ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக, சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவார கும்பலின் சாதிய – மதவாத, பாசிச முன்னெடுப்புகளை தொடர்ந்து எதிர்த்து வருபவர்.
இப்படிப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் தற்போது பணியில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களை சங்கி என்று கூறி நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் என்று திருச்சியை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொடுத்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான பக்கச்சார்புமின்றி நடுநிலையாக நேர்மையானதாகதான் இருந்துள்ளதா? என்பது தொடர்ந்து பொதுவெளியில் விவாதிக்கப்படும் விசயமாக உள்ளது.
ஆர்எஸ்எஸ், சங்பரிவாரக் கும்பல் முன்வைக்கும் சனாதன கருத்துக்களுடன் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் உடன்பாடு உடையவர் என்பதை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய அவரின் பேச்சுக்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
2023 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டு ‘நாட்டின் மக்கள் தொகை அமைப்பில் மாற்றம் வந்துவிட்டால் அரசியல் அமைப்பு சட்டமே இருக்காது’ என்று பேசி இருக்கிறார்.
“இஸ்லாமியர்களின் மக்கள் தொகை அதிகரித்து விட்டால் இந்தியா அவர்களின் வசம் சென்று விடும்” என்று ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இதே கருத்தை தான் இந்த நீதிபதியும் பேசுகிறார் என்னும் பொழுது இவரை அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நீதிபதி என்று கூறிவிட முடியுமா?
படிக்க: ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?
அதே கூட்டத்தில் “பாரதீய தர்மத்தை காக்க வேண்டும்; நாம் பின்பற்ற வேண்டும்…நமது சம்பிரதாயங்களை காக்க வேண்டும்” என்றும் பேசியிருக்கிறார். ‘பார்ப்பனர்கள் கொலையே செய்திருந்தாலும் அவர்களின் தலையை மொட்டை அடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் அவர்களின் சொத்துக்களுடன் அவர்களை நாடு கடத்தலாம். மேற்கொண்டு அவர்களை எந்த தொந்தரவும் செய்து விடக் கூடாது – தண்டிக்கக் கூடாது’ என்று மனுதர்மம் கூறுகிறது.
இந்த சம்பிரதாயத்தை காக்க வேண்டும் என்று இந்த நீதிபதி கூறுகிறாரா? இன்று வரை இந்தியாவில் பல்வேறு அளவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சாதி தீண்டாமை கொடுமையும் (பாரதீய சம்பிரதாயம் என்ற அடிப்படையில்) காக்கப்பட வேண்டும்; தீண்டாமை கொடுமை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறுகிறாரா?
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் “எனக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் பதவி காலம் இருக்கிறது… இந்தக் காலத்தில நான் சனாதன தர்மத்தை மனசுல வச்சுக்கணும் என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி கொடுத்திருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.
அதாவது சனாதான தர்மத்தை மனதில் வைத்துக் கொண்டு நீதி வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி தனக்கு கொடுத்திருப்பதாக கூறுகிறார். எனில் இவர் ‘அரசியல் அமைப்பு சட்டத்தின் படி செயல்பட்டு நீதி வழங்க மாட்டேன்’ என்று சொல்ல வருகிறார் என்று தானே பொருள்?
அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உறுதிமொழி ஏற்று பதவியில் அமர்ந்துள்ள ஒரு நீதிபதி இந்துமத சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு அதன்படி தீர்ப்பு கொடுப்பேன் என்று கூறலாம் எனில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி “சரியத்” சட்டத்தின் படி நீதி வழங்குவேன் என்று கூறலாமா? அதை சட்டம் அனுமதிக்குமா?
மதச்சார்பற்ற நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் படி, அதுவும் சோசலிசம் மதச்சார்பின்மை என்ற வாசகத்தை தனது முகப்பிலேயே கொண்டுள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்றுக்கொண்ட நீதிபதி ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சித்தாந்தத்தின் படி நீதிபதியாக செயல்படுவேன் என்று கூறுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்கிறதா? இப்படி கூறும் நீதிபதிகள் நீதிபதியாக இருப்பதற்கு தகுதி உள்ளவர்கள் தானா? இப்படிக் கூறும் நீதிபதிகளிடம் மாற்று மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு சட்டத்தின் படியான தீர்ப்பு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் பேச்சு ஆர்எஸ்எஸ், சங்பரிவார நபர்களின் பேச்சுக்களுடன் ஒத்துப் போவது என்பது தற்செயலானது அல்ல.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அவர்களின் செயல்பாடுகள், அதாவது நீதிபதியாக அவரின் செயல்பாடுகள், ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பலில் செயல் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளதாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் குறித்து கூறிய விமர்சனங்கள் எதுவும் அவதூறானவையோ பொய்யானவையோ அல்ல. அவரது பேச்சு நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுகளும் தீர்ப்புகளும் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அதன் பாதுகாவலரான நீதிமன்றத்தையும் அவமதிக்கிறது.
ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து கேள்வி எழுப்பி களத்தில் நின்று போராடி வரும் நபர்களைத் தொடர்ந்து தனிமைப்படுத்தி தாக்கி அவர்களின் எதிர்ப்பை முடக்கி விட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுக்கும் முயற்சியையும் நாம் காண வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாட்டில் அரைகுறையாகவேனும் உள்ள ஜனநாயகம், சமூக நீதி, மத நல்லிணக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிசத்தை முறியடிக்க வேண்டும் என்று போராடும் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்களுக்கு துணை நிற்போம்.
சங்கிகளின் இம்மாதிரியான முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனில் மக்களை மதரீதியாக பிளந்து மோத விட்டு குளிர்காயத் துடிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசதை முற்றும் முழுதாக முறியடிக்க வேண்டும். அதற்கு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியையும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் கட்டி அமைப்போம்.
– குமரன்






