கிரிமினல் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள

துணைவேந்தர் ஜெகன்நாதனுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு!

மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டனம்!


சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலம் ஜூன்-30 முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக தமிழக அரசு ஆளுநருக்கு 15 நாட்களுக்கு முன்னரே முன்மொழிதலை அனுப்பி உள்ளது. இதனை நிராகரித்துவிட்டு, ஜூன் 29 ந்தேதி ஜெகன்நாதனுக்கு மேலும் ஓராண்டு (2025, மே 19 வரை) காலம் பதவி நீட்டிப்பு செய்துள்ளார். இது ஆளுநரின் அதிகார வரம்பு மீறிய செயலாகும்.

துணைவேந்தர் ஜெகன்நாதன் மீது, உதவிப் பேராசிரியர் பணி நியமிப்பதில் போலிச் சான்றிதழ் முறைகேடுகள், நூலகர், உடற்கல்வி இயக்குனர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாதது, விதியை மீறி ‘’ பெரியார் பல்கலைக் கழக தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை’’ (PUTER FOUNDATION) என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி முறைகேடுகளில் ஈடுபட்டது, கேள்வி எழுப்பிய அப்பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியரும், தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசகரான பேரா.இளங்கோவனை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியது என 13 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்தாண்டு சேலம் போலீசார் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதற்கு எதிராக சேலம் மாநகரக் காவல் கூடுதல் ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதுவும் நிலுவையில் உள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் சு.பழனிச்சாமி, இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோர் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, குற்றவியல் வழக்கு தொடர்வது தொடர்பாக வரும் ஜூலை 16 ந்தேதி நேரில் ஆஜராகி கருத்துக்களை தெரிவிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் துணைவேந்தர் கைது செய்யப்பட்ட போதே அவரை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநரோ ஜாமினில் வெளிவந்தவுடன் துணைவேந்தரை சேலம் சென்று நேரில் சந்தித்தார், இப்போது பதவி நீட்டிப்பு செய்துள்ளார். குற்றவாளியான துணைவேந்தர் தண்டிக்கப்படாமல், அவரை பாதுகாப்பதற்காகவே இத்தகைய அதிகார அத்துமீறல்கள் நடந்துள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

படிக்க:

♦ முறைகேடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்ட பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை! மக்கள் கல்விக் கூட்டியக்கம்

இந்தகைய மோசமான செயல்பாடுகள் பல்கலைக்கழகக் கட்டமைப்பை சீர்குலைத்து வருவதோடு, மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கிறது. எனவே, ஜெகன்நாதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும். புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்துகிறது.

இவண்,

(பேரா.இரா.முரளி, பேரா.வீ.அரசு, பேரா.ப.சிவகுமார், கணகுறிஞ்சி, சு.உமா மகேஸ்வரி) ஒருங்கிணைப்பாளர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here