ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!


த்திரிகையாளரும் உக்ரைனில் இப்போது தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அமைப்பின் உறுப்பினருமான டிமிட்ரி கோவலேவிச் கருத்துப்படி, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் உக்ரேனிய அரசாங்கம், நேட்டோ மற்றும் அமெரிக்கா கூறியபடி உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு நாளான பிப்ரவரி 24, 2022 அல்லாமல் அதற்கு முன்பே 2014 வசந்த காலத்தில் தொடங்கிவிட்டது, பின்னர் ஒருபோதும் அது நிற்கவில்லை என்கிறார்.

கோவலேவிச் தலைநகர் கீவ்-வின் தெற்குப் பகுதியிலிருந்து எழுதுகிறார் கூடவே ஒரு பழங்கதையை மேற்கோள் காட்டுகிறார்: “போர்க்களத்தில் என்ன நடக்கிறது?” என்று ஒருவர் கேட்கிறார். “நம் படைகள் வழக்கம் போல் வெற்றி பெறுகின்றன!” என்கிறார் மற்றொருவர். “யார் நம் படைகள்?” முதல் நபர் மீண்டும் விசாரிக்க, “அது இனிமேல்தான் தெரியும்” என்று பதில் கிடைக்கிறது.  போர்களில் எல்லாமே சர்ச்சைக்குரியதாக மாறிவிடும். தற்போது உக்ரைன் தலைநகரின் பெயரும் கூட சர்ச்சையில் உள்ளது (உக்ரேனிய மொழியில் கீவ் மற்றும் ரஷ்ய மொழியில் கியேவ்).

ஒரு பத்திரிகையாளருக்கு செய்தி தொலைக்காட்சி சேனல்களின் போர்வெறி ஆகியவற்றால், போரின் போது நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய அடிப்படை உண்மைகளை நிறுவுவது கடினம். யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் காணப்படும் போர் அட்டூழியங்களின் வீடியோக்களை சரிபார்க்க இயலாது. பெரும்பாலும், இந்த தளங்களில் காணக்கூடிய போர் தொடர்பான பெரும்பாலான வீடியோக்கள் தவறானவை அல்லது பிற மோதல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. தற்போதைய ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் நேட்டோ நிலைப்பாடு, ரஷ்ய அட்டூழியங்கள் பற்றி உக்ரேனிய அரசாங்கம், நேட்டோ மற்றும் அமெரிக்கா-வால் பரப்பப்படும் பல வைரல் வீடியோக்களும் அடங்கும்.  குறிப்பாக டிக்டோக்கில் “உக்ரேனிய சிறுமிகள் ரஷ்ய வீரர்களுக்கு எதிராக நிற்கிறார்கள்” என்று தவறாக பரவும் ஒரு வீடியோவும் உள்ளது. ஆனால் அது உண்மையில் 11 வயது பாலஸ்தீனிய சிறுமி அஹத்தின் தமிமி 2012-இல் இஸ்ரேலிய சிப்பாயை எதிர்த்து நிற்கும் வீடியோ.

படிக்க:

  உக்ரைன் போர்: ஏகாதிபத்திய அமெரிக்கா – ரசியாவே போரை உடனே நிறுத்து! 

“உக்ரைனில் பிப்ரவரி 2022-இல் போர் தொடங்கவில்லை. இது 2014 வசந்த காலத்தில் டான்பாஸில் பகுதியில் தொடங்கியது, கடந்த எட்டு ஆண்டுகளாக அந்தப் போர் நிறுத்தப்படவில்லை” என்று கூறும் கோவலெவிச் உக்ரைனில் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்பான போரோட்பா (போராட்டம்)-இன் உறுப்பினர். போரோட்பா, மற்ற கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் அமைப்புகளைப் போலவே, 2015 இல் முந்தைய அமெரிக்க சார்பு பெட்ரோ பொரோஷென்கோவின் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. இந்த அடக்குமுறையின் ஒரு பகுதியாக, இரண்டு இளைஞர் கம்யூனிஸ்ட் அமைப்புத் தலைவர்கள் அலெக்சாண்டர் கொனோனோவிச் மற்றும் மிகைல் கொனோனோவிச் உக்ரேனிய பாதுகாப்பு படையால் மார்ச் 6-ல் கைது செய்யப்பட்டனர்.

அலெக்சாண்டர் கொனோனோவிச் மற்றும் மிகைல் கொனோனோவிச்

“எங்கள் தோழர்களில் பெரும்பாலோர் 2014-இல் உக்ரேனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து ரஷ்ய ஆதரவு குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு கிழக்கு மாகாணங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கு இடம்பெயர வேண்டியிருந்தது” என்று கோவலெவிச் கூறுகிறார். பிப்ரவரியில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த இரண்டு பகுதிகளை சுதந்திரமானவை என்று அங்கீகரித்தார், இந்த சர்ச்சைக்குரிய நகர்வே ரஷ்யாவின் இறுதி இராணுவப் படையெடுப்புக்கான காரணமாக  மாறியது. மேற்கத்திய பயிற்சி மற்றும் நிதியுதவி பெற்ற ரஷ்ய-விரோத வலதுசாரி கும்பல்கள் மற்றும் துணை ராணுவத்தினர் உள்ளடங்கிய உக்ரேனிய அரசாங்கம் தற்போதுள்ள அமைப்பிலிருந்து விடுபட நிர்பந்திக்கப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தோழர்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து திரும்பி வந்து சட்டப்பூர்வமாக வேலை செய்ய எதிர்பார்க்கிறார்கள்”  என்கிறார். போரோஷென்கோ காலத்தின் பல தாராளவாத மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு (ரஷ்ய எதிர்ப்பு உட்பட) சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார்

“இந்தப் போர்  மிகவும் கொடூரமானதாகத் தெரிகிறது, ரஷ்யர்களால் அல்ல, ஆனால் நாட்டை கொள்ளையடிக்கும் உக்ரேனிய ஆயுதக் கும்பல்களால்.” ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கியபோது ​​​​உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நாட்டைப் பாதுகாக்க விரும்பும் எந்தவொரு குடிமகனுக்கும் ஆயுதங்களை வழங்கினார். தலைநகரின் தெற்கே மத்திய உக்ரைனில் வசிக்கும் கோவலேவிச் “எங்கள் பகுதி இராணுவ நடவடிக்கைகளால் அல்லாமல் வலதுசாரி தேசியவாத கும்பல்களின் பயங்கரவாதத்தால் தான் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் போர் மண்டலத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு ரோமா குடும்பத்துக்கு கோவலேவிச் அடைக்கலம் கொடுத்துள்ளார். உக்ரைனில் சுமார் 4,00,000 ரோமா மக்கள் இருப்பதாக ரோமா அமைப்புகள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் உக்ரைனின் மேற்குப் பகுதியில், ஜகார்பட்ஸ்கா மாகாணத்தில் (ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா எல்லையில்) வாழ்கின்றனர். “உக்ரைனில் உள்ள ரோமா மக்கள் வலதுசாரி தேசியவாதிகளால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்” என்று கோவலெவிச் கூறுகிறார். “தேசியவாதிகள் அவர்களை பகிரங்கமாகத் தாக்கி முகாம்களை எரித்தனர், அதை ‘குப்பைகளை சுத்தம் செய்தல்’ என்று அழைத்தனர். இந்த தீவிர வலதுசாரி கும்பல்கள் எப்போதும் காவல்துறை அல்லது பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் காவல்துறை எதிர்வினையாற்றுவதில்லை.” இந்த ரோமா குடும்பம் உக்ரேனிய-ரோமா மக்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உக்ரைனை நோக்கிச் செல்கிறது. “ஆனால் அது மிகவும் பாதுகாப்பற்றது” என்று கோவலெவிச் கூறுகிறார். “உக்ரைனில் எல்லா சோதனைச் சாவடிகளிழும் இந்த வலதுசாரி கும்பல் உள்ளனர், சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் யாரையும் அவர்கள் சுடலாம் அல்லது கொள்ளையடிக்கலாம்.”

மின்ஸ்க் ஒப்பந்தங்கள்

2014-இல் தொடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாக 2014 மற்றும் 2015-இல் பெலாரஸில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அவை பெலாரஸின் தலைநகரின் பெயரில் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் “கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசுபவர்களின் பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை” நோக்கமாகக் கொண்டிருந்தன. இரண்டாவது ஒப்பந்தத்தில் இரண்டு முன்னணி அரசியல் பிரமுகர்கள், உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி லியோனிட் குச்மா  மற்றும் ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர், மிக்கைல் ஜுராபோவ் கையெழுத்திட்டனர். ஹெய்டி டாக்லியாவினி என்ற சுவிஸ் தூதர் மேற்பார்வையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தம் பிப்ரவரி 17, 2015 அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் மட்டும் கடைபிடிக்கப்பட்டிருந்தால், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஏற்பாட்டை டான்பாஸ் பகுதியில்  ரஷ்யாவும் உக்ரைனும் பெற்றிருக்கும்.

“இரண்டு உக்ரேனிய அரசாங்கங்கள் மின்ஸ்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன, ஆனால் அதை நிறைவேற்றவில்லை” என்று கோவலெவிச் கூறுகிறார். சமீபத்தில் Zelenskyy இன் அதிகாரிகள் வெளிப்படையாக கேலி செய்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் தூண்டுதலால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூறினர். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் அதை நிறைவேற்ற மறுப்பது அனைத்து விதிகளையும் மீறுவதாகும். ஒப்பந்தப்படி நடந்துகொண்டிருந்தால் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு குடியரசுகளும் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்திருக்கும், மேலும் அவர்களுக்கு சில கலாச்சார சுயாட்சியும் வழங்கப்பட்டிருக்கும் (பிப்ரவரி 12, 2015, மின்ஸ்க் II ஒப்பந்தத்தின் 11வது பிரிவுக்கான அடிக்குறிப்பில் இருந்தது). “இதை தேசியவாதிகள் மற்றும் வலதுசாரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கோவலெவிச் என்னிடம் கூறுகிறார். அவர்கள் “டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் தூய்மைப்படுத்துதல் மற்றும் பழிவாங்கலை ஏற்பாடு செய்ய விரும்புகிறார்கள்.” ரஷ்ய இராணுவத் தலையீட்டிற்கு முன்னர் மின்ஸ்க் உடன்படிக்கைகள் அமலில் இருந்தபோதும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் நடந்து வரும் மோதலில் 14,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் கண்டறிந்தார். “தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் வெறும் முகமூடி மட்டுமே அவர்கள் உக்ரைனின் உண்மையான ஆட்சியாளர்களை மறைக்கிறார்கள்” என்று கோவலெவிச் கூறுகிறார். உக்ரேனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் பாராளுமன்றத்தில் உள்ள அவரது கூட்டாளிகளும் சொந்த புத்தியைக்கொண்டு இயங்காமல் “தீவிர வலதுசாரி ஆயுதக் குழுக்களால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை” கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த பேச்சுவார்த்தைகளின் நேர்மறையான முடிவைப் பற்றி கோவலெவிச் நம்பிக்கையுடன் இல்லை. முடிவுகளை உக்ரேனிய ஜனாதிபதி மட்டும் எடுக்கவில்லை, ஆனால் வலதுசாரி தீவிர தேசியவாத துணை ராணுவ ஆயுதக் குழுக்கள் மற்றும் நேட்டோ நாடுகளால் எடுக்கப்படுகிறது என்கிறார். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் “உக்ரேனில் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்கான திட்டங்கள்” பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டதையும், முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உக்ரைனில் ஆப்கானிஸ்தான் பாணியிலான கெரில்லாப் போரை மறைமுகமாகக் குறிப்பிட்டு “நாங்கள் திருகுகளை இறுக்கிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியதையும் கோவலெவிச் சுட்டிக்காட்டுகிறார்.

“உண்மையில் அமெரிக்காவிற்கு உக்ரேனியர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதை இது வெளிப்படுத்துவதாகவும், ரஷ்யர்களுக்கு சில வலிகளை ஏற்படுத்தும் வாய்ப்பாக அவர்கள் இதைப் பயன்படுத்த விரும்புவதாகவும் கோவலெவிச் கூறுகிறார்.

கிளின்டன் மற்றும் பிறரின் இந்தக் கருத்துக்கள், “ரஷ்யாவிற்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்பாடு செய்ய அமெரிக்கா விரும்புகிறது என்றும் உக்ரைனில் அமைதி என்பது நேட்டோவிற்கும் புதிய உலக வல்லரசுகளான ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் இடையேயான சமரசம் பற்றிய விஷயம்” என்று கோவலெவிச் கூறுகிறார். அத்தகைய ஒரு நல்லிணக்கம் சாத்தியமாகும் வரை, ஐரோப்பா ஒரு சரியான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் வரை, “நாங்கள் போர்களால் பாதிக்கப்படுவோம்” என்று கோவலெவிச் கூறுகிறார்.

ஆங்கிலத்தில்: Viay Prasad.

தமிழில்: செந்தழல்.

https://mronline.org/2022/03/16/russia-ukraine-war-began-in-2014-not-2022/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here