மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மிகப் பெரும் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். பெண்கள் நிர்வாணமாக, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். இப்படிப்பட்ட நிகழ்வு ஏராளமாக நடந்ததாக அப்பொழுது பதவியில் இருந்த அம்மாநில முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட கொடூரங்கள் நடந்த பொழுதும் 865 நாட்களாக மணிப்பூருக்கு செல்லாத பாசிச மோடி இப்பொழுது மணிப்பூருக்கு சென்றிருக்கிறார்.
தெய்வக் குழந்தை மோடியின் கொடூர மனம்
இவ்வளவு கொடூரங்கள் நடந்த பொழுதும் அதை தடுக்காமல் பிரதமர் மோடியால் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது? என்று அப்பாவிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பாஜகவினர் பதில் சொல்லப் போவதில்லை. எனவே இந்த கேள்விக்கான பதிலை நாமே சொல்லிவிடலாம்.
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுது, 2002 ஆம் ஆண்டு, குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து பேசிய மோடி ‘இந்துக்கள் தங்களின் மன உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று வாய்மொழியாக உத்தரவிட்டார்.
அதன் பிறகு வெடித்த கலவரத்தில் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்; இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்து மத வெறியர்கள் இஸ்லாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து வயிற்றிற்குள் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து திரிசூலத்தில் குத்தி அந்தப் பெண்ணிடமே காண்பித்த கொடூரம் எல்லாம் நடந்தன.
இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழ்ந்த போதும் எவ்விதமான சஞ்சலத்திற்கும் ஆளாகாத விஸ்வகுரு மோடி, தற்போது மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக கலவரக்காரர்கள் தங்களின் மன உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளித்து விட்டு, 865 நாட்களுக்குப் பிறகு அந்த மாநிலத்திற்கு பழங்கால மன்னர்களைப் போல திக்விஜயம் செய்துள்ளார்.
மோடியின் வருகையை எதிர்த்து மணிப்பூரில் உள்ள மாணவர் அமைப்பினர் ஊர்வலம் சென்று உள்ளனர். மோடியை வரவேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் அம்மாநில மக்கள் கிழித்து, அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள்ளனர். “மோடியே திரும்பிப் போ” (go back Modi) என்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
மணிப்பூருக்கு மோடியை இழுத்து வந்தது எது?
மணிப்பூருக்கு சென்றால் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் அனைத்தும் வரும் என்பது பாசிச மோடிக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் இப்பொழுது எதற்காக அங்கு சென்றார்? “ஓட்டு திருடன் மோடி” என்று நாட்டு மக்களால் பரவலாக இகழப்பட்டு வரும் நிலையில் அதிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் போரை ட்ரம்பின் மிரட்டலால் நிறுத்திக் கொண்டது, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தது போன்ற விசயங்களால் அம்பலப்பட்டு போய் நாரிப்போயுள்ள மோடியின் பிம்பத்தை காப்பாற்றுவதற்காக (அதாவது இந்த பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி மோடியின் பிம்பத்தை காப்பாற்றுவதற்காக) மோடியின் மணிப்பூர் விஜயம் நடந்தேறி உள்ளது.
மக்களை வரவழைத்து தரிசனம் கொடுத்த மோடி!
260க்கும் மேற்பட்டோர் (அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை) இறந்துள்ள நிலையில், ஒரு சில கழிப்பறைகள் மட்டுமே உள்ள, துர்நாற்றம் வீசும் மண்டபங்களில் (நிவாரண முகாம்களில்) 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலம் என்பது கொடூரமான வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் வாழும் இழவு வீட்டை போன்று உள்ளது.
மேலும் படிக்க:
மணிப்பூரில் தொடரும் பாலியல் வல்லுறவு படுகொலை! மோடி எங்கே?
மணிப்பூர்: கலவரங்களின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் குண்டர் படை! எப்படி தடுப்பது?
இப்படிப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நாற்றமெடுக்கும் முகாம்களுக்குச் சென்றால் தனது உடை அழுக்கடைந்து விடும் என்றோ அல்லது தன் மீது செயற்கையாக தவழ விடப்பட்டுள்ள நறுமணத்தையும் மீறி முகாம்களின் முடை நாற்றம் தனது மூக்கை துளைத்து விடும் என்றோ பயந்து தெய்வக் குழந்தை மோடி பயந்துவிட்டார் போலும். எனவே முகாம்களுக்கு நேரடியாக சென்று சந்திப்பதற்கு விஸ்வகுரு மோடி விரும்பவில்லை. அதற்கு பதிலாக, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு சுத்தமாகவும் அழகாகவும் உள்ள ஒரு இடத்திற்கு அந்த மக்களில் சிலரை வரவழைத்து பேசியதை போட்டோ சூட் நடத்தி நாட்டு மக்களிடையே விளம்பரம் செய்துள்ளார்.
மோடியின் வருகையை எதிர்த்து எவ்வளவு களோபாரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுதும் பாசிச மோடியை குஷிப்படுத்த வேண்டும் என்பதில் அந்த மாநில அரசு
கண்ணும் கருத்துமாக செயல்பட்டுள்ளது குறித்து மனிதாபிமானம் உள்ளவர்கள் அனைவருக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வராதவர்களையும் கோபப்பட வைத்தும் அளவுக்கு இதைவிடவும் வக்கிரமான செயல்கள் அங்கு நடந்தேறி உள்ளன.
இழவு வீட்டில் ஆனந்த நடனம்!
பாசிஸ்டுகள் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்; தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களை துன்புறுத்தத் தயங்காதவர்கள். இதை பாசிச மோடியின் மணிப்பூர் வருகை அம்மாநில மக்களுக்கு தெளிவாக காட்டிவிட்டது.
சாவு நடந்த வீட்டில் துக்கம் விசாரிக்க வருபவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கு கொள்வார்கள் என்பது தான் உலக வழக்கம். ஆனால் தெய்வக் குழந்தையும் 56 இன்ச் மார்பும் கொண்டவரான பாசிச மோடி இதற்கு மாறானவர். தங்கள் சொந்தங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மணிப்பூர் மக்களை நடனமாட வைத்து ரசித்திருக்கிறார் மோடி.
மோடியின் வருகையின் போது மணிப்பூர் மக்கள் நடனம் ஆடி மோடியை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்ட போது அதை மணிப்பூர் மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.
“எங்கள் விழிகளில் கண்ணீருடன் நடனம் ஆட முடியாது.
எங்கள் விழிகளில் கண்ணீர் துளிகள் இன்னும் காயவில்லை.
எங்கள் காயங்கள் இன்னும் ஆறவில்லை. நாங்கள் மகிழ்ச்சியுடன் நடனம் ஆட முடியாது”
என்று மணிப்பூரில் உள்ள ஒரு மாணவர் அமைப்பு அறிக்கை வெளியிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
எந்தக் கண்டனக் குரலையும் பாசிஸ்டுகள் மதித்தது இல்லை; மதிக்கப் போவதுமில்லை. காவி கும்பல் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக நாட்டு மக்களை பிரித்து மோத விட்டு ரத்தம் குடிப்பதை பாசிஸ்டுகள் தாங்களாகவே நிறுத்திக் கொள்ளப் போவதும் இல்லை.
புரட்சிகர முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடி பாசிஸ்டுகளை வீழ்த்துவதை தவிர, நாட்டையும் நாட்டு மக்களையும் நமது சொந்த சந்ததியினரையும் காத்துக் கொள்வதற்கு வேறு வழி எதுவும் இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம்.
– குமரன்







