திரைப்படங்களில் போலீசு, குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அல்லது விசாரணை என்ற பெயரில் உண்மையைக் கொண்டு வருகிறேன் என்ற போர்வையில் பல்வேறு சித்திரவதைகளை செய்வதைக் காட்டுவார்கள்.

மீசையை முறுக்கிக் கொண்டு கொடூரமாக சித்திரவதைகளில் ஈடுபடும் போலீசு, இரண்டரை மணி நேர திரைப்படத்தின் முடிவில் கதாநாயகன் கூறும் உபதேசங்களின் மூலமாகவோ அல்லது வேறு யாராவது கூறும் உபதேசங்களைக் கேட்டு திருந்துவதாகவோ கதையை அமைத்திருப்பார்கள்.

அரைத்த மாவை மீண்டும், மீண்டும் அரைக்கும் தமிழக சினிமா உலகம், போலீஸ் என்ற சட்டபூர்வ கிரிமினல் கும்பல் யோக்கியமானது என்பது போலவும், அதில் ஒரு சிலர் மட்டுமே தவறு இழைப்பவர்கள் என்பதைப் போலவும் சித்தரித்து போலீசு ‘உங்கள் நண்பன்’ என்ற செல்லரித்துப் போன வசனத்தை மீண்டும் மீண்டும் பொதுப் புத்தியில் திணிப்பதற்கு படாதபாடு படுகிறது.

ஆனால் எதார்த்த வாழ்க்கையிலோ போலீசு என்ற கிரிமினல் கும்பல், சாதாரண உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடிகள் மீது கொடூரமான சித்திரவதைகளை கட்டவிழ்த்து விடுவதும், முதலாளிகள் மற்றும் ஆதிக்க சாதிகள் குறிப்பாக பார்ப்பனர்கள் போன்றவர்களை கைது செய்தாலோ அல்லது விசாரணை நடத்தினாலோ, பவ்யமாகவும் மேல் வாயையும், கீழ் வாயையும் பொத்திக்கொண்டு மென்மையான முறையில் விசாரணை நடத்துகிறார்கள்.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை பற்றி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழர் பெ.சண்முகம் இவ்வாறு விளக்குகிறார்.

“பெண் ஒருவரை படுக்க வைத்து இரண்டு காவலர்கள் ஆளுக்கு ஒரு காலை பிடித்து விரித்துக் கொள்ள மற்றொரு காவலர் பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய்த்தூளை திணித்து சித்திரவதை செய்துள்ளார். மற்றொரு பெண்ணை, அவருடைய கைகளை பின்பக்கம் கட்டி விட்டு ராட்டணத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டு தண்ணீர் இறைப்பது போல் மேலும் கீழும் இழுத்து பின்புறத்தில் பல நாட்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இன்னொரு பெண்ணை தனியறைக்கு இழுத்துச் சென்று ஆடைகளை களைந்து வல்லுறவு செய்துள்ளார் காவலர் ஒருவர். பிடித்துச் செல்லப்பட்ட ஐந்து பெண்கள் மீதும் இத்தகைய கொடூர சித்திரவதைகளை காவலர்கள் நிகழ்த்தியுள்ளனர்.”

சித்தூர் மாவட்டம் புத்தாலப்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டில், கடந்த ஜனவரி மாதம் நகை திருடு போனதும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் புலியாண்டிபட்டி கூட்ரோட்டில் வசிக்கும் சாமிகண்ணு ஐயப்பன் என்பவர்தான் அந்த திருட்டுக்கு காரணம் என்ற கண்ணோட்டத்தில் கொடூரமாக இந்த சித்திரவதைகளை செய்துள்ளது ஆந்திர போலீசு. போலீசின் இந்த வீராப்பும், சூரத்தனமும் அந்த சாமிகண்ணு குடும்பத்தினர் பிறப்பால் குறவர்கள் என்பதால் கொடூரமாக பாய்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மீது, இதுபோன்று கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள் ஏவப்படுவது இது முதல் முறை அல்ல.

தமிழகத்தில் கம்மாபுரம் காவல் நிலையத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவர், சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தி, பல ஆண்டு காலம் போராடிய பின்பு குற்றவாளி போலீசு தண்டிக்கப்பட்டது. அதனை திரைப்படமாக எடுத்து ஓட்டிய போது போலீஸ் இப்படிப்பட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ஆலோசனைகளையும், புத்திமதிகளையும் பலரும் எடுத்துக் கூறினார்கள்.

ஆனால் போலீசு திருந்தவில்லை. சமீபத்தில் தமிழகத்தின் போலீசு உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, ஓய்வு பெற்ற தினத்தின் போது பாரம்பரிய முறைப்படி, காரையே தேராக மாற்றி வடம் பிடித்து இழுத்துச் சென்று அவரை கண்ணியமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஊடகத்தில் இது போன்ற செய்திகளை பக்கம் பக்கமாக எழுதுவதன் மூலம் அல்லது சமூக வலைதளங்களில் போலீசுக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்ட செய்தியை பல கோணங்களில் விளக்குவதன் மூலம், போலீசுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கிறது.

10, 20 ஆண்டுகளுக்கு முன்னால் தனது மகனையோ அல்லது மகளையோ போலீசுக்காரன் வீட்டில் திருமணம் செய்து கொடுப்பதற்கு தயங்குவார்கள் பெற்றோர்கள். ஏனென்றால் போலீஸ் பற்றி ஒரு சரியான சித்தரிப்பு என்பது ஓரளவு இருந்து கொண்டிருந்தது. திடீரென்று இயக்குநர் ஹரி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்று முளைத்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் போலீசு என்ற சட்டப்பூர்வ கிரிமினல் கும்பலை மிகவும் உத்தமர்களைப் போல முன்வைத்து பல திரைப்படங்களை எடுத்து குவித்ததன் விளைவாக, போலீசின் மீது உள்ள பார்வை விலகி அவர்களும் மனிதர்கள் தான், நாணயமானவர்கள்தான், பலர் இருக்கும் போது ஒரு சிலர் தவறு இழைக்கிறார்கள் என்ற தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது.

போலீஸ் என்ற நிறுவனமே, ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாயாகவும், ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்குகின்ற குண்டாந்தடியாகவும், இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற காரணத்தினால் அவர்களில் விதிவிலக்கானவர்கள் என்று சிலர் இருக்கலாமே தவிர பொதுவாகவே போலீஸ் என்ற நிறுவனம் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதுதான் பல சம்பவங்களில் நாம் காண்கின்ற உண்மை.

அதுபோல ஒரு நபரை போலீசு,  ‘தீவிரவாதி ‘என்றோ ‘பயங்கரவாதி’ என்றோ முன்வைத்து விட்டால் அவர்களின் மீது எத்தகைய கொடூரமான சித்திரவதையையும் மேற்கொள்ளலாம் என்று எழுதப்படாத விதிகளை போல அமல்படுத்தப்படுகிறது. அந்தத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பிறப்பால் இஸ்லாமியராகவோ, தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களாகவோ இருந்தால் போலீசின் வீரம் பல மடங்கு கொப்பளிக்கிறது.

பார்ப்பன பயங்கரவாதிகளான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் மீது போலீசு எந்த மூன்றாம் தர விசாரணை முறையையும் கையாள்வது இல்லை அல்லது நாட்டின் ராணுவ ரகசியங்களை காட்டிக் கொடுத்த குல்கர்னி போன்ற பார்ப்பனர்களை சாதாரண மக்களை விசாரிப்பது போல விசாரிப்பதே இல்லை.

இதையும் படியுங்கள்: 

ஆந்திர போலீசின் எல்லை மீறிய அராஜகம்!

கையை உடை! காலை உடை! பல்லை உடை! சட்டப் பூர்வ கிரிமினல் கும்பல் போலீசு ஆட்சி!

சாதாரண மக்களின் மீது லாடம் கட்டுவது என்பதில் துவங்கி பூட் கட்டிங் என்று கூறக்கூடிய மூச்சை அடைக்க வைக்கும் குத்து முறை வரை சர்வசாதாரணமாக விசாரணை என்ற பெயரில் கொடூரமான சித்திரவதைகளை ஏவ முடிகிறது.

ஒரு எடுத்துக்காட்டாக சிதம்பரத்தில் சட்டவிரோதமாக பாலிய விவாகம் நடத்தி வைத்த சிவராம தீட்சிதர், நடராசர் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தை வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் பார்த்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள பட்டு தீட்சிதர் ஆகிய இருவரும் நிர்மலா சீதாராமனை, விமானத்தில் பறந்து சென்று பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தீட்சிதர்களை கைது செய்யவோ, கையால் தொட்டு அழைத்துச் செல்லவோ போலீசு நடுங்கிக் கொண்டிருந்தது. தீட்சிதர்கள், பார்ப்பனர்களைப் போல, அன்றாடம் கிரிமினல் குற்ற செயலை செய்தவர்களை போலீசு; சாதி, வர்க்கம் பார்த்துதான் விசாரணை நடத்துகிறதே ஒழிய பொதுவான சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல.

கோவிலின் கருவறைக்குள் ‘கசமுசா’ செய்த தேவநாதன் முதல் தனது ஆசிரமங்களில் ஆன்மீகம் என்ற பெயரில் பல்வேறு கிரிமினல் குற்ற செயல்களையும், பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டு வரும் ஜக்கி முதல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வரை உள்ள கார்ப்பரேட் பார்ப்பன சாமியார்கள் வரை, போலீசின் சித்திரவதை முகாமுக்குள் கொண்டுவரப்படுவதோ, குறைந்தபட்சம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து சாதாரண மக்கள் மீது நடத்தப்படும் கொடூரமான துன்புறுத்தல்களில் நூறில் ஒரு பங்கு கூட நடத்தப்படுவது கிடையாது.

இவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு வந்தால் அதற்கு உரிய ஆதாரம் கேட்கும் போலீசு, குறவர் சாதியைச் சார்ந்த சாமிக்கண்ணு மீது ஆதாரம் கேட்கவில்லை. மாறாக ஆதாரத்தை உருவாக்குகின்ற வகையில், அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள நகை கடைகளை கையை காட்டுமாறு துன்புறுத்தியுள்ளது.

போலீசு தவறு செய்தால் தண்டிப்பதற்கு உரிய சட்ட பிரிவுகள் இருப்பதாகவும் போலீசு செய்கின்ற அத்துமீறல்களை மனித உரிமை அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் மூலம் சரி செய்து விட முடியும் என்ற பிரமையையும், மாயத் தோற்றத்தையும் தொடர்ந்து ஆளும் வர்க்க கும்பல் உருவாக்கிக் கொண்டே வருகிறது. ஆனால் இது போன்ற பல் இல்லாத பாம்புகளின் மூலம் போலீசின் அக்கிரமங்களை ஒரு முடி கூட அசைத்துப் பார்க்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

இதுபோன்ற அதிகாரமற்ற அமைப்புகள் கேட்கின்ற கேள்விகளும், கொடுக்கின்ற வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளும் போலீசுக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிட்டதால் அதிகபட்சம் என்ன செய்வார்கள்? விசாரணை என்று உட்கார வைத்து கேள்வி கேட்பார்கள் அவ்வளவுதானே வேறு என்ன புடுங்க முடியும் என்று எந்தவிதமான அச்சமும் இன்றி தினவெடுத்து திரிந்து வருகிறது போலீசு.

நிலவுகின்ற அரசு கட்டமைப்பு மற்றும் நீதி இவற்றைக் கொண்டு போலீசை ஒருபோதும் திருத்த முடியாது. சட்டப் பூர்வ கிரிமினல் கும்பலான போலீசை முழுமையாக கலைத்துவிட்டு மக்களுக்கு சேவை செய்கின்ற நிறுவனமாக உருவாக்குவது தான் இதற்கு தீர்வே ஒழிய, நிலவுகின்ற அமைப்பிற்குள்ளேயே போலீசை திருத்த முடியும் என்பது அவர்கள் செய்யும் சித்திரவதைகளை விட கொடூரமான தீர்வாகும்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here