
உத்திரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகாகும்பமேளாவில் உலகமுழுவதிலுமிருந்து சுமார் 40 கோடிபேர் கலந்துகொள்வார்கள் என்றும் இதுவே உலகின் மிகப்பெரிய மனித ஒன்றுகூடல் என்றும் சிலாகித்துக் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்காக அம்மாநில அரசு 7400 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு வசதிகளை செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரே நேரத்தில் 20 லட்சம் பக்தர்கள் தங்கக்கூடிய வகையில் 4,000 ஹெக்டர் பரப்பளவில் ரூ. 1500/- முதல் 1,50,000/- வரை நாள் வாடகையுள்ள ஆடம்பர டென்ட் கொட்டகைகளைக் கொண்ட ‘டென்ட் நகரம்’ புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
என்னதான் இந்த மனிதப் பதர்கள் தங்களின் பாவங்களை புனித நீராடி கழுவிக்கொண்டாலும், அவர்களும் ஆய் போய்தானே ஆகவேண்டும். அதற்காகத்தான் உ.பி. அரசு சுமார் 2,000 கால்பந்து மைதானங்கள் பரப்பளவில் 1,50,000 தற்காலிக கழிப்பறைகளை நிறுவியுள்ளது. ஆனால் அவற்றை சுத்தம் செய்வதற்கு? அட என்னங்க இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? எல்லாத்துக்கும் வழிசொல்கிற இந்துமதம் இதற்கும் ஒரு வழி சொல்லாமலே போய்விடும்? அவா அவா அவாளுடைய வேலையைச் செய்வதற்காகத்தானே இந்துமதம் சாதிகளை உருவாக்கி 3000 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மெயின்டைன் செய்து வருகிறது. அந்த அடிப்படையில்தானே இன்றளவும் தன் வீட்டிலோ அல்லது பொதுஇடங்களிலோ சாக்கடை அடைப்பு கக்கூஸ் அடைப்புக்கு பொது சமூகம் யாரைத்தேடுகிறது? பார்ப்பானையா, கவுண்டனையா, நாய்க்கனையா, வன்னியனையா, தேவனையா, செட்டியாரையா, முதலியாரையா, அல்லது நாடாரையா? ஏன் கூப்பிட்டுதான் பாருங்களேன் என்கிறீர்களா? அதுவும் சரிதான். அப்படி இந்த சாதிக்காரனையெல்லாம் கூப்பிட்டு வெட்டுக்குத்து ஆகக்கூடாது என்பதற்காகத்தான் மகத்தான இந்துமதம் வழிவகைசெய்துள்ளது. ஆம் இந்தவேலைகளைச் செய்வதற்காகவே ஒரு சாதி. அதுதான் தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் என்ற சாதி. ஆனால் இது உத்திரபிரதேசம் என்பதால் அங்கு தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதி. ஆம் 350 ருபாய் தினக்கூலிக்கு சுமார் 5,000 தூய்மைப்பணியாளர்களை உ.பி. அரசு பணியமர்த்தியுள்ளது. அதில் வால்மீகி சமூகத்தினர் மட்டுமே 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர்.
படிக்க: ♦ மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!
நிமிடங்களில் நிரம்பிவழியும் கழிப்பறைகளை ஓய்வில்லாமல் சுத்தம் செய்து ஓய்ந்துபோகிறார்கள் இந்தத் தூய்மைப்பணியாளர்கள். கழிப்பறை கழுவுவது ஏதோ இம்மக்கள் தானாக மனமுவந்து ஏற்றுக்கொண்ட ஒரு சேவை என்பதுபோல் கடந்த 2019-ல் நடந்த கும்பமேளாவில் பணிபுரிந்த தூய்மைப்பணியாளர்களின் 5 பேரை மட்டும் தேர்வுசெய்து அவர்களின் கால்களைக் கழுவி ஸ்டண்ட் காட்டினார் பிரதமர் மோடி. பாரதத் திருநாட்டின் அவதாரபுருஷரான பிரதமர் மோடியே தங்களின் கால்களை கழுவியதால் அவர்கள் என்ன உயர்சாதியில் சேர்ந்துவிடுவார்களா என்ன? இதோ அவர்களில் மூவர் இந்த கும்பமேளாவிலும் கழிப்பறைகளைக் கழுவ பணிக்கப்பட்டுள்ளனர். இதில்தான் அடங்கியுள்ளது இந்துமதத்தின் மகத்துவம்.
செப்டிக் டேங்குகள் சீக்கிரமே நிரம்பாமல் இருக்க தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ள நிர்வாகத்தால் பாட்டிலில் தண்ணீர் பிடித்து தன்னுடையதை மட்டும் கழுவிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம் தங்களின் பாவம் தீர்க்கவந்துள்ள மேன்மக்கள். கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றால் “அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று தங்கள் தலைமேல் சுமத்தப்பட்டுள்ள சாதிக் கடமையைச் சுட்டி ஏகடியம் பேசுவதாகக் கூறுகிறார்கள் தூய்மைப்பணியாளர்கள்.

கும்பமேளாவின் நிர்வாண மனநோயாளிகளையும், வெள்ளைத்தோல் சாமியார்களையும், சினிமா, அரசியல் பிரபலங்களையும், வண்ணமயமான ஜொலிப்புகளையும் இந்துமதத்தின் சிறப்புகளாகக் கணநேரமும் ஒளிபரப்பும் ஊடகங்கள் அதே இந்துமதத்தின் கொடுங்கோன்மையின் அடையாளமாகக் குடும்பம் குடும்பமாக கழிப்பறைகளை சுத்தம் செய்யும் இம்மக்களின் ஓய்வு ஒழிச்சலில்லாத உழைப்பையும், வலிகளையும் காட்டுவதில்லை, காட்டப்ப போவதுமில்லை.
சனாதன இந்துமதத்தின் நால்வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் கங்கை, யமுனை, கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆறுகளின் முக்கூடலில் முங்கிக் கூத்தடித்துக்கொண்டிருக்க, நால்வர்ணத்தில் சேர்க்கக்கூட தகுதியில்லாமல் விரட்டியடிக்கப்பட்டவர்களோ நாற்றத்திலும், சிதறிக்கிடக்கும் மலத்திலும் உழன்றுகொண்டு இருக்கிறார்கள். அதுசரி “மலக்கூடையை சுமக்கும் வேலையை கடவுளுக்கு செய்யும் தொண்டாகக் கருதி செய்யவேண்டும்” என்று கூறும் சனாதனிகளின் ஆட்சியில் வேறு என்ன நடக்கும்?
– ஜூலியஸ்






