உழுபவன் கணக்குப் பார்த்தால்!


விவசாயிகள் என்றாலே தாங்கள் விளைவிக்கும் நல்ல தரமான விளைபொருளை  உண்பவர்கள் என்று பொது புத்தியில் நன்கு பதிந்துள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக நண்பர் ஒருவர் ஏங்க உங்கள் வீட்டில் நல்ல தரமான சின்ன வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவார்கள் தானே என்றார். இது என்னடா வம்பா போச்சே என்று மனசுக்குள் வைத்துக் கொண்டே ஏங்க நீங்கள் சொல்லுற அந்த தரமான சின்ன வெங்காயம் எப்படி இருக்கும்? என்று கேட்டேன். அப்பாவியாய்! அவரும் விடுவதாய் இல்லை. அதாங்க  இளம் சிகப்பு நிறத்தில் சருகாய் போன தோலுடன் நல்லா இந்த  அளவில் என்றார் கையை உருட்டியபடியே சளைக்காமல். அதென்னங்க வாங்கிட்டா போச்சு என்று கூறியபடியே ஆமாங்க வார சந்தைக்கு போனதுண்டா என்று கேட்ட படியே கிலோ  பத்து ரூபாய்க்கு தக்காளி விக்குற காலத்துல விவசாயிகள் மீது இல்லாத பாசம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் போது நீங்க தருகிற  அந்த 100 ரூபாயும்  அப்படியே விவசாயிகளின் பாக்கெட்டுக்கு போகிறது என்று நம்புறீங்களா?என்று கேட்டேன். ஆமாம், என்று ஒருவாறு ஒப்புக்கொண்டார்?போராடும் விவசாயிகளுக்கென்ன நல்லா பாதாமும், பாலும் ஊட்டமா  தானே சாப்பிடுகிறார்கள் என்ற சங்கிகளின் பிரச்சாரத்திற்கு பலியான  விவசாயிகளை விட உழவர்களின் பிரச்சினைகளை  உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பற்ற அவரை குற்றம் சொல்வதற்கில்லை.

பொதுவாக விவசாயிகள் என்றாலே அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் நெல்லு  விவசாயத்தை தான் ;சேத்துல கால் வைக்கலைன்னா சோத்துல கிடைக்கும் முடியாது சினிமா காட்சிகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ள அதே வேலையில் ஏனோ மற்ற பயிர் செய்பவர்களை சினிமா உலகம் காட்சிபடுத்தவில்லை?  பந்தல் காய்களான அவரை, பீர்கன், புடலை,பாவற்காய்; செடி பயிரில் விளையும் தக்காளி, மிளகாய்,கத்திரி ,வெண்டக்காய்,முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் மற்றும் கீரை வகைகளை தோட்ட பயிர்கள் என்று பொதுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இத்தகைய தோட்ட பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளில் பெரும்பாலும் சிறு குறு விவசாயிகளே ஏனெனில் இத்தகைய விவசாயத்தில்   market Riskஎன்று சொல்லக்கூடிய சந்தை சூதாட்டம் போன்றது.

விளைவிச்ச பொருளுக்கு என்ன விலை என்பது அறுவடை நாளின் சந்தை தான் தீர்மானிக்கும் ஆனால் அதற்கான அனைத்து இடு பொருட்களின் விலையை தீர்மானிக்கும் உரிமைகளை பல்வேறு ஆணையங்கள் மூலம் சுதந்திர இந்திய ஜனநாயகம் தரகு மற்றும் பன்னாட்டு  முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது. தோட்டப்பயிர்களை விளைவிக்க குறைந்த பட்சமாக நிரந்தர பாசன வசதி கொண்ட மின்னிணைப்பு கொண்ட மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளை கிணறோ அவசியம் அதில் சொட்டு நீர்ப் பாசனமும் அடக்கம் மேலும் பயிர் செய்யும் முதலீட்டிற்குரிய பணமும் அடிப்படை தேவை உதாரணமாக சின்ன வெங்காயம் பயிர் காலம் 100-120 நாட்களுக்கு குறைந்தது ஒரு இலட்சம் ரூபாய் கையிருப்பு அவசியம். அப்படி போடும் முதலீட்டு பணத்திற்கு 1 டன்  விளைச்சல் வந்தது என்றால் நல்ல மகசூல் விலை கிலோ 20 ரூபாய் என்றால் 2இலட்சம், 100 என்றால் 10இலட்சம் ஆம் நல்ல மகசூலுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

நிபந்தனைகளில் சில : நல்ல முளைப்பு திறன் கொண்ட விதைகள், அதுவும் நம்ம ஊருக்கு ஏற்ற விதை(சில நேரங்களில் ஒரிசாவில் விளையும் விதைகளை ஏமாற்றப்படுவதும் உண்டு), பூச்சி,பூஞ்சை தாக்குதலை உருவாக்காத பருவநிலை இருப்பது அவசியம் இல்லை எனில் மருந்து செலவு எகிறும், விளைச்சலை பாதிக்கும், வேலை ஆட்கள் காலத்துக்கு தகுந்தவாறு இடையூறு இன்றி கிடைக்க வேண்டும். இல்லை எனில் விளைச்சலை பாதிக்கும் போட்டி போட்டு அதிக கூலி கொடுத்து கூட்டி வர வேண்டும் இதெல்லாம் அமைந்தாலும் கிணறாக இருந்தால் மின் மோட்டார் பழுதாகாமல் இருக்கவேண்டும். பழுதானால் சீரான பாசனம் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உண்டு விளைச்சல் குறையும், ஆழ்துளை கிணறு மோட்டார் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பாக சிக்கல் தான்  இதெல்லாம் இருந்தும் மின்வாரியம் 3பேஸ் மின்சாரத்தை உத்திரவாதமாக இருக்க வேண்டும்,இதையும் தாண்டி நல்ல மகசூல் அறுவடைக்கு முன்னும் பின்னும்  மழை பெய்யாமல் இருக்க வேண்டும்!அப்படி விளைச்சல் காலத்தில் நெருங்கிய சொந்த பந்தங்களின் வீட்டில் விசேஷமோ? எழவோ? இல்லாமல் இருந்தால் சிறப்பு.அதுவும் விவசாய கூலி ஆட்களின் ஊரில் கண்டிப்பாக ஊர் திருவிழாவோ,கோவில் நோம்பவோ இருந்தல் கூடவே கூடாது. அப்புறம் சந்தைப்படுத்தப்படும் பகுதியில் கண்டிப்பாக lockdown ஆகாது இப்படி பல வற்றில் முக்கியமானவை லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

ஒரு உதாரணத்திற்கு சின்ன வெங்காயம் பயிரை பற்றி பார்க்கலாமா? நிலத்தை உழுது, சாணி எருவோ அல்லது கோழி எருவோ நிலத்தில் போட்டு உழுது தயார் செய்து, நாற்று பட்டறையில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும்  விதைகளை கிலோ சில பல ஆயிரங்களை விட்டெறிந்து வாங்கி விதைத்து முளைக்க வைத்து பக்குவமாய் வளர்த்து நாற்றை பிடுங்கி,உழுத நிலத்தில் கட்டிய பாத்தியில் தண்ணீரை பாய்ச்சி வெங்காய நாற்றை நட்டதும் களை கொல்லி அடிச்சு, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி, ஆட்களுக்கு கூலி கொடுத்து கை களை எடுத்து, உரம் விட்டு வைரஸ், பூஞ்சை, கருகல் நோய் தாக்காமல்?இருக்க பல சுற்று மருந்தடித்து,  வெங்காயம் நல்ல நிறம்  வர ஊட்டச்சத்து டானிக் கொடுத்து அறுவடைக்கு ஆட்கள் கூலி கொடுத்து 110 நாட்களில் 100ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும். இத்தனைக்கும் இயற்கையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆமா. அப்படி வரும் விளைச்சலில் 100 மூட்டை என்று வைத்துக்கொண்டால் நீங்கள் எதிர்ப்பார்க்கும் தரத்தில் 70-80 மூட்டை இருந்தால் அமோகம் மீதம்10-20 மூட்டை 2ஆம்,3ஆம் தரத்திலும் 10மூட்டை சந்தைக்கு ஆகாத வெண்ணிற காய்கள், அழுகல் மற்றும் முனை வெட்டுபட்ட காய்கள் தரத்திலும் இருப்பது இயற்கை. அப்படி 100ஆயிரம் போட்டு விளைவித்த பொருளாகவே இருப்பினும் சந்தை விதியானது  அன்றைய சந்தையை பொருத்தது அது 10 ரூபாயாக இருக்கலாம் அல்லது 100 ரூபாயாக கூட இருக்கலாம்.விளைவித்த பொருளை வாங்கி விற்பனை செய்ய வரும் கமிஷன் வியாபாரியிடமே முதலீட்டுக்கு முன்பணம் வாங்கி இருப்பார் அந்த விவசாயி. எனவே அவர் சொல்வதுதான் விலையாக இருக்கும் பெரும்பாலும் சந்தை விலையை விட ஒன்றோ-இரண்டு ரூபாயோ குறைவாகவே இருக்கும். அதுவும் வெங்காயத்தை இருப்பு வைப்பது என்பது விவசாயிகளை பொறுத்த வரை போட்ட முதலீட்டை ஒரு மழை முற்றாக அழித்துவிடும். ஏதோ உள்ளூர் கமிஷன் வியாபாரியிடமாவது ஒரு மனசாட்சியை பார்க்கவோ அல்லது பழகிய நிலையிலோ இருப்பது இயல்பு. அதுவே மோரோ(more) அல்லது ரிலையன்ஸ்ஸோ (Reliance) என்றால் அந்த முதல் தரத்தை மட்டுமே கொள்முதல் செய்வான். அதுவும் அவனுக்கு வேண்டிய அளவு மட்டுமே. மற்றவை அவனுக்கு தேவையில்லாதது, அப்படி ஒரு சூழலில் தான் தமிழக விவசாயிகளின் நிலை இன்று உள்ளது.சென்னை போன்ற பெரும் நகரங்களில் நல்ல தரமான பளபளக்கும் காய்களை அடுக்கிவைத்திருக்கும் மோர் மார்கெட்டையோ, ரிலையனஸ் பிரஸ் மார்கெட்டையோ பார்த்தால் அந்த தர அயோக்கியத்தனம் தான் நினைவுக்கு வரும். அதனாலேயே சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் மார்க்கெட் சந்தில் தினசரி கோயம்பேட்டு சந்தையில் இருந்து நல்ல பழுதில்லாத காய்களின் அளவில் இரண்டாம் தரத்தில் அன்றைய மார்க்கெட்டில கூடிய சகாய விலை கொண்ட காய்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வாங்கி வந்து விற்கும் அந்த வயதான பெண்மனியை என் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கத்தோன்றும்.

பொதுவாக உழைக்கும் மக்களிடம் ஒரு பண்பு உண்டு. உழைப்புக்கு ஏற்ற கூலி தரவில்லை என்றால் சட்டையைப் பிடித்து கேட்டுவிடுவது உண்டு. தாமதமாயினும் அப்படியான ஒரு விசயத்தை இந்திய விவசாயிகளின் சார்பில் முன்மாதிரியான நிகழ்வாக பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச உள்ளிட்ட விவசாயிகள் மோடியின் சட்டையை பிடித்து கேட்டுள்ளனர்.

ஏங்க பயணத்திற்கு ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பே கட்டணம் எவ்வளவு என்று உத்திரவாதபடுத்திக் கொண்ட பின்னர் தானே பயணிக்கிறார்கள்? அதிலும்  Olaவுல கம்மியா? Uberல கம்மியா என்று கணக்கு பார்க்கும் மக்களே  பயண செலவை உத்திரவாதமாக தெரிந்துகொள்வதில் உள்ள அக்கறையை குறை சொல்லவில்லை.

அதையே தான் டெல்லியில் போராடிய  இந்திய விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று  “தாங்கள் விளைவிக்கும் உணவு பொருட்களுக்கான குறைந்த பட்ச  விலையை நிர்ணயம் செய்து வியாபார முதலாளிகளிடம் இருந்து  உத்திராவாதப்படுத்தி கொடுக்கும் சட்டம் இயற்று” என்று கோரிய போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரையும் மாய்த்து கொண்டனர்.  போராடிய விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் துரோகம் செய்யும் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு மட்டுமா எதிராக உள்ளது. கட்டுக்கடங்காமல் செல்லும் பெட்ரோல் விலை, உணவு பொருட்களின் விலை, வேலையிண்மை இவற்றால் நம்மை பாதிப்பதில்லையா?

சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரம் வாங்கிய 75 ஆண்டுகளில் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக  விதையை விற்ற முதலாளிகள் விலையை நிர்ணயம் செய்ய சட்டம், உரம், பூச்சி கொல்லி மருந்து முதலாளிகள் விலையை நிர்ணயம் செய்ய சட்டம், அதில் ஒன்று நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் நெல்லை போன்று 24 பொருட்களுக்கு மட்டுமே அப்படி ஒரு சட்டம் உள்ளதும் இந்த வியாபார முதலாளிகளுக்கு இடையூறாக கருதும் பாகாசூர கார்ப்பரேட்டுகளுக்கு நம்மூர் விவசாயிகளுக்கு டன் நெல்லுக்கு 1600 ரூபாய் தருவதாய் சொல்வதே அவர்களுக்கு அச்சுறுத்துகிறதாம். என்னடா இது சந்தை விற்பனைக்கு  லாயக்கு இல்லை என்று கழிச்சு கட்டிய வெங்காயத்தை வீட்டு புழக்கத்திற்கு வெச்சு திங்கும் விவசாயிகளா அம்பானிக்கும் அதானிக்கும் போட்டி?அதையும் ஆமோதிக்க ஒரு சங்கி கூட்டம் வேறு! விளை பொருளை நிர்ணயம் செய்ய சட்டமே இருக்க கூடாது என்று கூறும் கார்ப்பரேட் ஆதரவு பாசிச அரசிடம் கெஞ்சி பயனில்லை கார்ப்பரேட்- காவி பாசிச அரசை வீழ்த்தி, போராடும் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய கொண்ட ஜனநாயக கூட்டரசை கொண்டு வருவோம்.

 

  • தமிழ் மாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here