கொரோனா காலத்தில் தான் வேலை செய்து வந்த பகுதிகளில் தொடர்ச்சியாக வேலை கிடைக்காமல் துரத்தியடிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாடு முழுவதும் கால்நடையாக சொந்த ஊருக்கு திரும்பிய அவலத்தை நம் கண் முன்னே கண்டோம்.

தனது சொந்த ஊரிலிருந்தும், கிராமங்களில் இருந்தும் வெளியேறி தன்னுடைய மாநிலத்தில் வேலை கிடைக்காமல், வேலை கிடைக்கின்ற இடத்தை தேடி பிழைப்பதற்கு வேறு வழியில்லாமல் புலம்பெயர்ந்து செல்கிறார்கள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இளம் தொழிலாளர்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சரி! அல்லது மத்திய அரசிலும் சரி! புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன என்பதைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்களை மனிதர்களாக மதிப்பதற்கு பதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் எந்திரங்களாகவே மத்திய, மாநில அரசுகள் கருதுகிறது.

கொரோனா காலத்தில் இது பற்றிய கேள்விகள் எழுப்பிய போது சுமார் 13 கோடி பேர் அல்லது 15 கோடி பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பார்கள் என்று குத்து மதிப்பாக கணக்கு கொடுத்தது இந்திய ஒன்றிய அரசு, அதாவது பாசிச மோடி அரசு.

புலம்பெயர் தொழிலாளர்கள்

ஆனால் தற்போது தேர்தல் ஆணையம், ரிமோட் கண்ட்ரோல் வாக்குப்பதிவு எந்திரம் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று அறிவித்து, அதனை அமல்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தேவையான இயந்திரங்களையும் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.

அவ்வாறு ஆர்வம் காட்டும்போது சென்ற 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீதம் வாக்காளர்களே வாக்களித்தனர். அதாவது 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பதால் அந்த 30 கோடி பேரும் வாக்களிப்பதற்கு பொருத்தமாக இந்த ரிமோட் கண்ட்ரோல் வாக்கு பதிவு எந்திரம் ஏற்பாடு செய்கிறோம். எனவே அந்த எந்திரத்தின் மூலம் தனது வாக்குகளை செலுத்தலாம் என்று தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை மட்டும் வழங்குகின்ற ‘ஜனநாயகத்தை’ துணிச்சலுடன் பேசுகிறது பாசிச பாஜக.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாகன வசதி ஏதும் இன்றி, தனது கைக்குழந்தைகளுடன் காலில் செருப்பும் இன்றி ரத்தம் வடிய பல கிலோமீட்டர் நடந்த போது அதைப்பற்றி கிண்டல் அடித்து பேசிய ஆர் எஸ் எஸ், பாஜக அமைச்சர் பெருமக்கள் ஓட்டுப் பொறுக்குவதற்கு அந்த மக்களின் ஓட்டுகள் தேவை என்ற எண்ணத்தில் ரிமோட் கண்ட்ரோல் வாக்குப்பதிவு பற்றி பேசுகிறது. அப்போதுதான் 30 கோடி பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை நமக்குத் தெரிய வருகிறது.

ஏற்கனவே வாக்களிக்கும் இயந்திரங்களில், அதாவது EVM மிஷின்களில் வெளியில் இருந்து ஹேக் செய்து ஓட்டுப்பதிவை மாற்ற முடியும் என்ற விமர்சனமும், அதை தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள பல்வேறு இளைஞர்கள் நேரடியாக செய்முறை விளக்கம் கொடுத்து அம்பலப்படுத்தி உள்ள நிலையில், ரிமோட் கண்ட்ரோல் வாக்களிப்பு எந்திரங்கள் மோசடியானவை என்ற கருத்து பரவலாக உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து தனது தொகுதியில் வாக்களிக்கலாம், அதற்கு வசதியாக நாங்கள் ரிமோட் கண்ட்ரோல் வாக்களிக்கும் எந்திரத்தை உருவாக்குகிறோம் என்று இந்திய ஒன்றிய அரசு அதாவது ஜனநாயகத்தை பற்றி கடுகளவும் கவலைப்படாத பாசிச ஆர் எஸ் எஸ் பாஜக அரசு அறிவித்து செயல்பட்டு வருவது நமக்கு பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் உளவுபார்ப்பு: இந்திய தேர்தல் ஜனநாயகத் தூண்களின் மீதான தாக்குதல்!

தேர்தல் ஜனநாயகத்தில் பாசிஸ்டுகள் வெற்றி பெற்றவுடன் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு, பாசிச சர்வாதிகார முறையில் ஆட்சியை நடத்துவதற்கு துணிச்சலுடன் இறங்குகிறார்கள். எங்களுக்கு இத்தனை கோடி பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று, அதையே பெருமையுடன் கூறிக்கொண்டு தனது பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறார்கள்.

பெரும்பான்மை மக்களிடமிருந்து ஓட்டுகளை பெறுவதற்கு பல்வேறு அயோக்கியத்தனமான நடவடிக்கைகளையும், இலவச கவர்ச்சி திட்டங்களையும் தேர்தலில் போட்டியிடுகின்ற, போட்டி போடப் போவதாக கூறுகின்ற சிறிய கட்சிகள், சாதி அமைப்புகள், சாதி சங்கங்கள் அனைத்தையும் விலை பேசி தனக்கு ஓட்டு போடுமாறு நிர்ப்பந்திக்கிறது பாசிச பாரதிய ஜனதா கட்சி.

இந்தியாவில் நடக்கின்ற தேர்தல்கள் அனைத்தும் போலி ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக நடத்தப்படும் தேர்தல்கள் தான்! என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இத்தகைய போலி ஜனநாயக கட்டமைப்பை அதாவது தேர்தல் ஜனநாயகத்தை இந்தியாவில் உள்ள 65% முதல் 70% மக்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்களை ; தேர்தலில் பங்கெடுக்கச் சொல்லி பல்வேறு கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும், பாசிச பாரதிய ஜனதா கட்சி அவர்களுக்கு இன்று மதவெறி, சாதிய வெறி, தேசிய வெறியை தூண்டுவதில் முன்னணியில் நின்று ,ஓட்டுக்களை பொறுக்குவதில் தயக்கம் காட்டுவதில்லை.

எனவே இவர்கள் கொண்டு வருவதாக கூறியுள்ள ரிமோட் கண்ட்ரோல் வாக்களிப்பு இயந்திரம் எந்த வகையிலும் அனைத்து மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்காது என்பது மட்டுமின்றி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 30 கோடி பேரின் தீர்மானிக்கின்ற உரிமையை இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அதாவது ரிமோட் கண்ட்ரோல் வாக்கு இயந்திரங்கள் மூலம் கேடாக பயன்படுத்துவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளது,என்பதே எதார்த்த நிலைமையாகும்.

இதையும் படியுங்கள்: தொழிலாளர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

இது பாசிச பயங்கரவாத மோடி கொண்டு வருகின்ற போலி ஜனநாயக அரசு கட்டமைப்பில் மேலும் ஒரு நயவஞ்சக சதி திட்டம் ஆகும். அரசு இயந்திரம் முழுவதும் பாசிசமயம் ஆகி வருவதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது என்பதுதான் இதில் நாம் கவனிக்கத்தக்கது.

முன்னாள் தேர்தல் ஆணையர், “கோபால்சாமி ” இந்த ரிமோட் கண்ட்ரோல் வாக்கு எந்திரத்தை பற்றி ஆட்சேபகரமாக சில கருத்துக்களையும், அதே சமயத்தில் இதைக்கொண்டு வருவது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கு உதவும் என்றும் ரெட்டை நாக்கில் பேசியுள்ளார்.

‘தேர்தல் என்பது தில்லுமுல்லு’ அது எந்த வகையில் நடந்தால் என்ன? என்று நாம் வேடிக்கை பார்க்க முடியாது. படித்த அறிவாளிகள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி நேர்மையற்ற முறையில் வாக்குகளை பெறுவதன் மூலம் பாசிச சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவதும், 2025 ஆம் ஆண்டில் நாடு தழுவிய இந்து ராஷ்டிரத்தை நோக்கி வேகமாக ஒரு திட்டத்துடன் பயணம் செய்யும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் சதி செயல்களை முறியடிப்பதற்கு இதுபோன்ற அவர்களின் புதுப் புது வகையான திட்டங்களையும் எதிர்த்து போராட வேண்டும்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here