
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு அரசு விழாவின் போது நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாபைக் கழற்றுவது போல் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த காட்சிகளில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், நுஸ்ரத் பர்வீனின் முகத்தை மறைத்திருந்த ஹிஜாப்பை நோக்கி சைகை காட்டி, திடீரென அதைக் கழற்றுவதைக் காட்டுகிறது. அவருக்குப் பின்னால் நின்றிருந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலையிட்டு முதலமைச்சரைத் தடுத்து நிறுத்துவது போல் தெரிகிறது. அதே நேரத்தில் சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமார் ஆகியோர் சிரிப்பதைக் காணலாம்.
ஒருவர் அணியும் உடை என்பது அவரது உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
“மத மற்றும் கலாச்சார ரீதியான உடைகளை அணிவதும் அணியாமலும் இருப்பது கருத்து சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு அங்கமாகும். தனிப்பட்ட மத நம்பிக்கைகள், கலாச்சார பழக்கவழக்கங்கள் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் குறிப்பிட்ட சின்னங்கள் மற்றும் உடைகளை அணிய வேண்டுமா இல்லையா என்பதை ஒவ்வொரு தனிநபரும் தீர்மானிக்க சுதந்திரமாக இருக்க வேண்டும். நுஸ்ரத் பர்வீனுக்கு எதிராக முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகள் அவரது நம்பிக்கையை மீறும் மோசமான செயல்” என அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் வாரியத் தலைவர் ஆகர் படேல் கண்டித்துள்ளார்.
ஹிஜாபின் மீது சங்பரிவார் கும்பலுக்கு உள்ள வெறுப்பு தற்போது, அவர்களது கூட்டணியில் கலந்திருக்கும் நிதிஷ்குமாருக்கும் தொற்றி விட்டது.
“நிதிஷ் ஜிக்கு என்ன ஆச்சு? அவரது மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை அடைந்துவிட்டதா, அல்லது நிதிஷ் பாபு இப்போது 100% சங்கியாக மாறிவிட்டாரா?” என ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிதிஷ்குமாரின் இந்த மோசமான செயலை பாஜக அதன் இன்னபிற கும்பலை தவிர்த்து அனைவரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு பீகார் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.
ஹிஜாப் பிரச்சினை நடந்து இரண்டு நாட்கள் கடந்த பின்பும் இதுவரை நிதிஷ்குமார் தரப்பிலிருந்தோ அல்லது அவரது கட்சி அரசாங்கம் தரப்பிலிருந்தோ இதுவரை ஒரு அறிக்கை கூட வரவில்லை.
படிக்க:
♦ ஹிஜாப் தடை: முஸ்லிம் மாணவிகளின் கல்வி உரிமை பறிப்பு!
♦ ஹிஜாப் தடை: முக்காடுகளும், அரைவேக்காடுகளும்!
ஒருவேளை தான் செய்தது என்ன தவறு என நிதிஷ்குமார் சங்கி மனநிலையில் இருந்து யோசித்திருக்கலாம். அல்லது இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என அவரது முதலாளிகள்(மோடி&கோ) அறிவித்திருக்கலாம்.
உத்திரபிரதேச சங்கி அமைச்சர் சஞ்சய் நிஷாத் “நிதிஷ்குமார் ஹிஜாபை தொட்டதற்கே இப்படியா அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாக இருக்கும்” என வக்கிரமாக பேசியுள்ளார்.
பாசிச கும்பலுடன் கூட்டணி அமைத்து தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு, தனக்கு எதிரான வாக்களிக்கக் கூடியவர்களை வாக்களர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 64 லட்சம் பெயரை நீக்கி பாஜகவின் தயவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் நிதிஷ்குமார் முழு சங்கியாகவே மாறிவிட்டாரோ என எதிர்கட்சிகள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
ஹிஜாப் விஷயம் மட்டுமல்ல, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மதவெறி கும்பலால் இஸ்லாமிய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதும் பீகாரில் மதவெறி கும்பலின் கை ஓங்கி வருவதற்கும் நிதிஷ் குமார் அரசே முக்கிய காரணம்.
பீகாரில் மதவெறி கும்பலின் துணையுடன் சிறுபான்மை மக்களின் மீது அடக்குமுறை செலுத்தும் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்க தகுதியற்ற நபர். பாஜகவுடன் சேர்ந்து நிதிஷ்குமாரும் மக்கள் விரோத சக்தியாக பரிணமித்திருப்பதை வேடிக்கை பார்க்காமல் பீகார் மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
- சுவாதி






