
இந்தியாவில் காப்பீடு என்று சொல்ல கூடிய இன்சூரன்ஸ் துறையில் சுமார் பத்து ட்ரில்லியன் அமெரிக்க டாலரானது வருவாயாக புழங்கி கொண்டுள்ளது.
இந்தத் துறையை முற்றாக கைப்பற்றுவதற்கு வசதியாக அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதி என்பதை இந்திய ஒன்றிய அரசாங்கமான பாசிச பாஜக அனுமதி அளித்ததுள்ளது.
24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் இருந்த போதும் மொத்த ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் அரசு நிறுவனமான எல்.ஐ.சி, பிரிமிய தொகையில் 65 சதவீத சந்தைப் பங்கை கொண்டு இருப்பது மக்கள் பொதுத்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சியம் ஆகும். அதை விட முக்கியமானது பாலிசி எண்ணிக்கையில் 78 சதவீத சந்தைப் பங்கை வைத்திருப்பதாகும். எளிய, நடுத்தர மக்களிடம் இன்சூரன்ஸ் என்ற கருத்தும் அதற்கான நடைமுறையும் பரவுவதற்கு எல்.ஐ.சி தான் உதவி செய்கிறது.
இந்த எல்ஐசி நிறுவனத்தை இந்திய ஒன்றிய அரசாங்கம் ஆனது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிதி சிக்கல் ஏற்படும் போதெல்லாம் படிப்படியாக சூறையாடி வருகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) சமீபத்திய நிதி அறிக்கைகளின்படி, நிறுவனத்தின் தற்போதைய வருவாய் (TTM) ₹9.591 டிரில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டில் நிறுவனம் ₹8.856 டிரில்லியன் வருவாய் ஈட்டியது, இது 2023 ஆம் ஆண்டில் இருந்த வருவாய் ₹8.088 டிரில்லியனை விட அதிகமாகும்.
இந்த வகையில் பணம் காய்க்கும் மரம் என்று சொல்லக்கூடிய அல்லது பொன் முட்டையிடும் வாத்து என்று சொல்லக்கூடிய அளவிற்கு லாபமீட்டுகின்ற பொதுத்துறை நிறுவனத்தை தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானி மற்றும் அம்பானி கும்பல் கொள்ளையடிப்பதற்கு வழிவகுக்கின்ற வகையில் இன்சூரன்ஸ் துறையை 100% அந்நிய முதலீடு என்று வாரிக் கொடுத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் 24 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருந்தாலும் அதில் நான்கு நிறுவனங்கள் தான் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற வகையில் அதாவது அதிகப்படியான பாலிசிதாரர்களைக் கொண்டு லாபம் ஈட்டுகின்ற நிறுவனங்களாக செயல்படுகின்றன.
அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனம் என்னும் முறையில் செயல்படுவதால் தான் எல்ஐசி 2008 காலகட்டத்தில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியின் போது கூட எந்த விதமான சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு உள்ளது. இந்தத் துறையில் 2.3 மில்லியன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் இந்த எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைக் கொண்ட லேமன் பிரதர்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச் போன்ற நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. அவை இன்றளவும் மீள்வதற்கு தவித்துக் கொண்டுள்ளது.
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது உழைக்கும் மக்கள் சிறிது சிறிதாக சேமித்து வைத்துள்ள தொகையை அப்படியே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி கொடுக்கின்ற கேடுகெட்ட நடவடிக்கையாகும்.
அதுமட்டுமின்றி இந்த காப்பீட்டுத் துறையில் பணியாற்றுகின்ற லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வாழ்க்கையை அடியோடு பறித்துக் கொண்டு அவர்களை உயிருடன் படுகொலை செய்வதற்கு சமம் என்பது தான் இந்த காப்பீட்டு துறையிலான தனியார் மயமாக்கம். மற்றும் அந்நிய நேரடி முதலீடு.
நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு பொருத்தமான வேலை கொடுப்பதற்கு வக்கற்ற அரசாங்கம் குறிப்பாக பாசிச மோடி கும்பல் இளைஞர்களுக்கு வேலை இல்லையா? பகோடா போட்டு பிழைத்துக் கொள்ளுங்கள்! என்று நக்கல் அடித்து பேசியது நினைவில் இருக்கும்.
இந்த இளைஞர்கள் சொந்த முறையில் காப்பீட்டு நிறுவனங்களில் ஏஜென்ட்களாக மாறி குறிப்பிட்ட அளவிற்கு மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் ஒரு சிறு தொகையை வருவாயாக ஈட்டுகின்றனர்.. இந்த காப்பீட்டு துறையில் வேலை என்பது அந்தந்த முகவர்களின் திறனை பொறுத்து உள்ளது என்பதால் அரசாங்க வேலையையும் அல்லது அரசாங்க பதவிகளையோ நம்பிக்கொண்டிருக்காமல் தன் கையே தனக்கு உதவி என்ற தாரக மந்திரத்துடன் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த காப்பீட்டு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் அனைவரையும் காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு என்ற கேடுகெட்ட நடவடிக்கை நடுத்தெருவுக்கு கொண்டு வரும்.
படிக்க:
♦ திவாலாகும் அமெரிக்க-ஸ்வீடன் வங்கிகள் நிதி மூலதனத்தின் தோல்வி!
♦ அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை அங்கீகரித்து ஆர்எஸ்எஸ் பாஜக தேசத் துரோகம்!
இந்திரா காங்கிரஸுக்கும் பாசிச பாஜகவிற்கும் வேறுபாடு இல்லை என்று சித்தாந்த குழப்பவாதிகளும் அதிதீவிர புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் போல நடிக்கின்ற போலிகளும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய திண்ணை தூங்கிகளுக்கு இந்த துறையில் தற்போது நடைபெறுகின்ற மாற்றங்கள் வேறுபாட்டை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.
வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் வரை கொண்டு சென்றது காங்கிரசு உலகமயமாக்கம் துவங்கிய காலகட்டத்தில் இருந்து காட் ஒப்பந்த அடிப்படையில் சேவைத்துறை அனைத்தையும் தனியார் மயமாக்குவதற்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்ட போதும் ஓரளவிற்கு காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு எதிரான போராட்டங்களும் கருத்துகளும் அதிகரித்து இருந்ததால் 100% அந்நிய முதலீட்டை அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதனால்தான் காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்மோகன் சிங் பற்றி அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் அமெரிக்க ஊடகங்கள் ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கி அவர் ஒரு ‘அண்டர் அச்சீவர்’ என்ற பெயர் சூட்டி அவரை பதவியில் இருந்து தூக்கி எறிந்தது.
இன்சூரன்ஸ் துறை முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டில் செல்வது நாட்டு மக்களுக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும். முதலாளித்துவம் லாப நோக்கமின்றி எதையும் செய்யாது. இன்சூரன்சும் அந்த அடிப்படையிலேயே அணுகும். அவர்களை பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்தை பயன்படுத்தி அவர்களது மூலதனத்தை பெருக்கிக் கொள்ள மக்கள் பணத்தை கொள்ளையிடுவார்கள்.
உள்நாட்டு மக்களை வர்க்க ரீதியாக அணிதிரள விடாமல் அடக்குகின்ற பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை அதாவது சாதி மற்றும் வர்ணாசிரமக் கொள்கையை, சனாதனக் கொள்கையை தனது அடித்தளமாகக் கொண்டு மக்கள் மத்தியில் எப்போதும் ஏற்றத்தாழ்வு மற்றும் பிரிவினைகளை ஊக்குவிக்கின்ற படு பயங்கரவாத பிற்போக அமைப்பான ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவுடன் ஏகாதிபத்திய நிதி மூலதனம் கைகோர்த்துக்கொண்டு கார்ப்பரேட் காவி பாசிசமாக தாக்குதல் தொடுத்து வருகின்ற இந்த காலகட்டத்தில் இன்சூரன்ஸ் என்று சொல்லக்கூடிய காப்பீட்டு துறை 100 சதவீதம் அன்னிய முதலீடு என்பது மிகப்பெரும் தேச துரோக செயலாகும்.
இத்தகைய பொருளாதார பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு விவசாயிகள் தொழிலாளர்கள் மட்டும் போராடினால் போதாது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் ஒன்றிணைந்து போராடி மேற்கண்ட 100% அந்நிய முதலீடு போன்ற சட்டங்களை தூக்கி வீசி எறிய வேண்டும்.
இத்தகைய கண்ணோட்டத்துடன் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து போராடுவோம்!.
- முகம்மது அலி.






