மெரிக்க ஈரானிய போர் உலக மக்களிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் நம் பரிசீலனைக்குரியவை.

பொதுவில் ஒரு சண்டை அல்லது மோதல் என்றால், அதில் ஏதாவது ஒரு தரப்பின் பக்கம் நியாயமும், மற்றொரு தரப்பின் பக்கம் அநியாயமும் இருப்பதை நம்மால் நிச்சயம் கண்டறிய முடியும். அதற்கு இரு தரப்பின் வாதங்களையும் கேட்டு பரிசீலிக்க வேண்டியது அவசியமாய் இருக்கும்.

அதுபோன்று எந்த ஒரு சிரமத்தையும் தராமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் திமிரெடுத்து ஈரானின் மீது தாக்குதல் போரை நடத்தி வருவதன் மூலம் தான்தவறானவன் என்றும், தனது நாட்டின் அதி உயர் தலைவரை பறிகொடுத்து விட்டு பதில் தாக்குதலை நடத்தி வருவதன் மூலம் ஈரான் நியாயமான யுத்தத்தை நடத்தி வருவைதயும் எந்த ஒரு பரிசீலனைக்கும் அவசியமில்லாமல் உலகிற்கே புரிகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர்வெறியை அமெரிக்க மக்களே எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தின் செனட்டின் ஒப்புதலை பெறாமல் தன்னிச்சையாக போரைத் தொடுத்திருப்பதாகவும் கண்டிக்கின்றனர். ஆட்சி மன்றத்திலே ஒலிக்கும் போர் எதிர்ப்பு முழக்கங்களை காவலர்களை ஏவி அடக்குகிறார் டிரம்ப்.

அமெரிக்காவின் நண்பன் மற்றும் அடியாளான இஸ்ரேல் நாட்டிலோ மக்கள் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பெஞ்சமின் நெதன்யாகு ஜியோனிச இன வெறியுடன் பாலஸ்தீனர்களை கொன்று குவித்ததை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்துள்ளது. தற்போதும் கூட அமெரிக்காவின் துணையாளாக ஈரான் மீது பாய்வதை எதிர்த்தும் குரல்கள் கேட்கின்றன.

அமெரிக்காவிற்கு தனது நாட்டில் இடம் தந்து விமான தளம் அமைக்கவோ கடற்படை தளம் அமைக்கவும் உதவிய வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவை தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்கின்றன. தற்போதைய போரில் அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவிக்கின்றன. தமது நிலப்பரப்பையும் போர் எல்லைக்குள் இழுக்கின்ற அமெரிக்காவிற்கு துணை நிற்க மறுத்து வருகின்றன.

இந்தியாவில் கடற்படை விழாவை கொண்டாடி முடித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை இந்திய பெருங்கடலில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கியின் ஏவுகணை தாக்கியது. இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் காலே துறைமுகத்திற்கு அருகில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை போர்க்கப்பல் IRIS Dena வில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

படிக்க: Iris Dena மூழ்கடிக்கப்பட்டதும் மோடி அரசின் மௌனமும்!

அகண்ட பாரத கனவு காணும் சங்கிகளுக்கு தனது காலடியில் வைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டிக்கத் துப்பில்லை. “இந்திய பெருங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் நமது கடல் பரப்பில் இல்லை” என்று குரலை மாற்றிப் பேசுகின்றன. தமது அழைப்பின் பேரில் இந்தியாவிற்கு வந்த விருந்தினரை காக்கும் துணிச்சல் ‘நம்’ இந்தியாவிற்கு – 56” விஸ்வகுருவுக்கு இல்லை. ஆனால் வல்லரசு பெருமை பேசாத சின்னஞ்சிறு இலங்கை ஓடிச் சென்று காப்பாற்றுகிறது.

அதிகரிக்கும் உயிர்ப்பலி !

ஈரானின் பலி எண்ணிக்கை 1,332 எனவும், இஸ்ரேலில் – 11, லெபனானில் – 123,  பஹ்ரைன் – 16, குவைத்தில் – 4, ஐக்கிய அரபு எமிரேட்சில் – 3,  என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

போரைத் திணிக்கும் அமெரிக்க ஓநாய்! உலக மக்களின் கைகளிலும் ரத்தக்கவிச்சி!
நன்றி: அல்ஜசீரா

சில நாடுகளில் உயிரிழப்பு இல்லை என்றாலும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. சிரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, எகிப்து, கத்தார், ஓமன், சைப்ரஸ், துருக்கி, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும், கடல் பரப்பிலும் கூட குண்டுகள் போடப்பட்டுள்ளன. அதாவது, பெரியண்ணன் அமெரிக்காவின் ‘புண்ணியத்தால்’ இந்நாடுகளும் போர் வலையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளன.

இந்தியா யார் பக்கம்?

இந்தியாவிலும் கூட பாசிச மோடி அரசு இஸ்ரேலின் – அமெரிக்காவின் தரப்பிலேயே நிற்க விரும்புகிறது. அதே நேரம் எதிர்க்கட்சிகள் அல்லது பல்வேறு இயக்கங்கள், மோடியின் அடிமைத்தனத்தை – சரணாகதியை கண்டித்து, ஈரானின் தரப்பை ஆதரிக்கின்றன. ஈரானின் அதிஉயர் தலைவர் கொமேனியின் படுகொலைக்கு 5 நாள் பொறுத்தே இரங்கல் தெரிவித்துள்ளது. கவனிக்கவும், மறந்தும் கூட கொலைகார அமெரிக்காவின் மீது கண்டனம் தெரிவிக்கவில்லை.

படிக்க: ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை: அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதம்!

இரு பிரிவாக உலகம்!

முடிவின்றி தொடர்ந்து வரும் தற்போதைய வளைகுடா போரில் உலக மக்கள் இரு தரப்பாக பிளவுபட்டுள்ளதாக பொதுவாக வகைப்படுத்தலாம். ஒன்று மேலாதிக்க வெறி பிடித்து அமெரிக்கா கொடுத்து வரும் அநீதியான போர் என்று கண்டிப்பவர்கள் ஒரு புறம்; இரண்டாவதாக ஈரான் எப்படி அணு பரிசோதனைகளை செய்யலாம்? ஒரு மதவெறி பிடித்த கூட்டத்திடம் நவீன ஆயுதங்கள் நாசகார ஆயுதங்கள் இருந்தால் அது உலகிற்கு ஆபத்து! ஈரானை விட்டு வைக்கக் கூடாது! என்ற கருத்தை பரப்பி வருபவர்கள் மறுபுறம்.

இத்தகைய இரு முகாமானது  தத்தமது எதிர் முகாமின் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டு குதூகலிக்கும் மனப்பான்மையை படிப்படியாக பெற்று வருகிறது. “போர் வேண்டாம்; ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என்று நீதியின் பக்கம் நின்று குரல் எழுப்புவோர்களும் கூட, படிப்படியாக அமெரிக்க தளங்களின் மீதோ, அமெரிக்க தூதரகத்தின் மீதோ, அமெரிக்காவுக்கு துணை நிற்கும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் நகரங்களின் மீதோ வீசப்படும் குண்டுகளை கண்டு மகிழும் மனநிலையை படிப்படியாக பெற்றுள்ளார்கள்.

முன்னர் இஸ்ரேலானது காசாவின் மீது குண்டு மழை பொழிந்ததை இஸ்ரேலியர்களில் ஒரு பிரிவினர் – ஜியோனிச வெறியர்கள் குன்றின் முகடுகளில் கட்டில், நாற்காலியை போட்டு, குளிர்பானங்களை உறிஞ்சியபடி நேரடியாக கண்டு ரசித்ததோடு இதை ஒப்பிடவும் முடியும். அவர்கள் ஆக்கிரமிப்பாளரின் பக்கம் நின்று அப்பாவி மக்களின் படுகொலையை ரசித்தார்கள்.

தற்போது நடப்பது அதற்கு நேர்மாறானது. அநீதியான போர்களோ, உயிரிழப்புகளோ, ஒரு நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துவதோ வேண்டாம் என்று கூறுபவர்கள் கூட, “குண்டை போடு! சபாஷ் தகர்த்தெறி! விடாதே! சரியான பதிலடி கொடு!” என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

படிக்க: மனித நேய உதவிகள் செய்ய வந்த “ஃப்ளோட்டீலா” குழுவை கடத்திய பாசிச இஸ்ரேல் அரசு!

அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிராந்திய அடியாட்களான ஜியோனிச இனவெறி இஸ்ரேலும் ஏவிவரும் போர்வெறி என்பது உலக மக்களின் மனிதாபிமானத்தை கூட உறிஞ்சி ஆவியாக்கி விட்டுள்ளது. இதன்மூலம் ஏகாதிபத்தியங்கள் மனித குலத்திற்கே எதிரானவர்கள் என்பதைத்தான் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

அமெரிக்கா பெரியண்ணனா?

தன்னை உலக வல்லரசு என்று பீற்றிக்கொள்ளும் அமெரிக்கா நடத்திய போர்களும், அதன் மூலம் அமெரிக்க முப்படைகளும் வாங்கிய அடிகளும் வரலாற்றில் நிற்கின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக நிற்கும் சின்னஞ்சிறு நாடுகளை கூட அமெரிக்காவால் முழுமையாக வெற்றி கொள்ளவோ, தொடர்ந்து அடக்கி ஆள முடிந்ததில்லை.

வியட்நாம் தொடங்கி ஈராக், ஆப்கானிஸ்தான் என்று தொடர்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த்தந்திர, ராஜதந்திர, மேலாதிக்க முயற்சிகளின் தோல்விகள். ஒவ்வொரு போர்முனையில் இருந்தும் சவப்பெட்டிகள் அமெரிக்காவிற்கு சென்று இறங்கும்போது அது மிகப்பெரும் எதிர்வினையை உருவாக்கியே வந்துள்ளது. அது தற்போதும் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் ஆபிரகாம் லிங்கன் ஹார்முஸ் நீரிணையை விட்டு தலை தெறிக்க ஓடியுள்ளது.

போரின் சுமை யாரின் தலையில்?

இப்போது நடந்து வரும் போரின் சுமையை சுமக்கவிருப்பது உலக கோடீஸ்வரர்களே, அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளோ அல்ல. அமெரிக்க மக்களின் தலையில் தான் போர்ச்செலவுகள் சுமத்தப்படுகின்றன. முதல் நாள் போருக்கே ரூ.7,183 கோடி செலவிட்டுள்ளது அமெரிக்கா. இது மேலும் கூடுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.

படிக்க: போர்களில் எதிரி – அப்பாவி மக்கள் அல்ல, மேலாதிக்கப் போர் வெறி அரசுகள்!

இது அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கையில், அரசின் பங்களிப்பை மேலும் மேலும் வெட்டிச் சுருக்கி வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது.

அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியமானது, உலகையே சூறையாடும் மிகப்பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் நண்பனாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க உழைக்கும் மக்களுக்கோ மிகப்பெரிய எதிரியாகவே களத்தில் நிற்கிறது.

வேடிக்கை பார்க்கும் பிற ஏகாதிபத்தியங்கள்!

ரஷ்யா – சீனா போன்ற பிற ஏகாதிபத்தியங்கள் நேரடியாக எந்த ஒரு தரப்பையும் ஆதரிக்கவில்லை. ஆனால் மறைமுகமாக ஈரானுக்கு உதவி வருகின்றன. இலங்கையின் துணிச்சலான ஆதரவு நடவடிக்கையும், சீனாவின் ஆதரவு அறிவிப்பும் வரவேற்க வேண்டியது. இந்தியாவின் பாராமுகத்தை நேரடியான அமெரிக்க அடிவருடி நிலை என்பதாகவும் கணக்கில் எடுக்கலாம்.

ஸ்பெயின் போன்ற சில நாடுகள் போரில் நடுநிலை வகிக்கின்றன. தனது நண்பனான அமெரிக்காவிற்கு தனது நிலப்பரப்பை போரில் பயன்படுத்தக் கூடாது என மறுத்தும் உள்ளன. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது விமானப்படைத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளார். இந்த போர் எதிர்ப்பு நிலைப்பாட்டால் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், ஸ்பெயின் அமைதியை வலியுறுத்தி “போர் வேண்டாம்” என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

உலகின் மையமான மத்திய கிழக்கு பகுதியில் நடந்த வரும் இப்போரானது ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் பகுதியின் மூலமாக நடக்கும் உலக வர்த்தகத்தை பாதிக்கிறது. வானிலும் சண்டை நடப்பதால் விமானம் மூலமாகவும் கூட சரக்குகளை கொண்டு செல்வது வளைகுடா நாடுகளை பொறுத்தவரையில் சிக்கலுக்குள்ளாகிறது.

ஏற்றுமதிகள் பாதிப்பு!

பாகிஸ்தான் நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நடக்கும் பாசுமதி ஏற்றுமதி தடைப்பட்டு, உள்நாட்டு சந்தையில் விலை வீழ்ச்சியை சந்திக்கின்றனர் பாகிஸ்தானின் விவசாயிகள். இது பாகிஸ்தானோடு முடிவதில்லை. வளைகுடா நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும், அந்நாட்டின் ஏற்றுமதிகளையும், விவசாயிகளையும் பாதிக்கக் கூடியது தான். இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50% ஐந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு – சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் – செல்கிறது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும். எனவே போரின் விளைவை ஒட்டுமொத்த உலக மக்களும் தான் அனுபவிக்கவும் சுமக்கவும் வேண்டி இருக்கும்.

கார்ப்பரேட்டுகளின் “போர் பொருளாதாரம்”!

இந்தப் போரை பயன்படுத்தி நேரடியாக ஆயுத தளவாட உற்பத்தியை செய்யும் கார்ப்பரேட்டுகள் ஒருபுறம் கொழுப்பார்கள் என்றால், மறுபுறம் அனைத்து முதலாளிகளும் விலை ஏற்றத்தின் சுமையை நுகர்வோரின் தலையில் கட்டி வழக்கம் போல் நமது கல்லாவை நிரப்பி கொள்வார்கள். அதாவது சர்வநாசம் என்பது மொத்தத்தில் உழைக்கும் மக்களின் மீது தான் விழப்போகிறது; கார்ப்பரேட்டுகளின் மீது அல்ல.

தகர்க்கப்படும் கட்டிடங்களோ, கப்பல்களோ, ஏவுகணை தளங்களோ எதுவாக இருந்தாலும், அதை மீட்டுருவாக்கம் செய்யும் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்கள் கொழுத்த லாபம் அடையவே செய்யும் .

இதைத்தான் அமெரிக்கா ஏற்கனவே தொடுத்த வளைகுடா போர் 1 & 2 இன் அனுபவங்கள் காட்டி நிற்கின்றன. எனவே ஈரான் தரப்பில் நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தரப்பை தாக்கும் காட்சிகளை கண்டு பரவசம் அடைவதில் இருந்து விடுபடுவோம். “போரை நிறுத்து” என்று ட்ரம்பின் சட்டை காலரை பிடித்து உலுக்கும் வகையிலான போராட்டங்களையும், டிரம்ப்பின் நண்பராகவும், அடியாளாகவும் செயல்பட்டு வரும் உலக நாடுகளின் தலைவர்களின் சட்டை காலரை பிடித்து உலுக்கும் படியான போராட்டங்களையும், கார்ப்பரேட் – காவிப் பாசிச மோடி அரசை நெருக்கடிக்குள்ளாக்கும்படியான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம்.

ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் போருக்கு எதிராக உலக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து கலகத்தில் இறங்குவோம். முதல் கட்டமாக போரை திணிக்கின்ற அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிப்போம்.

  •  இளமாறன்

1 COMMENT

  1. ஓரை திணிக்கும் அமெரிக்கா ஓநாய் ! உலக மக்களின் கைகளிலும் இரத்த கழிச்சி !

    மிகப்பெரிய கட்டுரை

    அமெரிக்கா ஈரான் மீது போர் நடத்துவதை குறித்து அரபு நாடுகள் அமெரிக்கா ராணுவ ஆயுதக் குழுவிற்கு இடம் கொடுப்பதை தற்போது தவறு என்று உணர்ந்துள்ளார்கள் ஸ்பெயின் நாடு அமெரிக்க ராணுவ வான்வெளிக்கு வழி கொடுக்கவில்லை அதேபோல் ஒரு பக்கம் அமெரிக்கா போரை உலக மக்கள் ஆதரிப்பதும் இன்னொரு பக்கம் அதை கொண்டாடுவதும் ஒரு பக்கம் எதிர்ப்பதும் போன்ற மனநிலையின் மக்கள் உள்ளனர்
    போர் என்பது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை
    ஈரான் கப்பல் இந்தியாவுடன் கோர்ப்ப பயிற்சியில் ஈடுபட்டு சென்றதை அமெரிக்கா நீர்மூழ்கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி முழு கடித்து உள்ளது அதேபோல் இதற்கு ஆதரவாக மோடி இல்லாமல் ட்ரம்புக்கு ஆதரவாகவும் கைக்கூலியாகவும் செயல்பட்டு உள்ளார்
    இலங்கை ஒரு சிறிய நாடு ஈரான் கப்பல் முடுக்கப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஆட்களை உயிரோடு மீட்டு உதவி செய்துள்ளது
    போர் பாதிப்பால் விலைவாசி உயர்வு அமெரிக்கா மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் மீது பாதிப்பின் நட்டத்தை கார்ப்பரேட்டுகள் திணிப்பார்கள்
    போரை நிறுத்த உழைக்கும் தொழிலாளர்கள் கொடுக்கப்பட்ட நாடுகள் வீதியில் இறங்கி போருக்கு எதிராக கலமாட வேண்டும்

    கட்டுரையாசிரியர்
    தோழர் எழில்மாறன் அவருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here