர் 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here