நேற்று (23.10.2022) தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஆந்திர டோல்கேட்டில் தாக்குதல் நடந்துள்ளது. இதனை தமிழினவாத கும்பல் தமிழர்கள், தெலுங்கர்கள் இடையேயான பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கிறது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.

திருப்பதியில் தனியார் சட்டக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் நேற்று தேர்வை முடித்து விட்டு பண்டிகைக்காக காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது புத்தூர் அருகே வடமாலைப்பேட்டை சுங்கச்சாவடியில் Fastag மூலம் கட்டணம் செலுத்துவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்கசாவடி ஊழியர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது.

இந்த மோதலின் போது உள்ளூரை சேர்ந்த குண்டர்களும் டோல்கேட்டுக்கு ஆதரவாக தமிழக மாணவர்களை தாக்கியுள்ளனர். இவர்களை தான் தமிழினவாத கும்பலும் ஒரு சில ஊடகங்களும் ஆந்திர மக்கள் தமிழக மாணவர்களை தாக்கியுள்ளதாக திரித்து கூறுகின்றனர்.

இது குறித்து தாக்குதலுக்கு உள்ளானவர் கூறும் போது “என்னுடைய fastag ஸ்கேன் செய்யும் போது ஒர்க் ஆகவில்லை, நான் ரீ சார்ஜ் செய்துவிடுகிறேன் மறுபடியும் ஸ்கேன் செய்யுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் என்னுடைய வண்டியை லாக் செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மீண்டும் பணமாக செலுத்திவிடுவதாக கூறினேன். எவ்வளவு என்று கேட்ட போது 120 ரூபாய் என்றார்கள். 40 ரூபாய் தானே ஏன் அதிகமாக கேட்கிறீர்கள் என்றேன். அதன் பிறகு தான் சுங்க சாவடி ஊழியர்கள் தாக்க ஆரம்பித்தார்கள். அதை பார்த்து விட்டு பின்னே வந்த தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர ஆரம்பித்தார்கள். எங்களை தாக்கியதற்க்கு மன்னிப்பு கேட்க சொன்னோம். அப்போது தான் அவர்கள் அங்கிருந்த குண்டர்களுக்கு சிக்னல் கொடுத்து தாக்க சொன்னார்கள் இது தான் நடந்தது. மேலும் எங்களை தாக்கியவர்கள் எங்களின் நகைகளையும், செல்போன்களையும் பறித்துக் கொண்டார்கள்.” என்றார்.

சுங்கசாவடி ஊழியர்களும், லோக்கல் ரவுடி குண்டர்களாலும் தாக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் தொல்.திருமாவளவன் அவர்கள்.

சுங்கசாவடிகளில் Fastag முறை வந்த பிறகு தொழில்நுட்ப கோளாறு அதிக முறை ஏற்படுவதாக நாம் செய்திகளில் பார்க்க முடிகிறது. சுங்கசாவடி பகல்கொள்ளை என்று அதை நீக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் Fastag மூலம் கொள்ளையை நவீனபடுத்தியிருக்கிறது ஆளும் பாஜக ஒன்றிய அரசு.

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கசாவடி தான் இருக்கும் என்று அறிவிப்பு ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு கொடுத்தும் இதுவரை அமல் படுத்தவில்லை. பல இடங்களில் 20 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கசாவடி என்ற நிலை தான் உள்ளது. Fastag வேலை செய்யவில்லை என்றால் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது புதுவித கொள்ளை இதனாலே பல இடங்களில் பாஸ்டேக் வேலை செய்யவில்லை என்று இருமடங்கு கட்டணம் செலுத்தச் சொல்லி வழிப்பறி செய்கிறார்கள்.

மேலும், சுங்கச்சாவடிகளில் பெரும்பாலும் திட்டமிட்டே லோக்கலில் உள்ள ரவுடிகளுக்கே டெண்டர் விடுவதும், வேலைக்கு அமர்த்துவதும் நடந்து வருகிறது. இது போன்ற ரவுடிகள் தான் ஆந்திராவிலும் தமிழர்களை தாக்கியுள்ளார்கள். தமிழ்நாட்டிலும் கூட சில இடங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளது.

சுங்கச்சாவடிகளே இருக்க கூடாது என்பது தான் நமது நிலைபாடாக இருக்க வேண்டும். இது ஆந்திராவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி. ஆனால் தமிழினவாதிகள் இந்த பிரச்சினையை இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக மாற்ற முயல்கிறார்கள். மறைமுகமாக சுங்க கொள்ளைக்கு துணைபோகிறார்கள். இதனை முறியடிக்க சுங்கசாவடிகளை அகற்றக் கோரி களத்தில் இறங்கி போராடுவோம்.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here