ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது நிதி மூலதன ஏகபோகத்தை அதிகரிப்பதற்கு கையாளுகின்ற முக்கியமான வழிமுறைகளில் ஒன்று நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டுவதாகும். கூலி கொடுத்து வாங்க வேண்டிய கூலி உழைப்பு முறையை முடிவுக்கு கொண்டு வருவது என்ற திசையில் நிதி மூலதன கொள்ளையர்களான கார்ப்பரேட்டுகள் செயல்படுகின்றனர்.
மனித உழைப்புக்கு பதிலாக எந்திரங்களின் மூலமும், ரோபோக்களின் மூலமும் அனைத்து வகையான வேலைகளையும் செய்ய வைப்பது அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வருவாயாக ஈட்டுவது என்பது ஒரு புதிய வழிமுறையாக உருவெடுத்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் சரி அதனை சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்வது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடிப்பது ஆகியவற்றின் சீனாவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் அமெரிக்காவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் போட்டி நடந்து கொண்டுள்ளது.
இந்தப் போட்டி தற்போது தனி நபர்களுக்கு இடையிலான அதாவது நிதி மூலதன ஏகபோக சுரண்டல் கொள்ளையை நடத்துகின்ற ஒரு சில முதலாளிகள் உலகை சூறையாடுகின்ற நிலைமையை நோக்கி பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டுள்ளது.
ஒரு எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு பின்புலமாக இருந்து பல ஆயிரம் கோடி டாலர்களை செலவு செய்த எலான் மாஸ்க் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பது மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய சம்பளம் வாங்குகின்ற சிஇஓ வாகவும் உயர்ந்து கொண்டு உள்ளார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ட்விட்டர், நியூரோலிங் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதில் ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட அவருக்கு வருமானத்தைக் கொட்டி தரும் நிறுவனம் என்றால் அது டெஸ்லா தான். ஒவ்வொரு ஆண்டும் டெஸ்லாவில் இருந்தே அவருக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.
எலான் மாஸ்க் கட்டுப்படுத்தும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கியமானது டெஸ்லா நிறுவனம் ஆகும். இந்த டெஸ்லாவை பயன்படுத்தி உலகில் சுற்றுச்சூழலை பாதுகாக்கப் போவதாகவும் எரி எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக சூரிய ஒளி சக்தியையும் மின்சார மற்றும் பேட்டரி போன்றவற்றை உபயோகித்து எரிசக்தியாக மாற்றுகின்ற வேலையை டெஸ்லா நிறுவனம் செய்து கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகத் தான் BYD என்ற சீன நிறுவனத்திடம் இருந்து டெஸ்லா சிக்கலை சந்திக்க ஆரம்பித்துள்ளது. மேலும், டிரம்பும் கூட டெஸ்லாவுக்கு குடைச்சலைத் தரும் வகையில் கார்பன் வரி கிரெடிட்டை ரத்து செய்திருந்தார். இதனால் டெஸ்லா 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. இதனை மாற்றி டெஸ்லாவை லாபகரமான கார்ப்பரேட்டாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்காகும்.
இந்த இலக்கை அடைவதற்கு எலான் மஸ்கிற்கு புதிய சம்பள பேக்கேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்லாவின் சிஇஓ என்ற அடிப்படையில் அவருக்கு இந்த புதிய சம்பள விகிதத்தை கொடுப்பதற்கு சுமார் 75% முதலீட்டாளர்களின் ஆதரவோடு இந்த பேக்கேஜ் நிறைவேற்றப்பட்டது.
அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் முக்கியமானது டெஸ்லாவின் மதிப்பை உயர்த்துவது என்பதாகும்.. தற்போது டெஸ்லா சொத்து மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இது 2 டிரில்லியன் டாலராக உயரும்போது அவருக்கு முதலில் குறிப்பிட்ட சதவிகித பங்குகள் வழங்கப்படும். இப்படியே சந்தை மதிப்பு 8.5 டிரில்லின் டாலர் அடையும் வரை அவருக்கு 12 பிரிவுகளாகப் பங்குகள் கிடைக்கும்.
சந்தை மதிப்பு மட்டுமின்றி, அவர் வேறு சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதாவது அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி மின்சார வாகனங்களைச் சந்தைக்கு கொண்டு வர வேண்டும். சுமார் 10 லட்சம் ரோபோடாக்சிகளை மார்கெட்டிற்கு கொண்டு வர வேண்டும். 10 லட்சம் ஆப்டிமஸ் ஹ்யூமனாய்டு ரோபோக்களை சந்தைக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இருக்கிறது.
இந்த இடத்தில் தான் மனித உழைப்புக்கு மாற்றாக ரோபோக்களும் நவீன எந்திரங்களும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட போகிறது இது ஏற்கனவே வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து பல்வேறு நாடுகளில் போராடிக் கொண்டுள்ள தொழிலாளி வர்க்கத்தின் தலையில் மேலும் ஒரு தாக்குதலாக மாற்றப்பட உள்ளது.
லாபத்தை மட்டுமே அதாவது லாபம் வெறியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பானது தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றியோ அவர்களின் வேலை உத்தரவாதம் வாழ்க்கை உத்தரவாதம் என்பதை பற்றி சிறிதளவும் கவலைப்படுவதில்லை.
படிக்க:
♦ எலான் மஸ்க், விவேக் ராமசாமி இணைந்து மிரட்டும் அமெரிக்க பேரரசு!
♦ மோடியை ஏமாற்றிய எலான் மஸ்க் ’விசிட்’!
மாறாக தொழிலாளிகளின் உழைப்பு சக்தியையே உதாசீனம் செய்துவிட்டு ரோபோக்கள் மற்றும் எந்திரங்களின் மூலமே அனைத்து உற்பத்தியும் செய்து விட முடியும் என்றும் அதன் மூலம் வரம்பில்லாத அளவிற்கு கொள்ளை லாபம் அடிக்க முடியும் என்பதை தான் எலான் மாஸ்க் போன்றவர்கள் முன் வைக்கிறார்கள்.
அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையில் ரோபோ டாக்ஸிகள், ஆப்டிமஸ் ஹ்யூமனாய்டு, ரோபோக்கள், மின்சார வாகனங்கள் ஆகியவை பயன்பாடு அதிகரிப்பது இதற்கு தேவைப்பட்ட ரோபோடிக் இன்ஜினியரிங், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்றவை அனைத்தும் மனித உழைப்புகளை நிராகரிக்கின்றன. இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இருப்பினும், இதை எல்லாம் ஈஸியாக செய்ய முடியும் என்பதாலேயே எலான் மஸ்க் இந்தச் சம்பள பேக்கேஜ்ஜை கேட்டுப் பெற்றுள்ளார். இதற்காக அவர் 10 ஆண்டுகளுக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் அதாவது இந்திய தொகையில் ரூ.88.69 லட்சம் கோடியை அள்ளி செல்வார் என்று கூறப்படுகிறது.. இது உலகில் இதுவரை எந்தவொரு சிஇஓவுக்கும் கிடைக்காத ஒரு சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.88.69 லட்சம் கோடியாகும். நம்பரில் சொல்ல வேண்டும் என்றால் ரூ.886,91,20,00,00,000.. இந்தத் தொகையானது சில சிறிய நாடுகளின் GDP-ஐ காட்டிலும் அதிகம் தமிழ்நாட்டின் ஜிடிபி உடன் ஒப்பிட்டு பார்த்தால் சுமார் 2.8 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் உழல்வதற்கு வழிவகை செய்யும் நவீன தொழில்நுட்பம் ஒரு சில முதலாளிகள் அதாவது எலான் மாஸ்க் போன்றவர்களை மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக மாற்றுகிறது.
இதற்கு நேர் மாறாக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவது மட்டுமின்றி அவர்களின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்குள்ளாக உள்ளது. இன்னொரு புறம் ஏழை × பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மலைக்கும், அதல பாதாளத்திற்கும் என மிக மோசமான ஏற்றத்தாழ்வாக மாறிக் கொண்டுள்ளது.
இதனை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாட்டாளி வரும் உள்ளது.
◾தமிழ்ச்செல்வன்






