கடந்த ஒரு நூற்றாண்டாக பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மான உணர்ச்சி போன்றவற்றை முன்வைத்து தமிழக மக்களை தட்டி எழுப்பிய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் கூலி ஏழை விவசாயிகள் முதல் புதிதாக துவங்கிய நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் ஆகியவற்றில் பணியாற்ற துவங்கிய தொழிலாளி வர்க்கத்தினர்வரை வர்க்க உணர்வுடன் வளர்த்தெடுக்க போராடிய பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கம் ஆகியவற்றின் எதிர்கால லட்சியங்கள் திட்டங்கள் ஆகியவற்றில் வெவ்வேறு இலக்குகள் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் துவங்கி பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்தியாவிலேயே ஓரளவுக்கு தொழில் வளர்ச்சியும், வாழ்க்கை முன்னேற்றத்தையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றத்தையும் கொண்ட மாநிலமாக திகழச் செய்துள்ளனர்.
நாடு தழுவிய அளவில் புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் சமூக மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்று போராடுகின்ற மார்க்சிய லெனினிய இயக்கங்கள், பார்ப்பன பண்பாட்டு எதிர்ப்பு, தமிழ் மக்கள் மீதான இந்திய தேசியத்தின் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்ற போது திராவிட இயக்கத்தையும் இணைத்துக் கொள்கிறது.
துவக்க காலத்தில் முன் வைத்து போராடிய குறைந்தபட்ச கொள்கைகளையும் விசிறியெறிந்து பிழைப்புவாதத்திலும், கார்ப்பரேட் சேவையிலும் மூழ்கியுள்ள திராவிட கட்சிகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
ஓரளவுக்கு முன்னேறியுள்ள தமிழ் சமூகத்தில் எந்த வகையிலும் மக்களுடன் களத்தில் நின்று போராடாத சினிமா கவர்ச்சியை மட்டுமே முன்வைத்து அரசியலில் குதித்துள்ள திருவாளர் விஜய் நடத்திய இரண்டாவது மாநில மாநாடு அதற்கு கூடிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர் பட்டாளம் ஆகியவற்றை கண்டு அவரே வெற்றிக் களிப்பில் குதித்துக் கொண்டுள்ளார்.
தான் வசிக்கும் பகுதியில் சூட்டிங் நடக்கின்றது என்று தகவல் தெரிந்தால் போதும் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடி சினிமா நடிகர், நடிகைகளை வேடிக்கை பார்ப்பதில் பொழுதைக் கழிப்பார்கள்.
அதேபோல திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அவ்வாறு கூடுகின்ற போது, “தங்க கலரில் ஜொலிக்கின்றார்” என்று கமெண்ட் அடித்துக் கொண்டு அவரை பார்த்ததை வாழ்க்கையில் எதையோ சாதித்தது போல வீடு திரும்புவார்கள். தவறாமல் எம்ஜிஆர் தங்கபஷ்பம் சாப்பிடுகிறார் என்ற ‘ மாபெரும் கண்டுபிடிப்பையும்’ பலருக்கும் பரப்பிக் கொண்டே செல்வார்கள்.
அதன் பிறகு தமிழகத்தை மொட்டையடிக்க வந்த பாசிச ஜெயாவை வேடிக்கை பார்ப்பதற்கு என்று ஆயிரக்கணக்கான மக்கள் இரவு, பகல் கண்விழித்து கூட்டங்களுக்கு செல்வார்கள். ஹைமாஸ் விளக்கில் ஜெயலலிதாவின் முகம் தெரிந்தவுடன் “அப்பா என்னமா ஜொலிக்கிறார்” என்று கூறிக்கொண்டே பிறவியின் பயனை அடைந்தது போல மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள் அதிமுக தொண்டர்கள்.
இதே போலத்தான் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை துவங்கிய என் டி ராமாராவை கடவுள் என்று அதாவது ராமனின் அவதாரம், கிருஷ்ணனின் அவதாரம் என்று கருதிக் கொண்டு, ‘ தேவுடு’ என்று கூச்சலிட்டுக் கொண்டே பயபக்தியுடன் தரிசிப்பதில் துவங்கி குறிப்பிட்ட காலத்திற்கு ஆந்திராவின் ஆட்சி அதிகாரத்தில் பாசிச சன்னியாசியான என்டி ராமாராவை அமர்த்தினர் ஆந்திர மக்கள்.
இதைப் பார்த்து நப்பாசை கொண்ட சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சி துவங்கிய போது ஆந்திராவிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள் அதன் பிறகு படிப்படியாக பிரஜா ராஜ்யம் ஒன்றுமில்லாமல் ஆனது தனிக்கதை.
இவ்வாறு பல உதாரணங்களை நாம் கூற முடியும். சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு வெறித்தனத்துடன் அலைகின்ற ஒரு கூட்டம் தான் மதுரையில் முதல் நாளே கூடிய கூட்டம் என்பதை கலப்படமில்லாமல் உறுதியாக கூற முடியும்.
ஆனால் இவ்வாறு கூடிய கூட்டத்தை பார்த்து பார்ப்பன மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ் அடிப்பொடிகள் ஓவராக தான் கூச்சலிட்டனர்.
மாநாட்டு மேடையை நோக்கி விஜய் நடந்து சென்றதை தரிசித்தவுடன் பெரும்பாலான ரசிகர்கள் வீடு திரும்ப ஆரம்பித்து விட்டனர் என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல, மதுரை தெறிக்கட்டும் என்பதை நேரடி பொருளில் புரிந்து கொண்டு சுமார் 15,000 பிளாஸ்டிக் சேர்களை உடைத்து எறிந்து விட்டு கிளம்பி உள்ளார்கள் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
படிக்க: சினிமா டூ மாநாடு: நடிப்பில் அசத்தும் விஜய்!
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் என்ன சாதிக்கப் போகிறது என்பதை பற்றி புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம்.. அதே அடிப்படையில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மதுரை மாநாட்டில் விஜய் திருவாய் மலர்ந்துள்ள பல்வேறு அரசியல் காமெடிகள் நிரூபிக்கின்றன.
“பாசிக பாஜகவுடன் நேரடியாகவும் கூட்டணி இல்லை, மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. ஒரே அரசியல் எதிரி திமுக, ஒரே கொள்கை எதிரி பாஜகதான், த.வெ.க.வை நம்பி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு தரப்படும்” என்று விஜய் மாநாட்டு உரையில் தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம் பொதுவாக அரசியலுக்கு வருகின்ற ஒவ்வொரு கட்சியினரும் அடிக்கின்ற சவடால்தானே ஒழிய இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு என்ன வகையான அரசியல், பொருளாதாரக் கொள்கை உள்ளது. அது முதலாளித்துவத்தை உயர்த்தி பிடிக்குமா அல்லது அதற்கு மாற்றாக வேறு எதையாவது முன் வைக்குமா என்பதை பற்றி எல்லாம் எந்த விதமான அடிப்படை கண்ணோட்டமும் இல்லாமல் அடித்து விடுகின்ற பித்தலாட்டங்கள் தான்.
ஆனால் உண்மையில் பாசிச பாஜகவை வீழ்த்துவது என்பது இது போன்ற கூச்சல்கள் போடுகின்ற கூட்டங்கள் ஆகியவற்றினால் ஒரு போதும் சாதிக்க முடியாது. ஏனென்றால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு இவர்களிடம் எந்த ஒரு திட்டமும் கிடையாது.
படிக்க: விஜய் மாநாடு: 6 மணி நேர பழைய படம்!
இத்தகைய பித்தலாட்டங்களை கண்டு மக்கள் மயக்கம் அடைய மாட்டார்கள் என்று வீட்டுக்குள்ளே இருந்து எழுதிக் கொண்டிருக்கின்ற அரசியல் ஆய்வாளர்கள், புரட்சிகர அமைப்புகளிலிருந்து தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போன ஓடுகாலிகள், அமைப்பு சாராத மார்க்சியம் பேசுகின்ற தறுதலைகள் போன்றவர்களும் பாசிசத்திற்கு எதிராக திட்ட வகைப்பட்ட மாற்று ஒன்று இல்லாமல் பொதுவாக பாசிசத்தை எதிர்க்கின்றோம் என்று சதிராடுவதைப் போலத்தான் தமிழக வெற்றிக்கழகத்தின் விஜயும் செய்துள்ளார்.
இத்தகைய அலப்பறைகளுக்கு பலியாகி நடிகனை தரிசிப்பதற்கென்று சில நாட்களை வீணடித்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களை உண்மையாக பாசிச எதிர்ப்பு அதாவது பாசிச பாஜக எதிர்ப்பு மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை கொண்ட திமுகவின் தனியார்மய திட்டங்களுக்கு எதிராக போராட வைப்பது போன்ற உண்மையான திசை வழியை நோக்கி கொண்டு செல்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும்.
2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் பாரம்பரியமான கட்சிகள், மக்கள் நலன் அரசை உருவாக்க போகின்றோம் என்று சவடால் அடிக்கின்ற கட்சிகள் ஆகியவற்றின் தோல்வியையும், அந்த காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு இசங்களின் தோல்வியையும் கண் முன்னே காட்டி விட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆண்டு வருகின்ற கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் படுகின்ற துன்ப துயரங்களுக்கு தீர்வு கொடுக்கின்ற புதிய ஒரு மாற்றத்தை இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதன் வேறு ஒரு அடையாளம் தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியது என்ற கோணத்தில் புரிந்து கொண்டு அவர்களை சரியான திசை வழிக்கு கொண்டு வருகின்ற மாபெரும் பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது.
- கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






