பகுதி 1 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

பகுதி 2 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி 2

பகுதி 3 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி-3 

   ஏகாதிபத்தியம் மற்றும் தரகு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டையும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் மனிதர்களின் வளர்ச்சியையும் தடுத்து நாட்டை முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்போடு தளைப்படுத்தியுள்ளன. அனைத்து வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளையும் பலப் பிரயோகம் கொண்டு தூக்கியெறிவது தான் உண்மையான காலனிய ஒழிப்புக்கும், உண்மையான சுதந்திரத்திற்கும் அவசியமாக இருக்கிறது. உண்மையான காலனிய ஒழிப்பு என்பது முதலாளித்துவ – ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து உடைத்து வெளியேறுவதையும், தேசத்திற்குத் துரோகமிழைக்கும் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதையும், பானான் கூறியதைப் போல ஒட்டு மொத்த சமூக அமைப்பை மாற்றுவதையுமே கோருகிறது.

தேசிய விடுதலை என்பது அமைதிப் பேச்சு வார்த்தைகள் மூலமாகவோ, சமரசப் போக்கின் மூலமாகவோ எட்டப்பட வேண்டிய விசயம் அல்ல, அதைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும். மீண்டும் வலியுறுத்துவதென்றால் ஏகாதிபத்தியமென்பது காலனிய நாட்டில் இயங்கும் பாசிசமே. அதனுடைய வன்முறையை அதைவிடக் கூடுதலான வன்முறையைக் கொண்டே எதிர்க்கவும் வீழ்த்தவும் முடியும். 1857 ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதலாம் விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட இந்திய தேசபக்தர்கள் தளைப்படுத்தப்பட்டு சாலையோர மரங்களில் தூக்கிலிடப்பட்டனர். யூதர்களுக்கு நாஜிகள் இழைத்த கொடூரத்தை விட இது எவ்வகையில் குறைந்ததாக இருந்தது? சாரத்தில் இதே வகைப்பட்ட எண்ணற்ற பல எடுத்துக் காட்டுகள் உள்ளன. நீண்ட காலனிய ஆட்சிக்கு முன்னரும் பின்னரும் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் சேர்ந்து விட்டிருந்த கழிவை அகற்றுவது நாட்டின் தேவையாக இருக்கிறது. ஒரு சுதந்திர இந்தியா என்றால் புதிய இந்தியா, புத்துயிர் பெற்ற இந்தியா, அந்த இந்தியாவில் மக்கள் தங்கள் சொந்த விதியைத் தாங்களே மாற்றி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் புத்தாக்கத்தைக் கொண்டு வர முடியும்” என்று தோழர். சுனிதிகுமார் கோஷ் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி வரையறுத்து இருப்பது மிகச் சரியானதே (தோழர் சுனித் குமார் கோஷ்- நக்சல்பாரி முன்பும் பின்பும், நூலிலிருந்து)

160 years of the Revolt of 1857: Images of the First War of Indian Independence
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857.

22 அத்தியாயங்களில் 395 பிரிவுகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் 3-வது அத்தியாயம் 12-வது பிரிவு முதல் 35 வரையுள்ள இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு நெருக்கடி நிலை நீங்கிய பிறகு தாமாக அமுலாகும் என்பதையும் உள்ளடக்கி இருக்கிறது. கவனியுங்கள்! அரசியல் அமைப்பு சட்டம் எமர்ஜென்சி கொண்டு வருவதை எதிர்க்கவில்லை. மாறாக கொண்டு வரும்போது எப்படி செயல்பட வேண்டும் என்று அரசுக்கு வழிகாட்டுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டம்
அனைவருக்கும் பொதுவல்ல!

இத்தகைய தன்மை கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இதன் வழிகாட்டலில் இயங்கும் ஆட்சி நிர்வாக முறைகள், இலஞ்சம், ஊழல், சாதி ஆதிக்கம் உள்ளடக்கியதாகத்தான் ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. மாகாண சபையில் உறுப்பினர் தேர்வாவதற்கும் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வாவதற்கும் ஊழலில் ஈடுபடுவது, லஞ்சம் கொடுத்து பதவியைப் பெறுவது, தனது சாதி பெருமையின் அடிப்படையில் உரிமை கோருவது என்பதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

1935 ல் அரசியல் அமைப்புச் சட்டம் உருவானபோது மாகாண சட்டசபைகளுக்கு மக்களின் 11.5% மட்டுமே வாக்களிக்க முடியும். அதாவது மொத்த மக்கள் தொகையில் சொத்துடையவர்கள், மேல் சாதியினர் மட்டுமே பிரதிநிதிகளைத் தேர்வு செய்யக் கூடிய மேல்மக்கள் அரசாகவே இருந்தது. அன்று தொடங்கி இன்று வரை இதுவே நடைமுறையாக உள்ளது. தற்போது வாக்களிக்க சில உரிமைகள் வழங்கப்பட்டாலும் தேர்வு செய்யப்படு பவர்கள் கோடீசுவரர்களாகவும் அந்தந்த வட்டாரம், மாநிலத்தில் ஆதிக்கம் புரியும் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பது நிரூபணம் ஆகும். 2019–ல் நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் 460 பேர் கோடீஸ்வரர்கள் என்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதேபோல, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைவதற்கு மாகாண மற்றும் சட்டமன்றங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் 50%-னர், பிரிட்டிஷ் அரசின் எடுபிடிகளான சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் மற்றும் நிலவுடைமையாளர்களான நிலப்பிரபுக்கள், பார்ப்பனர்கள், மேல்சாதியினர் இருந்தனர் என்பதிலிருந்தே அரசியலமைப்புச் சட்டத்தின் வர்க்க பின்னணியை அறிய முடியும்.

இந்த அடிப்படைகளை கொண்ட அரசியல் சட்டத்தை மாற்றவே முடியாது என்பதும் பித்தலாட்டமாகும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் வர்க்கத் தன்மை, அதன் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பார்க்காமல் முகப்புரையில் மதச்சார்பற்ற சோசலிசக் குடியரசு என குறிப்பிட்டிருப்பதை ஏற்க வேண்டும் என்று முன்வைக்கும் குட்டி முதலாளிகள், அறிவாளிப் பிரிவினர், மூத்த வழக்கறிஞர்கள் போன்றோர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் தன்மையை முழுமையாக உணராமல் வாதம் புரிகின்றனர்.

மேற்கண்ட விவரங்களில் இருந்து பிரிட்டன் காலனியாதிக்கவாதிகள் தமது காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களை தமது ஆளும் அரசமைப்பு மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஓர் அங்கமாக மாற்றுவது, அதற்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை வழங்குவது என்று நன்கு திட்டமிட்டு முன்வைக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் ஜனநாயகம் என்பதே பிரிட்டன் காலனியாதிக்கவாதிகள் மற்றும் இந்தியாவின் ஆதிக்க சாதியினர் இருவருக்கும் பிறந்த கள்ளக் குழந்தைதான் என்பதே உண்மையாகும்.

உரிமைகள் அனைத்தும் காகிதத்தில்!
அடக்குமுறையே நடைமுறையில்!

அரசியல் சட்டம் வழங்கும் காகித உரிமைகளைக் கூட நிலவும் அரசு கட்டமைப்பு பறித்து ஜனநாயக விரோத, பாசிச காட்டாச்சியை நடத்துகிறது. அரசியலமைப்புச் சட்டம் முன்வைக்கும் உரிமைகளை மறுப்பதும் சட்டப்படியே அதற்கு உட்பட்டு தான் நடக்கிறது.

எடுத்துக்காட்டாக, அரசியல் சட்டத்தின் பிரிவு 23-லிருருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும் என்ற கட்டாய உரிமையை எந்த முதலாளியும் கண்டு கொள்வதே இல்லை. தொழிற்சங்கங்கள் அரசியல் உரிமைகளை நோக்கி தொழிலாளர்களை அணிதிரட்டுவதைக் காட்டிலும், அரசியல் சட்டம் வழங்கும் குறைந்த பட்ச கூலி வழங்க கோரி போராடும் வேலையே பெருமளவு தொழிற்சங்க பணியாகிறது.  அடிப்படை உரிமையின் ஒரு பகுதியான பாதுகாப்பான கண்ணியமான வேலை நிலைமைகளை வழங்கும் கடமையை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவு 21 வழங்கும் கண்ணியமான வேலை மற்றும் பணி பாதுகாப்பு போன்றவை எந்த ஆலைகளிலும் அமுல்படுத்தப்படுவதே இல்லை. கடந்த இரு ஆண்டுகளாக தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும் சட்டப்படியே திருத்தப்பட்டு, அதாவது நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் நீக்கப்பட்டு 4 வழிகாட்டுதல் தொகுப்பாக மற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்- காவி பாசிச அடக்குமுறைகளுக்கு வழி செய்துள்ளதை அறிவோம். கொரானா அரசியல் ஊரடங்கு காலத்தில் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள நாடு முழுவதும் காலால் நடந்து சென்ற கொடூரம் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் உண்மை நிலைமையை உலகிற்கே கட்டி விட்டது. தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்க போராடும் நிலைமை, இப்போது தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை பாதுகாக்கும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளது. ஆனால் பாசிச பா.ஜ.க  கும்பலோ ஒருபுறம் சட்ட வாய்ப்புகளை அங்கீகரிப்பது போல பேசிக் கொண்டே மறுபுறம் தான் ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் விரோத சட்டங்களை அமுல் படுத்துகிறது. அரசியல் சட்டமோ ஆளும் வர்க்க நலனுடன் இசைந்து போய் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

அதுபோல தீண்டாமை என்பது அரசியல் சட்டப் பிரிவு 17-ன் படி ஒரு குற்றமாகும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசமைப்பில் உருவாக்கப்பட்ட சட்ட வழிவகைகளை 3 நிலைகளில் காணலாம்.

”சமத்துவம், சமூக நீதி மற்றும் பாகுபாடின்மையை வலியுறுத்தி, தீண்டாமையை அகற்றிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்ட வழிவகைகள் இந்திய அரசமைப்பில் அடிப்படை உரிமைகள் (Part III) பகுதியில் மைய இடம் பெறுகின்றன. அரசியல் சாசனத்தில் 14 முதல் 18 வரையிலான பிரிவுகள் சட்டத்தின் மூலம் சமத்துவம், பாகுபாடின்மை (Non-discrimination), பொது வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவை குறித்துப் பேசுகின்றன. சட்டத்தின் முன் சமத்துவம் (பிரிவு 14) என்பதுவே இப்பிரிவுகள் எல்லாவற்றுக்கும் அடிநாதமாகும். எச்சூழலிலும் இவ்வுரிமை பறிக்கப்பட இயலாதது (Non-derogable), மீறப்பட முடியாதது (Inviobable). மனித உரிமைகள் குறித்த அகில உலகச் சட்டங்களும் இதனடிப்படையில் அமையப் பெற்றவையே.

தீண்டாமை.

1948-ல் இயற்றப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights), சிவில் மற்றும் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Convenant on Civil and Political Rights), அனைத்து வகை இனப் பாகுபாட்டு வடிவங்கள் ஒழிப்பு குறித்த அகில உலக உடன்படிக்கை (International Convention on the Elimination of all Forms of Discrimination) போன்ற பல்வேறு உடன்படிக்கைகளின் அடிப்படையே சமத்துவம் தான். எல்லா மனிதர்களும் உள்ளார்ந்த சுதந்திரத்தோடும், மாண்போடும், உரிமைகளோடும், சமத்துவத்தோடும் பிறக்கிறார்கள் என்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் பிரிவும், சட்ட்த்திற்கு முன் மனிதராக அங்கீகரிக்கப்படும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்று அப்பிரகடனத்தின் 6-வது பிரிவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம், எவ்விதப் பாகுபாடுமின்றி சட்டத்தின் முன் சம பாதுகாப்பைப் பெறுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு என்று அதே பிரகடனத்தின் 7-வது பிரிவும் கூறுகின்றன. இதே உரிமைகளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கையின் பிரிவுகள் 3,16 மற்றும் 26 எடுத்தியம்புகின்றன.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் முகப்புரையின் முதல் வாசகம் “மனித சமூகத்தின் உள்ளார்ந்த மாண்பும், சமத்துவமும், பிரிக்க இயலா உரிமைகளும் இந்த மானுட சமூகத்தின் சுதந்திரம், நீதி, அமைதிக்கான அடித்தளங்களாகும்” என்று அறைகூவல் விடுகிறது. எனவே சமத்துவம் இல்லாத சமூகத்தில் சமூக நீதியும், சுதந்திரமும் இருக்க இயலாது.

சமத்துவம் எனும் போது குடிமைச் சமத்துவம், அரசியல் சமத்துவம், சமூக நிலைகளில் சமத்துவம், இயற்கைச் சமத்துவம் மற்றும் பொருளியல் சமத்துவம் போன்ற பல தளங்களிலும் நிலவும் சமத்துவத்தைக் குறிப்பிடலாம். சமத்துவம் என்பது நேர்மறை மற்றும் எதிர்மறை குணாம்சங்கள் இரண்டையும் தன்னகத்தே கொண்ட்து. நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து வகையான வாய்ப்புகளையும், பாகுபாடின்றி வழங்குவதே அதன் நேர்மறையான நிலை. சாதி, மதம், இனம், நிறம், தகுதி நிலை என்ற அடிப்படையில் மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்க்கும் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பது எதிர்மறையான நிலையாகும். சமத்துவ சிந்தனையை சட்டத்தின் மூலமாக மக்கள் மீது திணிக்க இயலாது. இது போன்ற சமத்துவ சிந்தனைப் போக்கை மக்கள் மனங்களில் வளர்த்தெடுக்கும் போதுதான் சமூக நீதியை அடைய முடியும்.

தொடரும்

இளஞ்செழியன்

பகுதி 1 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்!

பகுதி 2 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி 2

பகுதி 3 படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் அமைப்புச் சட்டம்! பகுதி-3 

ஆதார நூல்கள்;

  • புதிய ஜனநாயகம்.
  • வினவு, கீற்று கட்டுரைகள்.
  • நக்சல்பரி முன்பும் பின்பும், தோழர் சுனிதிகுமார் கோஷ்.
  • சாதியம் பிரச்சனைக்கு தீர்வு புத்தர் போதாது,
    அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசிய தேவை -ரங்கநாயக்கம்மா.
  • அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
  • காந்தியும் காங்கிரசும் துரோக வரலாறு. பு.மா.இ.மு வெளியீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here