திர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 இல் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது என தமிழ் தேசியப் பேரியக்கம் முடிவு எடுத்துள்ளதாக பத்திரிகைச் செய்தி மற்றும் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

இந்தப் பேரியக்கத்தைச் சேர்ந்த மணியரசன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் சிபிஎம் கட்சியிலிருந்து விலகி எம் சி பி ஐ என்ற கட்சிக்கு சென்றனர். பின்பு அதிலிருந்து விலகி தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி என்று துவங்கினர். பொதுவுடைமைக் கட்சி என்ற பெயர் அவர்களது கொள்கைக்கு உறுத்தலாக இருந்ததால் தமிழ் தேசிய பேரியக்கம் என்று நாமகரணம் சூட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பார்ப்பன பாசிசம் காலூன்ற விடாமல் தடுத்து வருகின்ற பார்ப்பன எதிர்ப்பு மரபு மற்றும் பெரியாரின் பணிகள் பொதுவுடமை கட்சியின் பணிகள் ஆகியவற்றை எப்போதும் புறந்தள்ளி இழிவுபடுத்துவதன் மூலம் தன்னை அதிதீவிர முற்போக்காளர்களாக காட்டிக் கொண்டு நாடகமாடி வந்த இந்த சிறிய கும்பல், தற்போது தனது முகமூடிகளை அவிழ்த்து போட்டுவிட்டு முழுமையாக தமிழ் பாசிச அமைப்பான நாம் தமிழர் கட்சியை ஆதரித்து களமிறங்கி உள்ளனர்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாடு ஒன்றின் அறிமுக பிரசுரத்தில் தமது அமைப்பைப் பற்றியும் அதன் கொள்கைகளை பற்றியும் சுருக்கமாக கீழ்க்கண்டவாறு இவர்கள் முன் வைத்திருந்தனர். “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத தற்சார்பும் புரட்சிகர உள்ளடக்கமும் கொண்ட தமிழ்த் தேசிய அமைப்பாகும். ஆய்ந்து முடிவு செய்த இலட்சியங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாகப் பற்றி நிற்கும் இயக்கமாகும். பணம், பதவி, விளம்பரம் ஆகியவற்றுக்கு ஆசைப்படாமல் இலட்சியத்தின் மீது மட்டுமே பற்று கொண்டு இயங்க வேண்டுமென்ற அரிச்சுவடியைத் தன் உறுப்பினர்களுக்குக் கற்றுத் தரும் அமைப்பாகும். தங்க நகை செய்யும்பொழுது சேதாரம் ஏற்படுவது போல், தமிழ்த் தேசத்திற்காகப் போராடும்போது த.தே.பொ.க. தோழர்களுக்கு சேதாரம் ஏற்படலாமே தவிர, தமிழ்த் தேசியத்திற்கு சேதாரம் ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்துள்ள இயக்கம். தமிழினத்தின் விடியலுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ள அமைப்பு என்ற வகையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்மையான பொருளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுமையான இயக்கம். வர்ண-சாதி, வர்க்க ஒடுக்குமுறைகள் தமிழ்த் தேசத்தில் ஒழிய வேண்டும் என்று போராடுவதால் இது பொதுவுடைமை இயக்கமுமாகும்” என்று செப்டம்பர் 25, 2011 ஆம் ஆண்டு ஓசூரில் நடந்த மாநாட்டின் அறிமுக பிரசுரத்தில் முன் வைத்திருந்தனர்.

நாம் தமிழர் ஆதரவும், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பார்ப்பன பாசிச சேவையும்.

ஈழத் தமிழர்கள் போராட்டம் துவங்கி சிதம்பரத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்திய சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் போராட்டம் வரை புரட்சிகர அமைப்புகளை ஏதாவது ஒரு வகையில் கேலி செய்தும் நக்கலடித்தும் இவர்கள் அடித்த கூத்துகள் எழுதி மாளாது.

படிக்க:

 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?

 பெ.மணியரசன், செந்தமிழன் பொய்களும், உண்மைகளும்!

ஓசூர் மாநாட்டில் இவர்களே முன் வைத்திருந்த படி தங்களது தோழர்களுக்கு செய்கூலி சேதாரம் ஏற்பட்டாலும் ஏற்படுமே ஒழிய தாங்கள் முன்வைத்த தமிழ்த் தேசிய லட்சியத்திற்கு ஒருபோதும் ஊரு விளைவிக்காது என்று முன் வைத்ததற்கு நேர் மாறாக தற்போது சீமானை ஆதரித்துள்ளனர்.

இதன் மூலம் இவர்கள் வாயடித்து வந்த பொதுவுடமை கொள்கையிலிருந்து முற்றாக வெளியேறிவிட்டனர் என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் பாசிச கும்பலின் தலைவனான சீமான் முன்வைக்கின்ற வாதங்கள், பார்ப்பன கடப்பாரையை ஏந்தி கொண்டு திராவிட இயக்கத்தை ஒழிக்கப் போவதாக முன்வைக்கின்ற திமிர்த்தனமான பேச்சுகள் மற்றும் பத்திரிகையாளர் துவங்கி மாற்றுக் கருத்து முன்வைப்பவர்களை அணுகுகின்ற ஜனநாயக விரோத பாசிச அணுகுமுறை ஆகியவை அனைத்தும், ‘கற்றறிந்த மேதைகளான’ மணியரசன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியவர்களுக்கு தெரியாதது அல்ல.

இருந்த போதிலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இது அவர்கள் தமிழ் தேசிய பற்றாளர்கள் என்றும் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருந்த சிலருக்கு அதிர்ச்சியூட்டி இருக்கலாம். ஆனால் இவர்கள் பூர்வாசிரம காலத்தில் இருந்து இவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து புதிய ஜனநாயகம் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்துள்ளது என்ற அடிப்படையில் எமக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை.

படிக்க:

 சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள் மீள்பதிவு

 சீமான் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது

2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்கள் அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வலதுசாரி கொள்கை என்று முன்வைக்கக்கூடிய பாசிச ஆட்சி வடிவம் மற்றும் பாசிச பயங்கரவாத ஒடுக்குமுறைகள் பல்வேறு நாடுகளில் அரசு பதவியை ஏற்றுக்கொண்டது.

இந்த காலகட்டத்தில் இந்திய ஒன்றிய அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி ஆண்டு வந்தது என்ற போதிலும் படிப்படியாக பார்ப்பனப் பாசிச கொள்கைகளை நாடு முழுவதும் பரப்புகின்ற – கொண்டு செல்கின்ற – அமல்படுகின்ற வெறித்தனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சங் பரிவார குண்டர் படையினர் 2008 ஆம் ஆண்டு மத சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீது தொடர்ச்சியான பல தாக்குதல்களை நடத்திய போது எமது தோழமை இதழான புதிய கலாச்சாரத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தோம்.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

“தமிழகத்தில் பார்ப்பன மதவெறியர்கள் காலூன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரின் பணி. கடந்த இரு பத்தாண்டுகளில் எமது அமைப்பினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசைவிழா, தில்லை சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டம் முதலானவையும், இந்து மதவெறியர்களுக்கு எதிரான நேரடியான மோதுதல்களும் இந்து மதவெறியர்களைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியிருக்கின்றன.

இருப்பினும், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் மதமாற்றம், புளியங்குடி தென்காசி கலவரம், கோவை கலவரம், தற்போது கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் என அவர்கள் தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயன்றவாறுதான் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது சாதி, தீண்டாமை, மொழி, பண்பாட்டு அடக்குமுறை, மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் சித்தாந்தம் என்று பார்ப்பன பாசிசத்தைப் பெரும்பான்மை மக்களிடத்தில் விளங்க வைக்காத வரை அவர்களை ஒழிக்க முடியாது.

அந்தப் போராட்டம் ஒன்றுதான் இந்து மதவெறியர்களைத் தனிமைப்படுத்தும். அந்தப் போராட்டம்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரி என்பதை மக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் விளங்கச் செய்யும். கடினமென்றாலும் இது ஒன்றே வழி” புதிய கலாச்சாரம் 2008 ஆம் ஆண்டு இதழ்.

அதன் பிறகான இந்த 18 ஆண்டு காலம், ஆர் எஸ் எஸ் பாஜக இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பதவி நேரடியாகவே கைப்பற்றி பார்ப்பன மேலாதிக்கத்தையும் பார்ப்பன மதத்திற்கு உள்ளே உள்ள சூத்திர பஞ்சமர் சாதியினரையும் மதச் சிறுபான்மையினரையும் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி வருகிறது.

நேரடியாக தான் காலூன்ற முடியாத தமிழகம் போன்ற மாநிலங்களில் நாம் தமிழர் போன்ற கட்சிகளை தனது பினாமி அமைப்பாக முன்வைத்து களமாடி வருகிறனர். இந்த பாசிச ஐந்தாம் படை கும்பலை நம்பி தமிழ் தேச விடுதலையை சாதித்து விட முடியும். விடுதலை புலிகள் முன்வைத்த தமிழ் ஈழத்தை அடைந்து விட முடியும் என்று படித்த இளைஞர்கள் சிலரும், பாமர தமிழ் தேசியர்கள் பலரும் நம்பிக் கொண்டுள்ளனர்.

இந்த தமிழ் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுடன் மணியரசன் மற்றும் வெங்கட்ராமன் இணைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு முற்போக்கு முகமூடியை அணிவிப்பதற்கும், சித்தாந்த ரீதியாக தமிழ் தேசிய முலாம் பூசுவதற்கும் பயன்படுமே தவிர தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உதவாது.

தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here